Tuesday, January 19, 2016

பிரசேனனின் உடல்!

கிருஷ்ணன் மேலும் யோசித்தான். சத்ராஜித் எப்போதும் தன்னைச்  சுற்றி ஓர் தெய்வீக ஒளிவட்டம் பிரகாசிக்கிறது என்பது போல் நடந்து கொள்வான். அதற்கு அவன் சொல்வது என்னவெனில் காயத்ரி மந்திரத்தை அவன் பத்து லட்சம் முறைகளுக்கு மேல் ஜபித்திருப்பதாகவும் அந்த நேரங்களில் அவன் முழு உபவாசம் இருந்ததாகவும் சொல்லி இருக்கிறான். அதுவும் அவன் இம்மாதிரித் தவம் இருந்த குகை சூரியனுடையது எனவும், அங்கே தெய்வீகக் காவலர்களே காவல் காப்பதாகவும் சொல்லி இருக்கிறான். அந்தப் புனிதமான சூரியனின் குகை எங்கே இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. அப்படி ஒன்று இல்லவே இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர். ஒருவேளை அப்படி ஒன்று இருந்தால், அது சத்யபாமாவுக்கும் தெரிந்திருந்தால், ச்யமந்தகமணியைப் பிரசேனன் அந்த குகைக்குத் தான் எடுத்துச் சென்றிருப்பான் என்பதை பாமாவும் அறிந்திருப்பாள். ஆகவே அவளும் அங்கே போயிருக்கலாம். ஆனால் அந்த குகை எங்கே உள்ளது?

உஜ்ஜயந்தா மலையைச் சுற்றியுள்ள காடுகள் கிருஷ்ணனுக்குப் பழக்கமானவையே. ஆகையால் அவன் சுறுசுறுப்பாகத் தன் நடையை அந்தக் காடுகளை நோக்கிப் போட்டான். மலையடிவாரத்தில் வேட்டைக்காரர்கள் தங்கவும், யாதவத் தலைவர்கள் வேட்டைக்குச் செல்கையில் தங்கவும் சில குடிசைகள் கட்டப்பட்டு இருந்தன. கிழக்கு வெளுக்கும் நேரத்தில் கிருஷ்ணன் அந்தக் குடிசைகளை அடைந்தான். அங்கே சத்ராஜித்தினால் கட்டப்பட்டு இருந்த தங்குமிடத்தை ஆராய்ந்தான். அது மூடப்பட்டுக் கிடந்தது. ஆகவே வந்தவர்கள் இதைத் தாண்டி மேலும் உள்ளே சென்றிருக்க வேண்டும். கிருஷ்ணன் மேலே நடந்தான். சிறிது தூரம் சென்றதும் ஒரு பாதை மலையைச் சுற்றிக் கொண்டு மூன்றாகப் பிரிந்தது. மூன்றும் மலைக்கு மேல் செல்லும் பாதைகள். அவற்றில் ஒன்றில் மட்டுமே குதிரைகள் சென்றிருந்த காலடித் தடங்களும் மனிதர்களின் காலடித் தடங்களும் காணப்பட்டன. கிருஷ்ணன் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தான். மெல்ல மெல்ல சூரியன் உதயம் ஆனான். உதய சூரியனின் பொற்கதிர்கள் பட்டு அந்தக் காட்டுப்பிராந்தியமே மஞ்சள் ஒளி பெற்றுத் திகழ்ந்தது. மலைகளில் இருந்த மரங்கள், செடிகள், கொடிகள் அனைத்தும் மஞ்சள் வண்ணம் பெற்றுப் பிரகாசித்தன. இன்றொரு புத்தம்புதிய நாள் உதயம் ஆகிவிட்டது. காலை இளங்காற்று மிகவும் மென்மையாகவும் பல்வகைப் பூக்களின் நறுமணத்தைச் சுமந்தும் இதமாக வீசியது. லேசாகக் குளிர் தெரிந்தாலும் அதுவும் தேவையாகவே இருந்தது. புத்துணர்ச்சியைக் கொடுத்தது. மரங்களின் மேல் காற்று மோதியபோது எழுந்த மர்மர சப்தமும் இனிமையாகவே இருந்தது. பறவைகள் நானாவிதமாகக் கூச்சலிட்டுக் கொண்டு காலை பொழுது புலர்ந்ததை வரவேற்றன. மான்கள் கூட்டம் ஒன்று மேயச் சென்று கொண்டிருந்தவை திடீரெனக் கண்ணனை அங்கே கண்டதும் ஓட்டமாக ஓடி அடர்ந்திருந்த  காட்டுக்குள் மறைந்தன.

