Tuesday, November 12, 2013

துரோணரின் திட்டமும், பானுமதியின் தயக்கமும்!

பரிபூரணத் திருப்தியுடன் துரோணர் யுத்தசாலைக்குத் திரும்பினார்.  தன்னைக் குறித்தும் தன் செயல்கள் குறித்தும் அவருக்கு மன நிறைவு ஏற்பட்டிருந்தது.  குரு வம்சத்தினருக்கு மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில், குழப்பமான பின்னணியில் துரோணர் ஒரு மகத்தான அதிலும் இன்றியமையாத ஒரு பாதுகாவலராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். புஷ்கரம் செல்ல வேண்டும் என அவர் எடுத்து இருந்த முடிவு சரியானதே!  எல்லாம் வேகமாக மாறி வருகிறது.  பரதனின் குலத் தோன்றல்களான இந்தக் குரு வம்சத்தினரின் மாட்சிமைக்கும் பெருமைக்கும் துரியோதனனால் எந்த கெளரவத்தையும் கொண்டு வர இயலாது.  அவ்வளவு ஏன்?  ஏற்கெனவே இருந்துவரும் சிறிதளவு கெளரவத்தையும் பாதுகாக்கக் கூட அவனால் இயலாது.  கிருஷ்ண வாசுதேவன் என்ற புதியதொரு நக்ஷத்திரம் சூரியனை விட அதிகமாகப் பிரகாசித்த வண்ணம் அடி வானிலிருந்து எழும்புவதைக் காண அவன் கண்களால் இயலவில்லை. ஒரு சாதாரண மன்னனாகக் கூட இல்லாத, சாதாரண மனிதன் ஆன அந்தக் கிருஷ்ண வாசுதேவனின் சக்தி சக்கரவர்த்திகளின் அதிகாரங்களை விடவும் பலம் பொருந்தி விளங்குவதையும் அவன் அறியவில்லை.  துரோணர் அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டதற்குப் பெருமிதம் கொண்டதோடு தனக்குத் தானே சிரித்தும் கொண்டார்.

யுத்தசாலைக்கு வந்தவருக்கு அங்கே கண்ணீர் மல்கிய கண்களோடும், கலங்கிய முகத்தோடும், அழுது அழுது வீங்கிய முகத்தோடும் சற்றும் பொறுமையின்றி அவருக்காகக் காத்திருந்த துரியோதனனின் மனைவி பானுமதி தான் கண்ணில் பட்டாள்.  அவளின் இளமையும், அழகும் அவளுடைய இந்த அதீதமான துக்கத்தினால் மேகம் மறைத்தது போல் மறைந்தே காணப்பட்டது.  ஒளி  குன்றிக் காணப்பட்டாள்.  துரோணரைக் கண்டதுமே அவர் காலடிகளில் வீழ்ந்தாள் பானுமதி.  “என்ன நடந்தது ஆசாரியரே?  என் விதி முடிவடைந்து விட்டதா?” என பரிதாபமாகக் கேட்டாள்.  துரோணரின் மனைவி, கிருபாதேவி, சற்றே பருமனாகக் காணப்பட்டாள்.  ஒரு தாயின் வாத்ஸல்யத்துடன், பானுமதியின் அருகே அமர்ந்து அவளை அணைத்து ஆறுதல் கொடுத்தாள்.  அவள் உச்சந்தலை மேல் ஆசீர்வதிக்கும் பாவனையில் கைகளை வைத்த துரோணர், “என் ஆசிகள் குழந்தாய்.  உனக்கு எதுவும் நேராது.  கவலை வேண்டாம்.”  என்றார்.

“ஆசாரியரே, எனில் ஆர்யபுத்திரர் சுயம்வரத்துக்குச் செல்லும் தம் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாரா?” பானுமதி கேட்டாள்.  அவள் உதடுகள் துடித்தன.  “இல்லை, அம்மா, இல்லை.  துரியோதனன் சுயம்வரத்துக்குச் செல்லப் போகிறான்.  ஆனால் நீ கவலைப் படாதே.  அவனால் திரெளபதியை ஜெயித்து மணம் முடிக்க இயலாது.  விசித்திரமாக, இன்னும் சொல்லப் போனால் ஆச்சரியவசமாக, கிருஷ்ண வாசுதேவன் நம் உதவிக்கு வந்து விட்டான்.”  “வாசுதேவ கிருஷ்ணனா?  இப்போது இங்கேயா இருக்கிறான்?” பானுமதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.  அவள் முகம் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.  “நான் அவனைப் பார்க்க வேண்டும்;  உடனே!”  என்றாள்.  “இல்லை,குழந்தாய்.  நீ தவறாகப் புரிந்து கொண்டு விட்டாய்.  அவன் இங்கில்லை.  ஆனால் அவன் நமக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பி உள்ளான். அது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. உனக்குத் தெரியுமா? உன் கணவனுக்கும், புஷ்கரத்தின் காவலன் செகிதனாவுக்கும் இடையில் நடந்த போர்? உன் கணவன் அவனை எவ்விதம் விரட்டினான் என்பதை நீ அறிவாயா?  வாசுதேவன் புஷ்கரம் திரும்ப யாதவ அரசன் செகிதானாவுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று செய்தி அனுப்பி உள்ளான்.” என்றார்.

