Wednesday, September 15, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

உத்தவன் கவனிக்கிறான்!

இனி என்ன செய்ய முடியும்??? கரவீரபுரத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கே ஸ்ரீகாலவன் என்னை மிகவும் மரியாதையோடு வரவேற்றான். ராணுவப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் தலைமை ஆசாரியனாக நியமிக்கப் பட்டேன். உண்மையில் கரவீரபுரத்தின் இளைஞர்களில் எவருக்கும் ஆயுதப் பிரயோகமோ அஸ்திரப் பிரயோகமோ தெரிந்திருக்கவில்லை. ஓடும் ரதத்தில் நிற்பது பெரும் விந்தையாக இருந்தது அவர்களுக்கு. வில்வித்தையின் அடிப்படையே புரியவில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நான் வெகு விரைவில் மிகவும் அந்தரங்கமான வேலைகளுக்கும் அழைக்கப் பட்டேன். இங்கே தங்கமும், நவரத்தினங்களும் இறைபடுவதைப் பார்த்திருப்பாயே! எங்களுக்கு மட்டுமே தெரிந்த அடர்ந்த காடுகளில் இருந்து அவற்றைக் கொண்டு வருவோம். செல்லும்பாதையும் நாங்கள் மட்டுமே அறிந்த ஒன்று. வெகு விரைவில் இத்தகைய முக்கியப் பணிக்கு நான் பயன்படுத்தப் பட்டேன். “

“ஷாயிபா என்னவானாள்?”

“அவள் ஒரு மின்மினியைப் போல்! என்னைக் கவர்ந்து தன் பக்கம் இழுத்தாள். ஆனால் அவள் பிடிபடவே இல்லை. என்னைக் கவர்ந்திழுக்க அவள் செய்த உபாயத்தை நான் மிகத் தாமதமாக நன்கு புரிந்து கொண்டேன். அவள் முழுக்க முழுக்கத் தன் சேவையைத் தன் பெரியப்பனுக்கு அர்ப்பணம் செய்திருந்தாள். ஆனால் என்னை அவள் சிறிதும் நம்பவில்லை. நான் அவள் அளவுக்கு அவள் பெரியப்பாவின் சேவையில் முழுமையாக ஈடுபடவில்லை என்ற சந்தேகம் அவளுக்கு இன்னமும் இருக்கிறது. என்னுடைய படிப்பிலும், வித்தையிலும், அஸ்திர, சாஸ்திரப் பிரயோகத்திலும் அவள் மகிழ்ச்சி அடைந்தாலும், எனக்கு அவள் பெரிய தந்தையிடம் முழுமையான பக்தி இருக்கிறதா என்பதை அவள் சோதித்துக்கொண்டே இருக்கிறாள். இவளால் நான் என் குருவை இழந்தேன், என் நாட்டை இழந்தேன், ஆனாலும் இவள் எனக்குக் கிட்டவும் இல்லை. உத்தவா, என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. மூர்க்கமாய்க் கோபம் வருகிறது.” ஸ்வேதகேது நீண்ட பெருமூச்சு விட்டான்.

“இத்தனைக்கும் பிறகு நீர் இங்கு வந்து அந்தக் குள்ளநரி ஸ்ரீகாலவனை நாங்கள் பரவாசுதேவன் என ஒப்புக்கொள்ளவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறீரா? ஸ்வேதகேது, நீர் எமக்கு வேதம் கற்றுக்கொடுத்த ஆசாரியனாக மட்டுமில்லாமல் நல்லதொரு நண்பராகவும் இருந்து வந்திருக்கிறீர். உமக்கு எப்படி மனம் வந்தது?”

