Tuesday, May 24, 2016

யார், யார், யார் இவர் யாரோ?

மீண்டும் த்வைபாயனருக்கு நினைவு வந்த போது அவருக்குத் தான் எவ்வளவு நேரமாக நினைவிழந்து கிடந்தோம் என்றே புரியவில்லை. அவர் வேகமாக விழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த அந்த அடி அவருக்கு விழவே இல்லை. இது மட்டும் நினைவிருந்த்து அவருக்கு. அவர் கண்களைத் திறக்க முயன்றார். அவரைச் சுற்றிலும் பல குரல்கள் கேட்டன என்பதோடு அவை பேசிய மொழியும் அவருக்கு மிகவும் பழக்கமான ஆரியர்களின் மொழியே! அவருடைய காயத்துக்கு எவரோ மருந்திட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காயத்தின் விளைவான வலி அவருக்கு மிகுதியாக இருந்தது. மெல்லக் கண்களைத் திறந்தவர் தன்னெதிரே நாலைந்து அந்தணர்களைக் கண்டார்.

அவர்கள் அணிந்திருந்த பூணூலைக் கண்டதும் அவர்கள் அந்தணர்களே என்பதை த்வைபாயனர் உறுதி செய்து கொண்டார். அவர்கள் அவரைத் திரும்பவும் நினைவுலகுக்கு மீட்க முயன்று கொண்டிருந்தனர் என்பதையும் புரிந்து கொண்டார். அவர் எழுந்து உட்கார முயன்றார். அந்த முயற்சியில் தோல்வி அடைந்து மீண்டும் விழுந்தவர் மறுபடியும் நினைவை இழந்தார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு வந்தது அவருக்கு.  மறுபடி எழுந்து அமர முயற்சித்தவரை இரு நபர்கள் உதவி செய்ய மெல்ல மெல்ல அமர்ந்தார்.
அங்கிருந்தவர்களைக் கவனித்தார். ஒருவர் இளைஞராக இருந்தார்.

கிட்டத்தட்ட த்வைபாயனரின் வயதே இருக்கலாம். மான் தோலை அரையில் உடுத்தி இருந்தார். அவர் முகம் பார்க்கவே சந்தோஷமாகவும், கனிவுடனும், கருணையுடனும் பொலிந்தது. த்வைபாயனர் எழுந்து அமர்ந்ததும், அவர் உரக்கக் கத்தினார்: “தந்தையே, தந்தையே, இந்த பிரமசாரி எழுந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு நினைவு மீண்டு விட்டது!” என்று உரக்கக் கத்தினார். த்வைபாயனர் சுற்றும் முற்றும் பார்த்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் மிக்க வணக்கத்துடனும், மரியாதையுடனும் வழி உண்டாக்கிக் கொடுக்க ஒரு வயதான ரிஷி வந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்க்கவே விசித்திரமாக இருந்தது. மிக மிக வயதானவராகத் தென்பட்ட அவரின் முகவாயில் இருக்கும் மயிர்களும், தலையில் தெரிந்த குடுமியின் மயிர்களும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தன. அதிலிருந்து அவர் மிகவும் மூப்பு அடைந்தவர் என்பது புரிந்தது. அவரால் நிமிர்ந்து நடக்க முடியவில்லை. உடல் சிறு கூடாக எளிதில் உடைந்து விடுவார் போலக் காட்சி அளித்தார். அவரால் அந்தத் தாடியின் எடையைத் தாங்க முடியுமா என்னும் சந்தேகம் பார்க்கிறவர்களுக்கு எழுந்தது. கொஞ்சம் கூனல் போட்டு நடந்தாலும் நடையில் வேகம் குறையவில்லை. தன் கையிலிருந்த தண்டத்தை உபயோகிக்காமல் நடந்து வந்தார்.

த்வைபாயனர் அவரைக் கண்டதும் நமஸ்கரிக்க எண்ணினார். ஆனால் அதில் அவருக்கு மிக்க சிரமமாக இருந்தது. இவர் மஹாப் பெரிய முனிவராக இருப்பார் போலிருக்கிறது என நினைத்த த்வைபாயனரிடம் அந்த மஹரிஷி, “முட்டாள் தனமாக நடந்து கொள்ளாதே!” என்று அதட்டல் போட்டார். த்வைபாயனரை அப்படியே சாய்ந்த வண்ணம் அமர வைக்கும்படி கட்டளை இட்ட அவர், தன்னருகே காணப்பட்ட இளைஞனிடம், “சுமாந்து, இவன் எப்படி இருக்கிறான்?” என்று வினவினார். த்வைபாயனரின் முதுகில் ஒரு சில மூலிகைகளை வைத்துக் கட்டிக் கொண்டிருந்த சுமாந்து என்ற அந்த இளைஞன், “விரைவில் இவர் குணம் அடைந்து விடுவார், தந்தையே! ஆனால் காயம் நன்றாக வீங்கிச் சிவந்து காட்சி அளிக்கிறது, மோசமாக இருக்கிறது. ” என்றான். த்வைபாயனரைப் பார்த்து அந்த ரிஷி, “எப்படி இருக்கிறாய்? மகனே? எப்படி உணர்கிறாய்? “ என்று கேட்டார். அவர் முகத்தைப் பார்த்தால் அவர்  புன்னகை புரிவதைப் போல் தெரிந்தது த்வைபாயனருக்கு!