“ஆஹா, ஆர்யபுத்திரர் இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்  நான் அவரை நன்கறிவேன்.” என்றாள் பானுமதி.

“ஆனால் உனக்கு என்னைத் தெரியாது பானுமதி. “ சிரித்த வண்ணம் கூறிய துரோணர், “செகிதனாவிடம் புஷ்கரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது.  நானே நேரில் சென்று அதைச் செய்யப் போகிறேன்.  அப்போது  கிருஷ்ண வாசுதேவனும், பலராமனும் சுயம்வரம் செல்லும் வழியில் அங்கே வரப்போகிறார்களாம்.  நான் அவர்களையும் வரவேற்கப் போகிறேன்."  அவர் முகம் ஏதோ திடீரென நினைவு வந்தது போல் ஒரு கணம் யோசனையில் ஆழ்ந்தது.  புருவங்களைச் சுளித்த வண்ணம் திரும்பி பானுமதியைப் பார்த்தவர் சிரித்த வண்ணம், “ பானுமதி, சில நாட்களுக்கு முன்னர் நீ என்னிடம் கிருஷ்ண வாசுதேவன் இங்கே வந்திருக்கையில் உன்னைத் தன் சகோதரியாக ஏற்றுக் கொண்டதாகக் கூறினாய்!”  என்றார்.

“ஆமாம், ஆசாரியரே!” பானுமதியின் நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்தன.  அந்தக் கொடிய இரவு, கெளரி அம்மன் கோயிலில் நடந்த வழிபாட்டின் போது நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நொடியில் அவள் மனதில் தோன்றி மறைந்தன.  அதனால் ஏற்பட்ட மனவெழுச்சியினால் அவள் முகம் வெட்கத்தாலும், தன்னையே குறித்த கோபத்தாலும் சிவந்தது.   சமாளித்த வண்ணம் ஆசாரியரைப் பார்த்து அவள், “ கிருஷ்ண வாசுதேவனின் கருணை எல்லையற்றது.  அன்று மட்டும் அவன் இங்கே வந்திராவிட்டால் நான் கங்கையில் மூழ்கி உயிரை விட்டிருப்பேன். " என்றாள்.

“நல்லது பானுமதி.  அப்படி என்றால் அவனைச் சந்திக்க நீயும் என்னுடன் புஷ்கரத்துக்கு வருகிறாயா?” என்று துரோணர் கேட்டார்.

“ஆஹா, ஆசாரியரே, கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்கவா?  அதுவும் நானா?  ஒரு நாளும் நடவாது ஐயா.  ஆர்யபுத்திரர் என்னை அங்கே அனுப்பச் சம்மதிக்கவே மாட்டார்.  அதோடு கிருஷ்ண  வாசுதேவனின் செயல்கள் அவரை மகிழ்ச்சி அடையச் செய்யவில்லை.  கிருஷ்ண வாசுதேவனை அவருக்குப் பிடிக்கவில்லை.”  என்றாள் பானுமதி.  “பானுமதி, உனக்கு துரியோதனன் திரெளபதியை ஜெயித்து மணமுடித்து வர மாட்டான் என்பதை உறுதி செய்து கொள்ளும் ஆசை இல்லையா?” என்று துரோணர் மீண்டும் கேட்டார்.  “ஆசாரியரே, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.”  என்றாள் பானுமதி.

“பானுமதி, ஒரு வேளை நீ கிருஷ்ண வாசுதேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியை வாங்க முடிந்தால்…….அவன் உனக்குக் கட்டாயம் உதவுவான்.”

“எப்படி ஆசாரியரே, எப்படி? அவனால் ஒரு போதும் ஆர்யபுத்திரரை சுயம்வரத்துக்குச் செல்வதிலிருந்தோ, திரெளபதியை வென்று மணமுடிப்பதிலிருந்தோ தடுக்க முடியாதே!” என்றாள் பானுமதி.

“எனக்குத் தெரியாது!” என்று யோசனையுடன் கூறிய துரோணரின் கண்கள் அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் காட்டின.  மேலும் தொடர்ந்த அவர், “ வாசுதேவக் கிருஷ்ணனைக் குறித்த கதைகள், அவன் சாகசக் கதைகள், அதிசயங்களை நிகழ்த்துவதாய்க் கூறும் கதைகள், நாம் அடிக்கடி பலர் வாயிலாகவும் கேட்டு வருகிறோம் அல்லவா?  அவை அனைத்தும் உண்மையாக ஏன் இருக்கக் கூடாது?  உண்மையாகவே இருக்கலாம். அதிலும் இந்தப் புஷ்கரம் சம்பந்தப் பட்ட விஷயத்தில் அவன் தலையீடு மிகவும் ஆச்சரியகரமாகவே இருந்தது.   அந்த எண்ணத்தை என்னால் உதற முடியவில்லை. " ஆசாரியர் தம் மனதுக்குள்ளாக இந்தத் தலையீட்டினால் தனக்கு ஏற்பட்டிருக்கும் சுயலாபத்தைக் குறித்து மகிழ்ந்ததோடு அதை பானுமதியிடம் பகிர்வதையும் தவிர்த்தார்.  பானுமதியைப் பார்த்து, “என்ன செய்ய வேண்டும் என நான் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.  கேள்!” என்றார்.

