Sunday, April 26, 2015

பீஷ்மரின் கட்டளை!

அங்கே நேர்ந்திருந்த சம்பவங்களினால் ஏற்பட்ட எதிர்பாரா விளைவுகளால் அங்கு கூடிய கூட்டம் திகைத்து நின்றது. சம்பாஷணைகள் செல்லும் வழியைப்பார்த்ததும், அங்கு பெரிய கலவரம் ஒன்று ஏற்படுமோ என அனைவரும் அச்சமுற்றனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு, “சாது! சாது!” என்று கோஷித்தனர். பீமனும் அங்கிருந்து ஒரு அங்குலம் நகரவில்லை. துஷ்சாசனனையும் நகர அனுமதிக்கவில்லை. இருவரும் அங்கேயே நின்ற வண்ணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கே யாரோ தடதடவென ஓடி வரும் சப்தம் கேட்க, அனைவரும் திரும்பிப் பார்த்தனர். நான்கு வில்லாளிகள் வில்லையும், அம்புகள் நிறைந்த அம்புறாத்தூணியையும் தூக்கிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தனர்.  வரும்போதே “அமைச்சர் விதுரர் வருகிறார்!” எனக் கட்டியம் கூறிக் கொண்டு வந்தனர். ஆம், விதுரர் அங்கே வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் அர்ஜுனன் தன்னுடைய காண்டீபத்தை ஏந்திய வண்ணம் அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணியையும் அணிந்து கொண்டு வந்து கொண்டிருந்தான்.

விதுரரைக் கண்டதும் கூட்டம் அமைதி அடைந்தது. அவருடைய நேர்மையும், நீதியும் மக்கள் மனதைக் கவர்ந்திருந்தன. தர்மத்தின் வழியிலேயே நடப்பார் என்பதையும் மக்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே அவர்கள் தாங்களாகவே விலகிக் கொண்டு விதுரருக்கு வழி விட்டனர். ஹஸ்தினாபுரத்திலேயே பீஷ்மருக்கு அடுத்தபடியாக மக்கள் விதுரரைத் தான் மிகவும் மதித்து வந்தனர். அவருடைய கருத்த நிறம், குறுகி இருந்தாலும் தீர்க்கமான மூக்கு, அறிவொளி வீசும் கண்கள், முகத்தில் எப்போதும் நிலைத்து இருக்கும் புன்னகை, கருணையான பார்வை, எப்போதும் அடக்கம் ஆகியவற்றால் விதுரர் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவருடைய ஞானம் அவருடன் கூடப் பிறந்திருக்குமோ என எண்ணும்படி இருந்தது. மேலும் அவர் ஒரு துறவியைப் போல் எவ்விதமான பற்றுகளும் எதன் மீதும் வைக்காமல் வாழ்ந்து வந்தார். இல்லை என வருவோர்க்கு அள்ளித் தரும் வள்ளலாகவும் இருந்தார். மேலும் அவர் இங்கு தானாக வந்திருக்க முடியாது என்பதும், பீஷ்ம பிதாமகரின் ஆலோசனையின் பேரிலேயே இங்கு அறிவுரை சொல்ல வந்திருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே!

“சித்தப்பா, விதுரச் சித்தப்பா! வருக! வருக!” என்று வரவேற்றான் பீமன். “துஷ்சாசனனும் அவன் சகோதரர்களும் செய்திருக்கும் இந்தக் கொடுமையைப் பாருங்கள் சித்தப்பா! எங்கள் மூத்த அண்ணன் யுதிஷ்டிரனுக்கு ஹஸ்தினாபுரச் சக்கரவர்த்தியாகப் பட்டம் சூட்டப் போவதால் இவர்கள் யாரும் இங்கே இருக்க மாட்டார்களாம். அவர்கள் மாமன் ஊரான காந்தாரம் செல்லப் போகிறார்களாம். இந்த மல்லர்கள் அனைவரையும் இவர்களுடைய சாமான்களை எடுத்துச் செல்லும்படியான வண்டிகளைக் கொண்டு வரும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே இவர்கள் இங்கே தங்கள் வண்டிகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அரச ஆணையை மீற முடியுமா? ஆனால் நடந்தது என்ன?”


“இதோ பாருங்கள் சித்தப்பா! குருவம்சத்து ரத்தினங்களான இந்த அழகான, பெருமை வாய்ந்த இளவரசர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? அவர்களுக்குச் சேவை புரிய வந்த மல்லர்களைத் தாக்கி இருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவரைக் கொன்றிருக்கிறார்கள். மாடுகளை வெட்டி இருக்கின்றனர். வண்டிகளைச் சுக்கு நூறாக உடைத்திருக்கின்றனர். எனக்கு இந்தச் செய்தி தெரிந்ததும் நான் ஓடோடி வந்தேன். எதற்குத் தெரியுமா? இந்த மல்லர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் தேடி அவர்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித் தரத் தான் வந்தேன். அதைத் தான் இங்கே துஷ்சாசனனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்படி அவர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் இந்த மாளிகையை இப்போதே உடனடியாக உடைத்துத் தள்ளுவேன் எனச் சொல்லிக் கொண்டிருந்தேன்.”

