Thursday, September 2, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

ஸ்வேதகேது, உமக்கா இந்த நிலை??

உத்தவனுக்கு எவ்வாறேனும், அந்தக் கிணற்றுக் குகையில் இருந்து தப்பிக் கிருஷ்ணனிடம் போய் இங்குள்ள ஆபத்துகளைப் பற்றிச் சொல்லும் ஆசை வந்தது. ஆனால் எவ்வாறு தப்பிப்பது?? புநர்த்த்தன் தப்பவே முடியாது என்று திட்டவட்டமாகச் சொன்னான். இங்கிருந்து தப்ப வந்த வழி ஒரே வழிதான் எனவும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஸ்ரீகாலவனின் அதிகாரிகளில் ஒருவர் இங்கே வந்து, ஸ்ரீகாலவனைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளச் சம்மதிப்பவர்களை விடுவிக்க வந்திருப்பதாய்க் கூறுவதாயும், அதற்கு இது வரை எவரும் சம்மதிக்கவில்லை என்றும் கூறினான். நாளை அல்லது மறுநாள் அந்த அதிகாரி வரலாம் என்றும் கூறினான். தன்னுடைய பாட்டனாருக்கும் மற்றவர்களுக்கும் உத்தவனை அறிமுகம் செய்து வைத்தான் புநர்தத்தன். உத்தவன் அவர்களுக்குக் கண்ணன் கோமந்தக மலையில் செய்த சாகசங்களையும், மதுராவில் கம்சனைக் கொன்றது பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினான். இங்கிருந்து எவ்வாறேனும் தப்பிவிடவேண்டும் என்ற தன் தீராத ஆசையையும் கூறினான். அப்போது புநர்தத்தனுக்கு ஒரு யோசனை தோன்ற உத்தவனிடம் அதைப் பகிர்ந்து கொண்டான். உத்தவனும் அது நல்லயோசனை என்று கூறினான். இருவரும் மறுநாள் வரப் போகும் அதிகாரிக்காகக் காத்திருந்தனர்

மறுநாள் அந்தக் கிணற்றுக் குகைக்குள் ஒரு வலுவான வாளியில் இரு நபர்கள் அமர்ந்து கொண்ட வண்ணம் உள்ளே மேலிருப்பவர்களால் இறக்கப் பட்டனர். இருவரின் ஒருவர் ஸ்ரீகாலவனின் அதிகாரி, மற்றவர் அவருக்கு உதவியாய் வந்தவர். இருவரும் அந்தச் சமவெளிக்குச் செல்ல ஆரம்பித்தனர். இருட்டாக இருந்த அந்தப் பிரதேசத்தில் ஏற்கெனவே பலமுறை வந்து போன அநுபவத்தால் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். திடீரென அந்த அதிகாரியின் மேலே உத்தவன் பாய அதிகாரி திடுக்கிட்டுச் சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தார். மற்றவன் மேல் புநர்த்த்தன் பாய, சற்றும் பழக்கமே இல்லாத அவன் வெகு விரைவில் தோல்வியுற்றுக் கீழே விழுந்தான். ஆனால் உத்தவன் சமாளிக்க வேண்டி இருந்தது, தேர்ந்ததொரு மல்யுத்த வீரனை என்பதை வெகு விரைவில் அவன் புரிந்து கொண்டான். அவனை மடக்க உத்தவன் செய்த முயற்சிகளின் போது உத்தவனை வீழ்த்த அவன் போட்ட ஒரு பிடி உத்தவனை ஆச்சரியப் பட வைத்த்து. அது குரு சாந்தீபனியின் சீடர்கள் மட்டுமே அறிந்த அபூர்வப் பிடியாகும் அது. தன்னையுமறியாமல் உத்தவன், “சாந்தீபனியின் பிடி?? இல்லையா?” என்று கேட்க, அந்த அதிகாரியும் ஆச்சரியமடைந்தான். அந்த ஒரு விநாடியைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குத் தக்க எதிர்ப்பிடியைப் போட்டு அவனை வீழ்த்தினான் உத்தவன். அந்த அதிகாரி, “ஆம், நான் சாந்தீபனியின் சீடன் தான். நீயுமா?” என்று கேட்க. அவன் குரலைக் கேட்ட உத்தவன் ஆச்சரியத்துடன், “ஸ்வேதகேது, நீங்களா?” என்றான்.

“உத்தவா!” என்றான் ஸ்வேதகேது கண்களில் கண்ணீர் ததும்ப. கண்ணன், பலராமன், உத்தவன் ஆகியோருக்கு சாந்தீபனியின் நடமாடும் குருகுலத்தில் வேதங்கள் அனைத்தையும் கற்பித்தது ஸ்வேதகேது தான். தன்னை மீறிய ஆர்வத்தோடும், அன்போடும் ஸ்வேதகேது உத்தவனை அணைத்துக்கொள்ள உத்தவனும் அவன் அன்புப் பிடியில் திணறினான். புநர்தத்தனை குருவின் மகன் என்று அறிமுகம் செய்து வைத்தான். கண்ணன் வைவஸ்வத புரியிலிருந்து அவனை மீட்டு வந்ததைப் பராபரியாகக் கேட்டிருந்த ஸ்வேதகேது அவனையும் அன்போடு அணைத்துக் கொண்டான். “எவ்வாறு இந்த நரகத்துக்கு இருவரும் வந்தீர்கள்?” என்று ஸ்வேதகேது கேட்க, புநர்தத்தனோ, “நீங்கள் எப்படி இங்கே வந்து ஸ்ரீகாலவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள்?? சாந்தீபனி ஆசாரியருக்கு மிகவும் மனதுக்கு நெருங்கிய சீடர் நீங்கள். உங்களை அவருக்கு மிகப் பிடிக்கும். என்னை பாஞ்சஜனா ராக்ஷசன் கடத்திச் சென்ற சமயம் நீங்கள் அங்கே என் தகப்பானாரின் ஆசிரமத்தில் இருந்தீர்கள் அன்றோ? ஆனால் கண்ணனால் நான் மீட்கப் பட்டுத் திரும்பியபோது நீங்கள் அங்கே இல்லையே? ஆஹா, இருந்திருந்து ஸ்ரீகாலவனுக்கு ஊழியம் செய்யவா இங்கே வந்தீர்கள்? உங்கள் தகுதிக்கு இது ஒப்புமா? இன்று வரை உங்களை இங்கே நான் கண்டதுமில்லையே?” என்றான்.

