Tuesday, August 17, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

கரவீரபுரத்தில் உத்தவன்


ஜராசந்தனின் தப்பி ஓடிய வீரர்கள் சிலரைப் பிடித்து வந்தனர் கருடப் படை வீரர்கள். அனைவரும் கிருஷ்ணனின் வெற்றியால் சந்தோஷமடைந்து, தங்கள் மொழியில் கூக்குரலிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அவர்கள் கூக்குரல் மலை உச்சியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கருடத் தலைவனை எட்ட, சற்று நேரத்தில் அவன் தன் மெய்க்காப்பாளர்கள் சூழக் கீழே இறங்கி வந்தான். புதிய விருந்தினன் ஆன தாமகோஷனையும், உத்தவனையும் வரவேற்றான். தேங்காய்கள் உடைக்கப்பட்டு அவற்றின் நீர் பருக அளிக்கப் பட்டது. மேலும் பல உபசாரங்களையும் செய்த கருடத் தலைவன் அன்றிரவு மாபெரும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தான். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு வெற்றி விழா கொண்டாடப் பட்டது. சேதி நாட்டரசன் தாமகோஷன் மேலும் இரண்டு நாள் அங்கே தங்கி கருடர்களின் விருந்தோம்பலை அனுபவித்தான். அவன் கண்ணனைப்பற்றியும் அவன் சாகசங்கள் பற்றியும் செவிவழியாகவே கேட்டிருந்தான். இப்போது நேரில் பார்த்த்தும் அவனுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ஜராசந்தனின் வீரத்தையும், அவன் சர்வாதிகாரத்தையும் வீழ்த்த வல்ல ஒருவனாலும் முடியவில்லையே, தான் தன்னந்தனியே என்ன செய்தாலும் அதனால் அவனை முறியடிக்க முடியவில்லையே எனக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த அவனுக்கு இப்போது ஜராசந்தனையும் தோற்கடிக்கக் கூடிய ஒருவனாய் தன் மறுமகன் அமைந்ததில் பூரணத் திருப்தி.
அனைவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டு கண்ணன் உத்தவனை ஸ்ரீகாலவனைச் சந்திக்கக் கரவீரபுரத்துக்கு அனுப்புவதாய் முடிவு செய்தான். உத்தவனிடம் ஸ்ரீகாலவனைச் சந்தித்துத் தங்கள் வணக்கங்களையும், பெரியோர்களின் வாழ்த்துகளையும் தெரிவிக்க ஆசைப்படுவதாய்க் கூறும்படிக் கண்ணன் உத்தவனிடம் சொன்னான். ஆனால் பலராமனுக்கு இப்படித் தூது அனுப்புவது பிடிக்கவில்லை. கண்ணனிடம் தன் ஆக்ஷேபத்தைத் தெரிவித்தான். “கண்ணா, அவன் இழிபிறவி. நாம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் ஜராசந்தனிடம் நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டான். நீ போய்ச் சந்தித்து அவனை வணங்கிக் கொள். நான் வரப்போவதில்லை. என்னால் அங்கே எல்லாம் வர முடியாது!” என்றான் பலராமன்.

“ஓஓஓ, அண்ணா, அமைதி, அமைதி, சாந்தியடையுங்கள். நாம் இப்படி மரியாதையும், பண்பும் எப்போதும் கடைப்பிடிப்பதால் குறைந்து போகமாட்டோம். கீழேயும் போகமாட்டோம். இதில் தவறொன்றும் இல்லை. மேலும் நம் நண்பன் ஆவதற்கு ஸ்ரீகாலவனுக்கு ஒரு சந்தர்ப்பமேனும் கொடுக்கவேண்டும் அல்லவா? யார் கண்டார்கள்? ஒருவேளை அவன் நம் நட்பை விரும்பலாம். உண்மையிலேயே அவன் நல்லவனாயும் இருக்கலாம் அல்லவா?”
“கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன இது?? குரு பரசுராமர் சொன்னதை எல்லாம் மறந்து போனாயா? நீ வேண்டுமானால் இப்படிப் பட்ட துஷ்டர்களைச் சந்தித்து உன்னுடைய நண்பர்களாய் ஆக்கிக் கொள். எனக்கு வேண்டாம் அப்பா. என்னை விட்டு விடு. அந்த ஸ்ரீகாலவன் பல ரிஷிகளையும், முனிவர்களையும் குருகுலம் நடத்த விடாமல் சிறைக்குள் அடைத்து வைத்திருக்கின்றான் என்றும், இவனைத் தான் பரவாசுதேவன் என ஒப்புக் கொள்ளவேண்டும் எனவும், எல்லாம் வல்ல பரம்பொருள், மஹாவிஷ்ணுவே தான் தான் என ஒப்புக் கொள்ளவேண்டும் எனவும், இல்லை எனில் வெளியே விடமுடியாது என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறான். இதை குரு பரசுராமர் சொல்லும்போது நீ கேட்கவில்லையா என்ன? “ பலராமன் ஆவேசத்தோடு பேசினான்.

