Thursday, January 7, 2016

பாமாவின் மனோநிலை!

தன் தந்தை உக்ரசேனரைப் பார்க்கவேண்டி அரசமாளிகைக்குக் கிளம்பியதும், சத்யா செய்வதறியாது திகைத்துப்போயிருந்தாள். அவளுடைய இன்பக் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாகச் சிதறிப் போய்விட்டன. கிருஷ்ணனை இனிமேலும் அவளால் மணக்க இயலுமா? நிச்சயமாய் முடியாது. இனி நம்பிக்கையே இல்லை. ஒரு சிறிதளவு நம்பிக்கை கூட இல்லை. கிருஷ்ணனைக் குறித்து இனியும் அவள் நினைப்பதே சரியாக இருக்காதோ? இல்லை, இல்லை, அவளால் அவனை நினைக்காமல் இருக்க முடியாது! ஆனால், அவள் தந்தை! கிருஷ்ணனின் மேல் போர் தொடுக்கப் போவதாக அறிவித்து விட்டாரே! இப்போது எந்தக் காரணத்தைச் சொன்னாலும் என்ன சமாதானம் சொன்னாலும் அவர் மனம் மாறப் போவதில்லை. அவள் தந்தையும் அவருடைய நண்பர்களும் மற்ற யாதவர்களுடனும், யாதவகுலப் பெரியோர்களுடனும் முக்கியமாகக் கிருஷ்ணனுடனும் போருக்குத் தயாராகி விட்டார்கள். யாதவர்கள் அனைவருக்கும் கிருஷ்ணன் மேல் எவ்வளவு பக்தி, மரியாதை என்பதை பாமா நன்கறிவாள். ஆனால் இந்தப் போர் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டதே! யாதவர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் யுத்தம் செய்து கொண்டு அதன் மூலம் ஓர் உள்நாட்டுப் போர் வந்துவிடுமோ! ஆனால் பாமாவுக்கு ஒரு சந்தேகம்! கடந்த இருவருடங்களாகவே அவள் தந்தை இத்தகையதொரு நிலைமையை உருவாக்கக் கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருந்தார் என்பதே அவள் சந்தேகம். ஆம் இந்நிலைமையை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்.

எல்லாவற்றையும் விட அவளுக்குத் துயரம் அளித்தது என்னவெனில், அவள் கிருஷ்ணன், அவளால் “என் பிரபு” என அழைக்கப்பட்டவன், இன்று திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுக் குற்றவாளியாக நிற்கிறான். அவனுடைய நற்பெயர் இதனால் கெட்டுவிடுமோ? யாதவர்கள் அனைவராலும் அவன் ஒதுக்கப்படுவானோ? கிருஷ்ணனின் மதிப்பைக் குறைக்கும் வகையில் இப்படி ஓர் பழியை அவள் தந்தை அவன் மேல் சுமத்தியது ஓர் மோசமான நிகழ்வு. இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. மேலும் மேலும் அவள் சிந்தித்துப் பார்த்தாள். ம்ஹூம், அவளால் அவள் தந்தையின் குற்றச்சாட்டைச் சிறிதும் நம்பவே முடியவில்லை. அவள் தன் கண்களால் பார்த்திருக்கிறாள், சித்தப்பா ப்ரசேனர் அந்த அதிகாலையில், இருள் பிரியா வேளையில் ஒரு ரகசிய வேலையாகக் கிளம்பிப் போனதை அவள் நன்கு கவனித்துப் பார்த்திருக்கிறாள். அதோடு நுழைவாயிலுக்கருகே கிருஷ்ணனின் காதுக் குண்டலத்தை அவள் தந்தை கீழே போட்டதையும் அவள் கவனித்தாள். அதைத் தான் எடுத்து அவள் சகோதரர்களிடமும் மற்றவர்களிடமும் அவள் தந்தை கிருஷ்ணன் தான் ச்யமந்தகத்தைத் திருடினான் என்பதற்குச் சான்றாகக் காட்டினார். ம்ம்ம்ம்?? ச்யமந்தகம் மறைந்ததற்கும் இந்த நிகழ்வுகளுக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. ஆம் நிச்சயமாக இருக்கிறது.

