Saturday, July 11, 2015

பீமன் கிளம்புகிறான்!

கோபமாகச் சென்றிருக்கும் பீமனை நாம் உடனே பார்க்க வேண்டும். அவன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். கோபம் அதிகரிப்பதற்குள்ளாக பீமன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

ராஜசபையை விட்டு உடனடியாகக் கிளம்பிய பீமன், கோபுவிடம் தன் தாய், மனைவி திரௌபதி, காதலி ஜாலந்திரா ஆகியோருக்குச் செய்திகளைச் சேர்ப்பிக்கச் சொன்னான். ரேகா மூலமும், மாலா மூலமும் செய்திகளைச் சேர்ப்பிக்கச் செய்தான். அவனுடைய அவசரத்தையும், அவன் பயணத்திற்குத் தயாராகிறான் என்பதையும் பார்த்த கோபு, “எங்கே போகிறீர்கள், பிரபுவே?” என்று கேட்டான். “அதைப் பற்றி உனக்கு என்ன? உனக்கு அது தேவையில்லாத விஷயம்! நீ திரும்பி பலியாவிடம் செல்!” என ஆணையிட்டான் பீமன். கோபு பிடிவாதமாக மறுத்தான். “நீங்கள் செல்லுமிடம் எல்லாம் நானும் வருவேன். ஏற்கெனவே நீங்கள் வாரணாவதம் சென்றபோது என்னை விட்டு விட்டுச் சென்று விட்டீர்கள்! அதுவே எனக்கு இன்னமும் வருத்தமாக இருக்கிறது. நான் இல்லாமல் தனியே நீங்கள் சென்றால் உங்களுக்குத் தான் கஷ்டம்! நான் கூட வந்தால் உதவியாக இருந்திருப்பேன்; இப்போதும் உதவியாக இருப்பேன்.” என்றான் கோபு.

“நீ வந்தால் எனக்குப் பிரச்னை தான். நீ எப்படி என்னைத் தொந்திரவுகளிலிருந்தும் தடங்கல்களிலிருந்தும் காப்பாற்றுவாய்? உன்னால் முடியாது. வாரணாவதத்துக்கு நீ மட்டும் வந்திருந்தாயானால் நான் உன்னையும் சேர்த்துத் தூக்கிச் சென்றிருக்கும்படி ஆகி இருக்கும். அப்போது ஐந்து பேரைத் தான் தூக்கிச் சென்று காப்பாற்றினேன். உன்னையும் சேர்த்து ஆறு பேரைக் காப்பாற்றி இருக்க வேண்டும். நீ திரும்பப் போ!” என்றான் பீமன்.

“அது அப்படி இல்லை, பிரபுவே! நான் மட்டும் உங்களுடன் இருந்திருந்து ராக்ஷசவர்த்தமும் வந்திருந்தேன் எனில், உங்களை ஒரு ராக்ஷசியை மணக்கும்படி விட்டிருக்க மாட்டேன்.” சிறு வயதிலிருந்து பழகும் தன் எஜமானனிடம் உரிமையுடன் கேலி செய்தான் கோபு. பீமன் சிரித்தான். “இது மட்டும் ஹிடிம்பா காதில் விழட்டும்! உன்னை பக்ஷணம் செய்துவிடுவாள். நீ வாயைத் திறக்கும் முன்னர் அவள் வாயில் இருப்பாய்!” என்ற வண்ணம் கோபுவின் முதுகில் ஓங்கித் தட்டினான் பீமன்.

“பிரபுவே! எது எப்படி இருந்தாலும், இப்போதும் சரி; இனி எப்போதும் சரி, நான் உங்களைத் தனியே விடப் போவதில்லை. தனியே எங்கும் செல்ல அனுமதிக்கவும் போவதில்லை. நீங்கள் களைத்திருந்தால் யார் உங்களை உற்சாகப்படுத்துவார்கள்?  யார் உங்கள் உடலைப் பிடித்துவிட்டு சேவை செய்வார்கள்? உங்களுக்குத் தலை வலித்தால் யார் உங்கள் தலையைப் பிடித்துவிடுவார்கள்? நான் இல்லாமல் நீங்கள் தன்னந்தனியாக என்ன செய்வீர்கள்? அதோடு அகோரியின் குடிசைக்கு நானும் உங்களோடு வந்ததால் தானே நல்லதாக முடிந்தது! இல்லை எனில் என்ன நடந்திருக்கும்?” என்றான் கோபு.

“சும்மா அர்த்தமின்றிப் பேசாதே கோபு!” இந்த சமயத்தில் கோபுவின் இந்த வெட்டி அரட்டை பீமனுக்குள் அலுப்பைத் தந்தது. “எனக்கே நான் போகும் இடம் எதுவென இன்னும் புரியவில்லை! உன்னை எப்படி அழைத்துப்போவது?” என்றான். “ஆனால் எனக்கு நான் எங்கே போகிறேன் என்பது தெரியுமே, பிரபுவே! என் பிரபு எங்கே செல்கிறாரோ அங்கே எல்லாம் இந்த கோபுவும் செல்வான்.” என்றான் கோபு. “சரி, சரி! நீ ஒரு முட்டாள். முழு முட்டாள். அதனால் தான் என்னுடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கிறாய். பின்னால் நீ இதற்காக வருத்தப்படப் போகிறாய், பார்! அதோடு என்னுடன் வரும்போது நீ கொல்லப்பட்டால் உன் மனைவி வேறு என்னைத் தான் திட்டுவாள்.” என்றான் பீமன்.

