Wednesday, September 21, 2011

கண்ணன் என் நண்பன்! கண்ணன் என் தோழன்!

“வாசுதேவ கிருஷ்ணா! நாம் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறோம். அதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் இந்தச் சுபவேளையில் அசுபமாக அழிவைக்குறித்து நீ பேசலாமா?? அதிலும் இந்த வெற்றியால் நாம் நம் குலத்தின் மேன்மையின் உச்சகட்டத்தை எட்டிவிட்டோம். “உக்ரசேனர் கூறினார். கண்ணன் தயக்கமும், யோசனையும் கலந்து ஒரு கணம் பேசாமல் இருந்தான். பின்னர் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு,”ஜராசந்தனின் திட்டத்தை நாம் நொறுக்கிவிட்டோம் தான்; ஆனால் அவன் அதற்குப் பதிலடியாக மதுராவை சர்வநாசமாக்கிவிட்டுத் தீ வைத்துச் சாம்பலாக்கிவிடுவான்.” இதைச் சொல்கையிலேயே கண்ணன் குரலில் கவலையுடன் கூடிய தடுமாற்றம். அனைவருக்கும் இந்தப் பேருண்மை மனதில் உரைக்க அவர்களும் கவலையுடன் அவரவர் ஆசனத்தில் சாய்ந்தார்கள். மந்திரி கத்ரு, “உறுதியாகச் சொல்கிறாயா கண்ணா? “ என்று கேட்கக் கண்ணனும் அதை ஆமோதித்தான். மற்றவர்களையும் பார்த்து,”நான் சொல்வது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் போகலாம். என்றாலும் யாதவர்களின் உணர்வுகளை, வீரத்தை நான் குறை கூறவோ அதை அழிக்கவோ நினைக்கவில்லை. இன்னமும் பலமாக, வலுவானவர்களாக மாறவேண்டும். தன்னம்பிக்கையும் மிகுந்தவர்களாக ஆகவேண்டும். “

“அப்படி என்றால் குண்டினாபுரம் போனதே தவறெனத்தோன்றுகிறதே!” முதியவர் கடன் கூற, கண்ணன் அவரைப் பார்த்து, “ மரியாதைக்குரிய மாமா, பழைய விஷயங்களைக் கிளறவேண்டாம். அது யாருக்கும் எந்த உதவியும் செய்யப்போவதில்லை. அதிலும் நம்முடைய மானத்தையும் கெளரவத்தையும் காப்பதில் நீங்களே துடிப்புடன் முனைந்து நின்றீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம். அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்திருந்தீர்கள்.” கண்ணன் தனக்குள்ளேயே வார்த்தைகளை அளப்பது போல் பேசினான். “ நானும் என்னால் இயன்றதைத் தான் செய்திருக்கிறேன். இதுதான் நம்மால் இயலும். நாம் மட்டும் எதுவும் செய்யாமல் இருந்திருந்தோமானால் நம்முடைய மானம், மரியாதையைக் குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள். ஜராசந்தன் நாம் கவலையும், அச்சமும் கொள்ளத்தக்க விதத்தில் ஓர் பேரணியை உருவாக்கி வைத்திருந்தான்; அல்லது உருவாக்கியிருப்பான். ஒரு போலியான சுயம்வரத்தை நம்மால் தடுக்க இயலாமல் போயிருந்திருக்கும். அதுவும் நம்முடைய சொந்தக் குடும்பத்திலேயே நடந்திருக்க வேண்டியதாய் இருந்தது. மரியாதைக்குரிய தகப்பனாரின் சகோதரியும் எங்கள் அத்தையுமான ஷ்ருதஸ்ரவாவின் அருமை மகன் சிசுபாலன் நம் குடும்பம் தானே! அவனும் ஒரு பாதி யாதவன் ஆவானே!”

