Sunday, October 18, 2015

சபை கலைந்தது!

“செல்வம் மிகுதியாக இருந்தால் அதைத் துறக்கும் மனோபாவம் இல்லை எனில் அங்கே தர்மத்திற்கு இடமில்லை! தர்மத்திற்கு அது நன்மையைச் செய்யாது!” என்றான் கிருஷ்ணன்! சத்ராஜித் இதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்; அவனுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்குமே இந்த வார்த்தைகள் சத்ராஜித்துக்காகக் கிருஷ்ணன் சொன்னான் என்பது நன்கு புலப்பட்டது. சபையினர் அனைவரும் கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கொஞ்சம் பயத்துடனேயே கேட்டனர். அவர்களில் சிலருக்கு நன்மை நடக்கலாம் என்னும் நம்பிக்கை இருந்தாலும் எந்நேரமும் ஒரு பிரளயம் உண்டாகலாம் என்றும் எதிர்பார்த்தனர். இவ்வளவு நாட்களாக சத்ராஜித் தனது அலட்சியமான, கொடூரமான போக்காலும், அவமதிப்புக் கொடுக்கக் கூடிய வார்த்தைகளைப் பேசியும் அனைவர் மனதையும் புண்படுத்தி வந்தான். அதோடு இல்லாமல் தன் நடத்தையைக் குறித்து யாரும் எங்கும் எதுவும் பேசக் கூடாது என்பதை மறைமுகமாக அறிவுறுத்தியும் வந்தான். ஆனால் இங்கே ராஜசபையில் அவனைக் குறித்து மறைமுகமாகப் பேச்சுக்கள் நடக்கின்றன. அதோடு கிருஷ்ணன் நேரடியாகவே சொல்ல ஆரம்பித்து விட்டானே!

சாத்யகன் இப்போது குறுக்கிட்டு, “இது வேறு ஒருத்தரால் ஏற்படுத்தப்பட்டிருந்தது எனில்? என்ன செய்ய முடியும்? இன்னொருவர் இவற்றைப் பிடுங்கித் தம் கைப்பொருளாக, கைப்பாவையாகச் செயல்பட வைத்தால்?”

“மாட்சிமை பொருந்திய மாமா அவர்களே, சொத்துக்கள் இருப்பதை நான் குற்றம் சொல்லவில்லை. அவை நேர்வழியில் வந்தால்! நல்லமுறையில் செலவிடப்பட்டால்! அதன் மூலம் அனைவருக்கும் நன்மை கிட்டினால்!” என்றான் கிருஷ்ணன் மறுமொழியாக.

“சொத்து நல்லொழுக்கத்தின் மூலம் அடைந்திருக்கலாம். ஆனால் சொத்தின் மூலம் நல்லொழுக்கம் பிறப்பதில்லை. எவருக்கும் அது சொத்தின் மூலம் கிடைப்பதில்லை!” என்று மிகுந்த மனக்கசப்புடன் சாத்யகன் கூறினான். சத்ராஜித்தின் முகத்தில் சந்தேக ரேகைகள் ஓடின. ஆனாலும் அவன் இந்த விஷயத்தைக்குறித்து ராஜசபையில் அனைவரும் இருக்கும் நேரம் அனைவருக்கும் தெரியும்படி விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சாத்யகன் தொடர்ந்து பேசினான். “நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன். எனக்குப் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நல்லொழுக்கமும், மிகை மிஞ்சிய செல்வமும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போனதில்லை. மிகை மிஞ்சிய செல்வம் இருக்குமிடத்தில் நல்லொழுக்கம் இருப்பதில்லை!” என்றான். மேலும் தொடர்ந்து, “ சொத்துக்களை அதிகம் சம்பாதித்து விட்டதாலேயே ஒருவன் தன்னை அனைவருக்கும் மேலானவனாக, அவ்வளவு ஏன் கடவுளாகக் கூட நினைப்பது  தெரியுமா உனக்கு? அவனைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?” சாத்யகின் மனக் கசப்பும் வருத்தமும் முழுவதுமாக இந்த வார்த்தைகளில் வெளிப்பட்டன. சத்ராஜித் தன்னுடைய பாகத்திலிருந்து தன் சொத்தைப் பிரிக்க மறுத்ததால் ஏற்பட்ட குறைபாடு சாத்யகியின் வார்த்தைகளில் வெளிப்பட்டன. இது சத்ராஜித்துக்கு ஒரு பலமான அடியாகவும் விழுந்தது.

