Sunday, December 8, 2013

வியாசரின் கரங்களில் கடோத்கஜன்!

“ஆனால் அது ஒன்று தான் நமக்கு ஒரே நம்பிக்கை, இல்லையா?” என்றான் அர்ஜுனன்.  தனது தொடர்ந்த உடற்பயிற்சியால் உடலை வலுவாகவும் சுறுசுறுப்புள்ளதாகவும் ஆக்கி வைத்திருந்த அர்ஜுனனுக்கு உடல் அவன் சொற்படி கேட்டது.  மரத்தின் மேலே ஏறும் முன்னர் அவன் பீமனிடம், “நீ மேலே வந்ததுமே கடோத்கஜனை அவன் அம்மாவின் அருகில் இருந்து மெல்லத் தூக்கிக் கொள்.  அப்படி ஒருவேளை, உன் மனைவி ஹிடும்பி எழுந்து கொண்டாளானால், அவளிடம், நீ இல்லாமல் எனக்குத் தூக்கமே வரவில்லை;  உன்னைப் பிரிந்து இருக்க முடியவில்லை; நான் சந்தோஷமாக இல்லை என்று சொல்லிவிடு. அவளுடன் இரவைக் கழித்துவிடு. ஆனால் அதற்கு முன்னர் குழந்தையை எடுத்து என்னிடம் கொடுத்துவிடு.   நான் வெளியே காத்திருப்பேன்.  ஏதானும் ஒரு காரணத்தைக் காட்டி, சாக்குச் சொல்லி, வெளியே வந்து குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு.  நீ பின்னர் இரவு முழுதும் உன் மனைவியோடு கழித்துக் கொள்.” என்றான். “ஆஹா, குழந்தைகளைத் திருடுவதில் நீ இவ்வளவு கெட்டிக்காரன் என இன்று வரை நான் நினைக்கக் கூட இல்லை அர்ஜுனா!” என்ற பீமன்   அர்ஜுனனின் குறும்புப் பேச்சில் கவரப்பட்டவனாக, அவனைக் குறித்துப் பெருமிதம் கொண்டான்.   தனக்கு வந்த பெரும் சிரிப்பையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

மூச்சை அடக்கிக் கொண்டு அர்ஜுனன் மெல்ல மெதுவாக, நிதானமாக மரத்தின் மேல் ஏறினான்.  மேலே ஏறியதுமே ஹிடும்பியின் மூச்சு சப்தம் வரும் திசையை ஓரளவு ஊகித்து உணர்ந்து கொண்டான் அர்ஜுனன்.  அவள் எங்கே படுத்திருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொணடான்.  அங்கிருந்த நூலேணியை அவிழ்த்து, கீழே காத்திருக்கும் பீமனுக்காக அதைத் தொங்க விட்டான்.  பீமனும் அதைப் பிடித்துக் கொண்டு கீழ்ப்பாகம் நன்றாக நிற்கும் வண்ணம் மரத்தின் வேரில் அழுத்தமாய்க் கட்டிவிட்டு, அர்ஜுனனைப் போல் முடியாவிட்டாலும் கூடியவரை மெதுவாக மரத்தின் மேல் சப்தமின்றி ஏறினான். மெல்லத்தவழ்ந்து கதவருகே சென்று அந்தச் சின்னஞ்சிறு கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன், ஹிடும்பி படுத்திருக்கும் இடத்துக்குச் சென்றான்.  நரித்தோல்களைப் பக்குவப் படுத்தித் தயாரிக்கப்பட்ட படுக்கையில் படுத்திருந்தாள் ஹிடும்பி.  கடோத்கஜனைத் தூக்கி எடுத்து வெளியே காத்திருக்கும் அர்ஜுனனிடம் கொடுத்தான்.  பின்னர் சத்தமின்றிச் சிரித்த வண்ணம் மனைவிக்கு அருகே படுக்கையில் படுத்தான்.  அவன் வருகையை உணர்ந்த ஹிடும்பி தன் கண்களைத் திறவாமலேயே அவனை இறுக அணைத்த வண்ணம், “ஆஹா, நீங்கள் வந்துவிட்டீர்களா?” என்றாள்.  மிக மெதுவாக அவன் காதுகளில் மட்டுமே கேட்கும்படி பேசினாள் ஹிடும்பி.

