Friday, December 10, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!


 உத்தவனுக்குப் புரிந்தது!

“கண்ணா, உன் விவேகம் எங்கள் அனைவருக்கும் வந்தால்???...” உத்தவன் பெருமூச்சு விட்டான்.  

“அப்படியா உத்தவா?? உனக்கு அப்படித் தோன்றுகிறதா?  எனில் நான் சொல்வதை நீ ஏற்கலாமே?? “ கிருஷ்ணன் இப்போது நிச்சயமாய்க்குற்றம் சாட்டும் தோரணையில் உத்தவனைக் கடிந்து கொண்டான்.  “இதோ பார் உத்தவா, ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் பந்தம் வாழ்நாள் பூராவும் நீடித்து நிற்கவேண்டும்.  மரணம் என்பது ஒன்றே அவர்களைப் பிரிக்க முடியும்.  இந்த உலகத்தின் மாந்தர்களைக் கடவுள் அவர்களைக் கருவியாகக் கொண்டு அவர்கள் மூலமே சிருஷ்டிக்கிறார்.  இல்வாழ்க்கையில் அறம் முக்கியம்.  இல்லற தர்மம் என்பது கணவன், மனைவி இருவரும் மனமொத்து அநுஷ்டிக்கவேண்டிய ஒன்று.  அந்த அற்புதமான இல்லற தர்மத்தை நீ உன் அற்ப ஆசைக்காகப் பொசுக்கிவிடாதே! குளிர் காய மூட்டப் பட்டிருக்கும் நெருப்பில் வேள்வித் தீயை எங்கனம் உண்டாக்குவாய்?? வேள்வித்தீ அணையாமல் பாதுகாக்கவேண்டிய ஒன்று. “

“அந்த வேள்வித் தீ தான் இவ்வுலகைக் காக்கும் அக்னி.  இதற்குப் பெரிய தியாகங்கள் செய்யவேண்டும்.  நம் ஆசைகளைத் துறக்கவேண்டும்.  ஆசைகளே இல்லாதவனே பெரிய செயல்களை எளிதில் சாதிப்பான். “ கண்ணன் கண்கள் கனவுலகில் ஆழ்ந்தது போல் தோன்றின.  தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் அவன் மேலும் மேலும் பேசிக்கொண்டிருந்தான். “ நீ ஒரு பெண்ணை விரும்பினாயெனில் கட்டாயமாய் அவளுக்குப் பரிசாக ஏதேனும் தரவேண்டும்.  ஒரு பரிசு, சிறிய பரிசு, அல்லது அவள் வசிக்க ஒரு அழகான சிறிய வீடு, வாழ்நாள் முழுதும் அவளைப் பாதுகாப்பேன் என்ற உன் உறுதிமொழி, இத்தனையும் தேவை.  அப்படியும் உனக்குக் கிடைப்பது என்னமோ அவளுடைய உடலும், அவள் உனக்கெனச் செய்யப் போகும் சேவைகளும்தான்.  ஆனால் அது மட்டுமே போதுமா உனக்கு?? உனக்கென ஒருத்தி, உன்னையே கடவுளாக நினைத்து என்றென்றும் வணங்கும் ஒருத்தி, உன் வீட்டு வேள்வித் தீயை உனக்காகப் பாதுகாக்கும் ஒருத்தி  கிடைக்கவேண்டுமெனில் நீ உன்னை இன்னமும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.  உன் மனம் தெய்வீகப் பாதையில் சென்றால் மட்டும் போதாது.  தர்மத்தை உன் குறிக்கோளாக வைத்துக்கொள்ளவேண்டும்.  எந்நிலையிலும் உனக்கென உள்ள தர்மத்தைக் கைவிடக் கூடாது. உன்னையே அதில் ஆஹுதியாக இடவேண்டுமென்றாலும் அதற்கும் நீ தயாராக வேண்டும்”

“குழப்பாதே கண்ணா, எனக்கு ஒன்றுமே புரியவில்லை.  நான் எப்போதுமே உனக்காகவே வாழ்ந்து வந்திருக்கிறேன்.  நீ என்ன சொல்கிறாயோ அதற்குக் கீழ்ப்படிந்திருக்கிறேன்.  இப்போதும் இந்த விஷயத்திலும் நீ என்ன சொல்கிறாயோ அதையே செய்யத் தயாராய் இருக்கிறேன்.  உன்னால் எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்க முடிகிறது.  என்னால் முடியவில்லை.”

“என்றால் யோசி என் சகோதரனே, ஷாயிபா உனக்கு வழியோடு செல்லும்போது குளிர்காயக் கிடைக்கும் நெருப்பா? அல்லது உன் வீட்டு வேள்வித்தீயைப்பாதுகாத்து உனக்காக என்றென்றும் அணையாமல் பாதுகாக்கும் உன் குடும்ப விளக்கா?  ஆஹா, அவள் நிச்சயமாய் ஓர் அற்புத அழகு படைத்த பெண் தான். மறுக்கவே இல்லை. அவள் அழகு எப்படிப்பட்ட மனிதரையும் வீழ்த்திவிடும்.   ஆனால் அவள் தன் மாமனுக்குக் காட்டிய அதே அர்ப்பணிப்பு உணர்வோடு வேறு எவரையும் தனக்குக் கணவனாக ஏற்றுக்கொண்டு செம்மையான இல்லற வாழ்க்கையை மேற்கொள்வாளா என்பது சந்தேகமே.  அவளைப் போன்றவர்கள் அவர்களாகத் தங்கள் மனதை மாற்றிக்கொண்டால் உண்டு.  தற்சமயம் அவள் மாபெரும் காட்டுத் தீயைப் போல் தானும் எரிந்து கொண்டு மற்றவர்களையும் எரிக்க முயல்கிறாள். ம்ஹும், அவள் குளிர் காய மூட்டப் பட்டிருக்கும் தீயாய்க் கூட இல்லை அப்பா, அப்புறம் அல்லவா அவளை வேள்வித்தீயாகவோ, குடும்ப விளக்காகவோ பார்க்க முடியும்?? ஸ்வேதகேது நான் சொன்னதை ஏற்றுக்கொண்டுவிட்டான்.  ஷாயிபா தானாக மாறினால் ஒரு வேளை ஸ்வேதகேதுவும் அவளை ஏற்றுக்கொள்ளலாம்.  தற்சமயம் அவனும் அவளிடம் தீராத வெறுப்புடனேயே இருக்கிறான்.”

