Monday, September 13, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேதுவின் வீழ்ச்சி!

குருதேவர் என்னை என்ன நினைத்துக்கொண்டிருப்பார்?? நினைக்கவே எனக்கு வெட்கம் மிகுந்தது. இனி ஷாயிபாவின் அருகேயே செல்லக் கூடாது என உறுதி எடுத்துக்கொண்டேன். நீங்களும் சென்று விட்டீர்கள். ஆகவே எனக்கு நேரமும் செல்லவில்லை. என் வேலைகளை முடித்துக்கொண்டு வழக்கம்போல் கடற்கரையின் அதே பாறைக்குச் சென்று அமர்ந்தேன். முதல்நாளைப் போல் அன்றும் ஷாயிபா கடலில் இருந்து எழுந்து என்னருகே வந்து தன் இனிய குரலில் தேனினும் இனிய மொழிகளைக் கூறினாள். அவள் கூறியவற்றின் பொருளை விட அவளின் குரலினிமை என்னை மிகவும் ஈர்த்தது. அதைவிடவும் அவள் மெல்லிய தேகமும், அதன் காந்தியும், நறுமணப் பொருட்களால் ஸ்நாநம் செய்திருந்த சுகந்தமும் என் மனதை மயக்கி அறிவைக் குழப்பியது. அவள் என்னிடம் பேசிவிட்டுச் சென்றாள்.""அவள் பின்னே செல்லக் கூடாது என்றிருந்த என் உறுதி போன இடம் தெரியவில்லை. உத்தவா, என் கால்கள் எனக்குத் துரோகம் செய்தன. என் அறிவு கொடுத்த எச்சரிக்கை மணியை என் மனம் புறக்கணித்தது. அவள் பின்னாலேயே நான் சென்றேன். முதல்நாள் போலவே அன்றும் ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கு வழிபாடுகளை ஷாயிபா நடத்தினாள். என்னைப் பார்த்து அவள் தன் பெரியப்பாவின் புகழையும், அவரின் தெய்வீகத் தன்மையையும், மூன்று உலகங்களும் அவர் காலடியில் கிடப்பதையும் கூறினாள் . ஈரேழு பதினாலு லோகங்களிலும் அவள் பெரியப்பாவை விட்டால் வேறொரு கடவுள் இருக்கவே முடியாது என்று அடித்து சர்வ நிச்சயமாய்ச் சொன்னாள். அவரை வணங்கி அவரின் ஆசிகளைப் பெறுவதே இவ்வுலகில் நாம் பிறப்பெடுத்ததின் பலன் என்று ஆணையிட்டுக் கூறினாள். அவள் பேசும்போது முகத்தின் பாவங்களும், கைகளின் அசைவுகளும், கண்களின் மின்னல் ஒளியும், கைகளில் அணிந்திருந்த வளையல்களின் கிண்கிணி நாதமும், இவை எதுவும் தனக்கு லக்ஷியமே இல்லை என்பதைப் போன்ற அவள் அலக்ஷிய சுபாவமும். உத்தவா, உத்தவா, நான் எப்படிச் சொல்லுவேன்??? எனக்கு அவள் முகத்திலிருந்து என் கண்களை எடுக்கமுடியவில்லை. அவள் குரலைத் தவிர மற்றவர் குரலைக் கேட்கப் பிடிக்கவில்லை. இவ்வுலகில் நான் பிறப்பெடுத்து வந்ததின் காரணமே அவளைச் சந்திக்கத் தான் என்று தோன்றியது. இந்தச் சந்திப்பின் மூலம் என் வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு அத்தியாயத்துக்கு நான் வந்துவிட்டேன், எனக்கென ஒரு சொர்க்கம் திறந்துவிட்டது என்றெல்லாம் நினைத்தேன்."