“தாங்கள் எதையும் இப்போது செய்ய வேண்டாம், மாட்சிமை பொருந்திய இளவரசே!” மிகக் கனிவாக பீமன் மனதில் தைக்கும்படியான தொனியில் கூறினார் விதுரர். பின்னர் துஷ்சாசனன் பக்கம் திரும்பினார். “துஷ்சாசனரே! மாட்சிமை பொருந்திய இளவரசர்களே! பீஷ்மப் பிதாமகர் தன்னுடைய கட்டளையை உங்களுக்குத் தெரிவிக்கும்படி என்னை அனுப்பி வைத்தார். உங்கள் சகோதரர்களுக்கும் சேர்த்தே இந்தக் கட்டளை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் பலியாவுக்கும் அவனுடைய மல்லர்களுக்கும் தக்க நஷ்ட ஈடை உடனடியாகக் கொடுக்க வேண்டும். காயம்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க நிதி உதவி செய்ய வேண்டும். இறந்தவர்களுக்குத் தக்க நஷ்ட ஈடைக் கொடுக்க வேண்டும். அதுவும் உடனடியாகச் செய்ய வேண்டும்.”

“இதை நீங்கள் உடனடியாக நிறைவேற்றவில்லை எனில், பீஷ்ம பிதாமகர் பலியாவையும் அவன் ஆட்களையும் உங்களுக்குச் சேவை புரியக் கூடாது எனக் கட்டளை இட்டிருக்கிறார். ஆம், பலியா மற்றும் அவனுடைய மல்லர்கள் அவர்கள் மனைவிமார்களின் சேவைகள் உங்களுக்குக் கிடைக்காது. இதை நீங்கள் உடனடியாகச் செய்து கடைசி மல்லன் வரை திருப்தி அடையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையானதை முழு மனதோடு செய்து முடிக்க வேண்டும். இல்லை எனில் எந்தக் கௌரவர்களும் உங்களோடு தொடர்பு கொள்ள மாட்டார்கள். மற்றவர்களும் எவ்விதத் தொடர்பும் கொள்ள மாட்டார்கள். ஹஸ்தினாபுரத்து மக்களும் உங்களை ஒதுக்குவார்கள். இதை மனதில் வையுங்கள்.” என்றார்.

இதைக் கேட்ட துஷ்சாசனன் முகம் பயத்தில் வெளுத்தது. பீமன் சொன்னான்:
“இதோ பார் துஷ்சாசனா! இதைக் கேள்! இதோ தாத்தா அவர்களின் கட்டளையே வந்து விட்டது! நீ என்ன செய்யப் போகிறாய்? தாத்தா அவர்களின் கட்டளையை மீறப் போகிறாயா? அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கப் போகிறாயா?” பீமனின் குரலே துஷ்சாசனனைப் பயமுறுத்தியது.

துஷ்சாசனனால் எவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை. அவனால் உடனடியாக எதையும் பேசவும் முடியவில்லை. பீமன் அவனை விடவில்லை. துஷ்சாசனன் அச்சப்படும் விதத்தில் அவனை மிக நெருங்கி, “சொல், உடனே சொல்! பேசு! மாட்சிமை பொருந்திய தாத்தா அவர்களை மிஞ்சி இங்கே வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. அவருடைய கட்டளையை நீ ஏற்கப் போகிறாயா? மீறப் போகிறாயா? உடனடியாக பதிலைச் சொல்!” என்று வற்புறுத்தினான். துஷ்சாசனன் மிகவும் சீற்றம் அடைந்தான். அந்தச் சீற்றத்தினால் அவனால் பேச முடியவில்லை. அவன் உதடுகள் துடித்தன.

தாத்தா அவர்கள் கட்டளை இட்டிருக்கிறார். அதுவும் இத்தனை பொதுமக்கள் முன்னிலையில் அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் இந்தக் கட்டளை தெரிந்து விட்டிருக்கிறது. ஆகையால் அதைத் தான் மீறவே முடியாது. விதுரர் துஷ்சாசனனையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அவர் அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பீமனும் தன்னுடைய கடுமையான பார்வையை மாற்றாமல் துஷ்சாசனனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். துஷ்சாசனன் வேறு வழியில்லாமல் தலை குனிந்தான். தொண்டையை அடைத்தது அவனுக்கு. எச்சிலை விழுங்கிக் கொண்டான். அப்படியும் தொண்டை காய்ந்து உலர்ந்து போயிற்று. ஒரு மாதிரித் தன்னைச் சமாளித்துக் கொண்டு அடைக்கும் குரலில், “நான் தாத்தா அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். பலியாவுக்கும் அவனுடைய மல்லர்களுக்கும் உரிய நஷ்ட ஈடைக் கொடுத்து விடுகிறேன்.” என்றான்.


2 comments:

msuzhi said...

இந்தக் கிளைக் கதை தான் துச்சாசனனின் வெறுப்புக்குக் காரணமோ?

ஸ்ரீராம். said...

ம்ம்ம்.... பீஷ்மர் கட்டளை வந்ததும் மென்மேலும் வெறுப்பேற்றாமல் பீமன் கொஞ்சம் அமைதி காக்கலாம்! :))))