“போம், போம், போய் இந்தத் தபஸ்விகளிடம் கேளும், குள்ளநரி ஸ்ரீகாலவனைப் பரவாசுதேவனாக ஒப்புக்கொள்ளுங்கள் என்று இறைஞ்சி மன்றாடும். அப்போது தான் அந்த மாயப் பெண் மோகினியின் ஒரு சிறு புன்னகை உமக்குக் கிட்டும். முதலில் அதைச் செய்யும்!” ஆத்திரத்துடன் கூறினான் உத்தவன். ஸ்வேதகேது கண்ணீர் ததும்பத் தழுதழுக்கும் குரலில், “உத்தவா, நான் பாவி. மீளமுடியாத நரகத்தில் விழுந்துவிட்ட பாவி. என்னை எவராலும் மீட்கமுடியாது. நான் இங்கிருந்து சென்றுவிடுகிறேன். இனி திரும்ப வரமாட்டேன்.” என்றான். “ஆஹா, ஸ்வேதகேது, நீர் மட்டும் தப்ப நினைக்கிறீரோ?? இது எவ்வாறு என்னையோ, புநர்தத்தனையோ, இந்தத் தபஸ்விகளையோ காக்கும்??? நாம் அனைவருமே இங்கிருந்து தப்ப ஒரு வழி சொல்லும். முதலில் கிருஷ்ணனுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். இல்லாவிடில் அவனும் இங்கே வந்து இந்த நரகத்தில் மாட்டிக்கொள்வானே!” கவலையுடன் உத்தவன் கூறினான். ஸ்வேதகேது திட்டவட்டமாய் மறுத்தான். “என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது. நான் ஸ்ரீகாலவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன்.” என்றான்.

“ஆஹா, நீர் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றிப் பேசுகிறீரா? நீர் முதலில் குருதேவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தீர். அவர் மனம் உடையக் காரணமானீர். உம் இந்திரியங்கள் சொன்ன வழி சென்று, உணர்வுகளுக்கு அடிமையாகி, உம் கடமையை மறந்து நம் சநாதன தர்மத்துக்கும் மிகப் பெரிய துரோகத்தைச் செய்தீர். அது போகட்டும், இப்போது கிருஷ்ணன் போன்ற நெருங்கிய நண்பனுக்கு உதவி செய்வதன் மூலம் எங்களை எல்லாம் இங்கிருந்து தப்புவித்தால் உம் வாழ்வில் ஒரு முறை நீர் ஸ்ரீகாலவனுக்கு துரோகம் செய்துவிட்டீர் என்பதை ஷாயிபா அறிந்து கொள்ள மாட்டாள். அவளால் இதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பயப்படாதீர்!” ஏளனம் தொனிக்கச் சொன்னான் உத்தவன். அப்போது அங்கே புநர்த்த்தனின் பாட்டனாரான, ருத்ராசாரியார் அந்த வழியே நீர்நிலைக்கு அநுஷ்டானங்கள் செய்யச் சென்றவர் இவர்கள் இருவரும் பேசுவதைக் கண்டு சற்று நின்றார். ஸ்வேதகேதுவைப் பார்த்து, “மகனே, ஸ்ரீகாலவனைக் கடவுள் என்றும் பரம்பொருள் என்றும் பரவாசுதேவன் என்றும் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்கத் தானே வந்தாய்?” என்று கேட்டார். ஸ்வேதகேது அவர் முகத்தைக் காண வெட்கம் கொண்டு தலையைத் தாழ்த்திக்கொள்ள, அவர், அவனிடம், “மகனே, இந்த உலகின் கடைசி ஆண்மகனாக ஸ்ரீகாலவன் இருந்தாலும் கூட அவனைப் பரவாசுதேவன் என ஒப்புக்கொள்ள முடியாது. அவன் பொய்யிலேயே வாழ்பவன். அவனைப் பர வாசுதேவன் என ஒப்புக்கொள்வதை விட மரணத்தை வரவேற்கும் ஆண்கள் இவ்வுலகில் இன்னும் இருக்கின்றனர். அவனிடம் நான் சொன்னேன் என்று போய்ச் சொல்.” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

