ஜராசந்தன் என்ன நினைத்தாலும், கண்ணனை எவ்வளவு வெறுத்தாலும் குண்டினாபுரத்து மக்கள் அவனுக்கு அளித்த மாபெரும் வரவேற்பை அவனால் நிறுத்த முடியவில்லை. தன் ஆயுதப் படைகளின் மூலம் கண்ணனை எதிர்க்கலாமா என்று கூட யோசித்த ஜராசந்தனுக்கு அது மாபெரும் கலவரத்தில் முடியும் என்று அவன் உள்மனமே அவனை எச்சரித்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். மிகக் கஷ்டப்பட்டே தன் ஏமாற்றங்களையும், உள்ளூரப் பொங்கி எழுந்த கோபத்தையும் வெளியே காட்டாமல் அடக்கிக்கொண்டான். தன் நண்பர்களாகிய மற்ற அரசர்களிடம், கண்ணன் இங்கே சமாதானத்தையும், அமைதியையும் நாடி வந்துள்ளான்; அவனுக்கு உதவ வேண்டியது நம் கடமை; இப்போது அவனுடன் நாம் சண்டையிடக் கூடாது.” என்று மிகப் பெருந்தன்மை உள்ளவன் போல் காட்டிக்கொள்ள நேர்ந்தது. கண்ணன் அங்கே வந்தது ஏதோ ஒன்றுமில்லாத சாதாரணமான ஒரு விஷயம் என்பது போல் காட்டிக்கொள்ளவே அவன் உள்மனதில் உள்ள வஞ்சகமும், சூழ்ச்சியும் புரியாமல் அவன் நண்பர்களாகிய அரசர்கள் வியந்து ஜராசந்தனைப் பாராட்டினார்கள். அவன் பெருந்தன்மையான குணத்தை வியந்தனர்.
ஜராசந்தனே வலுவில் அனைத்து அரசர்களையும் கிருஷ்ணனுக்கும், அவன் பரிவாரங்களுக்கும் அளிக்கப்போகும் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டு அவனைப் பெருமைப் படுத்தும்படி வற்புறுத்தினான். இது மற்ற அரசர்களுக்கெல்லாம் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது. ஜராசந்தன் என்ன நினைப்பானோ என்ற கவலையும், அச்சமும் இல்லாமல் தைரியமாய்க் கலந்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு அவர்களுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ஒரு சில அரசர்களுக்கு பீஷ்மகன் கோழைத்தனமாக நடந்து கொள்வதாய்த் தெரிந்தாலும் இதற்கு நாம் எதுவும் செய்ய இயலாது என்றும் புரிந்து வைத்திருந்தனர். யாதவர்கள் அவர்களின் முழு பலத்தோடு இங்கே வந்திருப்பதை எவராலும் தடுக்க இயலவில்லை என்பதையும் அறிந்தனர். ஆனால் குண்டினாபுரத்தின் பட்டத்து இளவரசன் ஆன ருக்மிக்கும், ருக்மிணியின் கைபிடிக்கக் காத்திருக்கும் சேதிநாட்டு இளவரசன் ஆன சிசுபாலனுக்கும் இது உவப்பானதாய் இல்லை. இருவரும் ஒருவரும் அறியாமல் தனியாகச் சந்தித்துக்கொண்டு, ருக்மி தனது வாக்குறுதியைத் தான் எவ்வாறேனும் நிறைவேற்றுவதாய் உறுதிமொழி அளிக்கவே, இருவருமே அவரவர் தந்தையரின் கோழைத்தனத்தையும், கண்ணனைக் கண்டதும் மாறிய அவர்கள் மனதையும் வெறுத்துக்கொண்டே அவரவர் இருப்பிடம் திரும்பினர். ஜராசந்தனும், தனக்கு மிக மிக நெருங்கிய தன் அரச குடும்பத்து நண்பர்களோடு மூடிய கதவுகளுக்குள் சதியாலோசனை செய்தான். ஆரம்பத்தில் கவலையுடனும், சுருக்கங்களுடனும் காணப்பட்ட அவன் முகம் ஆலோசனை முடிவடைந்ததும், பிரச்னைகள் தீரப் போகின்றன அல்லது தீர்ந்துவிட்டன என்ற நிம்மதியைக் காட்டியது.
