Monday, April 6, 2015

துஷ்சாசனனின் விருப்பம்!

பீமன் பார்த்தபோது ஹோமகுண்டம் எதிரே அகோரி அமர்ந்து கொண்டு ஏதேதோ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு தாந்த்ரீக முறையில் வழிபாடு செய்து கொண்டிருந்தான். நடுத்தர வயதுள்ள அவன் பார்ப்பதற்குத் தாடி, மீசையுடன் ஒரு மனிதக்குரங்கைப் போல் காட்சி அளித்தான். செக்கச் சிவந்த கண்கள்!  அதற்கேற்றாற்போல் தன் கன்னங்களையும் ஏதோ சிவப்பு வண்ணத்தினால் சிவப்பாக்கி இருந்தான். உடை ஏதும் அணியாமல் இருந்த அவன் பார்க்கவே பயங்கரத் தோற்றத்துடன் காட்சி அளித்தான். உடல் முழுவதும் சாம்பலைப் பூசி இருந்தான். அவன் அருகே இருந்த அடுப்பில் ஏதேதோ மூலிகைகள் போட்டதொரு கஷாயம் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த ஹோமகுண்டத்தைப் பார்த்த வண்ணம் துர்காதேவி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தாள். துர்கை கோர ஸ்வரூபத்தில் காட்சி அளிக்க, அருகே ஈசனின் லிங்க வடிவம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

அந்த அகோரியின் மந்திர உச்சாடனம் அந்த இரவு வேளையில் பயங்கரமாக ஒலிக்க, அவன் வலப்பக்கம், துஷ்சாசனனும், அவன் அருகே காந்தார இளவரசனும், கௌரவாதியரின் தாய் மாமனுமான ஷகுனி அமர்ந்திருந்தான்.  ஆர்ய வர்த்தத்திலேயே மிகவும் கபடமும், சூழ்ச்சியும் நிறைந்தவன் என்று பேசப்படும் ஷகுனிக்கு இங்கு என்ன வேலை என பீமன் வியந்தான். மேலும் கண்களால் துழாவிய அவன் சட்டெனத் தூக்கி வாரிப் போட உற்றுக் கவனித்தான்.  ஆம் ஒரு குழந்தை அவர்கள் அருகே கிடந்தது.  அதைப் பார்த்தால் தானாக நன்றாய்த் தூங்குவது போல் தெரியவில்லை. மயக்கத்தில் ஆழ்த்தி இருக்க வேண்டும். தனக்கு இடப்பக்கமாய் அகோரி கையிலிருந்த சிவப்பு வண்ணப் பொடியால் மூன்று மனித உருவங்களை வரைந்தான்.

“பிரபுக்களே! யார் உங்கள் முதல் எதிரி? எவரை முதலில் கொல்ல வேண்டும்? யாருடைய சாவை உடனடியாக எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அவர்கள் இருவரையும் பார்த்து அகோரி தன் கடூரமான குரலில் கேட்டான். “அவன் எவ்விதம் இருப்பான் என வர்ணிக்கவும்!” என்றும் கட்டளை இட்டான். துஷ்சாசனன் அதற்கு, “முதல் மனிதன் மிகவும் வயதானவன்.  உயரமாகவும், நல்ல கட்டான உடல் அமைப்போடும், அதீத பலத்தோடும் காணப்படுவான்.  நீண்ட வெண் தாடி இருக்கும்.  அவன் பெயர் காங்கேயன்!” என்றான்.

