Saturday, December 15, 2012

பாஞ்சாலத்தில் கண்ணன்!


சத்யவதி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ரகசியம் வியாசருக்குத் தெரிந்திருக்குமா எனக் கண்ணன் யோசித்தான்.  அவரிடம், “தாங்கள் ஐந்து சகோதரர்களும் உயிருடன் இருக்கிறார்கள் என நம்புகிறீர்களா ஆசாரியரே!” எனக் கண்ணன் கேட்டான்.  வியாசர் அந்தக் கேள்விக்கு நேரடியாகப்பதில் கூறவில்லை.  “அப்படி அவர்கள் இறந்திருந்தால்???? கண்ணா, நீ இங்கே இப்போது இருக்கிறாய்.  எதற்கு?  ஆர்ய வர்த்தத்தின் அரசர்களுக்கு மனுநீதியையும், வைவஸ்வதர் சொன்னதையும், ஜனகர் சொன்ன ராஜநீதியையும் நீயன்றோ போதிக்க வேண்டும்! வாசுதேவா, இப்போது நீ துருபதனைச் சந்திக்கச் செல்கிறாய் அல்லவா?  அவனிடம் அன்பின் மூலமும், பாசத்தின் மூலமும் மட்டுமே வெற்றி கிட்டும் என எடுத்துச் சொல்லி அவன் மனதை மாற்றுவதில் வெற்றி அடை !  குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டு மன்னனுக்கும் நடுவில் இருக்கும் பகை அடியோடு ஒழிந்து அங்கே ஒரு அமைதியான நட்புப்பூங்கா உருவாகட்டும்.  பாஞ்சால நாட்டு மன்னர்களும் சாமானியர்கள் அல்ல,  தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் வல்லவர்களே. “

“மாட்சிமை பொருந்திய ஆசாரியரே, இந்த விஷயத்தில் என்னால் எவ்வளவு தூரம் உதவ முடியும் எனப் புரியவில்லை.  எனினும் நான் முயல்கிறேன்.”
“நீ ஒரு க்ஷத்திரியன் கண்ணா! எப்போதும் அரசனுக்குரிய தர்மத்தையே கடைப்பிடித்து வா.  க்ஷத்திரிய தர்மத்தைக் கைவிடாதே.  உண்மையை மதித்து நட!  தர்மத்தின் வழி செல்பவருக்குத் தக்க மரியாதையைக் கொடுத்து வா.  மற்றவற்றை அந்த மாபெரும் இறைவன் கைகளில் விட்டு விடு.”
“பீஷ்மரும் இதையே தான் சொன்னார் ஆசாரியரே!”  என்றான் கண்ணன்.
“துரியோதனனின் சதித்திட்டங்களை பீஷ்மன் முறியடித்து அவனுக்கு ஒரு பாடம் புகட்டி இருக்கவேண்டும் .  மாறாக துரியோதனனுக்கு அடங்கி நடக்கும்படி யுதிஷ்டிரனுக்குச் சொல்லிக் கொடுத்தது அவன் செய்த மாபெரும் தவறு.”  வியாசர் கூறினார்.  ஒரு சிறுநகையுடன், மேலும் தொடர்ந்து, “ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென ஒரு தனிக் கடமையைக் கைக்கொண்டிருக்கிறான்.  பீஷ்மன் குரு வம்சத்தையும் ஹஸ்தினாபுரத்தையும் காப்பது அவனுடைய மாபெரும் கடமையாகக் கொண்டிருக்கிறான்.  ஆகவே அவன் வரையில் அதைக் காக்க வேண்டி அவன் செய்தது சரி.”

“ஆம், ஐயா, நான் அறிந்த வரையில் பீஷ்மரின் மனதுக்குள்ளே ஒரு பிரளயமே நடந்து கொண்டிருக்கிறது.  மிகுந்த மனப்போராட்டத்தில் அவர் தவிக்கிறார்.  ஐந்து சகோதரர்களா?  ஹஸ்தினாபுரமா?  என்ற கேள்வி எழுந்தபோது அவர் மனம் ஹஸ்தினாபுரம் பக்கமே சாய்ந்துவிட்டது.  அதே சமயம் சகோதரர்களிடம் வைத்திருக்கும் பாசத்தாலும் தவிக்கிறார்.”