"அன்றும் நான் நடுநிசி கழிந்தே நம் இருப்பிடம் சென்றேன். குருதேவர் மறுநாள் என்னிடம் எதையுமே கேட்கவில்லை. ஆனால் அவர் முகத்திலிருந்து அவர் சந்தோஷமாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஏற்கெனவே தன் ஒரே மகனைப் பறி கொடுத்திருந்த அவர் வாழ்வில் நானும், நீங்கள் மூவரும் பாலவனச் சோலை போல் கொஞ்சம் ஆறுதல் கொடுத்துக் கொண்டிருந்தோம். நீங்களோ புநர்த்த்தனைத் தேடச் சென்று விட்டீர்கள். குருதேவரின் ஒரே பற்றுக்கோடு நானாக மட்டும் இருந்த அந்தச் சமயம் அவர் என்னிடம் நம்பிக்கை இழந்தார். அவருக்கு நான் எதுவும் விளக்கத் தேவை இருக்கவில்லை. அவருக்குப் புரிந்துவிட்டது. நான் வீழ்ச்சியை நோக்கிப் படுவேகமாய்ச் சென்று கொண்டிருக்கிறேன் என்று. என்றாலும் அவர் எவ்வளவு பெரிய மனிதர்! உத்தவா, அவர் என்னைக் கடிந்து கொள்ளவே இல்லை. ஒரு வார்த்தை கடுஞ்சொல் கூறவே இல்லை. இந்த மகத்தான பாசத்துக்கும், ஷாயிபாவின் மேல் எனக்கிருந்த மோகத்துக்கும் நடுவில் நான் இருதலைக் கொள்ளி எறும்பு போல் திண்டாடினேன். எனக்கு ஷாயிபாவும் வேண்டும். அதே சமயம் நான் எவ்விதம் குருதேவரைப் பிரிவது?? ஆனால் அத்தகையதொரு இக்கட்டான நிலைக்கு என்னை ஷாயிபா கொண்டு வந்துவிட்டாள்."

நாங்கள் சந்தித்த நான்காம் நாள் அவள் என்னைப் பார்த்தபோது சொன்னது:” இளைஞரே, எம்முடன் கரவீரபுரத்துக்கு வருவீராக. பெரும் செல்வம் நிறைந்த அங்கே நீர் சகலவிதமான செளகரியங்களோடும், ஆடை, ஆபரணங்களோடும் சந்தோஷமாக இருக்கலாம். என் பெரியப்பா உமக்கு வேண்டியதைச் செய்து தருவார்.” என்று வெளிப்படையாகவே அழைத்துவிட்டாள். இப்போது நான் என்ன செய்வது?? ஒரே குழப்பத்தில் ஆழ்ந்துவிட்டேன். குருதேவர், தந்தைக்கு ஒப்பானவர், இப்போது யாருடைய ஆதரவுமில்லாமல் அவருக்கு நெருக்கமானவர்கள் எவருமில்லாமல் நிராதரவாக இருக்கும் நிலையில் அவரைப் பிரியலாமா?? என் மனதை குருதேவரின் மீதான பாசம் வேல் கொண்டு அறுக்க, ஷாயிபாவைப் பார்க்கும்போதெல்லாம் அவள் அழகும், நடனம் ஆடுவது போன்ற அவள் நடையும், பாடுவது போன்றஅவள் குரலும், அவள் கம்பீரமும், எல்லாவற்றுக்கும் மேல் அந்தக் காந்தக் கண்கள். என்னை ஈர்த்தன."

" கரவீரபுரம் சென்றால் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே! சீச்சீ, குருதேவரைப் பிரிவதா! அது பாவம் அல்லவோ? பாவம் என்ன? இதோ கண்ணனும் பலராமனும் புநர்தத்தனைக் கூட்டி வந்துவிட்டால் அப்புறம் குருதேவருக்கு என்ன பிரச்னை?? நாம் நம் பாட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டியது தான். இல்லை, இல்லை அது மாபெரும் தவறு. குருதேவரைப் பிரியாதே! அவருக்குப் பின் இந்த ஆசிரமத்தை எடுத்துச் சீராக நடத்திக் குருகுலத்தை வழிநடத்த அவர் உன்னைத் தான் எதிர்பார்க்கிறார். “


