Saturday, October 27, 2012

சத்யவதி மனம் திறக்கிறாள்!

கண்ணா, நீ எத்தனை நல்லவனாக இருக்கிறாய்!  உண்மையில் நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.” என்றாள் சத்யவதி. கண்ணன் நகைத்தான்.  “தாயே, நான் நல்லவன் என எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்?  நான் மிக மிகப் பொல்லாதவனாக்கும்.  நான் என் தாய் மாமனைக் கொன்றிருக்கிறேன்;  அதோடு பீஷ்மகன் மகளைக் கடத்திச் சென்று திருமணமும் செய்து கொண்டிருக்கிறேன்.  அடுத்து நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உங்களால் சொல்ல முடியாது.” என்றான் கண்ணன்.  சத்யவதி ஹஸ்தினாபுரத்தின் அரசியலில் தன்னுடைய நிபந்தனைகளற்ற ஆதரவை எங்கேனும் கேட்டுப் பெற்றுக் கொண்டுவிடுவாளோ என உள்ளூறக் கண்ணனுக்கு சந்தேகம் இருந்ததால் தன்னை ஒரு பொல்லாதவனாகவும், சூழ்ச்சிக்காரனாகவும் காட்டிக் கொண்டான். 

“குழந்தாய்!  இத்தனை வருடங்கள் இந்த அரண்மனையிலே வீணே கழித்தேன் என எண்ணுகிறாயா?  இல்லை அப்பா, யார் உண்மையான, நேர்மையான பாதையில் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் காரியங்களிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறேன்.  நீ இங்கே வரும் முன்னரே உன்னைப் பற்றிய செய்திகளை நான் அறிந்திருக்கிறேன்.  மேலும் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் தவறு செய்ய மாட்டான்.  அவன் கணிப்புப் பொய்க்காது.  அவன் உன்னைப் பற்றிச் சிறிதும் மிகையாகக் கூறவில்லை.”

“ஆஹா, முனி சிரேஷ்டர் என்னைக் குறித்து என்ன கூறினார்?”

சத்யவதியின் புன்னகை பெருநகையாக விரிந்தது:”நீ தர்மத்தை நிலைநாட்டவென அவதரித்திருக்கிறாய் எனக் கூறினான்.”

“ஓ, தாயே, நீங்கள் அனைவருமே என்னிடம் மிகவும் அன்போடும், கருணையும் காட்டி வருகிறீர்கள்.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வது!  நான் அப்படி ஒன்றும் நன்மை செய்துவிடவில்லை;  என்னால் இயன்றதைச் செய்கிறேன். எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் கருணையினால் அவற்றுக்கு வெற்றி கிடைக்கிறது.  இதில் என் செயல் எதுவும் இல்லை.”  கண்ணன் மிகப் பணிவோடு பேசினான்.

“கண்ணா, எல்லாம் வல்ல அந்த மஹாதேவன் உன் மூலமாக என்ன என்ன வேலைகளை நிகழ்த்திக்கொள்ளப் போகிறானோ!  தெரியவில்லை.  வாசுதேவா, நான் உன்னை கிருஷ்ணா என அழைக்கட்டுமா?  அப்படி அழைத்தால் ஒரு நெருக்கம் வரும் என நினைக்கிறேன்.  மேலும் இந்தப்பெயர் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் தெரியுமா?  என் அருமை மகனுக்கும் இதே பெயர் அல்லவா? “சத்யவதியின் முகம் பிள்ளையைக் குறித்த பெருமையால் விகசித்து மலர்ந்தது. அவள் கண்ணனிடம், “கண்ணா, நான் உன்னிடம் ஒன்று கேட்கப்போகிறேன்.  நீ எனக்கு அதைச் செய்வேன் எனத் தட்டாமல் வாக்குறுதி கொடுப்பாயா? வெளிப்படையாய்ச் சொல்லி விடு.  உன்னால் முடியுமா, முடியாதா?”

“உங்களுக்கு என் வெளிப்படையான பேச்சிலும், நேர்மையிலும் சந்தேகமா அம்மா?”கண்ணன் மனதில் ஏதோ ஒரு தாக்கம்.  அந்தக் கேள்வியின் உள்ளே அவன் உணர்ந்த ஆத்மார்த்தமான நோக்கத்தை பூரணமாகப் புரிந்து கொண்டான்.  சத்யவதி சிரித்தாள்.  கண்ணனை ஒரு சின்னக் குழந்தையாகவே பாவிக்கிறாள் என்பதை அந்தச் சிரிப்பு எடுத்துச் சொன்னது.  “கண்ணா, என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே?  என் பக்கம், எனது அணியில் நீ இருந்து எனக்குத் துணை செய்வாயா?”

“மாட்சிமை பொருந்திய மஹாராணி அவர்களே!  நான் உங்கள் பக்கமே இருப்பேன். உங்களைப் போன்ற வலிமை பொருந்திய மஹாராணியை இந்த ஆர்யவர்த்தம் இதற்கு முன்னர் கண்டதில்லை.  அதோடு அதிக அதிகாரமும் படைத்தவர் தாங்கள்.  தங்களை விட்டு விட்டு வேறு பக்கம் நிற்க முடியுமா? அதோடு பீஷ்மர் வேறு உங்கள் அணியில் இருக்கையில் உங்களைத் தவிர்க்க முடியுமா?  நீங்கள் தவிர்க்க முடியாதவர் அம்மா!”

“ஆனால் விதியை வெல்ல முடியுமா?  அதை எதிர்த்து நம்மால் நிற்க முடியுமா?” மெல்லிய குரலில் இதைச் சொல்கையிலேயே அங்கே கண்ணனையும் விதுரரையும் தவிர வேறு யாரும் இல்லையே என உறுதி செய்து கொண்டாள் சத்யவதி.

“நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன் தாயே!” கண்ணன் உறுதிபடக் கூறினான்.  மெல்ல விதுரரை ஒரு நோட்டம் விட்டுக் கொண்டாள் சத்யவதி.  அதன் மூலம் விதுரரிடம் இருந்து ஏதோ செய்தியை வாங்கிக் கொண்டாளோ என்னும்படி இருந்தது.  பின்னர் தன் குரலை மேலும் தழைத்துக் கொண்டு, ரகசியம் பேசும் குரலில்,, “கண்ணா, நீ பாண்டவர்கள் பக்கம் இருப்பாய் அல்லவா?  அவர்களுக்கு உதவி செய்வாய் அல்லவா?”

“பாண்டவர்கள் பக்கமா? அவர்களுக்கு உதவியா?” கண்ணன் பரிபூரணமாகத் திகைத்துப் போயிருந்தான் என்பது அவன் குரலிலும், முகத்திலும் வெளிப்படையாகவே தெரிந்தது.  “எனில் அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? தாயே,  இது எப்படி முடியும்?  அவர்களின் சவங்கள் எரியூட்டப்பட்டிருக்கின்றன.  அனைத்து கிரியைகளும் சம்பிரதாயப்படி நடந்திருக்கின்றன.  தாயே, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?”




2 comments:

ஸ்ரீராம். said...

படிச்சுட்டேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் தெரிந்து கொண்ட கண்ணனுக்கு மனதில் எத்தனை கேள்விகள்...

தொடர்கிறேன்... நன்றி...