அனைவரும்சத்ராஜித்தையே பார்த்தனர். அவன் இகழ்ச்சியுடன் நகைத்தான். “அவனை நான் அசுரன் அல்லது பிசாசு என்பேன்!” என்று கூறிய கிருஷ்ணன் சிரித்தான். அங்கே கூடிய மற்ற அனைவருக்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தனர். அனைவரும் ஊமையாகிவிட்டனரோ என எண்ணும்படியாக அமைதி!  ஆனால் உள்ளுக்குள் அனைவருக்கும் கிருஷ்ணனின் வார்த்தைகளால் சந்தோஷமே ஏற்பட்டது. கிருஷ்ணனின் வெளிப்படையான விமரிசனத்தால் ஒரு பக்கம் கவலையும் ஏற்பட்டது. அங்கே ஒரு மாபெரும் கலவரம் ஏற்படப் போகிறது என்று அஞ்சினார்கள். “பாண்டவர்களை வளப்படுத்த வேண்டித் தங்கள் செல்வங்களை இழந்து ஏழையான யாதவர்களுக்கும், சொத்து இருந்து கொண்டிருப்பதால் ஒருவன் கடவுளோ அல்லது சாத்தானாகவோ ஆகிறான் என்பதற்கோ என்ன வித்தியாசம் இருக்கிறது? பெரிய அளவில் ஒன்றும் இல்லை. சொத்து இருக்கிறவன் இதனால் எல்லாம் பிசாசாக ஆகிவிட மாட்டான். சொத்தில்லாதவன் பெரிய பதவியையும் அடையப் போவதில்லை!” என்று முன்னர் பேசிய அந்த வயதான யாதவத் தலைவர் கூறினார்.

“அப்படியா?” என்று கிருஷ்ணன் புன்முறுவலுடன் கேட்டான். “நீங்கள் அங்கே தான் தப்புச் செய்கிறீர்கள். பாண்டவர்களை வளப்படுத்தியதால் நாம் செல்வத்தில் வேண்டுமானால் ஏழையாகி இருக்கலாம். ஆனால் நேர்மைக்கும், நீதிக்கும் முன்னால் நாம் மாபெரும் முதலீடைச் செய்தவர்கள் ஆகிறோம். நாம் கொடுத்த செல்வங்கள் அனைத்தும் தர்ம சாம்ராஜ்யம் அமைக்க வேண்டிச் செய்த முதலீடு. சாவை விடக் கொடியதானதொரு கஷ்டத்தில் அவர்கள் தவிக்கையில் நேர்மைக்காகப்பாடுபட்டுக் கொண்டிருக்கையில் நாம் சரியான சமயத்தில் செய்த உதவி அது. தர்மசாம்ராஜ்யம் நிறுவுவதற்காகவே அவர்கள் இந்திரப் பிரஸ்தத்தையே நிர்மாணித்தார்கள். இப்போது அந்த தர்ம சாம்ராஜ்யம் நிறுவுவதில் அவர்களுடன் நாமும் துணை போகிறோம். நாமும் அவர்களுடைய கூட்டாளிகளாகி இருக்கிறோம். தர்மத்தை நிலை நாட்டுவதில் அவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.”