“மாட்சிமை பொருந்திய மஹாராணி அம்மா சத்யவதியிடம் செல்.  அவளிடம், வாசுதேவ கிருஷ்ணன் உன்னைத் தன் சிறிய தங்கையாக ஏற்றுக் கொண்டிருப்பதைச் சொல்.  அந்த நிகழ்வையும் வர்ணித்துச் சொல்.  ஒரு அன்பான சகோதரி, எப்படி தன் அருமை அண்ணனை வரவேற்கச் செல்வாளோ அவ்வாறே நீயும், வாசுதேவக் கிருஷ்ணனை வரவேற்கவே புஷ்கரம் போக விரும்புவதாய்க் கூறு.  ஒரு வேளை அவள் உனக்குப் புஷ்கரம் செல்ல அநுமதி கொடுக்கலாம்.  தேவை எனில் விதுரனின் உதவியையும் கேள்.  அவனுக்கு மாட்சிமை பொருந்திய ராணி அம்மாவிடம் மிகவும் செல்வாக்கு உண்டு.  அனுமதி கிட்டிப் புஷ்கரமும் சென்று விட்டாயானால் பின்னர் உன் முக்கியமான வேலை வாசுதேவ கிருஷ்ணனிடம் வாக்குறுதி வாங்குவதே!   அவன் தன் எல்லா முயற்சிகளையும் எடுத்து திரெளபதி துரியோதனனைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தடுக்க வேண்டும் என்று வாக்குறுதி கேள்.  அவனால் இயன்ற அனைத்தையும் அவன் சக்தி அனைத்தையும் பிரயோகித்து இதைச் செய்யச் சொல்லி அவனிடம் உறுதிமொழி வாங்கு!”  என்றார்.


11 comments:

ஸ்ரீராம். said...

துரோணர் நன்கு நிறுத்தி நிதானமாக வலையைப் பின்னுகிறார்!

அந்தக் கால அரசர்களுக்கு எத்தனை திருமணம் வேண்டுமானாலும் - அதுவும் இது மாதிரி அரசியல் காரணங்களுக்காக - அனுமதிக்கப் பட்டிருக்கும் வேளையில் 'துரி' அதைச் செய்வது எப்படித் தவறாகும்?! இதுபோன்ற பழைய கதைச் சந்தர்ப்பங்களில் மற்ற மனைவிகளின் உணர்வுகள் நமக்கு அறியக் கிடைப்பதில்லை. பானுமதியின் உள்ளக்கிடக்கை அறிய வருகிறது! :)))

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பாரதக் கதையில் துரோணர் ஹீரோ ஆகிவிட்
டாரே. கண்ணா விழித்துக்கொள்:)
ஸ்ரீராம் நீங்களே போய்ச் சொல்லிக் கொடுப்பீர்கள் போலிருக்கிறதே துரி கிட்ட. !!!!!!
கீதா எவ்வளவு விஷயங்கள் சொல்லிவருகிறீர்கள். மிக நன்றாக இருக்கிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பானுமதியின் உள்ளத்தினை அறிய முடிந்தது. அவள் மேற்கொண்டு என்ன செய்யப்போகிறாளோ என தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்.

இன்னம்பூரான் said...

ஆர்வத்துடன் படித்தேன். எவ்வளவு தடவை படித்தாலும் சுவாரஸ்யம் குன்றாது.

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராம் நீங்களே போய்ச் சொல்லிக் கொடுப்பீர்கள் போலிருக்கிறதே துரி கிட்ட. !!!!!!//

வல்லிம்மா... ஹா.ஹா..ஹா...!

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம்,நல்லவேளையா நீங்க யாருமே கதையின் தொடர்பு குறித்துச் சொல்லலை. குழுமத்திலே நான் எதையோ விட்டுட்டதாச் சொன்னாங்க. :))) கொஞ்சம் முன், பின்னாகச் சொல்லி இருக்கார் முன்ஷிஜி! :)))

sambasivam6geetha said...

துரியோதனனின் பலதார மணம் அந்தக்காலப்படி ஏற்கக் கூடியதே!

sambasivam6geetha said...

வல்லி, இந்த பாரதக் கதையில் எல்லாருமே ஹீரோக்கள் தான். :)))

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், இந்திய மனைவி இல்லையா? அந்த தர்மப்படி தான் பானுமதி நடந்துப்பா! :)

sambasivam6geetha said...

"இ" சார், உங்களை இங்கே பார்க்க சந்தோஷம்.

sambasivam6geetha said...

ஸ்ரீராம், :))))