Thursday, April 2, 2015

அகோரியின் குடிசையில் பீமன்!

பீமன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.  வெளியே பலியா இருந்த அறைக்கு அவன் வந்தான். அங்கே பலியாவின் மூத்த மகன் சோமேஷ்வர் ஜாலந்திராவைத் திரும்ப அழைத்துச் செல்லத் தயாராகக் காத்திருந்தான்.  பீமனுக்குத் தற்சமயம் உதவி ஆளாகச் சேர்ந்திருக்கும் கோபுவும் அங்கே காத்திருந்தான். அவன் பீமனுடன் பாண்டவர்கள் ஐவரும் தங்கி இருந்த மாளிகைக்குச் செல்ல வேண்டிக் காத்திருந்தான். வெளியே வந்த பீமன் பலியாவைப் பார்த்து, “நாளைக் காலை நான் என்னுடைய நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு கிருஷ்ணனுடன் இருப்பேன்.  அப்போது கோபுவின் மூலம் உனக்குச் சொல்லி அனுப்புகிறேன்.  நீ வந்து கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கலாம்.” என்றான். பலியா அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பீமனைப் பார்த்து வணங்கிய வண்ணம், “சின்ன எஜமான்! என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை!” என்றான்.

அப்போது ரேகாவுடன் வந்த ஜாலந்திரா சோமேஷ்வரின் துணையுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். சற்று இடைவெளி விட்டு பீமனும், கோபுவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஜாலந்திரா தன்னுடைய துணைவர்களோடு தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று கொண்டிருப்பதையே பீமன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அருகிலிருந்த ஒரு மரத்தடியில் ஏதோ அசைவு தெரியவும் என்னவெனப் பார்த்த பீமன், ஒரு மனிதன் தன்னை மரத்தின் பின்னால் மறைத்துக் கொள்வதைக் கண்டுவிட்டான். ஆனால் அந்த மனிதன் பீமனைக் கவனிக்கவில்லை என்று தோன்றியது.  ஏனெனில் ஜாலந்திரா அந்த மனிதனைக் கடந்து சென்றதுமே அவன் வெளியே வந்தாலும் ஜாலந்திராவின் கண்களிலோ அல்லது ரேகா, சோமேஷ்வர் ஆகியோர் கண்களிலோ படாமல் செல்ல நினைத்தவன் போல ரகசியமாகவே அவர்களைப் பின் தொடர்ந்தான். பார்த்துக் கொண்டிருந்த பீமன் அவன் மேல் புலியைப் போல் பாய்ந்தான். அவனைக் கீழே தள்ளி அவன் நெஞ்சில் தன் முழங்காலை வைத்து அழுத்தியவண்ணம் கைகளால் குரல்வளையையும் பற்றினான் பீமன்.

“யார் நீ?  ஏன் அந்தப் பெண்களைப் பின் தொடர்கிறாய்?” என்று கேட்டவண்ணம் அவன் குரல்வளையை அழுத்தினான் பீமன்.  அந்த மனிதன் பீமனைத் தன்னிடமிருந்து விலக்க மிகுந்த முயற்சிகள் செய்தும் அவனால் முடியவில்லை. பதிலும் சொல்லவில்லை.  ஆகவே மீண்டும் பீமன் அவனிடம், “யார் நீ? ஏன் அவர்களைப் பின் தொடர்கிறாய்?” என்று கடுமையான குரலில் கேட்டவண்ணம் தன் பிடியை இறுக்கினான். ஜாலந்திரா, ரேகாவுடன் அந்தத் தெருக்கோடியில் மறையும் மட்டும் பொறுத்திருந்த பீமன் பின்னரே அந்த மனிதனை விட்டு நீங்கினான். எழுந்திருக்கும்போதே அவனைத் தன் கைகளால் பற்றிக் கொண்டு உயரத் தூக்கிய பீமன் அவனை அப்படியே உலுக்கினான்.  அவன் உடல் மட்டுமில்லாமல் பற்களும் ஆட்டம் கண்டன என்று அவன் பற்கள் அடித்துக் கொண்டதில் இருந்து புரிந்தது.