சத்ராஜித்துக்கு இப்போது தன்னுடைய நிலைமையை இந்த சபையில் தெளிவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது. யாதவர்களை மிரட்டியும், பயமுறுத்தியும், கட்டாயப்படுத்தியும் தான் தன்னை ஓர் உயர்ந்த நிலையில் வைத்திருப்பதை இவர்கள் கேள்விக்கு உள்ளாக்குவதைப் புரிந்து கொண்டான். அதைக் குறித்தே கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்பதையும் தன்னுடைய நிலைக்குச் சவால் விடுவதையும் புரிந்து கொண்டுவிட்டான்.  ஆகவே தன் கண்களைப் பயங்கரமாக உருட்டிக் கொண்டு, மிக உரத்த குரலில் பேச ஆரம்பித்தான். “இந்தப் பாண்டவர்களோடு நமக்கு என்ன வந்தது? அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து நாம் அடையப் போகும் லாபம் தான் என்ன? நாம் நம்முடைய சுக வாழ்க்கைக்காகவே மாபெரும் செல்வத்தை ஈட்டினோம்; ஈட்டி வருகிறோம். அதை நாம் நமக்காவே பயன்படுத்திக் கொண்டு அனுபவிக்க வேண்டுமே அல்லாது தாரை வார்க்கக் கூடாது!”

“மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே! பணத்தை அதீத செல்வத்தைத் தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காகவோ, தனக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவோ, நாமே அனுபவித்துக் கொள்வதற்கோ பயன்படுத்துவது மாபெரும் தவறு! அது நல்லதற்கில்லை! திருட்டுக்குச் சமானமானது!” என்று கிருஷ்ணன் கடுமையும், கண்டிப்பும் கலந்த குரலில் தீர்மானமாகக் கூறினான். சத்ராஜித்திற்குச் சவால் விடும் தோரணையில் பலராமன் அப்போது குறுக்கிட்டு, “நன்கு கூறினாய், கோவிந்தா! நன்கு கூறினாய்!” என்று அவனைப் பாராட்டினான். சத்ராஜித் கொஞ்சம் யோசித்தான். இவ்வளவு பெரிய ராஜசபையில் இத்தனை பெரிய மனிதர்கள் இருக்கையில் கடுமையான சட்டதிட்டங்களும், நன்னடத்தைகளும் மட்டுமே அனுமதிக்கப்படும் இடத்தில் இப்போது அவன் சொல்லும் எத்தகைய சொற்களும் அவனுக்குப் பேரிழிவையே உண்டாக்கும். அவனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும். ஆனாலும் உள்ளுக்குள் எழுந்த கோபத்தை அடக்கிய வண்ணம் அவன் பேசினான்:” எனக்கு எவ்விதக் கட்டாயமும் எழவில்லை. எவரும் என்னைக் கேட்கவும் இல்லை. குரு வம்சத்தினருக்குக் கப்பம் கட்டும்படியான சூழ்நிலை ஏதும் எனக்கு ஏற்படவில்லை. நான் யாருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கவில்லை. எனக்குக் கடமைகளும் ஏதும் இல்லை. அவர்களுக்கோ அல்லது மற்ற எவர்களுக்குமோ எனக்கு எவ்விதமான கடமைகளும் ஏற்படவில்லை.” என்று கொஞ்சம் இகழ்ச்சி தொனிக்க அவமதிப்பாகப் பேசினான்.

சத்ராஜித் எவ்விதமான சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாமல் அவன் மனதில் தோன்றியதைப் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த பலராமனுக்குக் கோபம் வந்தது. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. அவன் பேச ஆரம்பிப்பதற்குள்ளாகக் கிருஷ்ணன் குறுக்கிட்டான். “கப்பமா? கப்பம் எங்கிருந்து வந்தது? நாம் குரு வம்சத்தினருக்குக் கப்பம் ஏதும் செலுத்தவில்லை! துவாரகையின் இந்த யாதவர்களால் பாண்டவர்களிடம் ஒரு அருமையான முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. ஆரிய வர்த்தத்தின் வாழ்க்கை முறையை வலுப்படுத்தவும், ஆர்யர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் செய்யப்பட்ட மாபெரும் முதலீடு அது!” என்றான் கிருஷ்ணன்.

