Friday, May 20, 2016

நண்பர்கள் ஆலோசனை!

இங்கே எங்கே அம்மா வந்தாள்? ஆனால் சந்தேகமே இல்லாமல் இது அம்மாவின் குரல் தான்.தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தார் த்வைபாயனர். அவர் அருகே பைலர் தான் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். சுற்றுவட்டாரத்தில் வேறு எவரையும் காணவே இல்லை. ஆனால் அந்தக் குரல்! மிகத் தெளிவாகவும், சற்றே பொறுமையின்மையும் கலந்து கேட்டது. அது அம்மாவின் குரலே தான்! அவள் எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை, ஆனால் இருக்கும் இடத்தில் இருந்து என்னை அழைக்கிறாள்! த்வைபாயனருக்கு மூச்சு விடுவது கூடக் கஷ்டமாக இருந்தது. அந்த அளவுக்கு அவர் மன எழுச்சியில் இருந்தார். “அம்மா, அம்மா, நீ எங்கே இருக்கிறாய்? எங்கிருந்து என்னை அழைக்கிறாய்? சூரிய பகவானே, அம்மா இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவாயாக!” என்று பிரார்த்தித்தார். அவருக்கு இருந்த அரைகுறைத் தூக்கமும் போய்விட்டது. நன்றாக விழிப்பு வந்துவிட்டது. அந்நிலையில் அவருக்குக் கண்ணெதிரே இரு பெரிய விழிகள் மிகக் கொடூரத்துடன் அக்னி குண்டத்திற்கு அப்பாலிருந்து அவரையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

காட்டில் வசிக்கும் கரடி அல்லது காட்டு மிருகங்களின் கண்களாக இருக்கலாம் என்றே நினைத்தார். அந்தக் கண்களைத் தவிரவும் கரியதொரு உருவம் அந்த அக்னி குண்டத்தை நோக்கி வந்தது; அல்லது அப்பால் சென்றது. என்னவென்று சரியாகப் புரியவில்லை. நன்கு கவனிப்பதற்காக உலர்ந்த சுள்ளிகளைப் போட்டுவிட்டு விசிறி எடுத்து நெருப்பை விசிறி எரியச் செய்தார். அவருடைய தாயின் குரல் மீண்டும் கேட்குமோ என்று அவர் காத்திருந்தார்; ஆனால் கேட்கவில்லை. அதில் அவருக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான் எனினும் தன் தாய் தனக்காக எங்கேயோ காத்திருக்கிறாள் என்பது நிச்சயமாயிற்று. எங்கே என்று தான் அவருக்குத் தெரியவில்லை. ஏமாற்றத்திலும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் சுய பச்சாத்தாபத்திலும் அவர் கண்களில் கண்ணீர் பெருகிற்று. அம்மாவின் குரலைக் கேட்டதிலிருந்து அம்மாவின் அருகாமையும் அவள் நினைவும் அவரைத் துன்புறுத்தியது. அம்மாவைப் பார்த்தே ஆகவேண்டும் என்னும் எண்ணத்தில் பொறுமையின்றித் தவித்தார்.

அம்மாவைத் தேடிச் செல்வதும் வியர்த்தம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். எந்தப் பக்கம், எந்த நாட்டில் இருக்கிறாள் என்பதே தெரியாமல் எப்படிக் கண்டு பிடிப்பது? அவள் உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ! ஒருக்கால் இறந்திருந்தாளெனில்! ஆனால் அம்மாவை நினைக்க நினைக்க அவள் நினைவுகள் அவருக்கு மிக அதிகமாக வரவர, அம்மாவுக்குத் தன்னுடைய உதவி, தேவைப்படுகிறது என்னும் எண்ணத்தை அவரால் தவிர்க்க முடியவில்லை. மனம் முழுவதும் அதீத எதிர்பார்ப்புடன் அவர், “கடவுளே, கடவுளே, தயவு செய்! அம்மா இருக்குமிடத்தை எனக்குக் காட்டுவாய்!” என்று வாய் விட்டுப்புலம்பினார். அந்த நினைவுகளால் அவர் வேதனைதான் அதிகம் ஆயிற்று. மெல்ல மெல்ல விடியத் தொடங்கியது. அந்த அதிகாலை வேளையில் அவர் அக்னிகுண்டத்துக்கு அருகே முயல்கள் அமர்ந்து கொண்டு குளிர் காய்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். தங்கள் சிறிய கண்களால் அவரையே உற்றுப் பார்த்தவண்ணம் அவை அமர்ந்திருந்தன. மான்களும் நின்று கொண்டிருந்தன. மெல்லத்தங்கள் முகத்தை நிமிர்த்தி அவரைப் பார்த்தன. சற்றுத் தள்ளி ஓநாய்களும் அமர்ந்திருந்தன. நெருப்பின் முன்னர் தன் கைகளையும், கால்களையும் ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த உருவம் நமக்கு ஆபத்தை விளைவிக்குமா அல்லது அதுவே ஆபத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறதா?