“ஹா, குருதேவருக்கு என்னைப் போல் எத்தனையோ சீடர்கள் கிடைப்பார்கள். மேலும் குருதேவர் இந்தப் பிரபாஸ க்ஷேத்திரத்தை விட்டுக் கிளம்பும் நாளும் நெருங்கிவிட்டது. ஷாயிபாவிடமிருந்து இப்போது பிரிந்து போனால்?? ஆம், ஆம், குருதேவருக்குத் துரோகம் செய்யக் கூடாது. இங்கிருந்து சென்றுவிட்டால் ஷாயிபா என்னைச் சுற்றிக் கட்டி வரும் இந்த மாயவலை அறுந்துவிடும். அதுதான் சரி. நாங்கள் கிளம்பும் நாள் வந்துவிட்டது. ஷாயிபாவிடம் விடைபெறச் சென்றேன். நாங்கள் குருகுலத்தை இங்கிருந்து கிளப்பிக் கொண்டு வேறொரு நாட்டுக்குப் போகப் போவதாய்க் கூறினேன் . நான் கூறியவுடனேயே ஷாயிபாவின் கடல் போன்ற கண்களில் கண்ணீரலை அடித்தது. பேரலையின் வேகத்தோடு அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. அவள் தன் நடுங்கும் கைகளால் என் தோள்களைத் தொட்டாள். அங்கும் இங்கும் அடைக்கலம் தேடி அலை பாயும் மீன்களைப் போன்ற கண்ணின் கருமணிகளால் என்னை உற்றுப் பார்த்தாள். அவை என் மீதே பதிந்திருந்தன. “ஸ்வேதகேது! ஸ்ரீகாலவவாசுதேவரை நீர் எப்படி மறக்கலாம்? உம்மைப் போன்ற ஒரு வேத வித்துக்காகவே அவர் காத்திருக்கிறார்.” ஏதோ மந்திரம் பேசுவது போன்றதொரு தொனியில் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக அவள் இவற்றைக் கூறினாள். உத்தவா! என் மனம் இதற்காகவே காத்துக்கொண்டிருந்தது. என்னை நான் இழந்தேன். என் மனம் என் வசம் இல்லை. "


அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு நான் அவளிடம், “ஷாயிபா, நான் உன்னுடன் வரவேண்டும் என்று நீ உண்மையிலேயே விரும்புகிறாயா?” என்று கேட்டேன். அவள் தன் கைகளை விடுவித்துக்கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை. என் உடலே நெருப்பாய்த் தகித்தது. அந்தச் சூட்டின் வெம்மையில் என் மனம், அறிவு எல்லாமும் பொசுங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய பதிலில் தான் என் உலகமே இருக்கிறதென்று நம்பினேன். அவள் பதிலே சொல்லாமல் நிமிர்ந்து தன் கடல் போன்ற கண்களால், என்னை ஒரு முறை பார்த்துவிட்டுத் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அவ்வளவு தான் நான் முற்றிலும் என் வசம் இழந்துவிட்டேன். அப்படி அவள் நிமிர்ந்து பார்த்ததிலே அவளின் நுட்பமான மெல்லிய தேகம் பூக்கள் நிரம்பிய ஒரு கொடி கொழுகொம்பில்லாமல் அசைந்து ஆடுவது போல் எனக்குத் தோன்ற அவளைப் பிடித்துக்கொண்டேன். அதன் பின் நான் குருதேவரிடம் செல்லவில்லை. அதன் பின்னர் நாங்கள் ஷூர்பரகா என்னும் கப்பலில் கரவீரபுரத்தை நோக்கிச் சென்றோம். அப்போது ஒருநாள் அந்தி வேளையில் கப்பலின் மேல் தளத்தில் கடலைப் பார்த்தவண்ணம் நான் சிந்தனையில் இருந்தேன். என் ஆசைகள், கனவுகள், என் வாழ்க்கை, என் எதிர்காலம் அனைத்தும் ஒரு பெண்ணின் விருப்பத்தால் எதிர்பாராத திருப்பங்களோடு கூடியதொரு தீரமான சம்பவங்கள் நிறைந்ததாய் மாறிவிட்டதே! அப்போது ஷாயிபா என்னை நோக்கி வந்தாள்."