“ஆ, அப்படியா? சரி! அவன் உடலோடு சம்பந்தப் பட்டுக் கொண்டிருக்கும் பொருள் ஏதானும் கொண்டு வந்திருக்கிறீர்களா? அது முக்கியம்!” என்றான் அகோரி.  உடனே துஷ்சாசன், “ஆம், ஐயா, இதோ அவன் தாடியின் ஒரு வெண்மையான நீண்ட மயிர்!  இது அவன் தாடியிலிருந்தே எடுக்கப்பட்டது!” என்ற வண்ணம் அதை அகோரியிடம் கொடுக்க அவன் அதைத் தான் வரைந்திருந்த முதல் உருவத்தின் மேல் வைத்தான். தன் திரிசூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, “ஓம், ஹ்ரீம், க்ரீம், ஜெய் காளி” என்று கூவிய வண்ணம் ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்த வண்ணம் சூலத்தைத் தலைக்கு மேல் ஓங்கிய வண்ணம் முதல் உருவத்தின் மார்பில் ஓங்கிக் குத்தினான். பின்னர் துஷ்சாசனனைப் பார்த்து, “அடுத்து?” என்று வினவினான்.

“இரண்டாவது ஆள் மிக வசீகரமானவன். பார்ப்பவர்களை எல்லாம் தன் பக்கம் கவர்ந்து இழுப்பான். மிக இளமையானவனும் கூட. இவனுக்கு தாடியோ, மீசையோ இல்லை. இவனும் வலுவானவனே! கறுத்த நிறம் இவனுக்கு மட்டும் எங்கிருந்தோ ஓர் பொலிவைக் கூட்டுகிறது. இவன் பெயர் கிருஷ்ண வாசுதேவன்.  இதோ அவன் சூடி இருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து வந்துள்ளேன்!”

அகோரி அந்த வாடிய பூவைக் கையில் எடுத்துக் கொண்டு இரண்டாம் உருவத்தின் மேலே போட்டுவிட்டுத் தன் சூலத்தால் முன்னர் சொன்ன மாதிரி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு ஓங்கிக் குத்தினான். “மூன்றாவது மனிதன் யார்?” என்று அகோரி வினவ, “ஓ, அவன் மிக உயரமானவன். பார்க்க ராக்ஷசன் போலிருப்பான். அதிகமாய்ச் சாப்பிடுவான்.  அதே சமயம் உடல் வலுவும் அதிகமாக இருக்கும் அவனுக்கு. அசாதாரணமான பலம் உள்ளவன். இவனும் இளைஞன் தான்! இதோ அவன் அரச விருந்தில் சாப்பிட்ட இலையில் மீதம் இருந்த சோற்றின் ஒரு சிறு உருண்டை!” அகோரி அந்தச் சோற்றுருண்டையை வாங்கி மூன்றாவதாக வரைந்த உருவத்தின் மேல் வைத்தான்.  இந்த மனிதத்தன்மையே இல்லாமல் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல் செய்யப்படும் மாபெரும் துரோகத்தைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பீமனின் கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல் இருந்தன.  எவ்வளவு மோசமாக அவர்கள் மனம் இருந்தால் இப்படி எல்லாம் நாம் சாகவேண்டும் என நினைப்பான்! கொஞ்சமும் நியாயமே இல்லாமல் நடந்து கொள்கிறானே! பீமன் துடித்தான்.

அவனுக்கு இருந்த வேகத்துக்கும், கோபத்துக்கும், உடனே அவர்கள் எதிரே குதித்து மூவரையும் கழுத்தை நெரித்துக் குரல்வளையை அமுக்கி விடலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.  அவன் யோசிக்கையிலேயே அந்த அகோரி பீமனாகக் கருதப்பட்ட உருவத்தின் மேல் சோற்றுருண்டையை வைத்துத் தன் சூலத்தால் ஓங்கிக் குத்தினான். இந்தச் சமயம் நாம் போனால் முழுவதும் பார்க்க முடியாது என்று பீமன் நினைத்ததோடு அல்லாமல், மேலே என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலிலும் இருந்தான். இந்தக் கொடூரமான சடங்குகளின் முடிவு என்ன என்பதை அறிய விரும்பினான். ஆகவே தான் பொறுத்திருந்து முழுவதையும் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கும் வந்தான்.  அதற்குள்ளாக அகோரி தன் கண்களை மூடிக் கொண்டு ஆழ்நிலை தியான நிலைக்குப் போயிருந்தான். அவன் உடல் தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தது.