தாங்க முடியாத் துயரத்தில் தவித்தாள் பாமா. அவளால் எவரிடமும் இந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் தந்தை அவளுடைய பிரியத்துக்கு உகந்த
“பிரபு”வான கிருஷ்ணனை அடியோடு அழிக்கக் கிளம்பிச் சென்றிருக்கிறார். கிருஷ்ணனுடைய வெளிப்படையான தன்மையையும் ச்யமந்தகத்தை அவன் திருடவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டியவர் அவள் ஒருவளே. அவளால் மட்டுமே இதை நிரூபிக்க இயலும். ஆனால் அவளால் இதைச் செய்ய முடியவில்லை. நிரூபிக்க இயலவில்லை. எப்படி நிரூபிப்பாள்? கிருஷ்ணனின் கௌரவத்தை எப்படிக் காப்பாள்?

மதிய உணவுக்குச் சிறிது நேரம் முன்னர் அவள் தந்தையும் சகோதரன் பங்ககராவும் திரும்பி வந்தனர். அவள் தந்தை வெற்றிக் களிப்புடன் அவளிடமும் அவள் சிற்றன்னைமாரிடமும் சொன்னதை வேறு வழியின்றி மனக்கசப்புடன் அவள் கேட்டுக் கொண்டாள். அவள் தந்தை கூறினார்: பெரியோரிடம் தான் பேசிய விதத்தையும், அங்கிருந்த மக்கள் அனைவரும் கிருஷ்ணனைத் “திருடன்” என அழைத்ததையும், கிருஷ்ணன் ச்யமந்தகத்தை மீட்டுத் தரவில்லை எனில் தன்னைத் தானே எரித்துக் கொள்வதாக சபதம் செய்ததையும், அவனைத் தான் செய்ய வைத்ததாகவும் பெருமையுடன் கூறினார்.  சத்யபாமா இதைக் கேட்டதும் கலக்கமடைந்தாள். அதிலும் ச்யமந்தகம் கிடைக்கவில்லை எனில் கிருஷ்ணன் தன்னைத் தானே எரித்துக் கொள்வான் என்பதைக் கேட்டு அவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. அனைவரும் சாப்பிடச் சென்றார்கள். இயந்திரம் போல் சென்ற பாமாவினால் ஒரு கவளம் உணவைக் கூட விழுங்க முடியவில்லை. வேறு வழியின்றி சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிய பாமா தன் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தாள். அவள் கண்கள் மூடவே இல்லை. அவளுக்குத் தூக்கம் வரவே இல்லை. அப்போது பார்த்து அவள் செல்லப் பூனை ஊரி அங்கே வந்து காலையிலிருந்து பாமா தன்னைக் கவனிக்காமல் இருப்பது குறித்துப் புகார் சொல்லும் தோரணையில், “மியாவ், மியாவ்,” எனக் கத்திக் கொண்டு அவளருகே வந்ததும் கோபத்துடன் பூனையைத் தள்ளிவிட்டாள் பாமா.

