Wednesday, May 23, 2012

திருதராஷ்டிரனின் தந்திரம்


அன்பும், பாசமும், பச்சாத்தாபமும் பொங்கும் கண்களை யுதிஷ்டிரனிடம் திருப்பிய விதுரர், “குழந்தாய், உன்னையும் உன் நான்கு சகோதரர்களையும் எப்படியேனும் கொன்றுவிட வேண்டும் என துரியோதனன் திட்டம் தீட்டி இருப்பதையும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ரகசியமாய்ச் செய்து வருவதையும் அறிவாயா?”

“சித்தப்பா, சஹாதேவன் என்னிடம் கூறினான்.  அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.  பீமனுக்கு இது தெரிந்ததும், அவன் வேண்டிய முன்னேற்பாடுகளையும், பாதுகாப்புகளையும் செய்து வருகிறான்.  ஆனால் சித்தப்பா, எனக்கு என்னவோ துரியோதனாதியாரின் முயற்சிகள் எல்லாம் பலிக்கும் எனத் தோன்றவில்லை.  அப்படி எல்லாம் எங்களை எவராலும் கொன்றுவிட முடியாது.  நாங்கள் இந்த உலகில் எவ்வளவு காலம் வாழ வேண்டுமென்பது இறைவன் கைகளிலேயே உள்ளது.  அவன் நினைக்கும் வரை எங்களை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. “யுதிஷ்டிரன் திட்டவட்டமாய்க் கூறினான்.

“உன் இறைவன் உன்னைக் காப்பார் குழந்தாய்!  இறைவனின் பரிபூரண அருள் உனக்கும், உன் சகோதரர்களுக்கும் கிட்டட்டும்.  அது போகட்டும்! ஒருவேளை உனக்கோ, உன் தம்பிகளுக்கோ ஆபத்து ஏற்பட்டால், அந்தக் கஷ்டமான நேரத்தில் உங்களுக்கு உதவ நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை ஒரு போதும் மறவாதே!” என்றார் விதுரர்.

“சித்தப்பா, நீங்கள் எப்போதுமே மிகவும் நல்லவராகவும், நேர்மையானவராகவும் இருக்கிறீர்கள்.  நீங்கள் இல்லை எனில் இந்த யுவராஜா பதவியில் என்னால் என்ன செய்திருக்க முடியும்?  என் தம்பிகள் தான் என்ன செய்திருக்க முடியும்? உங்களை நாங்கள் எப்போதுமே மதித்து வணங்குவதோடு பூரணமாய் நம்புகிறோம்.” யுதிஷ்டிரன் மனமாரச் சொல்லுகிறான் என்பது அவன் குரலில் இருந்தும், கண்களின் ஒளியிலிருந்தும் புரிந்தது.  சற்று நேரத்தில் அவர்கள் திருதராஷ்டிரன் வீற்றிருந்த அரச மண்டபத்தை அடைந்தனர்.  ஒரு தங்கச் சிம்மாதனத்தின் மேல் திருதராஷ்டிரன் அமர்ந்திருந்தான்.  அவன் அருகே அவனுக்குச் சம ஆசனத்தில் தாத்தா பீஷ்மரும் அமர்ந்திருந்தார்.  இருவரும் வெகு நேரமாக ஏதோ முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் என்பதை அவர்கள் முகமே காட்டியது.  பீஷ்மரின் முகம் இறுக்கமாகவும், திருதராஷ்டிரன் தர்ம சங்கடமான நிலையில் இருப்பதாகவும் தெரிய வந்தது.   ஐம்பதே வயதுக்குள்ளான திருதராஷ்டிரனுக்கு இள வயதிலேயே நரைத்திருக்கும் போலும்.  அந்த நரைமுடி அவனை வயது கூடியவனாய்க் காட்டியது.

சிவந்த நிறத்தோடும், நல்ல உடல்கட்டோடும் காணப்பட்டாலும், அவன் உதடுகள் தொய்வுற்று, தோள்பட்டைகள் வளைந்து காணப்பட்டன.  பார்வையற்ற அவன் கண்கள் அந்த அறையின் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அனைவரின் நடை சப்தத்தை வைத்தே யார் வருகிறார்கள் என்பதை திருதராஷ்டிரன் அறிந்து கொள்வான்.  இப்போதும் யுதிஷ்டிரன் வரவை அப்படியே அறிந்து கொண்டான்.  தாத்தா பீஷ்மரோ நல்ல உடல் கட்டோடும், பூரண பலத்தோடும், எவராலும் அசைக்க முடியாத இமயமலைச் சிகரம் பனியால் மூடி இருப்பது போல் தன் வெண் தாடியும், நரைத்த தலையைத் தூக்கிக் கட்டிய வண்ணமும் காணப்பட்டார். இமயத்தை எவ்வாறு அசைக்க முடியாதோ அவ்வாறே தாத்தா பீஷ்மரையும் அசைக்க முடியாது என யுதிஷ்டிரன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.  திருதராஷ்டிரனை விடப் பல மடங்கு மூத்தவராய் இருந்தாலும் அவர் உடல் வளையாமல் நேராக இருந்தது.  திருதராஷ்டிரனை விடவும் வீரமும் வலிமையும் உள்ளவராய்க் காணப்பட்டார். கண்களிலிருந்து அவ்வப்போது கிளம்பிய தீக்ஷண்யமான ஒளி, விண்ணில் மின்னும் மின்னலை ஒத்திருந்தது.  ஆனால் அவர் முகம் சாந்தமாய்க் காணப்பட்டது.

மூன்று தலைமுறைகளாக இந்தக் குரு வம்சத்திற்குத் தாத்தா பீஷ்மர் ஒரு தூணாக இருந்து காத்து வருகிறார்.  இந்தக் குரு வம்சத்திற்கும் ஹஸ்தினாபுரத்தின் செல்வாக்குக்கும் அவர் செய்திருக்கும் சேவைகளைப் பட்டியலிட முடியாது.  தன் தந்தை ஷாந்தனு, சத்யவதியை மணப்பதற்காக, அவர் குரு வம்சத்தின் அரியணையைத் துறந்ததில் இருந்து இந்தக்குரு வம்சத்தின் மேன்மையைத் தவிர வேறொன்றையும் அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  யுதிஷ்டிரனின் எண்ணங்கள் திருதராஷ்டிரனின் குரலால் தடைப்பட்டது. 

“குழந்தாய், யுதிஷ்டிரா, நீதானே?”  திருதராஷ்டிரன் குரலில் வலிய வரவழைத்துக் கொண்ட அன்பும், பாசமும் காணப்பட்டது.  பாண்டவர்களைக் காட்டிலிருந்து நகருக்கு அழைத்து வந்ததும், அவர்களைப் பிரியமுடனும், பாசத்துடனும் வளர்த்ததும், ஆயுதப்பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்ததும், அவர்களை வலிமையானவர்களாக மாற்றியதும் தாத்தா பீஷ்மர் தான்.  அதே போல் தான் கெளரவர்களையும் பீஷ்மரே வளர்த்தார்.  அனைவரையும் ஒன்றாகவே துரோணரின் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுத்தினார்.  ஆனால்??? ஆனால்??? பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் இப்படிப் பகைமை எப்படி ஏற்பட்டது?  எதனால் ஏற்பட்டது? யுதிஷ்டிரரால் புரிந்து கொள்ள இயலவில்லை.

No comments: