Monday, December 10, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!


“கண்ணா,  இப்படி எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன் எனில் நான் இத்தனை காலம் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது.  வாசுதேவ கிருஷ்ணா, நான் பிறந்த சமயம் இந்த ஆர்யவர்த்தம் சகலவிதமான செளகரியங்களையும் கொண்டிருந்தது.  ஆனால் அதன் மன்னர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லை.  வேதங்கள் ஓதுவதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.  உள்நாட்டுச் சண்டையில் முக்கியத்துவம் காட்டி வந்த மன்னர்கள் வேதம் ஓதுதலை மறந்தே விட்டார்கள் எனலாம்.  ஆசிரமங்கள் அனைத்தும் காடுகள் போல் மாறிவிட்டன.  இப்படி அனைத்தும் அழிந்துவிடுமோ என்னும் சூழ்நிலையிலேயே நான் பிறந்தேன்.”

“பின்னர் நீங்கள் அனைத்தையும் மீண்டும் நிலை நாட்டி தர்மத்தை ஸ்தாபித்து இருக்கிறீர்கள்.  ஆசாரியரே, மிகக் கடினமான இந்த வேலையைத் தனி ஒருவராக எப்படிச் செய்தீர்கள்? உங்களால் எப்படி முடிந்தது?”  கண்ணன் ஆச்சரியத்தோடு கேட்டான். 

“கண்ணா, தர்மம் என்பது காலவரையரை இல்லாத ஒன்று.  அது என்றும் நிலைத்திருப்பது.  ஆகவே அழியாத ஒன்று.  அவ்வப்போது அதற்குச் சரியான பாதுகாவல் இல்லாமல் மறைந்திருப்பது போல் தோன்றலாம்.  ஆனால் தக்க சமயம் வந்ததும் மீண்டும் தலையெடுக்கும்.   தர்மம் ஒருகாலும் அழியாது.  ஏனெனில் அதுவே சத்தியம், நிரந்தரம், உண்மை!  எவராலும் அதை அழிக்க இயலாது!”
“ஆனால், ஆசாரியரே, ஜராசந்தன் போன்ற அரசர்களாலும் என் மாமன் கம்சன் போன்ற கொடியவர்களாலும் தர்மத்தை அழிக்க முடிந்திருக்கிறது.  தாங்கள் நன்கு அறிவீர்கள்.”

“கண்ணா, நான் பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்திகளையும் சரி, குறுநில மன்னர்களையும் சரி நம்புவதே இல்லை.  ஏனெனில் அவர்கள் மனம் முழுதும் வெறுப்பு, அவநம்பிக்கை, பொறாமை, ஒருவர் மற்றவர் மேல் கொண்டுள்ள பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டுள்ளார்கள்.  இவையே அவர்களை வழிநடத்துகிறது.  நான் ரிஷி, முனிவர்களையும், ஆசிரமங்களையுமே நம்புகிறேன்.  நதி வழியாகவும், தரை வழியாகவும் நான் ஒவ்வொரு ஆசிரமமாகப் பயணிக்கையில் அவை அனைத்துமே ஒரு அருமையான பல்கலைக்கழகங்களாகத் திகழ்வதை உணர்கிறேன்.  மாணவர்களின் வாழ்க்கைக்கு மட்டுமின்றி அவர்களின் ஆத்ம தாகத்தையும் தீர்க்க வல்லவை இந்த குருகுலங்கள்.  பற்பல கலைகளையும் சுய ஒழுக்கத்தையும் போதிக்கும் இந்த ஆசிரமங்களினால் மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகமாவதோடு சுயக் கட்டுப்பாடும் அதிகமாகிறது.  இதன் ஆசிரியர்கள் ஒருவேளை ஏழையாக இருக்கலாம்.  தப்பில்லை.  ஆனால் அவர்கள் தவத்தில் உயர்ந்தவர்கள்.  அதர்மம் எந்த விதத்தில் வந்தாலும் அவர்களின் தவ பலத்தால் அவர்கள் உயர்ந்தே நிற்கிறார்கள்.  இவர்களை எதிர்த்து எந்த அரசனும் ஒன்றும் செய்ய இயலாது.”

“ஆமாம், ஆசாரியரே, உங்களாலும், உங்கள் வழிநடத்தலாலும் அனைத்து ஆசிரமங்களும் பல்கலைக் கூடமாகவே திகழ்கின்றன.”

