Saturday, May 7, 2016

த்வைபாயனனின் மறுபிறவி!

ஆண்களுக்கு உபநயனமே மறுபிறப்பாகக் கொள்ளப்படுகிறது. ஆகவே த்வைபாயனனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தானும் பிரமசரிய விரதம் பூண்டு மறுபிறப்பை எய்தி விட்டால் பின்னர் விண்ணில் தன் கொள்ளுத் தாத்தாவோடு ஒளிவீசும் நக்ஷத்திரங்களில் ஒன்றாக ஆகலாம். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை! ஆசாரிய கௌதமர் மங்கள நிகழ்வைத் துவக்கி வைத்தார். வருண பகவானுக்குத் துதிகள் செய்து பிரார்த்தனைகள் செய்தார். சப்தரிஷிகளும் கொட்டைப்பாக்குகளில் ஆவாஹனம் செய்யப்பட்டனர். அக்னி வளர்க்கப்பட்டது. ஆசாரிய கௌதமர் மந்திரங்களைச் சொல்லி அக்னியில் நெய்யை வார்த்து ஆஹுதிகள் கொடுத்து அக்னி பகவானைத் துதிகள் செய்தார்.

“ஏ, அக்னி பகவானே, நீண்ட ஆயுளைக் கொடுக்கும் கொடையாளியே! என் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்! நான் கொடுக்கும் நெய்யை அமுதமாக எண்ணி ஏற்றுக் கொள்வாய்! இதோ இருக்கும் இந்தச் சிறுவனுக்கு வழிகாட்டி அவனை நீண்ட ஆயுளுடன் வாழச் செய்வாய்! உன் மகனாக இவனை எண்ணிக் கொண்டு இவனுக்கு நன்மையையே தருவாய்!”

இந்தப் பிரார்த்தனைக்கேற்ற மந்திரங்களைச் சொன்னார் கௌதமர். அதோடு மற்றக் கடவுளரையும் பிரார்த்தித்துக் கொண்டார். த்வைபாயனனுக்குத் தான் விண்ணில் அனைத்துக் கடவுளரையும் ஒருங்கே பார்ப்பது போன்ற காட்சி தெரிந்தது; தான் அனைவரையும் பார்ப்பதாகவும், அவர்கள் தனக்கு ஆசிகளை வழங்கித் தன்னை பிரமசரிய விரதம் ஏற்க வரவேற்பதாகவும் புரிந்து கொண்டான். பராசரர் கௌதமரைத் தன் மகனுக்கு குருவாக இருக்கும்படி வேண்டிக் கொண்டார். த்வைபாயனனுக்கோ தன் தந்தையே தனக்கு குருவாக இருக்க வேண்டும் என்னும் ஆசையே இருந்தது. ஆனால் கௌதமர் பராசரரின் இந்த வேண்டுகோளால் மிகவும் சந்தோஷம் அடைந்தார். ஆகவே கௌதமரும் தன் தந்தையின் சீடர் தானே என்று தன் மனதைச் சமாதானம் செய்து கொண்டான் த்வைபாயனன். த்வைபாயனனின் இடுப்பில் தர்ப்பையால் அரைக்கச்சையைப் போல் கட்டிய கௌதமர்,

“இது உண்மையையே போதிக்கும், உண்மைக்கே சேவை செய்யும், தபம் செய்யும் சக்தியை அதிகரிக்கும், கெடுதல்களை அழிக்கும்; இந்தப் புனிதமான மேகலை போன்ற இந்த தர்ப்பையால் ஆன கச்சையை அணிந்து எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவாய்!”

அதன் பின்னர் மான் தோலை த்வைபாயனனுக்கு அணியக் கொடுத்தார் கௌதமர். அப்போது சூரியபகவானின் கண்களில் தான் இதை அணிவதன் மூலம் தன்னிடம் ஒளி பிறந்திருப்பது தெரியட்டும் என்றும் ஏ, சூரியனே, எனக்கு புத்தியைக் கொடு, விசாலமான அறிவைக் கொடு, நீண்ட ஆயுளையும் அதன் மூலம் நான் என்றென்றும் சுடரொளி போல் பிரகாசிக்கவும் அருள் புரிவாயாக!” என்று பிரார்த்திக்கும்படியான மந்திரங்களைச் சொன்னார். அதன் பின்னர் கௌதமர் எழுந்து கிழக்கைப் பார்த்து நின்ற வண்ணம் த்வைபாயனனைக் கீழ்க்கண்ட விதம் சொல்லச் சொன்னார்.

