Sunday, December 5, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2.ம் பாகம்!

 ராதைக்கேற்ற கண்ணனோ?

“உத்தவா, நீ உண்மையாகவே ஷாயிபாவை மனமார விரும்புகிறாயா?  அவள் மேல் நீ கொண்டிருக்கும் காதல் என்னும் உணர்வு வெறும் உடல் சம்பந்தப் பட்டதா? அல்லது உன் மனமும் அவளை விரும்புகிறதா?  அவளை நீ அடையவேண்டும் என்று நினைக்கிறாயா?”

“கண்ணா, அவள் எனக்கு வேண்டும்தான்,  அதே சமயம் நமக்கெல்லாம் அருமையான சிநேகிதரும், நமக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்த ஆசானுமான ஸ்வேதகேதுவுக்கு நான் துரோகம் இழைக்கவும் விரும்பவில்லை.  என் நண்பனுக்கு நான் உண்மையாக நடந்து கொள்ளவேண்டும்.”

“எந்தப் பெண்ணோடும் நீ உன்னை, உன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்ளலாம்.  உன் அன்பாகிய அக்னி தற்சமயம்  காட்டு நெருப்பைப் போன்றது.  அதை நீ ஒரு தியாக நெருப்பாக மாற்று, வேள்விகளில் பயன்படுத்தப்படும் தூய்மையான அக்னியாக மாற்று.  காட்டு நெருப்பு அழிக்கத் தான் செய்யும், எவருக்கும் இதத்தைக் கொடுக்காது.  வேள்வித் தீயோ அனைவரையும், புனிதப் படுத்தும், மாசுக்களை நீக்கும்.”

கண்ணா, என்ன சொல்கிறாய்??  ஏன் காட்டுத்தீ  என்கிறாய்?”

“உத்தவா, அக்னி ஆக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். அழிவை நினையாமல் ஆக்கபூர்வமான பிரயோகங்களில் உன் அன்பாகிய தீயைச் செலுத்து.  காட்டு வழிகளில் பிரயாணங்கள் செய்யும்போது ஆங்காங்கே குளிர் காய நெருப்பு மூட்டப் பட்டிருக்கும் பார்த்திருக்கிறாயா?”

“ஆம், கண்ணா, அவற்றில் இன்னும் கட்டைகளைப் போட்டு நாமும் குளிர் காய்ந்திருக்கிறோமே?”


“நமக்கு முன்னால் அதில் குளிர் காய்ந்துவிட்டுச் சென்றவர்களைப் பற்றியோ, அந்த அக்னியை முதலில் மூட்டியவர் யார் என்றோ நீ அறிவாயா? நாம் எவருமே அறிய மாட்டோம். அல்லவா?  அதே போல் நமக்குப் பின்னர் யார் வந்து அந்த நெருப்பில் குளிர்காய்வார்கள் என்பதையும் நாம் எவ்வாறு அறிவோம்? அது திடீரென அணையவும் செய்யும். தொடர்ந்து எரிவதும் நிச்சயம் இல்லை.  நாம் நம் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு சென்று விடுவோம்.  அப்படித் தான் உனது இந்த அன்பும்.  உன் மனதுக்கு இதத்தைத் தருகிறதென  மட்டுமே நினைக்கிறாய்.  உனக்கு இது தேவை என நீயாக நினைக்கிறாய்.  இதன் பின் விளைவுகள் பற்றி உன் மனம் எண்ணிப் பார்க்கவில்லை.  இது உன்னை எங்கே இட்டுச் செல்லும், எவ்வளவு ஆழத்தில் நீ மூழ்கிவிடுவாய்? உன்னால் எழுந்திருக்க முடியுமா என்றெல்லாம் நீ எண்ணிப் பார்க்கவில்லை. “

“கண்ணா, வார்த்தைகளால் என்னைக் கொல்லாதே!”