“கண்ணா, முதலில் நான் ஒருவனாகத் தான் இந்த யுத்தத்தை ஆரம்பித்தேன். ஆனால், நாளாக, ஆக, எல்லாம் வல்ல மஹாதேவனால் இந்த ரிஷிகளின் மனதில் தைரியத்தையும் நம்பிக்கையையும் ஊட்ட முடிந்தது.  அனைவரும் என் பக்கம் சேர்ந்தார்கள்.  இந்த ரிஷிகள் அனைவரும் தர்மத்தின் வழிநடப்பவர்கள்.  அதைக் காப்பதற்காக எப்படிப்பட்ட ஏழ்மையோ கஷ்டமோ  வந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் இந்த உற்சாகம் பல அரசர்களையும் கவர்ந்திருப்பதோடு அல்லாமல் இவர்கள் மேல் மட்டற்ற மரியாதை கொள்ளவும், இவர்களுக்கு எந்தவிதமான உதவிகளைச் செய்யவும் வைத்திருக்கிறது.  இதோ இந்த தெளம்யரைப்  பார் கண்ணா!  ஒரு வருடம் முன்னால் இவர் இங்கு வந்து இந்த ஆசிரமத்தை நிறுவினார்.  இவருடைய இடைவிடா தபஸின் காரணமாகக் காட்டுவாசிகளான இந்த நாகர்களைக் கூட முன்னேற வைத்துள்ளார்.  அவர்களின் நடவடிக்கைகள், போர் முறைகள் அனைத்திலும் கட்டுப்பாடும் நாகரிகமும் கொண்டு வர இவரால் இயன்றிருக்கிறது.  ஆரியர்களின் நாகரிக வாழ்க்கை முறையை நாகர்களின் தலைவன் ஆர்யகனும், அவன் குடிமக்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு விட்டனர்.  பல அரசர்கள் பலமுறை முயன்றும் அவர்களில் எவராலும் நடக்காத ஒன்று இந்த தெளம்யரின் தபஸினால் நடந்துள்ளது.  “

“ஆர்யகன் இன்னமும் சுறுசுறுப்பாக நடமாடும் நிலையில் இருக்கிறாரா, ஆசாரியரே?”

“ஆர்யகனுக்கு மிகவும் வயது ஆகி விட்டது.”  என்றார் வியாசர்.

“சொல்லுங்கள் ஆசாரியரே!துரியோதனனை எவ்வாறு தர்மத்தின் வழியில் திருப்புவது?”  இதைச் சொல்லும்போது ஹஸ்தினாபுரத்தில் நடந்த கெளரி பூஜையும், அதைச் சாக்காக வைத்து பானுமதியின் மூலம் தன்னை மாற்ற துரியோதனன் செய்த கேவலமான முயற்சிகளும் கண்ணன் நினைவில் வந்தது.

“கண்ணா, அதைக் குறித்தெல்லாம் யோசிக்காதே!  எல்லாம் வல்ல மஹாதேவனால் சரியான நேரத்தில் இதற்கு ஒரு பதிலைக் கொடுக்க இயலும்.   நமக்கு வேண்டியதை, வேண்டிய சமயம் அவன் கொடுத்தே ஆகவேண்டும் என நாம் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.  அதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை.” வியாசர் முகத்தின் புன்சிரிப்பு விரிந்தது ஒரு மலர் மெல்ல மெல்ல மலர்வது போல் இருந்தது.

“ம்ம்ம்ம்…மேலும் இப்போது யுதிஷ்டிரனும் மறைந்துவிட்டான்.”  கண்ணன் தொடர்ந்தான்.

வியாசரின் புன்னகை மேலும் விகசித்தது.  “அவர்கள் சொல்கின்றனர்.  யுதிஷ்டிரன் மாண்டுவிட்டான் என. “ எவராலும் அறிந்து கொள்ள இயலாத மர்மச் சிரிப்பொன்று வியாசரின் முகத்தில் காணப்பட்டது.  “ எனக்குத் தெரியும்.  அவன் சாகவில்லை;  உயிருடன் இருக்கிறான்.  உடலோடு இல்லை என்றாலும்  ஆன்ம சொரூபத்திலாவது.”  கண்ணன் முகத்தைப் பார்த்துச் சிரித்தார் வியாசர். 


1 comment:

ஸ்ரீராம். said...

படித்து விட்டேன். :))