“ஆம், ஆம், உன்னை விட்டு விட்டு என்னால் அங்கே தூங்க முடியவில்லை!” என்று சொல்லிய பீமனும் அவளை அணைத்துக் கொண்டான்.  “ஆஹா, எப்படிப்பட்ட அருமையான கணவன் நீங்கள்!” என்று சொல்லிய வண்ணம் அவனை இறுக அணைத்த ஹிடும்பி தன்னை மறந்தாள்.  “நீயும் அருமையான மனைவி தான்,” என்ற வண்ணம் பீமனும் அவளை அணைத்துக் கொண்டான்.  சற்று நேரம் குழந்தையைக் கூட மறந்து கணவனின் அன்பான அரவணைப்பில் தன்னை மறந்து ஆழ்ந்துவிட்டாள் ஹிடும்பி.   அங்கே அர்ஜுனன் அந்தக் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டு நடந்தான்.  ராக்ஷசர்களைக் கண்டாலே வெறுத்த அர்ஜுனனுக்கு அந்தக் குழந்தையிடம் இனம் தெரியாத பாசம் ஏற்பட்டிருந்தது.  தலையில் ஒரு மயிர் கூட இல்லாமல் முழு வழுக்கையுடன் காணப்பட்ட அந்தக் குழந்தையை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.  சாதாரணக் குழந்தையாக இல்லாமல் ராக்ஷசக் குழந்தையாக இருந்தாலும் அர்ஜுனன் அந்தக் குழந்தையை மனமார விரும்பினான்.  அந்தக் குழந்தையும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தது.  அர்ஜுனன் தூக்கிச் செல்வதால் அதன் தூக்கமும் கலைவதாகத் தெரியவில்லை.  ஆனால், இது என்ன! குழந்தை கண்களைத் திறந்து ஏதோ சப்தங்கள் செய்கிறதே.  அர்ஜுனன் ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை.  அவனுக்குச் சிறு வயதில் இருந்தே நாடகங்களில் பெண்ணாக நடித்துப் பழக்கம்.  அதற்காகத் தன் குரலைக் கூடப் பெண் குரல் போலவும் பக்குவப் படுத்தி இருந்தான்.  ஆகவே இப்போதும் அப்படியே பெண்குரலில்  குழந்தையைச் சமாதானம் செய்ய அதுவும் உறங்கிவிட்டது.

அதற்குள்ளாக வியாசர் தூங்கிக் கொண்டிருந்த இடத்தை நோக்கி ராக்ஷசக் கூட்டம் செல்வதை அர்ஜுனன் உணர்ந்து கொண்டான்.  அவர்கள் அங்கே சென்று அடைவதற்கு முன்னர் தான் அங்கே செல்ல  விரும்பினான் அவன்.   அவசரமாகச் சென்றதில் தடுமாறிக் கீழேயும் விழுந்தான்.  ஆனாலும் குழந்தையைக் கீழே போடவில்லை.  பத்திரமாகப் பாதுகாத்தான்.   ஆனால் குழந்தை விழித்து விட்டான்.  என்ன அருமையான , அற்புதமான குழந்தை. கீழே விழத் தெரிந்தும் அழவே இல்லை.  பயப்படவே இல்லை.  அர்ஜுனனைப் பார்த்துச் சிரித்தான் அந்தக் குழந்தை. சித்தப்பன் தனக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாக அதன் நினைப்புப் போலும்.  குழந்தை இந்த சாகசங்களை எல்லாம் உள்ளூர அனுபவிக்கிறதோ என்ற எண்ணம் அர்ஜுனன் மனதில் எழுந்தது.   ஆசாரியர் படுத்திருந்த இடத்துக்கு அருகே ஒருவழியாய் அர்ஜுனன் வந்து சேர்ந்துவிட்டான்.