“யாரடா நீ? செவிடா?  காது கேட்காதா உனக்கு?  ஏன் அந்தப் பெண்களைப் பின் தொடர்ந்தாய்?” விடாமல் மீண்டும் கேட்டான் பீமன். ஆனால் அவன் வாயே திறக்கவில்லை.  பீமன் அவனை மீண்டும் உலுக்கினான். “நீ இப்போது பேசுகிறாயா? அல்லது உயிரை விடுகிறாயா?” என்று பற்களைக் கடித்த வண்ணம் கடுமையான குரலில் கேட்டான். அந்த மனிதன் பலவீனமான குரலில் பீமனிடம், “என்னை மன்னியுங்கள்!” என்று இறைஞ்சினான். அவன் குரல்வளையை மீண்டும் பிடித்த பீமன், “உண்மையைச் சொல்! யார் நீ?” என்று மீண்டும் கேட்டான். அந்த மனிதனின் உடல் முழுதும் நடுங்க, குரலும் சேர்ந்து நடுங்கியது. “ஐயா, நான் ஷகுனி அவர்களின் வேலையாள்!” என்று நடுங்கிய வண்ணம் சொன்னான்.

“இங்கே என்ன செய்கிறாய் நீ? சொல், முதலில்! சீக்கிரம் சொல்! இல்லை எனில் உன்னைக் கொன்று போடுவேன்!” என்ற பீமன் சற்றும் இரக்கமில்லாமல் அவனை மீண்டும் உலுக்கி எடுத்தான். “முட்டாள், முட்டாள்!” என்றும் அவனைத் திட்டினான். அந்த மனிதன் தன் கைகளைக் கூப்பி பீமனை நமஸ்கரித்தான். கை கூப்பிய வண்ணமே அவனிடம், “ஐயா, நான் உண்மையைச் சொல்லி விடுகிறேன். இளவரசி பானுமதியின் வளர்ப்புத் தாயான ரேகாவைப் பின்பற்றவும், அவளைக் கண்காணிக்கவும் நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன்.” என்று பணிவுடன் சொன்னான். “ஓஹோ, அப்படியா? அந்த இன்னொரு பெண் யாரென நீ அறிவாயா?” என்று பீமன் அவனைச் சந்தேகத்துடன் கேட்க, “அது தான் தெரியவில்லை ஐயா, அது தெரிய வேண்டியே நான் முயன்றேன்.” என்று பதில் சொன்னான். “பொய் சொல்லாதே! கோழை! பொய் சொல்கிறாய் நீ!” என்று கத்திய பீமன் மீண்டும் அவன் தொண்டையை அழுத்தினான். வலி தாங்க முடியாமல் தவித்த அந்த மனிதன், “பிரபுவே, பிரபுவே, என்னை விட்டு விடுங்கள்;  நான் உயிர் பிழைத்து ஓட அனுமதியுங்கள். அதை மட்டும் செய்தீர்களானால், நான் உங்களைக் காப்பாற்றியும் விடுவேன். நிச்சயம் காப்பாற்றுவேன்.” என்றான்.

“மீண்டும் பொய் சொல்கிறாயா? நீ என் உயிரைக் காக்கப்போகிறாயா? முட்டாள், முழு மூடன், நிர்மூடன்! பாதகா! மீண்டும் மீண்டும் பொய் சொல்கிறாயா?” என்ற வண்ணம் பீமன் அவனை மறுபடி மறுபடி வேகமாய் உலுக்கினான். அந்த மனிதன் ஓலமிட்டான். ‘என்னைக் கொன்று விடாதீர்கள் ஐயா! நான் நிச்சயம் உங்களைக் காப்பாற்றுவேன்!” பரிதாபமாக இறைஞ்சிய அவன் மேலும், “நான் பொய் சொல்லவில்லை. நீங்கள் அகோரியின் குடிசைக்கு உடனே செல்லுங்கள்.  உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். இல்லை எனில் அடுத்த பௌர்ணமிக்குள் உங்கள் உயிர் உங்களுடையது அல்ல!” என்று நடுங்கிய வண்ணம் சொன்னான்.