“என்னையும் அப்படியே இருக்கச் சொல்கிறாயா?”

“ஆம் உத்தவா, தற்சமயம் அதுதான் நன்மை பயக்கும் செயல்.  உங்கள் இருவரில் ஒருவர் முயன்று பாருங்கள்.  அவளைச் சிறிதேனும் மாற்ற முடிகிறதா என.  யாருக்குத் தெரியும்?  இந்தக் காட்டுத்தீ திடீரென்று அடங்கினாலும் அடங்கலாம்.  அல்லது வேறு யாரேனும் புதியவரை இனி இவரே தன் கடவுள் என அறிமுகமும் செய்யலாம்.” கண்ணன் யோசனையோடு கூறினான்.

“ஆஹா, அவளை மறப்பது கஷ்டம், மிக மிகக் கஷ்டம், கண்ணா!”

“ஓ, அதனால் என்ன?/ கஷ்டமான வழி தான் எப்போவும் சிறந்ததாய் இருக்கும்.  மனமும் உடலும் ஒருமித்துத்  தபஸின் வழி செல்வது கஷ்டம் தான். ஆனால் அந்த வழியில் தானே நம் உடல் மட்டுமில்லாமல் மனதும் புனிதமாகிறது??  ஆண்களாகிய நாம் இந்தத் தபஸை மேற்கொள்ளவில்லையெனில் இப்படிக் காட்டுத் தீயைப் போன்ற ஷாயிபா மட்டுமின்றிப் பல பெண்களும் காட்டுத் தீயாகவும், குளிர்காய மூட்டப் படும் வழி நெருப்பாகவும் மாறிவிடுவர்.  ஆத்திரமும் ஆங்காரமும், கொண்டு கோபம் தணியாமல் ருத்ரனைப் போல் அனைவரையும் அழிக்கக் கிளம்புவார்கள்.  பின்னர் மனித குலமே நாசமடையத் துவங்கும்.  ஆணும், பெண்ணும் இணைந்து இருப்பதில் தான் மனித குலத்து மேன்மையும்,  நன்மையும் இருக்கிறது.  அதை விடுத்து  நாம் நம் தர்மத்தைக் கைவிட்டால் குடும்ப உறவுகள் அறுந்துவிடும்.  நம் முன்னோர்களின் பாரம்பரியக் கோட்பாடுகளும், நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களையும் மறந்து ஒரு காட்டு வாழ்க்கை வாழ ஆரம்பிப்போம்.  உலகை ஒருங்கிணைத்திருக்கும் அந்த மந்திரச் சங்கிலி அறுபட்டால் உலகத்து மாந்தரெல்லாம் துன்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.  ஆணும், பெண்ணும் பொறுப்பில்லாமல், எதற்கும் லாயக்கில்லாதவர்களாய் மிருகங்களை விடக் கீழே தாழ்ந்த நிலைக்குச் செல்லுவார்கள். தர்மம் எங்கே இருக்கும்??  எல்லாம் முற்றிலும் அழிய ஆரம்பிக்கும்.”

உத்தவன் தலைகுனிந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான்.  “இன்று வரையிலும் உன்னிடம் இப்படி எல்லாம் நான் பேசினது இல்லை உத்தவா, ஏனென்றால் அப்படி ஒரு சமயம் வாய்க்கவில்லை.  ஆனால் உத்தவா, கேள், எந்நிலையிலும்,எக்காரணத்தைக் கொண்டும் நாம் தர்மத்தைக் கைவிடக் கூடாது.  நாம் இன்னும் தொலைதூரம் செல்லவேண்டும்.  நம் வாழ்க்கைப் பயணம் இப்போது தான் ஆரம்பம் ஆகி இருக்கிறது.  இந்த சமயத்தில் நாம் நிலை பிறழ்ந்தால்?? உத்தவா, என் அருமை உத்தவா, நீஇல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னால் என்ன செய்ய முடியும்?  நீ என் மேல் வைத்திருக்கும் விசுவாசம், நம்பிக்கை என்னை என்றும் நல்வழியில் நடத்தி வந்திருக்கிறது உத்தவா,  அதை மறக்காதே! அதே போல் இனி வரப்போகும் நாட்களிலும் நீ அதே விசுவாசத்தையும் நம்பிக்கையும் காட்டினாயானால் இன்னமும் அதே நல்வழியில் நான் செல்ல முடியும்.  எனக்கு உதவி செய்வாயா உத்தவா?”

“ஓ, கடவுளே, என் கடவுளே, என்னை மன்னித்துவிடு கண்ணா, மன்னித்துவிடு.  உன்னுடைய இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்?? முதலில் நான்  இத்தகைய உயர்ந்ததொரு அன்புக்குப் பாத்திரமானவனே அல்ல.  நீ ஆணையிடு கண்ணா, எனக்கு ஆணையிடு,  நான் என்ன செய்யவேண்டும் என்று சொல், நான் அதைச் செய்து முடிக்கிறேன்.” உத்தவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.


1 comment:

priya.r said...

பதிவுக்கு நன்றி கீதாம்மா