காட்டுப்பாதையில் முட்களையும், புதர்களையும் விலக்கிக் கொண்டு மரத்தில் இருந்து குதித்த ராக்ஷசர்கள், பெரிய பெரிய அடிகள் வைத்து நடந்து வரும் சப்தம் நன்றாகவே கேட்டது இப்போது.  ஆசாரியரோ, யாக குண்டம் எரிந்து கொண்டிருக்க அதன் எதிரே அமைதியாக அமர்ந்திருந்தார். அவரின் ஒரு பக்கம் குந்தியும், யுதிஷ்டிரனும் இருக்க, மறுபக்கம் நகுல, சஹாதேவர்கள் நின்றிருந்தனர்.  அவருக்குப் பின்னால் சற்று தூரத்தில் ஜைமினி ரிஷியும், மற்றச் சீடர்களும் காணப்பட்டனர். வரவிருக்கும் ஆபத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.  அனைவருமே வெளிப்பார்வைக்கு அமைதியாகத் தோன்றினாலும் உள்ளூர அச்சத்துடன் இருப்பதும் தெரிந்தது. அமைதியாக இருந்தவர் வியாசர் ஒருவரே.  அவர் சுயக் கட்டுப்பாட்டின் மூலமும் இம்மாதிரியான பல நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கிற அனுபவத்தினாலும் இதை எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருந்தார்.  ஆனால் அவர் அமைதியும் ,சாந்தமும் மற்றவர்களைப் போய்ச் சேரவில்லை.  என்றாலும் ஒருவரும் பேசவில்லை.

ஓடோடிச் சென்ற அர்ஜுனன் நிலைமையை ஒருவாறு உணர்ந்தவனாய் யாக குண்டத்துக்கு எதிரே அமர்ந்திருந்த வியாசரிடம் கடோத்கஜனைக் கொடுத்தான்.  அன்போடும், கருணையோடும் குழந்தையை வாங்கிக் கொண்ட வியாசர், “ஜைமினி, அக்னி எரியக் கூடிய பொருட்களைக் கொண்டு வா.  அக்னிக்குக் கொடுக்கக் கூடிய ஆஹுதியையும் ஏற்பாடு செய்.  நாம் அவன் பாதுகாப்பை நாடுவோம்.” என்றார்.  ஜைமினி ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் நெருப்பு உண்டாக்கி அக்னி குண்டத்தில் போட்டுவிட்டுக் கைநிறைய தானியங்களையும் எடுத்து ஆஹுதியாக அக்னி குண்டத்தில் அளித்தார்.  தீ கொழுந்து விட்டு எரிந்தது.  அந்த இடமே நல்ல வெளிச்சமாக ஆகியது.  கடோத்கஜன் நன்கு கண்களை விழித்து வியாசரையே பார்த்தான்.  வியாசர் குழந்தையைக்கொஞ்சும் விதத்தில், சப்தம் கொடுக்கவே கடோத்கஜனும் அதற்கு ஏற்பச் சிரித்துக் கொண்டே நெளிந்து கொடுத்தான்.  வியாசர் அவன் வாயில் தேனை வைக்க, அதைச் சுவைத்து உண்டான் கடோத்கஜன்.  அவனுக்கு மிகவும் பிடித்தது என்பது அவன் சப்புக் கொட்டிச் சாப்பிடுவதில் தெரிந்தது.  ஒரு கையால் வியாசரின் நீண்ட வெண்தாடியைப் பிடித்து இழுத்த வண்ணம், அவர் கொடுத்த தேனை அருந்திய கடோத்கஜன் விரைவில் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மிருகங்களின் எலும்புகளால் செய்யப்பட்ட கூரான ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், கொலை செய்யும் எண்ணத்துடன் அங்கே வந்து சுற்றி வளைத்துக் கொண்ட ராக்ஷசக் கூட்டம் யாக குண்டத்தின் வெளிச்சம் படும்படியாக வந்து நின்றது.  நடப்பதைப் பார்த்து செய்வதறியாமல் திகைத்தது.  அவர்களுடைய மூளையில், ஆசாரியரும், பீமனின் சகோதரர்களும் அவன் தாயும், மற்றச் சீடர்கள்,ஜைமினி அனைவருமே இந்த நடு இரவில் நன்கு உறங்குவார்கள்.  அப்போது சப்தமில்லாமல் வந்து ஆயுதங்களால் தாக்கி அனைவரின் மண்டையையும் உடைத்துவிட வேண்டும் என்பதே பதிந்திருந்தது.  அனைவர் மண்டையையும் உடைக்கப் போகிறோம் என்ற எண்ணத்தோடு வந்தவர்கள் இங்கே ஒரு ஆச்சரியத்தை அன்றோ பார்க்க நேர்ந்தது!  ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  இந்த ஆசாரியன் என்னும் கிழவன் தூங்கவே இல்லை.  யாக குண்டத்துக்கு எதிரே நன்றாக விழித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான்.  அவன் கரங்களில் நம் வாரிசு, விரோசனனின் மறுபிறவியான, கடோத்கஜன்.   இப்போது என்ன செய்யலாம்?  ஒருவரை பார்த்துக் கொண்டு முட்டாள் தனமாக விழித்தனர்.  அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு நின்றனர்.