“நான் நன்றாகவே இருக்கிறேன்.” என்ற த்வைபாயனர், தன் வலியையும் மீறிக் கொண்டு புன்னகை புரிய முயன்றார். பின்னர் தன் கரங்களைக் கூப்பிய வண்ணம்,”மதிப்புக்குரிய மஹரிஷி, என் நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளும். என்னை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்! ஆனால் என்னுடன் வந்தவர், பைலர்! அவர் எங்கே? அவருக்கு என்ன ஆயிற்று?”

:கவலைப்படாதே, மகனே! இப்போது தான் அவனை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டிருக்கிறோம். விரைவில் சரியாகிவிடுவான். ஆனால் நீங்கள் இருவரும் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?”

“நாங்கள் ஸ்ரோத்ரியர்கள், வேதங்களுக்காக எங்களை அர்ப்பித்துக் கொண்டிருக்கிறோம்.”

“”ராக்ஷசர்கள் இவ்வளவு மோசமாக உங்களைத் தாக்கும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

“நாங்கள் அப்போது தான் அன்றைய ஹோமத்தை முடித்திருந்தோம். எரிந்து கொண்டிருந்த நெருப்பைத் தணிக்க முயன்று கொண்டிருந்தோம்.

“இந்த சபிக்கப்பட்ட இடத்துக்கு நீங்கள் ஏன், எப்படி வந்தீர்கள்?”

த்வைபாயனர் அழகாகச் சிரித்தார். சிரிப்பில் வசியம் இருந்தது. “உங்களைப் போன்றதொரு தெய்விக முனிவர் இங்கே இருக்கையில் இது சபிக்கப்பட்ட இடம் என எப்படிச் சொல்ல முடியும்?” என்றார். ஆனால் த்வைபாயனரின் இந்தப் புகழ்மொழிகள் அந்த முனிவரிடம் எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. “ம்ம்ம்ம்ம்ம், நீ அக்னியை ஒழுங்காக அழைத்தாயா? அழைத்து முறையான வழிபாடுகளைச் செய்தாயா?” என்றவண்ணம் அந்த ஹோமகுண்டத்தையே பார்த்தார்

அதற்கு த்வைபாயனர், “ஆம், நாங்கள் முறையாகத் தான் செய்தோம். எல்லாச் சடங்குகளையும் பின்பற்றி அக்னியை அழைத்தோம். ஆனால் இந்தக் காட்டில் ராக்ஷசர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை!” என்றார். “ம்ம்ம்ம்ம், மகனே, இன்று அமாவாசை தினம். ஆகையால் நாங்கள் இங்கே வந்தோம். நீ ஒரு வகையில் அதிர்ஷ்டக் காரன் தான். அமாவாசை தினமாக இல்லாதிருந்து நாங்களும் இங்கே வரவில்லை எனில் உன் கதி? அமாவாசை இல்லை எனில் நாங்கள் இங்கே வந்திருக்கவே மாட்டோம்! போகட்டும், உன் பெயர் என்ன?”

“நான் க்ருஷ்ண த்வைபாயனன்.”

“உன் நண்பன் பெயர்?

“அவன் பெயர் பைலர்!”

“நீங்கள் இருவரும் முறையாக பிரமசரிய விரதம் மேற்கொண்டவர்களா?”

“ஆம், ஐயா!”

“இரண்டு பேரும் முட்டாள்கள்! முழு முட்டாள்கள். அதனால் தான் இங்கே வந்தீர்கள்!” என்று கடுமையாகச் சொன்னார் அந்த முனிவர்.

“ஐயா, மதிப்புக்குரிய முனிவரே, என் தந்தையும், நானும் தர்மக்ஷேத்திரத்தைப் பழையபடி மீண்டும் உன்னத நிலைக்குக் கொண்டு வருவதாக சபதம் செய்திருக்கிறோம். தந்தை இப்போது எங்களுடன் இல்லை; பித்ருலோகத்துக்குப் போய்விட்டார். இல்லை எனில் அவரும் இங்கே வந்திருப்பார். சபதத்தை முடிக்கத் தேவையான உதவிகளைச் செய்திருப்பார்.”

தன் பல்லில்லாப் பொக்கை வாயைத் திறந்து அந்த முனிவர் சிரித்தார். சிரிப்பில் உணர்ச்சிகளே இல்லை! “இந்த இடம் சபிக்கப்பட்டது என்பதை நீ அறிய மாட்டாயா இளைஞனே! இங்கே இறந்து போனவர்களின் ஆவிகள் இன்னமும் இங்கேயே சுற்றி அலைந்து கொண்டிருக்கிறதாகச் சொல்கிறார்கள்.”

அந்த முனிவரின் ஆணைப்படி அவருடன் இருந்தவர்களில் சிலர் த்வைபாயனரும், பைலரும் ஏற்படுத்திய அக்னி குண்டத்தில் இருந்து நெருப்பை உண்டாக்கி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்திருந்தனர். இப்போது அக்னி குண்டம் மிகப் பெரியதாகக் காட்சி அளித்தது. இத்தனை பெரிதாக அக்னி குண்டத்தை உண்டாக்கியதை த்வைபாயனர் ஆச்சரியத்துடன் பார்த்தார். விசிறிகளால் வீசப்பட்டு அக்னி மேலே எழும்பியது. இதற்குள்ளாக அந்த முனிவர் தன்னருகே இருந்த சுமாந்துவிடமிருந்து மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சின்ன தாயத்தை வாங்கி அதை தர்ப்பைப் புல்லுடன் சேர்த்துக் கட்டி த்வைபாயனரின் புஜத்தில் கட்டி விட்டார். கட்டும்போதே அதற்கென உரிய சில மந்திரங்களையும் அதற்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

1 comment:

ஸ்ரீராம். said...

அவர் யார் என்று அறிய ஆவல்.