“ம்ம்ம்ம்?? ஒரு வேளை….ஒருவேளை அந்த ரிஷி, முனிவர்களை என்னால் தப்புவிக்க முடிந்தால்? அதற்கு அந்தப் பர வாசுதேவன், எல்லாம் வல்ல பரம்பொருள், மஹாவிஷ்ணு உதவி புரிந்தால்?? எனக்கு மட்டும் கடவுள் அந்த அனுகிரஹத்தைச் செய்தால்??? அண்ணா, பல படித்த ஆசாரியர்களையும், ரிஷிகளையும், முனிவர்களையும் அப்படிச் சிறையில் கிடக்கும்படி விட்டுவிட முடியுமா என்ன?? என்னால் முடியாது அண்ணா! அவர்களை விடுவிக்க ஏதேனும் செய்தே ஆகவேண்டும்!’ யோசனையுடன் கண்ணன் பேசினான். இத்தனை வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் உத்தவன் சேதிநாட்டு வீரர்கள் சிலரின் துணையோடும், கருடன் விநதேயனும் மற்ற கருடர்களும் முன்னால் சென்று வழிகாட்ட கரவீரபுரத்தை நோக்கிப் பயணம் ஆனான். கரவீரபுரத்தை அடைந்ததுமே கோட்டை வாசலில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவலுக்கு இருந்த வீரர்கள் அனைவருமே இடுப்பில் கச்ச வேஷ்டி அணிந்த கறுத்த நிற வீரர்கள் அவர்கள். கழுத்தில் பெரிய, பெரிய வெள்ளி ஆபரணங்களை அணிந்து, கைகளில் வாகு, வலயங்களும் காணப்பட்டன. உத்தவன் தான் வந்திருக்கும் விஷயத்தையும், கொண்டு வந்திருக்கும் செய்தியையும் கூறவே, அவர்களின் தலைவன் போல் காட்சி அளித்தவன், கோட்டைக்கு உள்ளே சென்றான். ஒரு நாழிகை கழித்துத் தன்னுடன் ஒரு சிவந்த நிற அதிகாரியோடு வந்த அவன் உத்தவன் மட்டுமே உள்ள அநுமதிக்கப் படுவான் என்றான். கூடவே வந்த அதிகாரிக்கு உத்தவனும், கண்ணனும் பேசும் அவர்களின் தாய்மொழி நன்கு தெரிந்திருந்தது.
கோட்டைக்கு உள்ளே சென்ற உத்தவன் ஆயுதங்களை அங்கே ஒப்படைக்கும்படிக் கோரப்பட்டான். பின்னர் அவனை நடத்தியே அழைத்துச் சென்றனர். சற்று நேரத்தில் அரசனின் மாளிகை எனப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மாளிகையா அது?? ம்ஹும், அப்படிச் சொல்ல முடியவில்லை. கோட்டைக்குள் இன்னொரு கோட்டை போல் அரண் போல் அது சுற்றிலும் பாதுகாக்கப் பட்டு விளங்கியது. ஏதோ கொண்டாட்டம் நடக்கப்போவதன் அறிகுறி எங்கும் காணப்பட்டது.

2 comments:

எல் கே said...

சீக்கிரம் ஆகட்டும்

priya.r said...

நன்றாக உள்ளது .கண்ணனின் பரந்த மனப்பான்மையும் தொலை தூர பார்வையையும் நமக்கு கற்று கொடுக்கிறார்
நாமும் பயனடைவோம்
கீதாம்மாவுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்