ஸ்வேதகேதுவுக்கு என்னசொல்வதென்று புரியவில்லை. ஒரு காலத்தில் அவனும் உண்மையைக் கண்டறியும், உண்மையைப் போதிக்கும், ஞாநத்தை நாடும் ஞாநத்தைப் போதிக்கும் ஒரு ஆசாரியனாக இருக்கவேண்டும் என்றே விரும்பினான். ஆனால் இன்றோ, காலம் செய்த கோலம், அப்படிப் பட்ட ஒரு ஆசாரியரைத் தன்னைப் போல் ஸ்ரீகாலவனின் அடிமையாக்க நினைத்து வந்திருக்கிறான். இதைவிட ஒரு ஆசாரியரைத் தாழ்த்த முடியுமா?? சட்டென்று ஏற்பட்ட ஒரு எண்ணத்தில், “உத்தவா, நான் உங்கள் அனைவரையும் தப்புவிக்க எண்ணுகிறேன். சொல், என்ன செய்யலாம்?” என்று கேட்டான். சிறிது நேரக் கலந்தாலோசனைக்குப் பின்னர், கீழே விழுந்து கிடந்த ஸ்வேதகேதுவின் உதவியாளின் ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த உத்தவன் ஸ்வேதகேதுவுடன் அவன் வந்த வாளியிலே ஏறிக்கொண்டு மேலே சென்றான்.

மறுநாள் காலை வழக்கம்போல் கரவீரபுரத்தின் மாளிகை ஸ்ரீகாலவனின் வருகைக்கும், அவனுக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளுக்கும் காத்திருந்தது. மாளிகையின் பெரிய முற்றத்தில் போட்டிருந்த உயர்ந்த ஆசனம் ஸ்ரீகாலவனுக்குக் காத்திருந்தது. அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருமே ஸ்ரீகாலவனின் வருகைக்குக் காத்துக்கொண்டிருந்தனர். அனைவரும் நின்றுகொண்டே இருந்தனர். மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த்து. அங்கே ஸ்வேதகேது அனைவரையும் ஒழுங்கு செய்து கொண்டு முக்கியப் பொறுப்பில் இருந்தான். அவன் கண்ணுக்குத் தெரிகிற மாதிரியான ஒரு மூலையில் உத்தவன், கரவீரபுரத்தின் அதிகாரிகளுக்கான உடையணிந்து கொண்டு நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைக் காணக் காத்திருந்தான். அவன் மாலை வரை பொறுத்தே ஆகவேண்டும். ஸ்வேதகேது அதன் பின்னரே அவனைத் தப்ப வைக்க முடியும் என்று கூறிவிட்டான். சற்று நேரத்தில் வாத்தியங்கள் அனைத்தும் முழங்க, சங்குகள் ஊதப்பட்டன. ஸ்ரீகாலவனைப் பரம்பொருளாக அங்கீகாரம் செய்த வேத வித்துவான்கள் அவனை வாழ்த்தும் வேத மந்திரங்களைச் சொல்ல, மற்ற மக்கள் அனைவரும், ஸ்ரீகாலவனை வாழ்த்திப் பாட, சற்று நேரத்தில் உயர்ந்த பட்டாடைகள் தரித்து, விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டு ஸ்ரீகாலவன் அங்கே பிரவேசித்தான்.