“ஏ, சூரியனே, கடவுளரே, நான் என் குருவைக் கண்டு விட்டேன். அவர் இப்போது என் முன்னே நிற்கிறார். அவருடைய அனுகிரஹத்தால் நான் எல்லாவிதமான தீமைகளையும் அழித்து ஒழித்து மரணத்தையும் வெல்லும் சக்தியைப் பெறுவேன். அவருடைய புனிதமான துறவியைப் போல் வாழும் வாழ்க்கை முறையாலும், அவருடைய நல்ல எண்ணங்களாலும் நான் நன்மையையே பெறுவேனாக!”

அதன் பின்னர் குருவுக்கும், சிஷ்யனுக்கும் இடையில் கீழ்க்கண்ட சம்பாஷணை நடந்தது. ஆசாரியரின் கேள்விகளுக்கு த்வைபாயனன் பதில்களைக் கொடுத்தான்.

“ஏன் நீ இங்கே வந்திருக்கிறாய், குமாரா?”

“நான் இங்கே வந்திருப்பது பிரமசரிய விரதம் அனுஷ்டிக்கவேண்டியே! மாட்சிமை பொருந்திய குருவே, என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.

“உன் பெயர் என்ன குமாரா?”

“என் பெயர் க்ருஷ்ண த்வைபாயனன். பராசர முனிவரின் மகன்!”

அதன் பின்னர் ஆசாரியர் கூறினார். “ஓ, சூரிய பகவானே! இந்தச் சிறுவன் உன்னுடைய பிரமசாரி, உன் மகன். இவனை நீயே காப்பாற்ற வேண்டும். உன்னுடைய இந்த மகனை நீ இறக்கும்படி விட்டுவிடாதே! இவனைக் காத்து ரக்ஷித்து நீண்ட நாள் வாழ ஆசிகளைக் கொடு! இவன் நேர்மையான தர்மத்தின் வழியில் நடந்து ஞானம் அடையும்வரை இவனைக் காத்து ரக்ஷிப்பாய்!”

த்வைபாயனனின் இதயம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தது. அவன் கண்கள் சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டன. அவன் இப்போது மீண்டும் பிறப்பு எடுத்துவிட்டான். பிரமசரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டிய பாதையைக் கண்டடைந்து விட்டான். அவனை எழுந்து நிற்கச் சொல்லிப் பூணூலை அவன் கையில் கொடுத்து இரு கைகளாலும் பிடித்துக் கொள்ள செய்தனர். பின்னர் பராசரரிடம் த்வைபாயனனை இந்த யக்ஞோபவீதத்தை அணிந்து கொள்ள அனுமதி வாங்கச் சொன்னார்கள். த்வைபாயனனும் தந்தையிடம், “தந்தையே, நான் இந்த யக்ஞோபவீதத்தை அணிந்து கொண்டு பிரமசரிய விரதம் அனுஷ்டிக்கப் போவதற்கு உங்கள் அனுமதி தேவை!” என்று கேட்டான். “ஆம், மகனே, நான் உனக்கு என் அனுமதியைக் கொடுக்கிறேன்!” என்று பராசரர் கூறினார். பின்னர் ஆசாரிய கௌதமர் பராசர முனிவருக்காகக் குனிந்து ஏதோ ரகசியமாகக் கேட்டார். த்வைபாயனன் காதில், “அம்மா” என்னும் சொல் விழுந்தது. ஆகவே அவன் அங்கு கூடி இருந்த பெண்களில் தன் தாய் இருக்கிறாளா என்று தேடிப் பார்த்தான். அவன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.” என் தாய் இல்லாமல் நான் எப்படி மீண்டும் பிறப்பேன்?”

பராசரரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப ஆசாரிய கௌதமர் கொஞ்சம் தர்ப்பைப் புற்களை எடுத்து அங்கிருந்த அக்னிகுண்டத்தின் அருகே வைத்தார். பின்னர் அந்தப் புற்களுக்குக் குங்குமம் இட்டு, அக்ஷதைகளும், பூக்களும் சார்த்தி வழிபட்டார். பின்னர் த்வைபாயனனைப் பார்த்து, “த்வைபா, உன் தாய் இந்த தர்ப்பைப் புற்களில் வந்திருக்கிறாள். அவளை இந்த தர்ப்பைப் புற்களில் அழைத்து வந்துவிட்டோம். இப்போது அவள் இங்கே இருக்கிறாள். ஆகவே நீ இப்போது அவளுடைய அனுமதியைக் கேள்! இதோ இப்படிச் சொல்வாய்!”தாயே இந்த யக்ஞோபவீதத்தை அணிந்து கொண்டு பிரமசரிய விரதத்தை நான் அனுஷ்டிக்க உன் அனுமதி தேவை!” த்வைபாயனன் இந்த நிகழ்வால் ஏமாற்றம் அடைந்தான். ஆனால் அவனால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை. ஆசாரியர் சொல்லிக் கொடுத்தபடியே திரும்பச் சொன்னான். பின்னர் முனிவர் நல்ல நேரம் வந்துவிட்டதாக சமிக்ஞையின் மூலம் தெரிவித்தார். முக்கியமான நேரம் வந்தே விட்டது. ஆசாரிய கௌதமர் தன் பிரார்த்தனைகளைச் சொல்லி த்வைபாயனனைத் திரும்பச் சொல்லச் சொன்னார்.

“இந்த யக்ஞோபவீதம், சிருஷ்டிகர்த்தாவான பிரமனுடன் பிறந்தது, மிகப் புனிதமானது! இது எனக்கு நீண்ட ஆயுளைத் தரும்; இது எனக்கு சக்தியையும் புனிதத் தன்மையையும் அளிக்கும். நான் இதை அணிந்து கொள்ளப் போகிறேன். இதன் மூலம் எனக்கு உடல் வலுவும், மனோபலமும் சுறுசுறுப்பும் சக்தியும் வாய்ந்த மனமும் கிடைக்கட்டும்.”

வாத்தியங்கள் ஒலித்தன. வாயினால் ஒலி எழுப்பும் குழல் வாத்தியங்கள் ஒலித்தன. சங்கங்கள் ஆர்ப்பரித்தன. எக்காளங்கள் ஊதப்பட்டன. சுமங்கலிப் பெண்கள் மங்கள கீதம் பாடினார்கள். ஏற்கெனவே உபநயனம் முடிந்த பெரியோர்கள் இந்த பிரமசாரிக்கு அக்ஷதைகளும், பூக்களும் சொரிந்து ஆசீர்வதிக்கத் தயாரானார்கள். சூரியன் விண்ணில் பிரகாசமாகத் தெரிந்தான். த்வைபாயனன் சூரியனைப் பார்த்தான். சூரியனின் பிரகாசமான கதிர்கள் அவனை ஆசி கூறுவது போல் உணர்ந்தான். தான் எப்போதுமே ஆசீர்வதிக்கப்படுவோம் என்னும் நிச்சயம் அவன் மனதில் ஏற்பட்டது. அவன் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டான்.

நான் எப்போதுமே நல்லவற்றையே நினைவில் வைத்துக் கொண்டு தீமை தருபனவற்றை மறந்துவிடுவேன். நல் நம்பிக்கையையே கடைப்பிடிப்பேன்; பொய்யான நம்பிக்கை இல்லாமைக்குத் துணை போக மாட்டேன். புத்திசாலிகளுக்கும், ஞானிகளுக்கும் மரியாதை கொடுத்து நடந்து கொள்வேன்; அறியாமையைத் தவிர்த்துவிடுவேன். உண்மையின் வழியிலேயே நடப்பேன்; பொய்க்குத் துணை போக மாட்டேன். ஒரு பற்றற்ற துறவியைப் போன்ற வாழ்க்கையை நடத்துவேன்; ஆடம்பரமான வாழ்க்கைக்கு அடி பணிய மாட்டேன்.”

அதன் பின்னர் ஆசாரிய கௌதமர் அவனிடம் கேட்டார்!”த்வைபாயனா, நீ மீண்டும் பிறந்து விட்டாய் அல்லவா?”

“ஆம்” என்றான் த்வைபாயனன்.

“இந்த நீரை அருந்து” என்றார் ஆசாரியர். நீரை அருந்தினான் த்வைபாயனன்.

“நீ உன் கடமைகளைச் சரியாகச் செய்வாய் அல்லவா?” என்று கேட்டார் ஆசாரியர்.
“ஆம்” என்று த்வைபாயனன் சொல்ல, “நீ உன் தினசரி உணவை பிக்ஷை எடுத்து உண்பதாக ஒப்புக் கொள்கிறாய் அல்லவா?”

 “ஆம் ஐயா!” என்றான் த்வைபாயனன். “உன் குருவுக்கு நீ உண்மையாக நடந்து கொள்வாயா?” என்று குரு கௌதமர் கேட்டார். த்வைபாயனன், “நடந்து கொள்வேன்!” என்றான்.