அதற்கு ஸ்வேதகேது, “ஆம், இது என் வேலை இல்லைதான். ஆனால் இன்று ஒரு சிறப்பு விருந்தினர் இந்த நரகத்துக்கு வந்திருப்பதாய்த் தெரிவிக்கப் பட்டு அவரைச் சந்திக்கவேண்டும் என்று என்னை அனுப்பி வைத்திருக்கின்றனர். உங்கள் இருவரில் எவரைச் சொன்னார்கள் எனப் புரியவில்லை. ஆனாலும் பதின்மூன்று வயதான ரிஷிகளும் இரு இளைஞர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லப் பட்டது. “

“ஓஹோ, அந்தச் சிறப்பு விருந்தினன் வேறு யாரும் இல்லை. நான் தான். “ என்றான் உத்தவன். “ஆனால் என்ன ஒரு சந்திப்பு! நாங்கள் இருவரும் உங்கள் மாணாக்கர்கள். இந்த முதியவர்கள் அனைவரும் அனைத்தும் அறிந்த ஆசாரியர்கள். நாங்கள் அனைவரும் ஒரு தர்மத்தைக் காக்கவேண்டி இந்த நரகத்தில் அடைபட்டிருக்கிறோம். எங்கள் இருவரின் குருவான நீரோ, வெளியே ஆடம்பரத்திலும் சொகுசு வாழ்க்கையிலும், பண சுகத்திலும் மிதந்து கொண்டு இருக்கிறீர்.” என்றான்.

“ஓஓஓஓ, உத்தவா, என்னைப் பார்த்தால் அப்படிப் பணக்காரப் பிரபு போல் தெரிகிறதா?” என்றான் ஸ்வேத கேது. “நான் ரொம்பவே மாறிவிட்டேனா?” என்றும் வினவினான்.
“என்ன ஆயிற்று? எங்கள் மூத்த சகோதரருக்கு ஒப்பான நீர் இவ்விதம் மாறும்படியாக என்ன நடந்தது? கண்ணனுக்கு மிகவும் நெருக்கமானவர் அன்றோ நீர்?” என்றான் உத்தவன்.
“ஹா, என்ன ஆயிற்று எனக்கு?? ஒன்றும் ஆகவில்லை. நான் எப்போதும் போல்தான் இருக்கிறேன்.”

“ஆஹா, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், சகோதரரே! அறிவினாலும், விவேகத்தினாலும், ஞாநத்தினாலும் ஒளிவிட்டுப் பிரகாசித்த உங்கள் கண்கள்! அவற்றை இப்போது காணோமே? உங்கள் முகமே அறிவொளியினால் சுடர் விட்டுப் பிரகாசிக்குமே? எங்கே ஐயா அந்த அறிவொளி?? உங்கள் உடல் தவத்தினாலும், சீலத்தினாலும் கட்டுக்குலையாமல் இரும்பென இருந்ததே? அந்த ஒரு பிடி, குருதேவர் நமக்கு மட்டுமே கற்பித்த அந்தப் பிடி, அதை நீர் பிரயோகிக்காவிட்டால், உங்களை நான் கண்டறிந்து கொள்வது கடினமே ஐயா. தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு ஆபரணங்களாலும், அழகிய பட்டாடைகளாலும் அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கும் உம்மை, ஒரு சாதாரண மானுடன் தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக்கொள்வதை அங்கீகரித்திருக்கும் உம்மை, நான் புரிந்து கொண்டிருப்பது கடினமே!” உத்தவனின் கோபம் அடங்கவே இல்லை.
“இரு உத்தவா, அப்படியெல்லாம் பேசாதே! என் உதவியாளுக்கு நினைவு தெளிந்து கொண்டு அனைத்தையும் பார்த்துக் கேட்டுப் புரிந்து கொள்ளப் போகிறான்.” ஸ்வேதகேது சொன்னான்.

“ஐயா, சாந்தீபனியின் சீடர் ஆன நீர், கேவலம் ஒரு உண்மையைப் பேசுவதால், அல்லது அந்த உண்மையைக் கேட்பதால் கேடு விளையும் என்று நம்ப ஆரம்பித்தது எப்போது?” சாதாரணமாய் மென்மையாய்ப் பேசும் உத்தவன், ஸ்வேதகேதுவின் தவசீலத்தையும், ஒழுக்கத்தையும் பற்றி நன்கு அறிந்திருந்தான். ஆகையால் அப்படிப்பட்ட ஸ்வேதகேதுவின் இந்தக் கீழான நிலைமை கண்டு கொதிப்படைந்திருந்தான்.

2 comments:

priya.r said...

நல்ல பகிர்வு

priya.r said...

கண்ணன் வர ஏன் தாமதம் ஆகிறது கீதாம்மா