ஆனால் ஊரியோ பாமாவின் துயரத்தைப் புரிந்து கொண்டாற்போல் நடந்து கொண்டது. அதற்குத் தன் யஜமானியின் மனோநிலையைப் புரிந்து கொள்ளும் சக்தி வாய்த்திருந்தது. ஆகவே தன் பின்னங்கால்களினால் நின்ற வண்ணம் முன்னங்கால்களை பாமாவின் படுக்கையில் அவள் முகத்துக்கு எதிரே வைத்துப் பரிதாபமாகக் குரல் கொடுத்தது.  சத்யாவின் முகம் முழுவதும் அவள் விட்ட கண்ணீரால் நிரம்பி இருந்தது. இப்போது அவள் செல்லப்பூனையில் இந்த நடவடிக்கையினால் அவள் மனம் மேலும் நெகிழ்ந்தது. பூனை தன் யஜமானியின் துயரத்தைத் தானும் பங்கு போட்டுக் கொள்ள முயலுவதைக் கண்டு அதை எடுத்து அப்படியே அணைத்துக் கொண்டாள். “ஊரி, ஊரி, ஊரி” என்று கடித்த பற்களுக்கிடையே பேசிய அவள், “ஊரி, நீ ஒருத்திதான் என்னைப் புரிந்து கொண்டவள்; எனக்கென நீ ஒருத்தி தான் இருக்கிறாய்! இல்லை எனில் இவ்வுலகில் எனக்கு உதவுபவர்கள் எவரும் இல்லை. உறவென்றும் ஒருவரும் இல்லை!” என அதன் காதுகளில் மெல்ல முணுமுணுத்தாள். சற்று நேரம் யோசித்தாள் பாமா. பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய்த் தன் செவிலித்தாயை அழைத்தாள்.

முகி என்னும் பெயருடைய அந்த செவிலித்தாய் நாக இனத்துப் பெண். பாமாவின் தாய் இறந்ததில் இருந்து அவள் தான் பாமாவைத் தன் சொந்த மகள் போல் வளர்த்து வந்தாள். அவளைத்தான் இப்போது பாமா அழைத்து உடனடியாக சுபத்ராவைப் போய்ப் பார்க்கும்படி சொன்னாள். சுபத்ராவைக் கோவிலுக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி அழைப்பு அனுப்பினாள். வழக்கமான இடத்தில் தான் காத்திருப்பதாகவும் சுபத்ரா வந்து தன்னைச் சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி அனுப்பினாள். பின்னர் கிருதவர்மாவை சாத்யகியைப் பார்த்து அன்று மாலை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் கிருதவர்மாவின் வீட்டில் தன்னைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி செய்தி அனுப்பினாள். காலையிலிருந்து அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் சத்யபாமா வெளியே சொல்லமுடியாதபடி மனோவேதனையை அனுபவித்து வந்தாள். இப்போதோ நகரிலிருந்து பற்பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவற்றாலும் அவள் வேதனை அதிகரித்தது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருந்ததோடு அல்லாமல் சில மிகைப்படுத்தப்பட்டவையாகவும் தெரிந்தன.

அவள் மாளிகையின் ஊழியர்கள் மூலமும் மற்றும் சில நண்பர்கள் மூலமும் வந்த செய்திகள் அவளை அதிர வைத்தன. மற்றும் சில ஒற்றர்களும் செய்தியைப் பரப்பினார்கள். எவர் சொல்வதை நம்புவது என்றே புரியவில்லை பாமாவுக்கு. ஆனால் துவாரகையில் மக்கள் அனைவருமே ஒவ்வொரு வகையில் மனோ நிலையில் எழுச்சி கண்டு துடித்துக் கொண்டிருந்தனர். ஆகவே ஆங்காங்கே சிறு சிறு மோதல்களும் ஏற்பட்டிருந்தன. வந்த செய்திகளில் குறிப்பிடப்பட்ட பொதுவான மனோநிலையாக யாதவர்கள் அனைவரும் சத்ராஜித்திடமே கோபம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தன. கிருஷ்ணனை சத்ராஜித் திருடன் என்று சொன்னதை எவராலும் தாங்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணன் ச்யமந்தகத்தைத் திருடி இருப்பான் என்பதை எவரும் நம்பவில்லை என்றும் கூறினார்கள். மேலும் கிருஷ்ணன் தன்னைத் தானே எரித்துக் கொள்வதாக சபதம் செய்திருப்பதும் அனைவர் மனதிலும் வேதனையை உண்டு பண்ணி இருந்ததாகவும் தெரிய வந்தது.

1 comment:

ஸ்ரீராம். said...

பாமா... வெளிய வாமா.... உண்மையைச் சொல்லுமா!!!