“ஹா! அப்படி நான் கொல்லப்பட்டால் என்ன ஆகிவிடும். என் மனைவிக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும். அவள் தானே நீங்கள் எல்லோரும் வாரணாவதம் செல்கையில் நானும் உடன் செல்லாததற்கு என்னை இரவும் பகலும் கேலி செய்து கொண்டிருந்தாளே! என்னைக் கோழை என்றாளே! நீங்கள் எல்லோரும் எரிந்து கொண்டிருந்த மாளிகையிலிருந்து தப்பி ஓடும்போது கூட இருந்து உதவவில்லை என்று என்னைக் கடிந்தாளே! இப்போது அவள் மீண்டும் என்னை அம்மாதிரி சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நானே முந்திக் கொள்கிறேன்.”

வெறுப்போடு சம்மதித்தான் பீமன். “சரி, சரி! வா! வந்து தொலை! உன் இஷ்டம் என்னமோ அப்படிச் செய்! இப்போது மாளிகைக்குச் சென்று என் ஆயுதங்களை எடுத்து வா!” என்றான்.

பீமன் கோபத்தில் இருக்கையில் தான் வேகமாக முடிவு எடுத்துத் தீர்மானமாக வேலைகளைச் செய்வான். இப்போதும் அப்படியே வேகமாக முடிவெடுத்தான். கோபு ஆயுதங்களைக் கொண்டு வந்ததும், வெளியே தங்கி இருந்த தங்கள் முகாமுக்குச் சென்று தன் ரதத்தைத் தயார் செய்யச் சொன்னான். ரதசாரதியிடமும் நீண்ட பயணத்துக்குத் தயாராகும்படி சொன்னான். மாற்றுக் குதிரைகள், மற்றும் மாட்டுவண்டிகளில் முகாம் போடத் தேவையான பொருட்கள் எனத் தயார்ப் படுத்தச் சொன்னான். அனைத்தும் நீண்டதொரு பயணத்துக்கான தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டான். கோபு தனக்கிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு பீமனுடன் வந்து சேர்ந்து கொண்டான்.

ரதம் தயாரானது. பீமன் தன் கைகளில் லகான்களைப் பிடித்துக் கொண்டு ஒரு சுண்டு சுண்டினான். ரதம் பறந்தது. குதிரைகளால் எவ்வளவு வேகமாய்ச் செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாய்ச் சென்றன. ரதத்துக்குள்ளே அமர்ந்திருந்த கோபு ரதம் அப்படியும் இப்படியுமாக ஆடியதில் நிலை குலைந்து போனான். அவன் உடல் ஒரு இடத்தில் இருக்கவில்லை. அங்குமிங்குமாக ஆடியது. எலும்புகளெல்லாம் நொறுங்கிவிடும்போல் இருந்தன. ஹீனமான குரலில், “பிரபுவே, மெல்ல, மெல்ல, மெதுவாகச் செல்லுங்கள். குதிரைகளை விரட்டாதீர்கள். என்னால் தாங்கமுடியவில்லை!” என்று கூறினான். “நீ வாயை மூடிக்கொண்டு வரவில்லை எனில் உன்னைத் தூக்கி எறிந்துவிடுவேன். உன்னை யார் வரச் சொன்னார்கள்? நான் தான் நீ வராதே என்றேன் அல்லவா? வேண்டுமெனில் இப்போது திரும்பிப் போ!” என்று பீமன் கடுமையாகச் சொன்னான். “நான் திரும்பி எல்லாம் போக மாட்டேன், பிரபுவே! நானும் திரும்பிவிட்டால் உங்களைக் கவனித்துக்கொள்ள யாருமே இருக்க மாட்டார்களே! என் எலும்புகளை நொறுக்கினீர்கள் எனில் உங்கள் பயணம் முடிவதற்குள்ளாக என் முடிவு வந்துவிடும். அப்புறம் யார் இருப்பார்கள் உங்களுடன்?” என்று பரிதாபமாகப் புலம்பினான் கோபு.

“சரி, சரி, உன் எலும்புகள் நொறுங்காமல் இருக்க வேண்டுமானால் எழுந்து கொண்டு ரதத்தின் பக்கவாட்டில் நின்று கொண்டு மேலுள்ள கம்பிகளைப்பிடித்துக் கொள். அதிர்வுகள் தெரியாது.” என்றான் பீமன்.

1 comment:

ஸ்ரீராம். said...

பிடிவாத பீமன்!