“நான் நன்கறிவேன். கண்ணா! ஜராசந்தன் எப்போதுமே ஆபத்துக்குரியவனே. அவ்வளவு எளிதில் நம்மால் அவனிடமிருந்து தப்ப இயலாது. எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நம்மை நோக்கிவரும். அதை எதிர்நோக்க நாம் தயாராக இருக்கவேண்டும்.” அக்ரூரர் கூறினார். “எல்லாம் வல்ல அந்த மஹாதேவனே நம்மை எல்லாம் ரக்ஷிக்கவேண்டும். உன்னோடு கூடவே அவர் இருந்து உனக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நல்வழிகாட்டி இந்தப் பேரிடரிலிருந்து நம்மை மீட்கவேண்டும்.”

“ஆம், கிருஷ்ணன் நமக்குத்தலைமை வகித்தால் போதுமானது; எப்படிப்பட்ட ஆபத்தானாலும் அதிலிருந்து மீண்டு விடுவோம்.” உக்ரசேன ராஜா கூறினார். அவர் குரலின் பாசமும், கனிவும், அதில் தெரிந்த நம்பிக்கையும் அனைவரையும் உலுக்கியது. வசுதேவர் அப்போது,”எவ்வகையில் அவன் நம்மைத் தாக்குவான்? விதர்ப்ப நாட்டு அரசன் பீஷ்மகனோ, சேதி நாட்டரசனோ அல்லது அவந்தி நாட்டரசனோ இப்போது அவனுடன் அணியில் சேர யோசிப்பார்கள் அல்லவா?”

“ஆம், தந்தையே, அவனுடைய பேரணியை ஓரளவுக்கு நாம் உடைத்துப் பலஹீனமாக்கி விட்டோம். இனி ஜராசந்தன் என்ன நடவடிக்கை எடுப்பான் என்பதை என்னால் நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்; அவன் ஒரு வலுவான உறுதியான முயற்சியை எடுத்து நம்மைக் கட்டோடு அழிக்க முயல்வான். ஆனால் இந்த விஷயம் நம்முள்ளே இருக்கட்டும்.” கண்ணன் இறைஞ்சினான். அனைவரும் அதற்கு ஒத்துக்கொண்டு உண்மையைத் தங்கள் நெஞ்சினுள்ளே புதைக்க, கண்ணனோ இளைஞர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுப்பதிலும் தேர்ச்சி பெற வைப்பதிலும் முனைந்தான். சில மாதங்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஓடின. அப்போது ஓர் நாள் அஸ்தினாபுரத்திலிருந்து ஓர் விருந்தாளி அங்கே வந்தான். அவனுடன் ஒரு சில பரிவாரங்களும் வந்தன. முன்னறிவிப்புச் செய்யாமல் எந்தவிதமான வரவேற்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் வந்த அந்த விருந்தாளி தன் தேரை நேரே வசுதேவரின் மாளிகைக்கு ஓட்டினான். நல்ல ஆஜானுபாகுவாகவும், நல்ல உயரமாகவும் இருந்தான் அவன். உறுதியான உரமுள்ள கைகளும், கால்களும் அவன் மிகுந்த பலவான் என்பதைக் காட்டியது. அவன் இதழ்களில் எப்போதும் ஒரு மென்னகை தவழ்ந்தது. வசுதேவரின் மாளிகையின் முன்னால் தன் ரதத்தை நிறுத்திய அவன், அதிலிருந்து குதித்து இறங்கி, வெளி முற்றத்தை அடைந்தான்.

அங்கிருந்து ஓங்கிய குரலில் கத்தினான்: “வசுதேவ மாமா, என் அருமை மாமா, தேவகி அத்தை, எங்கே மறைந்துள்ளீர்கள்? வெளியே வாருங்கள்! சகோதரா பலராமா, கிருஷ்ணா, உத்தவா, நான் வந்துவிட்டேன். இன்னமும் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள்? எங்கே யாரையும் காணோம்? கிருஷ்ணா, வாசுதேவ கிருஷ்ணா! எங்கேப்பா மறைந்து கொண்டாய்? “ முற்றத்தின் நான்கு சுவர்களும் வந்தவனின் குரலை எதிரொலித்தன. அதிசயமாயும் பார்த்தன. ஏனெனில் இன்றுவரை வசுதேவரின் மாளிகையில் இப்படி ஒரு அதிகாரமான குரலை அந்தச் சுவர்கள் மட்டுமன்றி மாளிகையே கேட்டதில்லை. ஆகவே சுற்றுப்புறமும் சேர்ந்து வியப்பான மெளனத்தில் ஆழ்ந்திருந்தது.