வந்தவள் என் கண்களுக்குள்ளே என்னைத் தேடுபவள் போலப் பார்த்தாள். அவள் கண்களின் ஆழத்தில் நான் மூழ்கிப் போனேன். அவள் இஷ்டப் பட்டால் அந்தக் கண்கள் நீர் நிரம்பிய ஒரு கடலாக மாறிவிடும்போல! நீரால் நிரம்பியது போல் காட்சி அளித்தன அந்தக் கண்கள். “ஸ்வேதகேது, பரம்பொருளான பரவாசுதேவனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வர நேர்ந்த்தே என வருந்துகிறீரோ?” என்று கேட்டாள். நான் பதிலேதும் சொல்லாமல் மறுப்பாகத் தலை அசைத்தேன். அவள் தன் கரங்களை என் மீது மிருதுவாக வைத்தாள். அவளுடைய அண்மையே என்னுள் அணையாத கனலை மூட்டியது. ஆகவே நான் என்னையுமறியாமல், “உன் பொருட்டு என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் ஷாயிபா” என்று கூறிக்கொண்டே அவளை என் பக்கம் இழுத்து என் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைக்க முயன்றேன். கோபம்கொண்டதொரு பெண்புலியைப் போல் பாய்ந்தாள் அவள். “தொடாதீர் என்னை! என்னைத் தொட எவருக்கும் அருகதை இல்லை. நான் முழுக்க முழுக்க இந்த மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீகாலவ பர வாசுதேவனின் அடிமை. அவரின் சேவைக்கெனவே பிறந்துள்ளேன். அவர் பார்த்து உமக்கு அநுமதி கொடுக்கவேண்டும். மேலும் உமக்கு அதற்கான தகுதியும் இருக்கவேண்டும். உமக்குத் தகுதியும் இருந்து ஸ்ரீகாலவ வாசுதேவரின் அநுமதியும் கிட்டினால் தான் என்னைத் தொட முடியும்!” என்று வெகு அலக்ஷியமாய்ச் சொன்னாள். என் மனதில் பேரிடி விழுந்தது. அவள் சொந்த விஷயங்களைக் கூடப் பெரியப்பனின் அநுமதி இன்றிச் செய்ய மாட்டாளாமே! அவள் ஆசையைக் கூட அடக்கிக் கொள்வாளா?? எத்தகையதொரு அவமானம்?? அவள் ஸ்ரீகாலவனைத் தவிர வேறு எவரையும் ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. இந்த உண்மை என்னைப் பெருநெருப்பாகச் சுட்டது. வேறு வழியில்லாமல் அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். அந்தக் கணம் என் மனதில், ஆழ் மனதில் ஏதோ சுக்கு நூறாக உடைந்து போனது. அவளுடன் இருப்பதும், அவளைப் பார்ப்பதுமே சந்தோஷம் என நினைத்துக்கிளம்பி வந்தேனே, அது இனிமேல் நான் உணர முடியாத ஒன்று என்றும் எனக்குப் புரிந்து போனது. ஆனால், ஆனால், இனி நான் திரும்புவது என்பது?? ம்ஹும், அதுவும் நடக்க முடியாத ஒன்று. நன்றாக ஏமாந்து போனேன்.

1 comment:

priya.r said...

நல்ல பகிர்வு
படிக்க படிக்க சுவாரஸ்யம் கூடி கொண்டே போகிறது
கண்ணன் வர என் தாமதம் ஆகிறது கீதாம்மா!
கண்ணனை பார்க்க ஆவலாக இருக்கிறது