Friday, November 8, 2013

சுயம்வரத்திற்கு அழைப்பு வந்தது!

இதற்கு முந்தைய பதிவில் அரசகுமாரர்களைக் குறித்த ஷகுனியில் கிண்டல் மொழிகளைப் பார்த்தோம்.  ஆனால் துரியோதனன் அவற்றைச் சிறிதும் கவனித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.  அவன் தன் கருத்திலேயே குறியாகப் பாட்டனார் பீஷ்மரைப் பார்த்து, “பாட்டனாரே, நாங்கள் அந்த சுயம்வரத்துக்குச் செல்கிறோம்;  தடுக்காதீர்கள்.   கட்டாயமாகப் போயாக வேண்டும்.  நானோ அல்லது எங்களில் ஒருவரோ நிச்சயமாக திரெளபதியை அடைவோம்.  அதற்கான போட்டி இருந்தால் அதிலும் வெல்வோம்.  எங்களை மிஞ்சிய வீரன் எவனும்  இந்த ஆர்ய வர்த்தத்தில் உண்டோ?” பீஷ்மரின் நீண்ட மெளனத்தாலும், அவரின் பொறுமையாலும் பொறுமையிழந்து போன குரலில் இவற்றைக் கூறிய துரியோதனன், உடனே மந்திரி குனிகரைப் பார்த்து, “ எங்கள் வலிமையாலும், ஆயுத பலத்தாலும் திரெளபதியை வென்று அவளை எங்களில் ஒருவனுக்கு மாலை சூட வைப்பதைத் தவிர வேறேன்ன அவமானம் துருபதனுக்கு இருக்க முடியும்?”  என்றும் கேட்டான்.  மர்மமான முறையில் என்னவென்று எவருக்கும் புலப்படா வண்ணம் ஒரு புன்னகை பீஷ்மரின் கடுமையான முகத்தில் நிலவுவதை துரோணர் கண்டு ஆச்சரியமடைந்தார்.  இந்தக் கிழவன் சாமானியமானவன் அல்ல;  ஏதோ விஷயம் உள்ளது. அந்த தைரியம் இவனுக்கு இருக்கிறது.  என்று துரோணர் தமக்குள் நினைத்துக் கொண்டார்.

அப்போது திருதராஷ்டிரனோ தன் குருட்டுக்கண்களைத் தன் மகன் துரியோதனன் பக்கம் திருப்பி, “ஒருவேளை அந்த இளவரசி உங்களில் எவரையும் தேர்ந்தெடுக்காவிட்டால்?? நம் குரு வம்சத்திற்கன்றோ அது அவமானத்தைத் தேடித் தரும்!” என்று தன் சந்தேகத்தை எழுப்பினான்.  அப்போது ஷகுனி கடகடவெனச் சிரித்தான்.  தன் உடலை உருட்டிப் புரட்டித் திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்துக் கேலி ததும்பும் குரலில், “ மாட்சிமை பொருந்திய மன்னா!  பழங்காலத்திலிருந்து நடைபெற்று வரும் ஒரு பாரம்பரியமான நடைமுறை.  மிகவும் புனிதமானதென்றும் கருதப்படுகிறது.  அதில் வென்றால் மகிழ்ச்சி அளிக்கும்.  தோல்வி அடைந்தால் அதன் மூலம் அவமானம் எவ்வாறு நேரும்?  இதிலே எவ்விதமான மதிப்புக் குறைவும் இல்லை;  ஏனெனில் ஒரு இளவரசி ஒரு இளவரசனைத் தான் மணக்க முடியும்…..” என்று கூறிய வண்ணம் மேலும் சிரிக்க ஆரம்பித்தான்.  அப்போது பீஷ்மர் தன் கடுமையான பார்வையை ஷகுனியின் பால் திருப்பிய வண்ணம் தன் அழுத்தமான தொனியில் பேச ஆரம்பித்தார்.  துரோணரைப் பார்த்து, “ஆசாரியரே, இவ்விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்.

பீஷ்மருக்கு எதிரே தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் துரோணர் தன் கம்பீரமான அதே சமயம் தன் பவித்திரமும் தெரியும்படியான குரலில் பேச ஆரம்பித்தார்.  “மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய பாட்டனாரே!  மாட்சிமை பொருந்திய மன்னா!  துரியோதனனின் நடவடிக்கைகளால் எனக்கு மனவலி ஏற்பட்டு மன வருத்தம் அடைந்துள்ளேன்.  துருபதனின் சபைக்குச் சென்று அவன் மகளின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவள் மணமாலையை அடைய முயற்சிப்பது குரு வம்சத்தினரின் பாரம்பரியத்திற்கும், புகழுக்கும், வீரத்துக்கும் ஏற்றதல்ல.  அவமானத்துக்குரியதாகும்.  நான் எதிர்பார்ப்பது என்னவெனில், ஒரேயடியாக ஒரே போரில் துருபதனையும் அவன் நாட்டையும் அடியோடு அழித்துவிட்டு, அவனுடைய அதிகாரங்களைப் பிடுங்கிக் கொண்டு அந்த வெற்றிச் சின்னமாகவும், அவனை இனிமேல் சமாதானமாக இருக்கும்படி அறிவுறுத்தும்படியாகவும் அவன் பெண்ணைத் தூக்கி வரவேண்டும்.  இதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். என் மாணாக்கர்களுக்கு வீரத்துடன் சேர்ந்த இந்த உன்னதமான பெருமையை அடையும் வழியை நான் கற்றுக் கொடுக்கவில்லையே என வருந்துகிறேன்.  இதில் நான் தோல்வி அடைந்திருக்கிறேன்.”  என்றார்.