சத்ராஜித்தின் நடவடிக்கைகள் கடந்த சிலநாட்களாக எப்படி இருந்தன என்பதைக் கிருஷ்ணன் மீண்டும் மீண்டும் தன் மனதிற்குள் நினைத்துப் பார்த்து ஆராய்ந்தான். மனிதர்கள் தான் எத்தகைய விசித்திரமான வழிமுறைகளில் நடக்கின்றனர்! அவர்களை அவரவர் சுய தர்மத்திற்குக் கொண்டு வரவேண்டியும், தர்மத்தின் பாதையிலிருந்து பிறழாமல் இருக்கவும் எத்தனை முயற்சித்தாலும் அவர்கள் அதைப்புரிந்து கொண்டு கவனமாக நடந்து கொள்வதில்லை. சத்ராஜித்திற்கும் ஒரு குடும்பம் உள்ளது. பிரம்மாண்டமானதொரு மாளிகை, தங்கக்கட்டிகள், ஆபரணங்கள், குதிரைகள், பசுக்கள், வைர வைடூரியங்கள் என அளப்பரிய செல்வமும் உள்ளது. சந்தோஷமாக இருக்கவேண்டியது எப்படி என்பதை அவன் அறியவில்லை. அப்படி அறிந்திருந்தால் அவன் இத்தகையதொரு செல்வத்தை வைத்துக் கொண்டு எவ்வளவோ  மகிழ்ச்சியாக இருந்திருப்பான். உலகிலேயே அவன் தான் மிக மகிழ்ச்சியான மனிதனாகவும் இருந்திருப்பான்.  அவன் ஏன் கிருஷ்ணனைக் கொல்லப் பார்த்தான்? இத்தனைக்கும் கிருஷ்ணன் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யவில்லையே! அதுவும் யாதவர்களை அவன் மரணத்தின் பிடியிலிருந்தும் ,ஜராசந்தனின் கொடூரத்திலிருந்தும் காப்பாற்றி அல்லவோ இங்கே அழைத்து வந்திருக்கிறான். அவர்கள் எவ்வளவு பயந்து கொண்டும், ஏழமையிலும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார்கள்? இங்கே வந்ததும் அவர்களின் நிலைமையையே உயர்த்திவிட வில்லையா! ஆரியர்களுக்குள் இன்று யாதவர்கள் பெரும் கீர்த்தி பெற்றவர்களாக இருக்கின்றனரே! தங்கள் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பாற்ற வேண்டியும் அதைப் பாதுகாக்கவேண்டியும் கிருஷ்ணனை அன்றோ அவர்கள் நம்பி இருக்கின்றனர்!

ச்யமந்தகத்தைக் கண்ணன் திருடி இருப்பான் என்பதை அவர்கள் யாரும் நம்பவில்லை என்பது என்னமோ உண்மைதான். ஆனால் அதற்காகக் கண்ணன் சும்மா இருந்துவிட முடியுமா? அவனுக்கென ஒரு தார்மீகக் கடமை உள்ளது. பொறுப்பு உள்ளது. ச்யமந்தகம் எங்கே என்பதைக் கண்டு பிடித்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டியது கண்ணன் கடமையன்றோ! இதற்காக அவன் தன் உயிரைக் கூடப் பணயம் வைத்துத் தான் ஆகவேண்டும். ஆம், மனிதர்கள் அதிலும் வீரர்கள் இப்படித் தான் அங்கும் இங்கும் அலைந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது தர்மத்தின் பாதையில் செல்ல வேண்டி இருக்கிறது. சென்றாக வேண்டும். சாகசங்களைச் செய்யும் வீரன், அதிசயங்களைச் செய்யும் வீரன் ஒருவன் இந்த உலகுக்குத் தேவை தான். அப்படிப் பட்ட ஒருவனை மக்கள் பெரிதும் விரும்பவும் செய்வார்கள். ஆகவே தான் இந்தக் கடமையை எப்படியாவது செய்தாக வேண்டும். ஹூம். கிருஷ்ணன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அவன் பிறந்த நேரத்தில் கிரஹங்களின் சேர்க்கையைக் குறித்துப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறான். அவற்றின் விசித்திரமான வழிகள் கிரஹங்களின் சேர்க்கைகள் தான் அவனை இப்படி எல்லாம் வழி நடத்துகிறதோ?