ஆசாரியர் அவர்கள் எண்ணத்தையே அறியாதவர் போல அவர்களைக் கனிவுடன் பார்த்தார்.  “என் குழந்தைகளே, ஏன் அங்கேயே நின்றுவிட்டீர்கள்?  இங்கே வாருங்கள்.  என் அருகே வந்து அமருங்கள்.  ஆனால் சப்தம் செய்யாதீர்கள்.  குழந்தை கடோத்கஜன் தூங்குகிறன்.  அவன் விழிக்கும்படி சப்தம் செய்யாதீர்கள்.” என்றார்.  தடுமாறித் திகைத்தனர் ராக்ஷசர்கள். கடோத்கஜன் அங்கே எப்படி வந்தான் என்பது அவர்களுக்குப் புரியாததொரு புதிராக இருந்தது.  மாலையில் ஹிடும்பியுடன் ரகசியமாகப் பேசி இந்தத் திட்டத்தைத் தீர்மானித்துக் கொண்டு அனைவரும் பிரிந்த பின்னர் கடோத்கஜனைத் தூக்கிக் கொண்டு ஹிடும்பி மரத்தின் மேல் ஏறித் தன் குடிசைக்குள் சென்றதை அவர்கள் அனைவருமே பார்த்திருந்தனர்.  இப்போது எப்படி இங்கே?  ஒவ்வொருவராக ராக்ஷசர்கள் வியாசரின் அருகே வந்து அந்த யாக குண்டத்தைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.   தன் விரலை உதட்டின் மேல் வைத்து, “சப்தம் வேண்டாம்!” என்று எச்சரித்துக் கொண்டிருந்தார் வியாசர். வியாசர் எச்சரிக்கவில்லை என்றால் கூட அந்த ராக்ஷசர்கள் தங்கள் மன்னர் குல வாரிசு உறங்கும்போது சப்தம் போட்டிருக்க மாட்டார்கள்.  வியாசரின் மடியில் சொகுசாய்ப் படுத்து  உறங்கும் கடோத்கஜனைப் பார்த்த வண்ணம் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

5 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாய் இருக்கிறது. ஹிடும்பிக்கும் தெரிந்தேதான் இது நடக்கிறதா?

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடர்கிறேன் அம்மா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வியாசர் அவன் வாயில் தேனை வைக்க, அதைச் சுவைத்து உண்டான் கடோத்கஜன். அவனுக்கு மிகவும் பிடித்தது என்பது அவன் சப்புக் கொட்டிச் சாப்பிடுவதில் தெரிந்தது. ஒரு கையால் வியாசரின் நீண்ட வெண்தாடியைப் பிடித்து இழுத்த வண்ணம், அவர் கொடுத்த தேனை அருந்திய கடோத்கஜன் விரைவில் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான். //

அழகான காட்சி.

கடைசியில் யார் மண்டையும் இன்னும் உடையக்காணோமே ;)

இராஜராஜேஸ்வரி said...

அற்புதமான குழந்தை. கீழே விழத் தெரிந்தும் அழவே இல்லை. பயப்படவே இல்லை. அர்ஜுனனைப் பார்த்துச் சிரித்தான் அந்தக் குழந்தை. சித்தப்பன் தனக்கு ஏதோ விளையாட்டுக் காட்டுவதாக அதன் நினைப்புப் போலும். குழந்தை இந்த சாகசங்களை எல்லாம் உள்ளூர அனுபவிக்கிறதோ என்ற எண்ணம் அர்ஜுனன் மனதில் எழுந்தது.

ரசிக்கவைத்த அருமையான காட்சி..!

இன்னம்பூரான் said...

அவனுக்குச் சிறு வயதில் இருந்தே நாடகங்களில் பெண்ணாக நடித்துப் பழக்கம். அதற்காகத் தன் குரலைக் கூடப் பெண் குரல் போலவும் பக்குவப் படுத்தி இருந்தான். ஆகவே இப்போதும் அப்படியே பெண்குரலில் குழந்தையைச் சமாதானம் செய்ய அதுவும் உறங்கிவிட்டது.

~ இப்போது தான் வாழ்வியல் மர்மங்கள் புரிகின்றன.