Wednesday, November 20, 2013

உத்தவன் பணிவும், துரியோதனன் கொதிப்பும்!

உத்தவன் கிருஷ்ணனிடமிருந்து கொண்டு வந்த செய்தியால் மனம் மாறிய ராஜசபை துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்ல அனுமதி கொடுத்துவிட்டது.  சரியான நேரத்துக்குக் கிருஷ்ணனின் அந்தச் செய்தி வந்தது என துரியோதனன் நினைத்தான்.  அழகும், திடகாத்திரமும் நிரம்பிக் காணப்பட்ட உத்தவன், சிரித்த முகத்தோடும் காணப்பட்டதோடு அல்லாமல், எதையும் எளிதாய்க் கடந்து செல்பவனாகவும் இருந்தான்.  தன் பணிவும், அன்பும் எளிதில் அனைவருக்கும் புலப்படும் வண்ணம் அந்த ராஜசபைக்குள் நுழைந்ததுமே பாட்டனார் பீஷ்மருக்கும், அரசனான திருதராஷ்டிரனுக்கும் தன் பணிவான நமஸ்காரங்களை அளித்தான்.  மற்றவர்களையும் பார்த்து கை கூப்பி வணங்கியவன், ஆசாரியர் துரோணருக்குச் சிறப்பாகத் தனி வணக்கம் செலுத்தினான்.  இதன் மூலம் துரோணரின் ஆசாரிய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததோடு அல்லாமல், பிராமணர்களிலேயே தனிப்பட்டவராகவும், தன் குருவான பரசுராமரின் சிறப்பைக் குறைக்காமல் தன் மாணாக்கர்களையும் அவ்விதமே பழக்குபவரும் ஆன துரோணருக்கு இங்கே அளித்துள்ள படைத்தலைவர் என்ற பதவிக்கு உண்டான மரியாதையையும் அதன் மூலம் காட்டினான்.

“உத்தவா, தேவபாகனின் மகனே, ஹஸ்தினாபுரத்துக்கு மீண்டும் வருகை புரிந்தமைக்கு நன்றி.  உனக்கு நல்வரவு.   உன்னைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.  இப்படி அமருவாய்! உன் தேசத்து மக்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனரா?” என்று பாட்டனார் பீஷ்மர் கேட்டார்.

“மரியாதைக்குரிய பிதாமகரே! நான் துவாரகையிலிருந்து வரவில்லை.  சில மாதங்களாக நான் என் மாமனார், நாகர்களின் தலைவரோடு வசித்து வருகிறேன்.” என்றான் உத்தவன்.  “ஆஹா, அப்படி எனில் நீ நாகர்களின் இளவரசிகளை மணந்திருப்பது உண்மையா?” என்றான் திருதராஷ்டிரன்.  “ஆம் ஐயா, “ என்றான் உத்தவன்.

“மாட்சிமை பொருந்திய நாகர்களின் அரசன் கார்க்கோடகனும், அவன் மக்களும் நலமா? “பீஷ்மர்.

“ஆம், பாட்டனாரே, அனைவரும் நலம்.” உத்தவன்.

“நீ எங்களுக்காக ஒரு தூதுச் செய்தி எடுத்து வந்திருப்பதாக விதுரன் கூறினான்.  வாசுதேவக் கிருஷ்ணனின் செய்தியை நீ கொண்டு வந்திருக்கிறாயா?” பீஷ்மர் கேட்டார். “ஆம், பிதாமகரே!” என்ற உத்தவன், “அதோடு இல்லாமல் அரசன் செகிதனாவிடமிருந்தும் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.  அடுத்து என் மாமனார் நாகர்களின் அரசனிடமிருந்தும் ஒரு செய்தி காத்திருக்கிறது.  அனைவருமே மாட்சிமை பொருந்திய பாட்டனாருக்கும், மாட்சிமை பொருந்திய ஹஸ்தினாபுரத்து மன்னனுக்கும் தங்கள் பணிவான வணக்கங்களைத் தெரிவிக்கச் சொன்னார்கள்.”

“என்ன செய்திகளை நீ கொண்டு வந்திருக்கிறாய், குழந்தாய்?” பீஷ்மர் கேட்டார்.


