Tuesday, December 4, 2012

கண்ணனுக்கும் கவலை!


அனைவரும் உணவு உண்ண அமர்ந்த போதும் வியாசருக்கு அவர்களுடனேயே அமர்ந்து உணவு உண்ணப் பரிமாறி இருந்தாலும் அவர் உடனடியாக அமராமல் அனைவரையும் பந்தி விசாரணை செய்து அவரவருக்கு வேண்டியவற்றைக் கேட்டறிந்து அவற்றைப் பரிமாறச் சொல்லி அனைவரும் மன நிறைவுடன் உட்கொண்ட பின்னரே அவர் அமர்ந்தார்.  இது அவர் எப்போதும் கடைப்பிடிக்கும் வழக்கம் எனக் கிருஷ்ணன் கேள்விப் பட்டான்.  உண்டு முடித்ததும், “ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி” என மும்முறை உச்சரித்த வியாசர் பின்னர் கைகளை வணங்கிய வண்ணமே அங்கிருந்து வெளியேறினார்.  அனைவரும் ஓடோடியும் வந்து அவர் பாதங்களைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.  வியாசரைக் குறித்த பல்வேறு செய்திகளையும் கேள்விப் பட்டிருந்த கண்ணன், தான் நேரில் பார்ப்பதற்கு முன்னர் அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்தான்.  இந்த மனிதர் அனைவருக்கும் நண்பராக இருக்கிறார்.  மற்றவர்களிடமிருந்து தன்னை அயல் மனிதனாக வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவில்லை.  மாறாக அவர்களில் ஒருவராக, அவர்கள் மனதைப் புரிந்தவராக, அதே சமயம் அவர்களின் ஆன்மிக பலமாகவும், உடல் நலத்துக்கு ஏற்ற பலம் தரும் மருத்துவராகவும் திகழ்ந்தார்.  ஒரு மனிதன் இவ்வாறு பலரையும் கவர்ந்து இழுப்பது கண்ணனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும்,  தான் போற்றி வணங்கக் கூடிய மனிதர் இவர் என்பதைப் புரிந்து கொண்டான்.

கண்ணனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும், ரிஷிகளின் குடிலுக்கு அருகேயே குடில் அமைத்துத் தரப் பட்டது.  வியாசரின் குடிலில் இருந்து கண்ணனுக்கு அழைப்பும் வந்தது.  வியாசரின் குடிலில் அவர் எதிரே கூப்பிய கரங்களுடன் அமர்ந்த கண்ணனுக்குத் தான் மாபெரும் மனிதர் ஒருவர் முன் அமர்ந்திருக்கும் நிலைமை புரிந்தது.  இந்த மனிதன் சாதாரணமானவன் அல்ல.  இங்கிருக்கும் அனைவரையும் தனித்தனியாக அறிவான்;  அனைவரிடமும் அன்பும் செலுத்துவான்;  அனைவரின் துக்கங்களுக்கும், துயரங்களுக்கும், மருந்திடுவான்;  அனைவரையும் புரிந்தும் கொள்வான்.  இப்படி ஒரு அதிசய மனிதன் இவ்வுலகில் உண்டா?  அல்லது இவன் வேற்று கிரஹத்து மனிதனா? கண்ணனுக்கு மயக்கம் ஏற்பட்டது.  கண்ணனைப் பார்த்த அந்த விசாலமான கண்களில் கருணையும், அன்பும் பொங்கி வழிந்தது.  குரலிலும் அளப்பரிய அன்பு தெரிந்தது.  ஒவ்வொருவர் சொல்வதையும் இவர் இதே போல் அதி தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும், அன்புடனும் கேட்டுத் தீர்வுகளைச் சொல்கிறார்.  கண்ணன் புரிந்து கொண்டான்.  இவர் எதிரே எவரும் அந்நியர் இல்லை.  அனைவரும் இவருக்குச் சொந்தமானவர்களே.

“கோவிந்தா, ஹஸ்தினாபுரத்துக்கு நீ வந்த காரணம்?”  வியாசர் கேட்டார்.
கண்ணன் ஹஸ்தினாபுரத்துக்குத் தான் வர நேர்ந்த விஷயத்தைத் தெரிவித்தான்.  பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் நெருப்பு வைத்துக் கொல்லப் பட்டதையும், தான் துக்கம் விசாரிக்க வேண்டி ஹஸ்தினாபுரம் வந்ததையும், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும், ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரருடனும், பீஷ்மருடனும் பேசியதையும், துரியோதனனையும், அவன் தாய்மாமன் சகுனியையும் குறித்த தன் எண்ணங்களையும் அவரிடம் தெரிவித்தான்.  இவருக்கு எதிரே இவர் முன்னே எதையும் மறைக்கக் கூடாது;  அது பாவம் என்ற எண்ணம் கிருஷ்ணனிடம் இருந்தது.  ஆகவே அனைத்தையும் அவரிடம் கூறினான்.  எனினும்,  சத்யவதி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ரகசியத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்பதில் அவனால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.  அது சரியா, தவறா என நிர்ணயிக்க முடியவில்லை. 
“ஆசாரியரே, யாதவர்களையும் கெளரவர்களையும் நெருங்கி வரும்படி செய்வதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.  ஆகவே குரு வம்சத்தினரை யாதவர்களிடம் நெருங்கி வரச் செய்ய ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரன் இருப்பது நன்மை பயக்கும் என எண்ணினேன்.  யாதவர்களும், குருவம்சத்தினரும் நெருங்கினால், துருபதனுக்கும் குரு வம்சத்தினரிடம் இருக்கும் மாபெரும் பகை ஓரளவுக்குக் குறையும்.  அவர்களிடம் அவனுக்கு இருக்கும் அவநம்பிக்கையைக் குறைக்கலாம்.  யாதவர்கள் துவாரகையிலும், காம்பில்யத்தில் துருபதனும், ஹஸ்தினாபுரத்தில் யுதிஷ்டிரனும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒன்று என என் கருத்து.  என் ஆசையும் அதுவே. “ என்றான் கண்ணன். 

