Friday, September 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேதுவின் வீழ்ச்சி!

ஸ்வேதகேது, உம் இந்த நிலைக்கு என்ன காரணம்?? அதை முதலில் சொல்லுங்கள். கண்ணன் வந்து கட்டாயம் உம்மை இதிலிருந்து மீட்பான்.” என்றான் புநர்தத்தன். “ஒருவராலும் மீட்கமுடியாத அதல பாதாளத்தில் விழுந்துவிட்டேன்!” என்ற ஸ்வேதகேது, தான் இந்தக் கரவீரபுரத்திற்கு வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். “உத்தவா, நீயும், கண்ணனும் புண்யாஜனா கப்பலுக்குச் சென்றுவிட்டீர்கள். அப்போது எனக்கு ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. பிரபாஸ க்ஷேத்திரத்தில் உள்ள மஹாதேவர் கோயில் இருக்கும் ஊருக்குச் சென்று மஹாதேவரை, அவரை அங்குள்ளவர்கள், “சோமநாதர்” என்னும் பெயரால் வணங்குகின்றனர். அந்த சோமநாதரைத் தரிசிக்கச் சென்றிருந்தேன். கடற்கரையோரம் எழுப்பப் பட்டிருக்கும் அந்தக் கோயிலில், மஹாதேவரை வணங்கிவிட்டு, வெளியே வந்து கரையோரத்தில் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்து கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது……..””ஸ்வேதகேதுவின் குரல் தழுதழுத்தது.

அவன் குரலில் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு உணர்வு. சமாளித்துக்கொண்டு, “கடலே ஒரு பெண்ணாக உருவெடுத்து வந்ததா? அல்லது கடல் கன்னி, கடல் கன்னி என்பார்களே அவளா இவள்?? என்னும்படியான ஒரு செளந்தர்ய தேவதை கடலில் இருந்து தோன்றினாள். ஒரு கணம் என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. பின்னர் புரிந்தது. அவள் மானுடப் பெண்தான் என்றும், கடலில் குளித்துக் கொண்டிருந்தாள் என்பதும் புரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கக் கூடாது என்று என் உள்மனம் எச்சரித்தாலும் என் கண்கள் அவளை விட்டு நகரவே இல்லை. இவளை ஏற்கெனவே எங்கேயோ பார்த்திருக்கிறோமே, அதான் திரும்ப யோசிக்கிறோம் என்று என்னை நானே சமாதானமும் செய்து கொண்டேன். கடலில் இருந்து தோன்றிய அந்தப் பெண் இப்போது கரைக்கு வர ஆரம்பித்தாள். நடையா, நடனமா என்னும்படிக்கு அவள் நடையில் ஒரு நளினம். இவ்வளவு அழகோடு ஒரு பெண்ணால் நடக்க முடியுமா? அவள் நடக்கிறாளா இல்லை மிதந்து மிதந்து வருகிறாளா? மீண்டும் என் மனம் என்னை இது தப்பு, ஒரு அந்நியப் பெண்ணை இப்படிப் பார்க்கக் கூடாது என்று எச்சரித்தது. உடனேயே அவளை எங்கே பார்த்தோம் என்பதும் நினைவில் வந்தது. பிரபாஸ க்ஷேத்திரத்தில் நாம் முகாமிட்டுப் பாடங்களை நடத்திக்கொண்டிருந்த சமயம் இவள் ஆயுதப் பயிற்சி நடக்குமிடத்திலோ அல்லது நான் வேதங்களை ஓதிக் கற்பித்துக் கொண்டிருக்கும் இடத்திலோ காணப்படுவாள். அந்தப் பெண்ணை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத செளந்தரியம் உள்ள இத்தகைய பெண்ணும் இந்தப் பூமியில் வசிக்கிறாளா என்னும்படி அவள் அழகு நம்மைக் கட்டிப் போடும். அவ்வப்போது என்னைப் பார்த்து அறிமுகமாய் ஒரு சிரிப்பையும் உதிர்ப்பாள்.”


ஸ்வேதகேதுவிற்கு இப்போது கண்களில் இருந்து கண்ணீரே வர ஆரம்பித்துவிட்டது. “அவள் யார் என என் நினைவில் வந்ததும், அவள் என்னருகே வருவதும் சரியாக இருந்தது. என்னருகே வந்த அவள் ஒரு கணம் நின்று, என்னைப் பார்த்தாள். அவள் கண்களின் ஒளியால் அந்த இடமே பிரகாசமாக ஆனாற்போல் இருந்தது. உத்தவா! நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு பெண்ணை மட்டுமல்ல, இப்படி அழகான கண்களையும் பார்த்தது இல்லை. கடலென விரிந்த அந்தக் கண்களில் மிதக்கும் நாவாய்களைப் போன்ற கண்ணின் கருமணிகள். அவை சொல்லும் செய்திகள்! எப்போதும் ஒரு மயக்கத்தில் இருப்பது போலவே அரைக்கண் மூடினாற்போல் இருக்கும் அந்த விழிகள் முழுவதையும் திறந்து அவள் நம்மைப் பார்த்தால், ஆஹா, இந்த விழிகளாகிய கடலில் நாம் மூழ்கிவிடுவோம் என்பதாலேயே இவள் அரைக்கண்களை மூடியே வைத்திருக்கிறாளோ எனத் தோன்றும். இப்போதும் அப்படியே தன் விழிகளால் என்னை அப்படியே விழுங்கி விடுவது போலவே பார்த்தாள்.”