கங்கைக்கு அக்கரையில் ஒரு அகோரி வசித்து வந்ததையும் அவன் குடிசை அங்கே இருந்ததையும் பீமன் அறிவான்.அவன் மஹாகாளர்களைச் சேர்ந்தவன்.  காளி உபாசகனும் கூட.  காளிக்குக் கடுமையான வழிபாடுகளையும் நிவேதனங்களையும் சமர்ப்பிப்பவன் என்றும் கேள்விப் பட்டிருந்தான். அப்படிப்பட்டவன் குடிசைக்குத் தான் ஏன் போக வேண்டும்? இதில் ஏதோ இருக்கிறது. அதோடு இல்லாமல் அந்த அகோரி முக்காலமும் அறிந்தவன் என்றும் ஒருவனைப்பார்த்ததுமே அவன் எதிர்காலத்தைக் கூறிவிடுவான் என்றும் அவன் கூறுவது அப்படியே நடக்கும் என்றும் கேள்விப் பட்டிருந்தான். சூனிய, மந்திர, தந்திரங்களிலும் அவன் தேர்ந்தவன்.  சூனியம் வைக்கவும், எடுக்கவும் தெரிந்தவன்.  துர் தேவதைகளை வசப்படுத்தக் கூடியவன். வேறு வழியில்லை என்றால் தான் மக்கள் அவனிடம் சென்று பரிகாரம் தேடுவார்கள். பொதுவாக எவரும் அவனை அணுகுவது இல்லை. அவனுக்குப் பிடிக்காத மனிதர்களையோ அல்லது அவனிடம் செல்லும் மக்கள் கேட்டுக்கொள்ளும் மனிதர்களையோ மரணத்தில் தள்ளிவிடும் ஆற்றல் கொண்டவன் என்றும் நன்றாக இருக்கும் ஒரு மனிதனைத் திடீரென மரணமடையச் செய்யும் ஆற்றல் கொண்டவன் என்றும் பேசிக் கொள்வார்கள்.

அங்கே ஏன் தான் போக வேண்டும்? பீமனுக்குள் ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். அந்த மனிதனிடம், “சரி, நீயே என்னை அவன் குடிசைக்கு அழைத்துச் செல்! நடுவில் நீ தப்ப நினைத்தாயோ, தொலைந்தாய்!” என்று மிரட்டினான். தன் தலையில் கட்டி இருந்த உத்தரீயத்தினால் அந்த ஒற்றன் கைகளைக் கட்டினான் கோபு. மூவரும் கங்கைக்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினர். நகரத்தை விட்டு நீங்கி கங்கைக்கரையை அடைந்த அவர்களுக்கு அங்கே காத்திருந்த நான்கு சிறு படகுகள் கண்களில் பட்டன. அடர்த்தியான காடாகக் காணப்பட்ட எதிர்க்கரையில் ஓர் இடத்தில் மட்டும் விளக்குப் பளிச்சிடுவதையும் கண்டார்கள். ஒரு படகைக் கரைக்குக் கொண்டு வந்து மூவரும் அதில் ஏறி நதியைக் கடந்தார்கள். விளக்கு எரிந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி மெல்ல மெல்ல அதே சமயம் ரகசியமாக முன்னேறினார்கள். விரைவிலேயே அந்த இடத்தை நெருங்கியவர்கள் அந்த வெளிச்சம் அங்கே புல் தரையின் முன் காணப்பட்ட ஒரு சிறு குடிசையின் வாயில் இருந்த அக்னி குண்டத்தின் ஹோமப் புகையும் அதன் தீயும் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

மெல்ல மெல்ல அடிகளை மிருதுவாக எடுத்து வைத்த அவர்கள் பக்கவாட்டிலேயே சென்று அந்தக் குடிசையை அடைந்தனர். குடிசையின் பின் பக்கமாகச் சென்றவர்களால்  பக்கவாட்டில் காணப்பட்ட  ஒரு சாளரத்தின் மூலம் அந்தக் குடிசையினுள் பார்க்க முடிந்தது.  பீமன் அங்கிருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தான்.

2 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம் எகிறுகிறது.

மோகன்ஜி said...

சுவையாக சொல்லிக் கொண்டு போகிறீர்கள். காட்சிப்படுத்தல் ஒருகலை.. அதை செம்மையாக ஆள்கிறீர்கள்