Thursday, February 11, 2016

கண்ணனின் சிசுருஷைகள்!

இப்போது அந்த மனிதன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தான். அவன் முகம் அவள் பார்க்கக் கூடிய கோணத்தில் இருந்தது. தன் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் புதிய முகமாகத் தெரியவில்லை. அவள் கனவிலும், நனவிலும் கண்டு கொண்டிருந்த முகம் தான் அது. அவள் சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே எந்த முகத்தைக் கண்டு உயிர் வாழ நினைத்தாளோ, எந்த முகத்தைக் கண்டால் அவள் முகம் மட்டுமில்லாமல் உள்ளமும் மலருமோ, தன் உயிரைக் கொடுத்தாவது எந்த முகத்தைக் காண நினைத்தாளோ அந்த முகம் தான் அது! அவள் வீட்டு மனிதர்கள் யாருடைய முகமும் இல்லை இது! அவள் வீட்டு மனிதர்களின் முகம் இப்படிப் பளிச்சென இருக்காது. இந்த  முகத்தில் வலியோ, வேதனையோ, பயமோ அல்லது தாங்க முடியாக் குற்ற உணர்வோ காணப்படவில்லை. பளிங்கு போன்ற முகம். ஆனால் கருநிறப் பளிங்கு! ஆஹா! பாமா நிச்சயம் கனவு தான் காண்கிறாள்! இல்லை எனில் இந்த முகம் எப்படி அவள் அருகே வர முடியும்! இது நினைவில்லை! கனவு! ஆனாலும் நல்லதொரு கனவு! அந்த முகம் அவள் உள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது! மீண்டும் கூர்ந்து பார்த்தாள் பாமா! அந்த முகத்தில் கர்வமோ, அகம்பாவமோ, அலட்சியமோ அல்லது வெறுப்போ, இகழ்ச்சியோ காணப்படுகிறதா? இல்லை, இல்லவே இல்லை! இது எப்படி சாத்தியம்!

மாறாக அந்த முகத்தில் ஒரு தெய்விகத் தன்மையும், அமைதியும் அன்றோ நிலவுகிறது. ஒரு பரிசுத்தம் காணப்படுகிறதே! வெகுளித் தன்மையும் தீங்கில்லா முகபாவமுமே காண்கிறேனே! இந்த முகம் இப்போதைய இந்த உணர்வுகளைத் தான் வெளிப்படுத்துகிறதே தவிர வேறெதையும் ஒளித்து மறைக்கவில்லை! நிச்சயமாய்ச் சொல்ல முடியும்! சற்றும் பயமின்றிக் காணப்படும் இந்த முகம் பிறர் தன்னைப் பார்ப்பதிலிருந்து தன்னை ஒளித்துக்கொள்ளவும் செய்யாது! அந்தக் கண்கள்! கருணைப்பிரவாகமாகப் பொழியும் கண்கள்! அவை தான் எத்தனை பிரகாசமாக இருக்கிறது! எல்லையற்ற இந்தப் பரந்த வாழ்க்கையைக் கண்டு சற்றும் அஞ்சாமல் சந்தோஷமாகப் பற்பல வீரதீர சாகசங்களைச் செய்தும் சற்றும் கர்வம் கொள்ளாது கருணையும், அன்பும் மட்டுமே காட்டும் கண்கள்!அவை அவனுக்கு ஒரு அற்புதமான உயர்ந்த மதிப்பைக் கொடுக்கின்றனவே! அவனே தன் திறமையைத் தானே பார்த்துக் கொள்ளும்படியானதொரு நிலையைக் கொடுக்கிறதோடு அல்லாமல், இவ்வுலகத்தினரையும் இதை எல்லாம் பார்க்க வைத்ததோடு அதன் மூலம் அவர்களையும் இதற்கெல்லாம் தக்கவர்களாக மாற்றும் கண்கள்!