“வாசுதேவா, உன் எதிரில் காணப்படும் அனைத்துப் பிரச்னைகளையும் நீ தக்க விதத்தில் சமாளிப்பாய்.  எனினும் நீ எல்லாவற்றையும் அந்த இறைவனிடம் ஒப்படைத்துவிடு.  உன் ஒருவனால் மட்டுமே இந்தப் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.  இது தான் உன் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்;  நீ கட்டப் போகும் பிரம்மாண்டமான சாம்ராஜ்யமும் இதுவே.  இதை எவராலும் வெல்ல முடியாது.”  என்றார் வியாசர்.
“தங்கள் ஆசிகளை வேண்டுகிறேன் குருதேவரே!” என்று கண்ணன் அவர் பாதம் பணிந்தான். 
“என் ஆசிகள் எப்போதும் உனக்கு உண்டு வாசுதேவா!  நீ மேற்கொள்ளப் போகும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியே அடைவாய்!”  தன்னிரு கரங்களைத் தூக்கி ஆசீர்வதித்தார் வியாசர்.  அதற்குள் வியாசரை அழைத்துச் செல்ல தெளமியர் வர, அவருடன் வேதபாடசாலைக்குச் சென்றார் வியாசர்.  மாலை நேர அநுஷ்டானங்களுக்கும், வழிபாட்டுக்கும் பின்னர் அனைவரும் பழங்கள், பால் என அருந்தி இரவு உணவை முடித்துக் கொண்டு படுத்தனர்.  இரவு முழுவதும் வியாசரின் அருகாமையை மிகவும் நன்றாக உணர்ந்தான் கண்ணன்.  காலையில் எழுந்ததும், வியாசர் தன் சீடர்களோடு நடுக்காட்டிற்குள் இருக்கும் நாகர்களின் அரசன் ஆன ஆர்யகனைச் சந்திக்கச் சென்றுவிட்டார் எனக் கண்ணன் கேள்விப் பட்டான்.  விடிவதற்கு முன்னரே அவர்கள் கிளம்பிச் சென்றிருந்தனர்.  உத்தவனைத் தேடினான் கிருஷ்ணன்.  அவன் வியாசருடன் சென்றிருப்பதாக சாத்யகி கூறினான்.
“உத்தவன், உங்கள் இருவரின் தந்தைக்கும் தாய்வழிப் பாட்டனார் ஆன ஆர்யகனைச் சந்தித்து ஆசிகள் பெற்று வரப் போயிருக்கிறான்.  நாம் நம் வழியே திரும்புகையில் உத்கோசகத்துக்கு அருகே நம்முடன் சேர்ந்து கொள்வதாய்க் கூறினான்.”  சாத்யகி மேலும் கூறினான்.

“ஏன் அவன் திடீரெனச் சென்றிருக்கிறான்?”  கண்ணன் உத்தவன் சாத்யகியிடம் உண்மையைச் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறானா என அறிய விரும்பினான்.  ஆனால் சாத்யகியோ, “ ஒருவேளை ஐந்து சகோதரர்களும் உண்மையாகவே இறந்துவிட்டனரா என அவன் அறிய விரும்பி இருக்கலாம்.  எனக்கு என்ன தெரியும் கண்ணா! ஆசாரியர் வியாசருடன் பேசியதும், உத்தவனுக்கு வியாசரும் அதே விஷயமாகத் தான் ஆர்யகனைச் சந்திக்கச் செல்கிறார் எனத் தோன்றி இருக்கலாம்.  அல்லது காட்டின் நடுவில் ஆர்யகனின் பாதுகாப்பில் ஐந்து சகோதரர்களும் இருக்கிறார்களா என வியாச முனிவர் பார்க்கப் போவதாகவும் நினைத்திருக்கலாம்.  நான் அறியேன்!”
சாத்யகியின் சாமர்த்தியமான பதிலைக் கேட்டுக் கண்ணன் சிரித்தான்.