“இல்லை உத்தவா, அப்படி எதுவும் இல்லை.  பிரயாணங்களில் கிடைக்கும் பிரகாசமான பயங்கரமான செளந்தரியம் உடைய  காட்டு நெருப்பு அந்த நேரத்துக்கு மனதுக்கும், உடலுக்கும் இதத்தைக் கொடுக்கும்தான்.  அது அந்த நேரம் தேவையாகவும் இருக்கும்.  ஆனால் கண்ணைக் கூச வைக்காத இதமான பாதுகாப்போடு எரிக்கப் படும் வேள்விக்குண்டத்து வேள்வித் தீயோ என்றும் நிரந்தரம்.  உன் வீட்டில் எரியப் போகும் வேள்வித் தீயை நீ ஒரு நாளும் அழிக்க முடியாது.  அது தொடர்ந்து எரிந்தால் தான் உனக்கும், உன் குடும்பத்துக்கும், ஏன் உன் வருங்காலச் சந்த்திகளுக்குமே நன்மை பயக்கும்.  “ கண்ணன் தன் மந்திரக்குரலில் இவற்றைக் கூறிக்கொண்டே உத்தவன் தோள்களில் தன் கைகளை வைத்தான்.  அந்தக் குரலில் தெரிந்த அக்கறை, கனிவு, நம்பகத் தன்மை உத்தவனைக் கவர்ந்தது.  “கண்ணா, புதிர் போடாதே அப்பா. என் போன்ற சாமானியனுக்குப் புரிகிறாப் போல் பேசு! என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்?”

“உனக்கு ஷாயிபாவோடு உன் வாழ்நாள் முழுதும் கழிக்க விருப்பமா?? அவளும் அதற்கு இணங்குவாள் என்று தோன்றுகிறதா?” கண்ணன் மீண்டும் கேட்டான்.

“கண்ணா, அவள் எனக்கு வேண்டும்தான், ஆனால் ஸ்வேதகேது??” உத்தவன் மறுப்போடு தலையசைத்தான்.  “ என் நண்பனுக்கு என்னால் துரோகம் இழைக்க முடியாது அப்பனே!”

“என்றால் நீ உன்னுடைய கொள்கையில், உறுதியாய் இரு.  நண்பன் தான் முக்கியம் என்றால் இனி நீ ஷாயிபாவை அதற்குரிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பி.  உனக்கு நீயே உண்மையானவனாய் நடந்து கொள்.  அவள் மேல் அன்பு செலுத்து.  அந்த அன்பை உனக்குத் திரும்பத் தரவேண்டும் என எதிர்பாராதே.  அர்ப்பணிப்பு உணர்வோடு அவள் மேல் பக்தி செலுத்து.  உனக்குக் கிடைக்கும் எந்த விலை உயர்ந்த  அரிய  பொருளையும் அவளிடம் கொடுத்து அவளைச் சந்தோஷப் படச் செய்.  நாளாக நாளாக உன் மனமும், உடலும் பண்பட்டு இந்த மகத்தான வேள்வித் தீயில் நீ எரிந்து போகாமல் உன்னைப் பாதுகாக்கும்.  உனக்கு ஆத்ம பலத்தைக் கொடுக்கும்.  எல்லாவற்றிலும் சிறந்த பலம் ஆத்மபலம் தான் உத்தவா.  ஆத்மபலம் உள்ளவன் எத்தகைய எதிரியையும் சுலபமாக வெல்வான். நேருக்கு நேர் சண்டையிடவே வேண்டாம்.”

“ஆனால்?? அதெல்லாம் சரிதான் கண்ணா.  அவள் எப்படி எனக்குரியவள் ஆவாள்? நான் அவளை எனக்குரியவளாக்கிக்கொள்ள முடியாதே?”

“ஆஹா, உத்தவா? வேள்வியின் ஆகுதியாக உன்னை நீயே மாற்றிக்கொள்வாயா? அல்லது வேள்வியை நடத்தும் ஆசானாக உயரிய இட்த்தில் வீற்றிருக்கப்போகிறாயா? இல்லை உத்தவா, இல்லை, வேள்வித் தீயில் நீ உன்னுடைய ஆசைகளை ஆகுதியாக இட்டுப் பொசுக்கினால் தான் உனக்கு அதன் நற்பயன்கள் கிடைக்கும்.   உன்னுடைய இந்த ஆசைகளை நீ வேள்வித்தீயில் வேண்டிப் பெற முடியாது.”