“யாதவ குலத் தோன்றல், அவர்களில் சிறந்தவன் ஆன வாசுதேவ கிருஷ்ணன், அனுப்பிய செய்தி இது!” என்ற உத்தவனின் குரலில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து இழுக்கும் கவர்ச்சி இருந்தது.  அவன் சொல்வதை அப்படியே நம்பும் வண்ணம் அவன் குரலில் உறுதியும், நம்பிக்கையும் தெரியப் பேசினான்.  “பாஞ்சால இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வாசுதேவ கிருஷ்ணனும், மூத்தவர் ஆன பலராமரும் காம்பில்யத்துக்கு வருகை புரிகின்றனர்.  அவர்களோடு பல யாதவ அதிரதர்களும் வருகின்றனர்.  வடக்கே காம்பில்யம் செல்லும் வழியில் அவர்கள் சில நாட்களைப் புஷ்கரத்தில் செலவிட எண்ணுகின்றனர்.”

“அவர்கள் அனைவருக்கும் நல்வரவு.  எல்லாரும் வரட்டும்!” என்றான் திருதராஷ்டிரன்.

“ஆஹா, நீங்கள் இவ்விதம் நினைப்பீர்கள், கூறுவீர்கள் என்று வாசுதேவனுக்கு நிச்சயமாய்த் தெரியும் மன்னா!”  சற்றே நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தவன், “ ஆனால் தவறான ஒரு காரியத்தைத் திருத்தும்படி இப்போது அவன் வேண்டுகோள் விடுக்கிறான்.  தங்களையும், பிதாமகர் பீஷ்மரையும் வணங்கி வாசுதேவ கிருஷ்ணன் வேண்டுவது எல்லாம்  இதுவே.  போன வருடம் அரசன் செகிதனாவைக் குரு வம்சத்து வீரர்கள் புஷ்கரத்திலிருந்து விரட்டி விட்டனர்.  அந்தப் போர் நியாயமாக நடக்கவில்லை; எரிச்சலைத் தூண்டும் விதத்தில் முன்னறிவிப்பே இல்லாமல் நடந்து முடிந்தது.  வேறு வழியில்லாமல் செகிதனாவும் அவன் மக்களும் யமுனையைக் கடக்க நேரிட்டது.  யமுனையைக் கடந்து நாக நாட்டிற்குள் நுழைந்து நாகர்களிடம் அடைக்கலம் கேட்கவும் நேர்ந்தது.  கிருஷ்ண வாசுதேவன் இந்த வேண்டுகோளைத் தான் முன் வைக்கிறான்: “ செகிதனாவுக்கு அவன் இழந்த நாட்டை, அவன் பிரதேசத்தைத் திருப்பிக் கொடுங்கள்.  யாதவர்களாகிய நாங்கள் அங்கே செல்கையில் அவனுக்கு எங்களை உபசரிக்கவும் எங்கள் படை வீரர்களுக்கு உணவளிக்கவும் முடியும்.  "


“என்ன?” என்று ஆக்ரோஷமாய்க் கேட்ட துரியோதனனின் புருவங்கள் கோபத்தில் நெரிந்தன.  “புஷ்கரம் எங்களால் ஜெயிக்கப்பட்டது.  எங்கள் வீரர்களால் வெல்லப்பட்டது.  எங்கள் படைபலத்தால் ஜெயித்த அந்தப் பிரதேசம் குரு வம்சத்தினருக்கே சொந்தமானது.  அதை நாங்கள் பெருமையுடன் எங்களிடமே வைத்துக் கொள்ளப் போகிறோம். குருவம்சத்தினருக்குப் பெருமை அளிக்கும் விஷயம் இது!” என்றான். இதைச் சொல்கையில் கோபத்தில் தன் இருக்கையிலேயே அவன் குதித்தான்.  எழுந்து ஆவேசமாகப் பேசினான்.  கர்ணனின் கைகள் தன்னிச்சையாக அவன் உடைவாளுக்குப் போக அஸ்வத்தாமோ உத்தவனைத் தின்று விடுபவன் போலப் பார்த்து முறைத்தான்.