பைலர் எழுந்து விட்டார். தங்கள் எதிரில் அமர்ந்திருந்த அனைத்து மிருகங்களையும் பார்த்த அவருக்கு இதயம் அடிப்பதையே நிறுத்திக் கொண்டது போல் இருந்தது. பயத்தில் தன் கண்களை இறுக மூடிக் கொண்டு த்வைபாயனரை இறுகக் கட்டிக் கொண்டார். த்வைபாயனர் சிறிதும் கவலைப்படாமல் நெருப்பில் மேலும் சுள்ளிகளை இட்டார். நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது. அவர்கள் இருவரும் மான் தோலைத் தங்கள் இருவருக்கும் சேர்த்துப் போர்த்திய வண்ணம் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். மெல்ல மெல்லக் காடும் விழிக்க ஆரம்பித்தது. பக்ஷிகளின் ‘சிர்ப், சிர்ப்’ என்னும் குரல் எங்கும் கேட்டது. அங்கே இருந்த ஓநாய்கள் தங்கள் மறைவிடத்துக்குச் சென்றுவிட்டன. த்வைபாயனரும், பைலரும் எழுந்து கொண்டு சோம்பல் முறித்துச் சோர்வைப் போக்கிக் கொண்டு அருகிலிருந்த ஏரிக்குக் குளிக்கச் சென்றார்கள். “நாம் வழக்கம் போல் நம் காலைக்கடமைகளை முடித்துவிட்டுக் காட்டில் பழங்களைப் பறிக்கச் செல்லலாம்.” என்றார் த்வைபாயனர்.

விரைவில் காலைக்கடமைகளை முடித்துக் கொண்டு அக்னியை வளர்த்தி ஆஹுதிகள் கொடுத்து இருவரும் காட்டில் பறித்து வந்த பழங்களை உண்டனர். பைலருக்கு மேலே செல்வதற்குக் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. ஆகவே த்வைபாயனரிடம், “இனிமேல் நாம் இந்தப் பாதையில் எங்கே போவது? திரும்பி விடலாம்.” என்றார். த்வைபாயனருக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. “நாம் ஏன் திரும்பவேண்டும்? எதற்காக?” என்று கேட்டார். “நாம் கொஞ்ச தூரம் எங்கேயானும் பொழுது போக்கப்போய் விட்டு வரலாம். ஆனால் மீண்டும் இங்கே வந்து தான் தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்தாக வேண்டும்.” என்றார். “அது கடினமான காரியமாக இருக்கும்போலிருக்கிறதே! இந்த இடமே கடவுளராலும், ரிஷி, முனிவர்களாலும் சபிக்கப்பட்ட பிரதேசமாகத் தெரிகிறது. இங்கே நம் வேலையை ஆரம்பிப்பதில் பயனில்லை!” என்றார் பைலர்.

ஆனால் த்வைபாயனர் ஒத்துக்கொள்ளவில்லை!”இது தர்மத்தின் பிறப்பிடம்! சத்திய லோகம்! இங்கே ஓதப்பட்டு வந்த வேதங்களின் குரலொலியை பலவீனமானதொரு எதிரொலியாக என்னால் கேட்க முடிகிறது! பின்னணியில் வேத கோஷங்கள் ஒலித்தவண்ணமே இருக்கின்றன. இங்கே இருந்த நூற்றுக்கணக்கான அக்னி குண்டங்களிலிருந்து எழுந்த புகையின் மணத்தைக் கூட என்னால் நுகர முடிகிறது.” என்றார்.

“அவை எல்லாம் உன்னுடைய பிரமை! இங்கே எனக்கு ஓநாய்களின் ஊளைகளும், நரிகளின் ஊளைகளும் அவை முயல்களை உணவுக்காகத் துரத்தி வேட்டையாடுவதையும் தான் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது.” என்றார் பைலர்.

1 comment:

ஸ்ரீராம். said...

அவரவர் மனவோட்டத்துக்குத் தகுந்தபடி காட்சிகள்..