புதுக்குரலைக் கேட்ட கிருஷ்ணன் தான் முதல்முதல் வெளியே வந்தான். வந்து யாரெனப் பார்த்தான். ஒரு குட்டி ஆனையே வந்துவிட்டதோ என்னும்படிக் காட்சி அளித்தான் பீமன். ஆம், பாண்டவர்களில் இரண்டாமவன் ஆன பீமனே வந்திருந்தான். கண்ணன் அவனைக் கண்டதுமே புரிந்துகொண்டுவிட்டான். இளையவனான கண்ணன் நமஸ்கரித்து வணங்கும் முன்னர் அவனைக் கட்டித் தழுவினான் பீமன். தன்னிரு கரங்களாலும் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் எளிதாகக் கண்ணனை மேலே தூக்கிவிட்டான். அப்படியே கண்ணனை வைத்துக் குலுக்கித் தன் அன்பை வெளிப்படுத்தினான். மழை நீரை உள்ளடக்கிக்கொண்டு கருங்கும்மெனக் காட்சி அளிக்கும் கருநீல மேகத்தினூடே திடீரென உதய சூரியனின் செங்கிரணங்கள் படுவதைப் போல் கண்ணனின் முகம் சிவந்துவிட்டது.

அவனைக்கீழே இறக்கிய பீமன், “ நீ துளிக்கூட மாறவே இல்லையப்பா; அப்படியே இருக்கிறாயே! என்னைப் பார்! எவ்வளவு பெரியவனாகவும் பலவானாகவும் வளர்ந்துவிட்டேன். ஆனால் ஒன்று; பிரபலமடைவதில் நீ என்னை விட அதிகம் வளர்ந்துள்ளாய்! எங்கே பார்த்தாலும் உன் பேச்சுத்தான்; உன் சாகசக்கதைகள் தான். உண்மையைச் சொல்லட்டுமா! ஹஸ்தினாபுரம் முழுக்க உன்னுடைய சாகசக் கதைகளையே பேசிக்கொண்டிருக்கின்றனர். எனக்கு அலுத்துவிட்டது அப்பா! அட, எங்களையும் குறித்து இம்மாதிரிப் புகழ்ந்து பேசக் கொஞ்சம் இடம் கொடு அப்பா! எவ்வளவு நாட்கள் தான் உன்னையே புகழ்ந்து கொண்டிருப்பார்கள்?”

“சகோதரா, பீமா! எவ்வளவு பலவானாக வளர்ந்துவிட்டாய்! உன்னைப் பார்க்கவே சந்தோஷம் மிகுந்துவிட்டது. அத்தை குந்தியும் மற்ற சகோதரர்களும் நலம் தானே? என்ன செய்தி கொண்டு வந்தாய்?”

“ஹா,ஹா, ஹஹ்ஹா! நான் இருக்கும்வரை அவர்களுக்கு என்ன கேடு நடந்துவிடும்? ஒரு கை அல்ல இரண்டு கையாலும் பார்த்துவிட மாட்டேனா?? ஆனால்……இப்போது நான் இங்கே வந்துவிட்டதால் கொஞ்சம் யோசிக்கணும் தான். எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும். “ இதைச் சொல்லிக்கொண்டே தன் வழக்கப்படி சத்தமாய்ச் சிரித்தான் பீமன். கிருஷ்ணன் அவனை மாளிகையினுள்ளே அழைத்துச் சென்றான்.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 96 ஐ படித்து விட்டேன் கீதாமா
பீமனின் வருகை ஆரவாரமாக அட்டகாசமாக இருக்கிறதே !