கிருஷ்ணனும், அவனுடன் வந்தவர்களும் நதியிலேயே தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.  ஏகசக்ர தீர்த்தத்தின்  அருகே அவர்கள் வந்துவிட்டனர்.  இன்னும் ஒரே ஒரு துறை தான் காம்பில்யத்தை அடைய பாக்கி இருந்தது.  ஏக சக்ர தீர்த்தக்கரையிலேயே திருஷ்டத்யும்னன் அவர்களைச் சந்தித்தான்.  பாஞ்சால நாட்டு அரசன் தன் யுவராஜாவான திருஷ்டத்யும்னனை மட்டுமின்றி, தன் முதல் அமைச்சரையும் கண்ணனை வரவேற்க அனுப்பி இருந்தான்.  ஆசாரிய உத்போதனர் என்னும் பெயர் கொண்ட முதல் அமைச்சருடன், ஷ்வேதகேதுவும் வந்திருந்தான்.  அவன் முன்னால் சென்று கண்ணன் வருகையை அறிவிக்கவே துருபதனால் இத்தனை ஏற்பாடுகளையும் செய்ய முடிந்தது.  பாஞ்சால நாட்டுத் தலை நகருக்கு அழகாக அலங்கரிக்கப் பட்ட படகுகளில் அனைவரும் சென்றனர்.  கரையோரங்களில் அவர்கள் தங்குகையில் அங்கிருந்த குடியிருப்பின் மக்கள் அவர்களுக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர்.  திருஷ்டத்யும்னனின் வீர, தீரப்பராக்கிரமங்களையும், அவனின் திடமான உறுதியான உடலையும், உறுதியைக் காட்டும் கண்களையும் பார்த்த கிருஷ்ணன் சந்தோஷம் அடைந்தான்.  பாஞ்சால நாட்டு மன்னனின் ஆட்சியில் குடிமக்கள் எவ்விதக் குறையுமின்றி சந்தோஷமாக இருப்பதாகக் கண்ணன் கேள்விப் பட்டிருந்தான்.  அவர்கள் தங்கிச் செல்லும் இடங்களில் உள்ள மக்கள் மூலம் கண்ணன் அதைப் பூரணமாகப் புரிந்து கொண்டதோடு ஆங்காங்கே நிறைய ரிஷிகளின் ஆசிரமங்களும், குருகுலங்களும் இருப்பதையும் பார்த்தான். 

காம்பில்யத்தை அவர்கள் அடைந்த போது கோட்டை வாயிலுக்கே வந்து கண்ணனை வரவேற்றான் துருபதன்.  மக்களோ வெள்ளமாகக் கூடி இருந்தனர்.  கண்ணனின் சாகசக் கதைகள் அவ்வளவு தூரம் மக்கள் மனதைக் கவர்ந்திருந்தது.  உயரமாகவும், அதிகப்பருமன் இல்லாமலும், மாபெரும் வீரன் எனவும் தோற்றமளித்த துருபதன் முகத்தில் எப்போதும் உறைந்த தன்மையே காணப்படுமோ என எண்ணும்படி இருந்தான்.  எனினும் நெடுநாட்களாய்த் தான் காத்துக் கொண்டிருந்த தன் அருமை விருந்தினரை வரவேற்க வேண்டி அவன் முகம் கொஞ்சம் போல இளகியும் இருந்தது. 

2 comments:

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு..... பீஷ்மரின் முதல் கடமை காரணமாக தர்மத்தை அவர் போதிக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய தர்மமா?


sambasivam6geetha said...

இந்த தர்மம், அதுவும் சுயதர்மம் ஆளாளுக்கு வேறுபடும். இங்கே பீஷ்மரும் தர்மத்தையே கடைப்பிடிக்கிறார். ஹஸ்தினாபுரத்தின் நலனுக்காகவே அவர் சபதம் எடுத்திருக்கிறார். அதற்காகவே திருமணமும் செய்து கொள்ளாமல் ஹஸ்தினாபுரத்தைச் சிதறாமல் கண்காணிக்கிறார். பீஷ்மர் ஒரு அரை விநாடி பாண்டவர்கள் பக்கம் பேசி இருந்தால் அடுத்த நிமிசம் ஹஸ்தினாபுரத்தில் ரத்தக்களறியாகி இருக்கும். அதன் காரணமாகவே அவர் வாயை மூடிக் கொள்கிறார். இதன் பலாபலன்களைத் தான் அவர் அம்புப்படுக்கையில் அனுபவிக்கிறார். ரதசப்தமி பற்றிய என்னோட பதிவில் பாருங்கள், புரியும். :)))))