“என் உடல் புல்லரித்தது. அந்த விழியாகிய கடலில் நீந்தி, நீந்திப் போகமாட்டேனா என நினைத்தேன். அப்போது, இனிமையான தன் குரலால் அவள் என்னிடம், “கோயிலில் உங்கள் மந்திர ஜபங்களை நான் கேட்டேன். இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு படித்து அறிஞராய் இருக்கிறீர்களே!” என்று வியந்தாள். என் வாழ்நாளில் இப்படி ஒருத்தர் முகத்துக்கு நேரே என்னை மட்டுமல்ல வேறு எவரையும் புகழ்ந்து கேட்டிராத என்னை அவள் வார்த்தைகள் கிறுகிறுத்துப் போக வைத்தன. அவளோ தொடர்ந்து, “என்னுடன் வருவீர்களா?? பக்கத்தில் ஒரு சோலையில் நாங்கள் கூடாரம் அடித்துத் தங்கி இருக்கிறோம். நீங்கள் இளம்பிள்ளைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதைக் கூடப் பார்த்தேனே. அற்புதமான மனிதர் நீங்கள்!’ என்னைப்போதை கொள்ள வைத்தன இந்த வார்த்தைகள். ஒரு பெண்ணின் அதுவும் அழகான ஒரு இளம்பெண்ணின் வாயிலிருந்து வந்த இந்த வார்த்தைகள் எப்பேர்ப்பட்ட மனிதனையும் போதையில் ஆழ்த்தும். “

குறுக்கிட்டுப் பேச வந்த உத்தவனையும், புநர்த்த்தனையும் கை சைகையால் நிறுத்திய ஸ்வேதகேது, மேலே தொடர்ந்தான். “மறுபடி நாம் தங்கி இருந்த இடத்திற்குச் சென்ற என்னால் எந்த வேலையையும் செய்யமுடியவில்லை. அவள் குரல் மட்டுமின்றி அவள் உருவமும் என்னை எங்கே போனாலும் துரத்திக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு வந்திருந்த அவள் உடலின் நறுமணம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்த பிரமையாகவும் இருந்தது. அப்போது என் நினைவில் வந்தது, நம் குருதேவர் சாந்தீபனி சொன்ன அறிவுரை: “உன் தாயையும், மனைவியையும், சகோதரியையும் தவிர மற்ற எந்தப் பெண்ணாய் இருந்தாலும் அவரோடு தனித்து இருக்காதே!” என்ற குருதேவரின் இந்த எச்சரிக்கை என் நினைவில் மோதினாலும் அவளுடைய அழகு இதை எல்லாம் தூரப் போட்டு மறக்கடித்தது."


“அவள் அழைப்பிற்கு இணங்கி அவளுடன் அந்தச் சோலைக்குச் சென்றேன். அங்கே தான் அவள் ஒரு இளவரசி என்றும் அவள் பெயர் ஷாயிபா என்றும், கரவீரபுரத்தின் மாமன்னன் ஆன ஸ்ரீகாலவ வாசுதேவனின் சகோதரன் மகள் அவள் என்றும் தெரிந்து கொண்டேன். “ என்றான் ஸ்வேதகேது. “யார் அது?? மன்ன்னுக்கு அருகே, வீற்றிருந்த ராணிக்கு உதவி செய்வது போன்ற தோற்றத்துடன் காட்சி அளித்தாளே ஓர் இளம்பெண்? அவளா? நீ சொல்லும் ஷாயிபா??” உத்தவன் கேட்க ஸ்வேதகேது அதை ஆமோதித்தான். “அவளே தான். ராணிக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் எப்போதுமே அவள் அருகே இவள் உதவிக்கு நின்றுகொண்டிருப்பாள். இந்த ஸ்ரீகாலவ வாசுதேவன் பிரபாஸ க்ஷேத்திரத்துக்கு வந்தபோது அந்தக் குறிப்பிட்ட சோலையில் தான் தங்கி இருந்து புனிதப் படுத்தினான் என்பதால் இவர்களுக்கு அது ஒரு பூஜிக்கத் தக்க இடம் என்பதால் அங்கே வந்திருக்கிறார்கள். அங்கே தங்கிவிட்டுப் பின்னர் கரவீரபுரத்துக்குப் போன ஸ்ரீகாலவன் அதன் பின்னரே தன்னை, பரவாசுதேவனாக அறிவித்துக்கொண்டிருக்கிறான். நான் சென்ற போது அங்கே ஸ்ரீகாலவனின் பாதுகைகளுக்கு வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஷாயிபா தான் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தாள். தன் தகப்பனின் சகோதரன் மேல் அவள் கொண்டிருக்கும் பக்தியை என்னவென்று சொல்வது?? ஸ்ரீகாலவனைத் தவிர வேறு எவரையும் அவளால் வாசுதேவன் என ஒத்துக்கொள்ள முடியாது. அவனைத் தவிர வேறு யாரும் இவ்வுலகில் பெரியவர்கள் இல்லை. இப்படி ஒரு நம்பிக்கை கொண்டிருந்த ஷாயிபா வழிபாடுகளை நடத்திக் கற்பூர ஆரத்தியும் எடுத்தாள். அப்போது என்னை மந்திரங்கள் ஓதச் சொல்லி விண்ணப்பிக்க, நானும் மந்திரங்களை ஓதினேன். அதன் பின்னர் பிரசாதம் விநியோகிக்கப் பட்டது. எனக்கும் பிரசாதம் கொடுத்தார்கள். அதை உண்டதுதான் தெரியும். என் தலை விர்ர்ர்ரெனச் சுழல ஆரம்பித்தது. நான் இன்னும் நினைவோடு இருக்கிறேன் என்பதே எனக்கு அதிசயமாக இருந்தது.