வசந்த பஞ்சமி தினம். வசந்தோற்சவம் குண்டினாபுர மக்களால் சிறப்பாகக் கொண்டாடப் படும். இந்த வருடம் கண்ணன் வருகையால் அனைவருக்கும் உற்சாகமும் கூட. பாட்டனார் கெளசிகரின் மாளிகை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்பட்டது. கெளசிகன் தன்னுடைய பிரியத்துக்கும், மரியாதைக்கும் உகந்த கிருஷ்ண வாசுதேவனைப் பலவிதமான அபிஷேகக் கொண்டாட்டங்கள் மூலம் வரவேற்புக் கொடுத்தான். இம்மாதிரியான வரவேற்பு ஆரிய அரச குடும்பத்தினரின் சம்பிரதாயம் என்பதோடு கடவுள் நேரில் வந்து அவர்களின் மரியாதைக்குரிய விருந்தாளிக்கு ஆசிகளையும், வாழ்த்துகளையும் வழங்கி அவர்களைக் கெளரவப் படுத்துகிறார்கள் என்பது ஐதீகம். இதைக் காணப்பொதுமக்கள் பெருமளவில் குவிந்திருந்தனர். அனைவருக்கும் ஏற்கெனவே கண்ணனின் வீரதீர சாகசங்கள் குறித்தப் பல கதைகள் கிடைத்திருந்ததாகையால் கண்ணனை ஒருமுறையேனும் காணவேண்டி வந்திருந்தனர்.
கொண்டாட்டங்கள் முடிவடைந்ததும் கண்ணன் அங்கே குழுமியிருந்த அனைத்து அரசர்களுக்கும் தன் வணக்கங்களையும், மரியாதையையும் தெரிவித்துக்கொண்டான். அரசகுல முறைப்படி இந்த சம்பிரதாயங்கள் நடந்து முடிந்தன. ஜராசந்தனும், ருக்மியும் சிசுபாலனும் அங்கே காணப்படவில்லை என்பதும் புரிந்து கொள்ளக்க்கூடியதே. அப்போது கெளசிகன் திடீரென, “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு மங்களம்! ஜெய மங்களம்!” என்று பெருங்குரலெடுத்துக் கூவ அனைத்து அரசர்களும், இளவரசர்களும் அதை அப்படியே எதிரொலிக்கப் பித்துப்பிடித்த மக்கள் கூட்டமும் சேர்ந்து விண்ணளாவக் குரல் எழுப்பியது. தவிர்க்க முடியாமல் பீஷ்மகன் எழுந்து கண்ணனை அணைத்துக்கொள்ள, தாமகோஷன் உண்மையான பாசத்துடனும், நேசத்துடனும் கண்ணனைக் கட்டித் தழுவினான். நகரெங்கும் குதூகலம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம். ஆங்காங்கே மல்யுத்தப் போட்டிகள், வாள் வித்தைகள், வில் வித்தைகள், என நடக்கத் தொடங்க, ஆடல் தெரிந்த யுவர்களும், யுவதிகளும் தங்கள் ஆட்டத்திறமையைக் காட்டி நடனமாடத் தொடங்கினார்கள். சுழன்று சுழன்று ஆடிய அவர்களோடு ஆடத் தெரிந்த மக்களும் சேர்ந்து கொள்ள குதூகலக் கூச்சல்களுடன் ஆட்டமும், பாட்டுக்களும் போட்டியிட்டன. கிருஷ்ணன் கூட்டத்தினுள் புகுந்து தன் கண்களில் பட்ட அனைவரையும் தனித்தனியாக விசாரித்தான்.
அவனுடன் பாட்டனார் கெளசிகர், ஷக்ரதேவன், கருடன், உத்தவன், சாத்யகி ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். கண்ணனால் விசாரிக்கப்பட்டவர்கள் குதூகலத்தில் கூத்தாட, அவன் தங்களைக் கவனிக்கவில்லையே என்ற விசனத்தில் மூழ்கியவர்களோ, அவர்களைப் பாராட்டி மகிழ்ந்தனர். கண்ணனின் கால்களில் பெரியவர், சிறியவர் என்ற வித்தியாசம் இல்லாது அனைவரும் விழுந்து வணங்க, குழந்தைகளைக் கண்ணன் கைகளில் கொடுத்து ஆசீர்வதிக்கச் சொல்லிப் பெண்கள் கேட்டுக்கொண்டனர். இத்தனை அமர்க்களத்திலும் அன்றுதான் சுயம்வரம் நடக்க இருந்தது என்ற முக்கியமான விஷயமே அனைவராலும் மறக்கப் பட்டது.