ஆம், சிலவாரங்கள் முன்னர் தான் அவன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்து அவர்களுக்கென ஒரு நகரை ஸ்தாபிப்பதிலும், அரசை நிர்மாணிப்பதிலும் உதவிகள் செய்து வந்தான். இதோ, இப்போது! அவன் ச்யமந்தகத்தைத் திருடி விட்டதாக ஓர் குற்றச்சாட்டு அவன் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. அதுவும் யாரால்? சத்ராஜித்தால்! அவனுக்கோ எவர் மீதும் அக்கறை இல்லை. உலகில் மனிதர்கள் படைக்கப்பட்டிருப்பதே தன்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத் தான் என்னும் எண்ணம் அவனிடம் எப்போதும் உண்டு. கண்ணன் சுற்றுப்புறத்தை மீண்டும் கவனித்தான். சூரியன் இன்னமும் மேலே ஏறி இருந்தான். காடு முழுவதும் சூரிய ஒளியில் பிரகாசமாய்த் தெரிந்தது.  மரங்களின் இலைகளுக்கிடையே கீழே விழுந்த சூரிய வெளிச்சம் தரையில் யாரோ பொற்காசுகளைக் கொட்டிக் கவிழ்த்தாற்போல் தெரிந்தது. காட்டு மரங்களில் பழுத்துக் கிடந்த உண்ணக் கூடிய பழங்களைப் பறித்துக் கிருஷ்ணன் சாப்பிட்டு விட்டு அங்கிருந்த ஓர் அருவியில் நீரையும் பிடித்துக் குடித்தான். இன்னும் மேலே நடக்கையில் அவன் தலைக்கு மேல் பிணம் தின்னிக் கழுகுகளின் கூச்சல் கேட்டது. கழுகுகள் பறந்த இடத்தைக் குறிவைத்து வேகமாகச் சென்றான். அந்த இடத்தை அடைந்ததும், கழுகுகள் அங்கே கிடந்த இரு உடல்களைப் பங்கிட்டுக் கொண்டு கொத்தித் தின்று கொண்டிருப்பதைக் கவனித்தான். நல்ல உணவு கிடைத்ததில் அவை சந்தோஷக் கூச்சலிட்டுக் கொண்டும், கீழே உட்கார்ந்து கொத்துவதும் பின்னர் மேலே பறப்பதுமாய் அமர்க்களம் செய்து கொண்டிருந்தன. பருந்துகளும் மற்றச் சின்னச் சின்ன மாமிசம் தின்னும் பறவைகளும் கழுகுகளால் பிய்த்துப் போடப்பட்டச் சின்னச் சின்னத் தசைத்துணுக்குகளைக் கவ்விக் கொண்டன. சில நரிகளும் தென்பட்டன. ஆனால் கழுகுகளின் கொத்தலுக்குப் பயந்து தூரத்தில் நின்றன. அவற்றில் தைரியமான சில நரிகள் கழுகுகளை விரட்டவும் முயன்றன. தசையும், சதையும் கொஞ்சம் கொஞ்சமாய்த் தீர்ந்து போய் எலும்புக்கூடு மட்டும் மிச்சம் இருக்கும் நேரம்!