ஷாயிபா அப்போது என்னை அழைத்துக்கொண்டு தனியே ஒரு பக்கமாய்ச் சென்று, என் காதுகளில் மந்திரங்களை ஓதினாள். அவை மந்திரங்களா, இன்னிசையா என்று எனக்குச் சந்தேகமாய் இருந்தது. அவ்வளவுக்கு அவள் குரலின் இனிமை மட்டுமே என் மனதில் பதிந்தது. கூடவே அவள் பெரிய தகப்பன் ஸ்ரீகாலவன் பற்றியும், அவனுடைய புனிதத் தன்மை பற்றியும், அவனுடைய வீரம் பற்றியும், கரவீரபுரத்தின் மேன்மை பற்றியும், அங்குள்ள மக்கள் எப்படி ஸ்ரீகாலவனை வழிபட்டு அதில் பெருமை கொள்கின்றனர் என்பது பற்றியும் ஏதேதோ சொன்னாள். எனக்கு அவள் என்னோடு பேசுகிறாள் என்பதே போதுமானதாய் இருந்தது. ஸ்ரீகாலவனை வழிபடுவதால் இவ்வுலகத்துத் தளைகளை எல்லாம் அறுத்துவிட்டு நிம்மதியாய் இருக்கலாம் என்றும் கூறினாள். அதுவும் என் போன்ற கற்றறிந்த, ஆயுதப் பயிற்சிகளில் தேர்ந்த, வேதங்களில் நிறைந்த அறிவு பெற்ற, ஒரு படித்த அந்தணன் ஸ்ரீகாலவனுக்கு வலக்கைபோல் செயல் பட்டால் இருவரும் இணைந்து ஒரு பொன் உலகையே ஸ்தாபிக்க முடியும் என்றும் அது ஸ்வர்க்கத்தை விட மேன்மையாய் இருக்கும் என்றும் கூறினாள். உத்தவா, என் மேல் இந்த ஏழை பிராமணன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை இவ்வளவா என யோசித்து ஆச்சரியப் பட்டேன். அவள் மேலும் மேலும் ஏதோ ஊற்றிக் கொடுத்தாள் எனக்கு. என்னவென்று கேட்காமல் அவற்றை வாங்கிக் குடித்தேன். நான் பறக்கிறேனா, இல்லை இந்தப் பூமியில் இருக்கிறேனா என்றே சந்தேகமாய் இருந்தது எனக்கு. நடுநிசியில் நான் நம் இருப்பிடம் சென்றேன். மறுநாள் குருதேவர் என்னைப் பார்த்து நேற்று எங்கே உன்னை வெகு நேரம் காணவில்லை எங்கே போயிருந்தாய் என்று கேட்டபோது என் வாழ்நாளில் முதல் முறையாகப் பொய் அதுவும் தந்தையை ஒத்த குருவிடம் பொய் சொன்னேன்."

"என்ன சொன்னேன் தெரியுமா?? கோயிலிலேயே தங்கி மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்ததாய்ச் சொன்னேன். உத்தவா! அப்போது குருதேவர் என்னைப் பார்த்த பார்வை! என் வீழ்ச்சி அப்போதே ஆரம்பமாகிவிட்டது!"

2 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

என்ன சொன்னேன் தெரியுமா?? கோயிலிலேயே தங்கி மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்ததாய்ச் சொன்னேன். உத்தவா! அப்போது குருதேவர் என்னைப் பார்த்த பார்வை! என் வீழ்ச்சி அப்போதே ஆரம்பமாகிவிட்டது

தாய் தந்தையிடம் பொய் சொன்னால் அவர்கள் சபித்தால்தான் அழிவு வரும் ஆனால் குருவிடம் பொய்சொன்னால் அழிவி தானேதேடி வரும்.
நல்ல கருத்துள்ள கதை

sambasivam6geetha said...

ஆஹா, நல்வரவு ஐயா, நீங்க இவ்வளவு தூரம் இங்கே தேடி வந்து பின்னூட்டம் அளித்தது உற்சாகத்தை அளிக்கிறது. நினைவில் வைத்திருப்பதற்கும் சந்தோஷம்! நன்றி.