துரியோதனனைப் பார்த்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் சிரித்த உத்தவன், மற்றபடி அவன் சொன்ன விஷயங்களால் பாதிப்பே அடையாமல் மேலே பேசினான்.  இப்போது அவன் துரியோதனனைப் பார்த்தே பேசினான்.  “மாட்சிமை பொருந்திய யுவராஜா! கிருஷ்ணனால் அனுப்பப் பட்ட தூதுச் செய்தியை முழுதும் நான் முடிக்கும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.  பாட்டனாருக்கும், மன்னர் திருதராஷ்டிரருக்கும் செய்தியை நான் முழுதும் தெரிவிக்கிறேன்.  அதன் பின்னர் இதன் மேல் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது அவர்கள் விருப்பம்!”  என்றான்.

“மஹாதேவா, என் ஆண்டவா, இந்த வாசுதேவன் என்ன என்னமோ அதிசயங்களைச் செய்து வருகிறானே!” தனக்குள்ளாக ஆச்சரியப் பட்டுக் கொண்டார் துரோணர்.  அவன் மேல் ஒரு அன்பான நெகிழ்வான நட்பு உணர்வும் அவர் மனதில் தோன்றியது.  இங்கே ஒரு நாடகம் நடக்கிறது. விசித்திரமான நாடகம்.  அதை எங்கிருந்தோ சூத்திரதாரியாக இயக்குபவன் கிருஷ்ண வாசுதேவன்.  இப்படிப்பட்ட அதிசயங்களை நடத்துபவன் நாடகத்தின் முடிவையும் தனக்கேற்ற மாதிரி முடியச் செய்வான்.

“இந்தச் செய்திக்கு, செகிதனாவும் ஒரு விஷயத்தைத் தன் பங்கிற்குச் சேர்த்திருக்கிறார்.” என்றான் உத்தவன்.  “என்ன அது?” என்று பீஷ்மர் கேட்டார்.  “செகிதனாவின் செய்தி இது: பாட்டனார் பீஷ்மருக்கு என் வணக்கங்கள்.  நீங்கள் தர்மத்தின் மொத்த வடிவம்.  புஷ்கரத்தின் பாதுகாவலனாகவும், மன்னனாகவும் நான் குரு வம்சத்தினரோடு நட்பாகவே இருந்து வந்தேன்.  எந்தவிதமான தூண்டுதலோ, முன்னறிவிப்போ இல்லாமல் திடீரென என் நாடு என்னிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  என் நாட்டிற்குள் அந்நியர்களான குரு வம்சத்து வீரர்கள் நுழைந்ததால், நானும், என் நாட்டு மக்களும், நாகர்களின் அரசனிடம் தஞ்சம் புக நேர்ந்தது. உங்களுக்குப் புரிந்திருக்கும் எது நல்லது என.  பிதாமகரே, நேர்மையின் வடிவம் நீர்!  உங்கள் நீதியும் பேசப்படும் ஒன்று.  அத்தகைய நீதிமுறையைப் பின்பற்றி என் நாட்டை என்னிடமும் , என் மக்களிடமும் மீண்டும் ஒப்படைக்க வேண்டுகிறேன்.  ஒருவேளை கிருஷ்ண வாசுதேவனும், மூத்தவர் பலராமரும் புஷ்கரம் வந்து தங்க விரும்பினால் நான் அவர்களுக்கு அருகே இருந்து நேரடியாக நானே உபசரிக்கவும் விரும்புகிறேன்.”

உத்தவனின் இத்தகைய நாகரிகமான பேச்சுக்களால் துரியோதனன் எரிச்சல் அடைந்தான்.  கோபத்தில் அவன் முகம் சிவந்தது.  “பாட்டா, இது ரொம்பவே அதிகம்!  இது சரியல்ல!” எனத் தன் மறுப்பைக் கடுமையாகத் தெரிவித்தான். துரியோதனனைச் சற்றும் கவனிக்காத பீஷ்மர் அவன் வார்த்தைகளை அலட்சியம் செய்துவிட்டு உத்தவன் பக்கம் திரும்பி, “உத்தவா, நாக மன்னன் கார்க்கோடகனின் செய்தி என்ன?” என்று கேட்டார்.


6 comments:

இராஜராஜேஸ்வரி said...

உத்தவன் பணிவு சிறப்பு..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடுத்தடுத்து பல செய்திகள். நல்லாப்போகுது கதை.

தொடரட்டும்.

ஸ்ரீராம். said...

ஒரு தூதுவன் எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசும் உத்தவன்!

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, நன்றி

sambasivam6geetha said...

நன்றி வைகோ சார்.

sambasivam6geetha said...

நன்றி ஶ்ரீராம்.