மக்கள் அனைவரும் ஒருவர் விடாமல் கீழே விழுந்து வணங்கினர். கீழே விழுந்த மக்கள் ஸ்ரீகாலவன் அவனுடைய ஆசனத்துக்கு அருகே சென்றதும் மக்களுக்கு ஆசிகள் கூறும் விதமாய்க் கைகளைத் தூக்கிக் கொண்டு ஆசிகள் கூறினதுமே எழுந்துகொண்டனர். சங்குகள் மீண்டும் முழங்கின. அப்போது அங்கே ராணி பத்மாவதி வருகிறார் என்ற கட்டியக் குரலைத் தொடர்ந்து வந்தவர்கள்;, அடடா! என்ன இது?? இவள் யார்? மானிடப் பெண்ணா? மாயமோகினியா? கண்ணிமைக்கும் நேரம் உத்தவனின் இதயம் இயங்க மறுத்தது. ஒரு அழகான பெண், ராணி போல் அலங்கரிக்கப்பட்ட இன்னொரு வயதான பெண்ணைத் தன் கரங்களால் பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தாள். இவள் தான் ஷாயிபாவா? அன்று அரைகுறையாகப் பார்த்தோம் அல்லவா? இப்படி ஒரு அழகான பெண்ணா? சந்திரன் தன் கிரணங்களை நேரே இவள் உடலில் பாய்ச்சிவிட்டானா? இல்லாவிடில் இவ்வளவு குளுமை ஏது?? ஆஹா, அந்தக் கண்கள்! கண்களா இவை, கடல்! இவள் மெல்லிய உடல் இவள் நடக்கிறாளா, மிதக்கிறாளா என்னும் சந்தேகத்தை உண்டாக்குகிறதே! விண்ணிலிருந்து நேரே கீழே இறங்கிய தேவதையோ? இல்லை, இல்லை, கால்கள் கீழே படுகின்றன. மேலும் அந்தக் கண்களின் இமைகள் மூடிக்கொள்வது சிப்பி ஒன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று விழும் மழைத்துளியைப் பிடித்துக்கொண்டு மூடிக்கொள்வது போல் காட்சி அளிக்கிறது. ஸ்வேதகேது கூறியது அனைத்தும் உண்மையே. உத்தவனுக்கு ஸ்வேதகேது இந்தப் பெண்ணிடம் மயங்கியதோ, இவளுக்காக குருவை விட்டு விலகியதோ தவறாய்த் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஸ்வேதகேதுவை மன்னிக்கக் கூடத் தயாராகிவிட்டான் உத்தவன்.

அவள் கண்களின் ஒளி அந்த இடத்தையே பிரகாசப் படுத்திய மாதிரி தோன்றிற்று உத்தவனுக்கு. அவளுடைய வடிவான காதுகளில் அணிந்திருந்த வைர அணியானது தன் ஒளியை அவள் கன்னத்தில் தாராளமாக வாரிச் சொரிந்துகொண்டிருந்தது. அந்த ஒளியின் பிரகாசத்தால் அவள் முகமே ஏதோ ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது. அவளுக்கு நேர்மாறாகக் காட்சி அளித்தாள் ராணி பத்மாவதி. துயரமே ஒரு பெண்ணாக வடிவெடுத்து நடமாடுவது போல் காட்சி அளித்தாள். ஒரு காலத்தில் மிக அழகானதொரு பெண்ணாகவே இருந்திருக்கிறாள் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்த்து. இப்போது இளைத்துச் சோர்ந்து போய், வயதுக்கு மீறிய முதுமையுடன் காட்சி அளித்தாள். அவள் ஸ்ரீகாலவனைப் பார்க்கும் பார்வையில் அன்பை விடப் பயமும், மிரட்சியுமே அதிகம் தெரிந்தது. மேலும் உத்தவன் நன்கு கவனித்ததில் அந்தப் பெண்மணி தன் வாழ்நாட்களைப் பயத்திலேயே கழித்து வந்திருக்கவேண்டுமென்றும் தோன்றியது. மேலும் ஷாயிபாவின் ஆதிக்கத்தை விட்டு அவள் இம்மியளவு கூட நகரமுடியவில்லை என்பதும் ஷாயிபாவை அவள் அடிக்கடி இறைஞ்சுவது போல் பார்த்ததில் இருந்து தோன்றியது. இப்படி ஒரு ராணியா? உத்தவன் மனதில் அவள் மேல் இரக்கம் சூழ்ந்தது.

2 comments:

Jayashree said...

நிறைய விழயங்கள் புதுசா இருக்கு. இந்த ஷாயிபாவை கேட்டதே இல்லையே! interesting

priya.r said...

நல்ல பகிர்வு
படிக்க படிக்க சுவாரஸ்யம் கூடி கொண்டே போகிறது
சாயிபா பற்றிய வர்ணனைகள் வியப்பை அளிக்கிறது !!