அப்போது கர்ணன், “எங்கள் பலத்தையும், வீரத்தையும் நீங்கள் சந்தேகிக்கிறீர்களா ஆசாரியரே?” என்று கேட்டான்.  அவர்களின் வீரம் மற்றவரால் சந்தேகிக்கப்படுவதை ஒரு நொடி கூடக் கர்ணனால் பொறுக்க இயலாது.  சற்றும் தேவையில்லாப் பொருத்தமற்ற வழிகளில் இந்த உரையாடல்கள் செல்வதைப் பொறுக்காத பீஷ்மர் தன்  ஒரு கை அசைவால் அதை நிறுத்தினார். “ஆசாரியரே, அப்போது நீங்கள் சுயம்வரத்துக்கு இளவரசர்கள் செல்வதை விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?” என்றும் கேட்டார்.  “மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, இளவரசர்கள் சுயம்வரத்துக்குச் செல்வதை ஒத்துக் கொள்வது என்னளவில் கஷ்டமான ஒன்று.  என்னால் அதை ஒத்துக்கொள்ள இயலவில்லை.  தாங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.  ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்: துரியோதனனோ, கர்ணனோ அல்லது என் மகன் அஸ்வத்தாமாவோ யாராக இருந்தாலும் காம்பில்யத்திற்குச் சென்றார்களானால் குரு வம்சத்தினருக்குப் புகழைக் கொண்டு வரப்போவதில்லை.  வலிமையையும் கொண்டு வரப்போவதில்லை.   அனைத்தையும் மீறி அவர்கள் சென்று எவரேனும் திரெளபதியை வென்று மணமகளாக அழைத்து வந்தால்…. குரு வம்சம் துண்டு துண்டாகப் பின்னப்பட்டுச் சிதறிப் போகும்.  யாருமே அவளை வெல்ல முடியவில்லை என்றாலும் கஷ்டம் தான்!  அப்போது நம் வம்சத்திற்கே களங்கம் ஏற்படும்.  நம் கெளரவமெல்லாம் தூள் தூளாக நொறுங்கி விடும்.  எவ்வழியில் போனாலும் நம்முடைய அனைத்து பலமும் சிதைந்து உருத்தெரியாமல் போகும் அபாயம் இருக்கிறது.  என்னளவில் நான் இதைத் தெளிவாக்க விரும்புகிறேன். நான்……….”

துரோணர் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்னர், துரியோதனன் சுயம்வரத்திற்குச் செல்ல நேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை விவரிக்கும் முன்னர், அங்கே திடீரென விதுரர் வந்தார்.  நேரே பிதாமகர் பீஷ்மர் அருகே சென்று தலை வணங்கி நமஸ்கரித்துவிட்டு அவர் காதுகளில் ஏதோ கூறினார்.  அனைவரும் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஆனால் அனைவர் மனதிலும் விதுரர் கூறுவது ஏதோ முக்கியமான விஷயம் என்பது தோன்றியது.  ஒரு முக்கியமான, தீவிரமான விஷயத்தைக் குறித்த அனைவரின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டு அதன் மீது முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தின் பேரில் கூடிய இந்த சபையில் நுழைந்து விதுரர் , பீஷ்மரிடம் ரகசியமாக ஏதோ கூறுவதென்றால் அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிருக்கும்!  துரோணர் பீஷ்மரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.  விதுரரின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கணம் பீஷ்மரின் கண்கள் ஒரு கணம் பளிச்சிட்டன.  விஷயம் ஏதோமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான அறிகுறிகள் அவர் கண்களிலும் முகத்திலும் தோன்றி மறைந்தது.  பேசி முடிந்ததும் பீஷ்மரின் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை காணப்பட்டது.

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விதுரரின் வார்த்தைகளைக் கேட்ட அந்தக் கணம் பீஷ்மரின் கண்கள் ஒரு கணம் பளிச்சிட்டன. விஷயம் ஏதோமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கான அறிகுறிகள் அவர் கண்களிலும் முகத்திலும் தோன்றி மறைந்தது. பேசி முடிந்ததும் பீஷ்மரின் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை காணப்பட்டது.//

ஆஹா ... விஷயம் என்னவென்று அறிய ஆவலாக உள்ளதே ! ;)

இராஜராஜேஸ்வரி said...

பீஷ்மரின் முகத்தில் ஒரு விசித்திரமான புன்னகை விறுவிறுப்பைக்கூட்டுகிறது ..!

ஸ்ரீராம். said...

விதுரருக்கும் துரியோதனனுக்கும் என்றைக்கும் ஆகாது! துரியோதனனுக்குப் பிடிக்காத ஒரு செய்திதான் விதுரர் சொல்லியிருக்க வேண்டும்!

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார். நன்றி

sambasivam6geetha said...

ராஜராஜேஸ்வரி, நன்றி. பீஷ்மர் இத்தனை சக்தி வாய்ந்தவராய் இருந்தும் கூடப் பாண்டவர்களுக்காக எதுவும் செய்ய முடியலை பாருங்க. அதான் புரியாத புதிர்!

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், அதான் உத்தவன் வரும் விஷயம் தான். :)