“எப்படி நீ அதைச் செய்து முடிக்கப் போகிறாய் வாசுதேவா?” ஆசாரியர் கேட்டார்.
“அரசர்கள் ஒரு முறை உணர்ந்து கொண்டதும், ராஜ தர்மத்தைக் கடைப்பிடிப்பார்கள் என நம்பினேன்.  அரசர்கள் ராஜ தர்மத்தைக் கடைப்பிடித்தால் மக்களும் அவரவர் தர்மங்களைக் கடைப்பிடிப்பார்கள்.  இந்த நம்பிக்கைதான் ஆசாரியரே.  ஆனால்……..ஆனால்…… இப்போது யுதிஷ்டிரன் இல்லை.  அவன் இல்லாமல் என்ன நடக்கும்?  என்னுடைய நம்பிக்கைகளை நான் முற்றிலும் இழந்துவிட்டேன் ஆசாரியரே!”

ஆசாரியரின் முகம் விகசித்து மலர்ந்தது.  மலர்ந்த முகத்தோடு கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, தர்மம் ஒருநாளும் மரிப்பதில்லை.  அதை நீ அறிய மாட்டாயா?  அதற்கு இறப்பில்லை.   அதோடு கம்சனை அழித்த நீ, ஜராசந்தனை ஓட ஓட விரட்டிய நீ இதை மறக்கலாமா?  வாசுதேவா, எங்கெல்லாம் அதர்மம் தலை எடுக்கிறதோ, அதை வேரோடு அழிக்கப் பிறந்தவன் நீ.  அதை மறவாதே!” என்றார். 
“மதிப்புக்குரிய ஆசாரியரே! உங்களைப் போன்ற மஹரிஷிகளால் தான் எனக்கு நம்பிக்கை ஒளி காட்ட முடியும். மகதத்தில் சர்வ செளகரியங்களோடும், இணையற்ற செல்வாக்குடனும் ஜராசந்தன் ஆட்சி செலுத்தி வருகையில், அதர்மம் எங்கிருந்து அழிந்தது?  ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் ஆண்டு வருகிறான்.  காம்பில்யத்திலோ துருபதன் அனைவரிடமும் தன் வெறுப்பைக் காட்டி வருகிறான்.  அவர்கள் வெறுப்பில் வாழ்கின்றனர்; வன்முறையில் நம்பிக்கை வைத்துள்ளனர்.  அவர்களுக்குத் தெரிந்த ஒரே தர்மம் அவர்களைத் திருப்தி செய்யும் இந்த வெறுப்பும், வன்முறையுமே.”

8 comments:

திவாண்ணா said...

பட்சாச்!

அப்பாதுரை said...

வியாசருக்கு எல்லாம் தெரியும் என்று கண்ணனும், கண்ணனுக்குத் தெரியாதது இல்லை என்று வியாசரும் பரஸ்பரம் நினைத்தாலும் வெளியே இயல்பாக நிகழும் tug of war சுவாரசியம். கண்ணனுக்கும் குழப்பம் உண்டா? 'அனைத்தும் அறிந்த் மாயாவி' என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி கண்ணனை ஒரு அரசதந்திரியாக தொடர்ந்து பார்க்க வைக்கிறீர்கள். i am enjoying this.

(இரண்டாவது paragraphல் என்னவோ விட்டுப் போயிருக்கிறது போல் தோணுதே?)

ஸ்ரீராம். said...

//இந்த அனைவரையும் அறிவான்; //

இந்த இடத்தில் ஓரிரு வார்த்தைகள் குறைகிறதோ...? படித்து விட்டேன்.

sambasivam6geetha said...

வாங்க வா.தி. எங்கே இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க? :)))))

sambasivam6geetha said...

அப்பாதுரை, இரண்டாவது பத்தியில் சில வரிகள் விட்டுப் போயிருக்கின்றன தான். கண்டு பிடித்தமைக்கு நன்றி. :))) டாகுமென்டை ரெகவர் செய்யறப்போ சில வரிகள் காணாமல் போயிருக்கிறது. லாப்டாப் இன்னமும் தொடர்ந்து படுத்தல். ரீ இன்ஸ்டால் பண்ணி ஆகணும் போலிருக்கு. :)))

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், விட்டுப் போயிருக்கு தான். சேர்த்துவிடுகிறேன். நன்றி சுட்டிக் காட்டியதுக்கு. :)))))

Studentsdrawings said...

i am enjoyed nice

sambasivam6geetha said...

வாங்க ஸ்டூடன்ட்ஸ் ட்ராயிங்க்ஸ், முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும். தமிழில் (இயன்றால்)எழுதப் பழகவும். வாழ்த்துகள்.