மதியம் ஒரு பெரிய அரசவிருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான் கெளசிகன். அந்த விருந்தைத் தவிர்க்க முடியாமல் ஜராசந்தனும் வந்திருந்தான். ஜராசந்தனின் சக்கரவர்த்திப் பதவியை உத்தேசித்து அவனுக்கு நடுவில் ஆசனம் போட்டுச் சிறப்பித்திருந்தான் கெளசிகன். ஜராசந்தனுக்கு எதிர்ப்பக்கமாக அரசகுடும்பத்தில் பிறந்திருந்தாலும் இளவரசர்களாகவோ, அரசர்களாகவோ இல்லாத மற்றவர்கள் இடம்பெற்றனர். இந்த வரிசையிலேயே நடுவில் கண்ணனும், கெளசிகனும் அமர்ந்திருந்தனர். மற்ற யாதவர்களும் இருபக்கமும் அமர்ந்தனர். கண்ணனோடு வந்த ஆசாரியர்களுக்கும், குண்டினாபுரத்து ஆசாரியர்களுக்கும் தனியாகப் பந்தி போட்டு உபசரிப்பு நடந்தது. அனைவரும் அரச குடும்பத்தினர் என்பதாலும், முக்கிய விருந்தாளிகள் அனைவருமே அரசர்கள், இளவரசர்கள், சக்கரவர்த்திகள் என்பதாலும் அவரவருக்கு உரிய மரியாதை முறையாக அளிக்கப்பட வேண்டும் என்பதால் குண்டினாபுரத்து அரச மகளிரே முன்னின்று உணவு பரிமாறத் தொடங்கினார்கள். ருக்மியின் மனைவி சுவ்ரதாவும், இளவரசியும், சுயம்வர மணப்பெண்ணான ருக்மிணியும் முன்னின்று தலைமை வகிக்க ருக்மிணியின் கைகளில் பாயசப் பாத்திரம் கொடுக்கப்பட்டது.
பாயசத்தை எடுத்துக்கொண்டு அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தாள் ருக்மிணி. முறைப்படி முதலில் ஆசாரியர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அதன் பின்னரே அரசர்களின் வரிசைக்கிரமப்படி அமர்ந்திருவர்களுக்குப் பரிமாற ஆரம்பித்தாள். அரசகுல வழக்கப்படித் தன் தலையைக் குனிந்து இலையை நோக்கிய வண்ணமே பரிமாறி வந்தாள் ருக்மிணி. ஆனால் அரசர்களிடையே கண்ணன் அமரவில்லை என்பதையும், அவன் அரசகுலச் சாமானியர்களிடையே அமர்ந்திருப்பதையும் அவள் கண்கள் தெரிந்து வைத்திருந்தன. ஆகையால் அந்த வரிசைக்குப் பாயசம் பரிமாற ஆரம்பிக்கையிலேயே அவள் இதயம் போட்ட சப்தம் அவள் காதுகளைத் துளைத்தது. எங்கே எல்லார் காதுகளையும் அந்தச் சப்தம் எட்டிவிடுமோ எனப் பயந்தாள். சுற்றும் முற்றும் கவனித்துக்கொண்டாள். தன் இதயத்தை அமுக்கிப் பிடித்துக்கொண்டாள். அதற்கும் மேல் அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஒருவாறு சமாளித்துக்கொண்டு மற்றவர்களுக்குப் பரிமாறிய ருக்மிணி மெல்ல மெல்லக் கண்ணன் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்ததும் கண்ணன் இலையில் ஒரு கரண்டிப் பாயசத்தைப் பரிமாறுகையில் கை நடுக்கம் அதிகம் ஆகி பாத்திரமே பாயசத்தோடு கண்ணன் இலையில் கவிழ்ந்தது.
1 comment:
இந்த அத்தியாயம் 94 ஐ படித்து விட்டேன் கீதாமா
// கண்ணன் இலையில் ஒரு கரண்டிப் பாயசத்தைப் பரிமாறுகையில் கை நடுக்கம் அதிகம் ஆகி பாத்திரமே பாயசத்தோடு கண்ணன் இலையில் கவிழ்ந்தது.//
இந்த நிகழ்வு உங்கள் கற்பனை தானே :) நன்றாக இருக்கிறது !
Post a Comment