சில நிமிடங்கள் சென்ற பின்னர் தன் கண்களைத் திறந்தவன் துஷ்சாசனைப் பார்த்தான். எங்கோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போன்றதொரு விசித்திரமான குரலில், “நான் இப்போது உன் குடும்பத்தின் இரு மனிதர்கள் இறப்பதைக் கண்டேன். “என்றவன் மீண்டும் தன் கண்களை மூடிக் கொண்டு அந்தக் காட்சியை மீண்டும் காண்பவன் போல் சிறிது நேரம் இருந்துவிட்டு, மறுபடி கண்களைத் திறந்து, “ஆம், இரண்டு பேர் தான்! அடுத்த பௌர்ணமிக்குள்ளாக இருவர் இறக்கப் போகின்றனர்.” என்று முடித்தான்.

“அவர்கள் யார் ஐயா?” என்று துஷ்சாசனன் கேட்க, மீண்டும் கண்களை மூடிய அகோரி, “அவர்கள் யார் என்பது தெரியவில்லை.  நீங்கள் இறக்கவேண்டும் என்று  விரும்பும் மூவரில் இருவரா என்பதும் தெரியவில்லை; ஆனால் இருவர் இறப்பார்கள்!” என்று சொன்னான். “ம்ம்ம்ம்ம், இவர்கள் மூவரும் இறந்து போகவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.” என்று சர்வ சாதாரணமாக எவ்விதமான தயக்கமும் இல்லாமல் ஷகுனி கூற பீமனின் உடலில் ரத்தம் உறைந்தது. “என் தாய் காளியின் கைகளில் அவர்கள் உயிர் உள்ளது. இதில் நான் ஏதும் செய்ய முடியாது.  தீயவர்களை அழிக்கும் மஹாசக்தியான அந்தக் காளிதேவி தான் முடிவு செய்ய வேண்டும்.  அவளுடைய அதிகாரத்தில் தான் இது அடங்கும்.  அவள் தயவை நாடுங்கள்.” என்றான் அகோரி.

“நாங்கள் எவ்விதம் அவளுடைய அருளைப் பெறுவது?” என்று ஷகுனி கேட்க,
“நாங்கள் அவளை அணுக முடியுமா?” என துஷ்சாசனன் வினவினான். “அணுகலாம், முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் நீங்கள் அவளை அணுகினால் அவள் அருள் உங்களுக்குக் கிட்டும்.” என்றான் அகோரி.

“ஐயா, அவளை அணுகி அவள் அருளைப் பெறும் வழியை எங்களுக்குக் காட்டுங்கள்!” என்று துஷ்சாசனன் கேட்க, “நீங்கள் அவளைச் சந்திக்க இமயம் போய் தவம் செய்ய வேண்டும். அவளால் தான் உங்கள் வாழ்க்கையின் சங்கடங்களைத் தீர்க்க முடியும். வேறு எவராலும் இயலாது. செல்லுங்கள்; அங்கே சென்று தவம் செய்யுங்கள்.  உங்களால் முடியவில்லை எனில் நான் ஏற்பாடுகள் செய்கிறேன்.” என்று கூறிய வண்ணம் மேலும் மேலும் கட்டைகளை அந்த ஹோமகுண்டத்தில் அகோரி போடத் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

2 comments:

ஸ்ரீராம். said...

அடுத்து? பீமனின் பிரவேசம் எப்பொழுது?

கதம்ப உணர்வுகள் said...

பீமனின் கண் எதிரே துஷ்சாசனும் ஷகுனியும் அகோரியின் துணைக்கொண்டு ஆடும் இந்த அகோர ஆட்டம் முடிவுக்கு வர மாயக்கண்ணன் ஏதாவது செய்வான் என்று நினைக்கிறேன்...