தன் கையிலிருந்த அரிவாளால் கழுகுகளைப் பயமுறுத்தி விரட்டிய வண்ணம் கிருஷ்ணன் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் அந்த உடல்களின் அருகே சென்றான். ஒரு உடல் குதிரை ஒன்றினுடையது. அதன் உடலில் சேணம் கட்டப்பட்டுக் கிடந்தது. இன்னொன்று ஒரு மனிதனின் உடல். அந்த உடலைத் தான் கழுகுகள் மொய்த்துக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் தன் வில்லில் இருந்து ஓர் அம்பை வேகமாக ஒரு கழுகின் மேல் செலுத்தினான். கொஞ்ச நஞ்சம் மீதம் இருந்த சதையையும் கொத்தித் தின்று கொண்டிருந்த அந்தக் கழுகு பயத்துடன் பறக்கப் பார்த்தது. ஆனால் அதற்குள்ளாக அம்பு அதன் மேல் தைத்துவிட இறக்கைகளைப் படபடவென அடித்த வண்ணம் தரையில் வீழ்ந்த அது மெல்ல எழுந்திருக்கப் பார்த்து முடியாமல் மீண்டும் கீழே விழுந்து இறந்தது. இதைக் கண்ட மற்றக் கழுகுகள் பயத்தில் கிரீச்சிட்டுக் கொண்டு விண்ணில் பறந்தன.  மீண்டும் ஓர் கழுகு அந்த உடலைக் கொத்த வருவதைப் பார்த்த கிருஷ்ணன் மறுபடி இன்னோர் அம்பை எய்தான். அதுவும் கீழே விழுந்து இறந்தது. மற்றக் கழுகுகள் இதைக் கண்டதும் பறந்து ஓடிவிட்டன.

அங்கிருந்த மனிதனின் உடல் மனதைக் கலக்கும் வண்ணம் பயங்கரமான தோற்றத்தைத் தந்தது. ஒரு காலத்தில் முகம் என இருந்த இடத்தில் இப்போது தாடியும், தலை மயிரும் மட்டும் ஒரு மாதிரியான கோலத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த மனிதன் அணிந்திருந்த உடையும் கந்தல் கந்தலாகக் கிழிந்து போயிருந்தது. அந்தக் கந்தல் துணி அவன் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த கோலம் பார்க்கவே மோசமாக இருந்தது. அந்த உடலின் அருகில் ஓர் வில், அம்புகள் நிறைந்த அம்புறாத் தூணி, ஒரு பெரிய வாள் ஆகியன கிடந்தன. அவனுடைய முதுகுத் தண்டு யாரோ வலுவான கரங்களால் அடித்தாற்போல் இரண்டாகப் பிளந்து கிடந்தது. அதைப் பார்க்கையிலேயே வெளிப்படையாகத் தெரிந்த ஓர் விஷயம் இது எந்த மனிதனும் செய்யவில்லை; இவன் மரணம் மனிதனால் ஏற்படவில்லை என்பதே! சக்தி வாய்ந்த மிருகம் ஒன்றின் வேலை தான் இது என்பதைப் பார்த்ததுமே புரிந்தது. கிருஷ்ணன் கீழே குனிந்து அந்த மனிதனை அடையாளம் காண முயன்றான்.

மிகக் கவனமாக அவன் அணிந்திருந்த உடையையும், ஆபரணங்களையும், அவன் தோள்பட்டைகளையும் ஆராய்ந்தான். அவன் அணிந்திருந்த உருமால், கிழிந்திருந்தாலும் அது விலை உயர்ந்தது என்பது தெரிந்தது. அவன் அணிந்திருந்த அரைக்கச்சை முழுதும் தங்கத்தால் வேயப்பட்டிருந்ததோடு அல்லாமல் அதன் நடுவில் சூரியக் கடவுளின் பிம்பமும் இருந்தது. இதே போன்ற ஒன்றைத் தான் சத்ராஜித்தும் அணிந்து கொள்கிறான். நேற்றும் அணிந்திருந்தான். வில்லின் தண்டு கூட சூரியக் கடவுளின் பிம்பத்தைக் கொண்டிருந்தது. கிருஷ்ணனுக்கு இறந்தது யார் என்பது புரிந்து விட்டது. சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனனின் உடல் தான் இது!

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.