அந்த அரை மயக்கத்தில் சத்யபாமா தான் ஓர் தெய்வீகமான சக்தியின் முன்னர் இருப்பதை உணர்ந்து கொண்டாள். அவள் இன்று வரை ஒரு ஆணின் அருகாமையில் இவ்வளவு அருகாமையில் இருந்ததில்லை. இந்த மனிதனின் உடல் வலிமையும் பொருந்தி உள்ளதோடு இளமைத் துள்ளலோடும் இருக்கிறது! அவனுடைய கருநிறம், உடலின் நிறம் அவன் தலைமயிரின் நிறத்தோடு கலந்து காணப்படுகிறது. அந்தத் தலைமயிர் மட்டும் சுருள்,சுருளாக இல்லாவிட்டால் அவன் உடலோடு பொருந்தியே அன்றோ காணப்படும்! அப்போது அவன் தன்னை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சத்யபாமாவின் உள்ளத்தில் ஏதோ செய்தது. ஒரு விசித்திரமான இன்னதென்று சொல்லமுடியா உணர்வு! ஒரு சிறு போராட்டம்! ஆஹா! இத்தனை வருடத் தனிமை! அவளுடைய போராட்டங்கள், சொல்ல முடியா மனோ நிலைகள்! அதன் காரணிகள், அதன் மூலம் விளைந்த பல அசிங்கமான நிகழ்வுகள்! என எல்லாம் அவள் முன்னே வந்து சென்றது. அந்த ஒரு நிமிடத்தில் தான் பிறந்ததில் இருந்து அன்றுவரையான வாழ்வை அவள் திரும்ப வாழ்ந்து முடித்தாள்! தன்னருகே இருந்த இளைஞனைப் பார்த்து மெல்லப் புன்னகை செய்தாள்! அவனும் அவளைப் பார்த்துத் திரும்பப் புன்னகைத்தான். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான் என்பதை பாமா உணர்ந்து கொண்டாள்.

ம்ஹூம், இது நிச்சயம் உண்மையாக இருக்க முடியாது! அவள் நல்லதொரு சொப்பனத்தைக் காண்கிறாள்! என்ன அழகான கனவு! அவளையும் அறியாமல் புலம்ப ஆரம்பித்தாள்! “கோவிந்தா! கோவிந்தா! ஏன் என்னை விடாமல் கனவிலும், நனவிலும் துரத்துகிறாய்? இப்போதும் என் கனவில் வந்துள்ளாயே! கோவிந்தா! உன் போன்ற பராக்கிரமங்கள் நிறைந்ததொரு சாகசங்கள் புரிந்ததொரு வீரனுக்கு மனைவியா நான் சிறிதும் தகுதி உள்ளவள் ஆக மாட்டேன்!” எனத் துயருடன் கூறினாள். பின்னர் அவளையும் அறியாமல் அழுகை பொங்கி வரக் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.  ஆனால் என்ன ஆச்சரியம்! உடனடியாக அவன் பேசினான்! ஆம்! பேசி விட்டான்!”முதலில் உன் அழுகையை நிறுத்து!  நீ கனவுலகில் இருந்தாயெனில் நானும் அதே கனவுலகில் தான் இருப்பேன்! அதைப் புரிந்து கொள்! உன் அழுகையை நிறுத்து!” என்றான்.

இப்போது சத்யபாமா தான் அணிந்திருந்த உடையைப் பார்த்தாள். அது தான் அணிந்து வந்த உடை அல்லவென்றும், இப்போதே கோவிந்தனால் தனக்கு அணிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டாள். அந்த உடையை எடுத்துத் தன்னை முழுதும் போர்த்திக் கொண்டாள். கண்ணன் அவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். அவன் கண்கள் குறும்பில் கூத்தாடின! “ஆஹா! இந்தத் துணி உனக்கு முழுவதும் மறைத்துக் கொள்ளப் போதுமானதாக இல்லை! ஆகவே நீ அடக்கமாக இருக்கவேண்டும் என்று நினைப்பதை விட்டுவிடு!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். பாமா அதைக் கவனிக்காமல் எழுந்திருக்க முயற்சித்தாள். அந்த முயற்சியில் தோல்வியுற்றுக் கீழே மறுபடி படுத்தவள் வெறி கொண்டாற்போல் அழ ஆரம்பித்தாள். கிருஷ்ணன் சற்றும் தயங்காமல் அவளை ஓங்கி அறைந்தான். அது ஒன்றுதான் அவளைத் தற்சமயம் இப்போதைய நிலைக்குக் கொண்டுவரக் கூடியது என்பதை உணர்ந்தே அவ்வாறு செய்தான். அதிர்ச்சியில் பாமாவும் அழுகையை நிறுத்தினாள்.

“முதலில் அழுவதை நிறுத்து!” என்று கண்டிப்பாகவும், கட்டளையாகவும் சொன்னான் கோவிந்தன். பின்னர், “இப்போது எழுந்திருக்க முயற்சி செய்யாதே! உன்னால் முடியாது! உனக்கு இப்போது நடக்க முடியாது! உன்னுடைய கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. வீக்கமும் இருக்கிறது. இப்போது நடக்க முயற்சி செய்து என் வேலையை இன்னமும் கடினம் ஆக்கிவிடாதே!” என்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

உரையாடல் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை!

:)))