சத்ராஜித் சீறினான்! “உன் மக்களை நீ வளம் குன்றச் செய்திருக்கிறாய்! நீ இதயமில்லாதவன்! உன் சொந்த மக்களை உன் சொந்த யாதவ குலத்தை நீ ஏழையாக்கி இருக்கிறாய்!” என்ற சத்ராஜித் தன்னைக் கொஞ்சம் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, “சரி, சரி, இப்போது இது போதும்! நாம் இன்னொரு நாள் இதைக் குறித்து இன்னும் விரிவாகப்பேசுவோம்.” என்றான்.  கிருஷ்ணன் அப்போது அமைதியாக, ஆனால் கண்டிப்பான குரலில், “இவ்வளவு நேரமாக நான் என்ன செய்து கொண்டிருந்தேன்? உங்களிடம் பேசிக் கொண்டு தானே இருக்கிறேன்?” என்றவன், “சரி, நீங்கள் இந்த விஷயத்தைக் குறித்து மேலும் என்னிடம் தனியாகப் பேச விரும்பினால் நாளைக் காலை நான் என்னுடைய நித்ய கர்மானுஷ்டானங்கள் முடிந்ததும் உங்களை வந்து பார்க்கிறேன். அப்போது உங்களுக்குப் புரியும். நீங்கள் உங்கள் சொத்தை இழக்க விரும்பாததால் தான் மற்ற யாதவர்களுக்கு அதை இட்டு நிரப்ப வேண்டி அவர்கள் சொத்தை இழக்க வேண்டி இருந்தது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். “ என்றான்.

சத்ராஜித் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து நின்றான்.தன் கண்களை உருட்டிய வண்ணம் மீண்டும் உரத்த குரலில் கத்தினான். “என்னுடைய நடத்தை குறித்த விமரிசனம் எதுவும் மற்றவர்கள் செய்வதை நான் விரும்புவதில்லை. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்!” என்றான்.

“மஹாராஜா உக்ரசேனர் முன்னிலையில் நீங்களும் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதை நாங்களும் அனுமதிக்கப் போவதில்லை!” என்ற வண்ணம் பலராமனும் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்தான். அப்போது கிருஷ்ணா தன் கைகளால் அவன் கைகளை அழுத்திய வண்ணம் தான் இவனுக்குத் தக்க பதில் சொல்வதாய்க் குறிப்பால் உணர்த்தினான். கிருஷ்ணனும் பலராமனைப்போல் அல்லது சத்ராஜித்தை விடவும் அதிகக் கோபத்துடன் கத்தப் போகிறான் என்றே சபையினர் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரும் ஏமாந்ந்தனர். சத்ராஜித்தின் வார்த்தைகளால் தான் அதிகம் மனதில் சந்தோஷம் அடைந்தவனைப் போல் அவனைப் பார்த்துச் சிரித்தான். “மதிப்புக்குரிய சத்ராஜித் அவர்களே! நான் உங்களுடன் பேசிய பின்னர் நீங்கள் ஒருவேளை சற்று மாறுபட்டுச் சிந்திக்கலாம்.” என்றான் கிருஷ்ணன்.

அப்போது வசுதேவர் உக்ரசேனரின் காதுகளில் ஏதோ மெதுவாகச் சொல்லவே உக்ரசேனர் அமைதியை நிலைநாட்ட வேண்டித் தன் கைகளை உயர்த்தி அனைவரையும் அமைதி காக்கச் சொன்னார். “ இப்போது இந்த சபையை இத்துடன் முடித்துக் கொள்ள நினைக்கிறேன்.  அடுத்த மாதம் பௌர்ணமி தினத்தன்று ரதப் போட்டி நடைபெறும் என அறிவிக்கிறேன்.” என்றார்.

அவ்வளவில் சபை கலைந்தது!

1 comment:

ஸ்ரீராம். said...

//நல்லொழுக்கமும், மிகை மிஞ்சிய செல்வமும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போனதில்லை. மிகை மிஞ்சிய செல்வம் இருக்குமிடத்தில் நல்லொழுக்கம் இருப்பதில்லை!”//

உண்மை.