உத்தவன் கண்ணீரோடு, “ஷாயிபா எனக்குச் சொந்தமானவள் அல்ல என்று நினைக்கும்போதே நான் பைத்தியமாகிவிடுவேன் கண்ணா!” என்றான்.  அவன் குரலின் பரிதாபம் கண்ணன் மனதைத் தொட்ட்து.
“உத்தவா, எனக்கு மட்டும் தெரியாதா என்ன ஷாயிபாவின் அற்புத அழகைப் பற்றி?? நானும் அறிவேன்.  அறிவும், அழகும் நிறைந்த தைரியமான பெண் அவள்.  ஆனால் அவளின் அற்புத சக்தியெல்லாம் தவறான இடத்தில் தன் பக்தியை அவள் செலுத்தியதால் வீணாகிவிட்டது.  நான் முதல்முறை அவளைப் பார்த்த்துமே அவள் அழகு, வீரம், அவள் ஸ்ரீகாலவன் மேல் கொண்டிருக்கும் பக்தி, விசுவாசம் எல்லாமே என் மனதைத் தொட்ட்து.  ஆனால் அவை தவறான இடத்தில் வைக்கப்பட்டுவிட்டது.  எனினும் அவளைக் கண்டதுமே என் மனக்கடிவாளத்தை நான் அடக்கிவிட்டு அவளுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்திவிட்டேன்.  உத்தவா, இம்மாதிரியான ஓர் அரணை ஏற்படுத்திக்கொள்வதால் தான் நான் சந்திக்கும் எல்லாப் பெண்களிடமும் என்னால் சரளமாய்ப்பழக முடிகிறது.  ஏன் என் தாய் யசோதை, கோபிகா ஸ்த்ரீகள், விசாகா, ராதா, தேவகி அம்மா, திரிவக்ரை என எல்லாப் பெண்களையும் இப்படிப் பார்ப்பதினாலேயே என்னால் அவர்களின் அன்பில் ஆழ்ந்து மூழ்கிப் போய்விடாமல் இருக்க முடிகிறது.  அந்த அன்பை நான் வாங்கிக் கொள்வதற்கும் மேல் அதிகமாய்ச் செலுத்திவிடுகிறேன்.  அதனால் என் மனமும் அமைதியாய் இருக்கிறது.  எனக்கு எந்தச் சலனமும் ஏற்பட்டதில்லை.”

“கண்ணா, கண்ணா, உன்னை மாதிரியும் ஒருவர் இருக்க முடியுமா? உன்னால் தான் முடியும் அப்பா.  என்னால் முடியாது.  உனக்கும் எனக்கும் நடுவிலே இருந்த அப்பழுக்கற்ற உறவு கூட இப்போது என் இந்த நடவடிக்கையால் மாசுபட்டுவிட்ட்தே கண்ணா!”

“உத்தவா, நான் உனக்குக் காட்டுகிறேன், எவ்வாறு பாதுகாப்பு அரணை நிர்மாணித்துக்கொண்டு பழகவேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறேன்.  என்னைப் பொறுத்தவரையில் அது ஒன்றும் கஷ்டம் இல்லை.  ஆனால் உத்தவா?? உன் உடலிலும், மனதிலும் நூறு நூறு கூரிய முட்களால் குத்திப்புண்ணாவது போல் உணர்வாய், உன்னால் அதைத் தாங்க முடியுமா?  முட்கள் கீறி ரத்தம் கசியும், வெளியே தெரியாது, ஆனாலும் அந்தக் காயத்தைப்பொறுத்துக்கொண்டுதான்  ஷாயிபாவுடன் நீ சேர்ந்தே இருக்க நேரிடும்,  தினம் தினம் அவளைப் பார்த்தாகவேண்டும்,  உன்னால் முடியுமா?”

“கண்ணா, ஏன் என்னை இதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறாய்? என்னை மிகவும் வருத்துகின்றன இவை எல்லாம்.  அவள் எனக்கு, எனக்கே எனக்கு என்று எப்போதுமே என்னோடு இருக்கவேண்டும் என, என்னவெல்லாமோ எண்ணுகிறேனே, ஆனால் அவள் எனக்கு ஒருநாளும் கிடைக்கப் போவதில்லை.” உத்தவன் குரலில் அழுகை.

‘சரி, உத்தவா, இப்போது நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லு.  ஷாயிபாவை நீ திருமணம் செய்து கொண்டு உன் வீட்டின் விளக்கு மட்டுமல்லாமல், உன் வீட்டு வேள்வித் தீயையும் அணையாமல் பாதுகாத்து, உனக்காகக் குழந்தைகளைப் பெற்று, உன்னோடு சேர்ந்து வளர்த்து, உன் குடும்பப் பாரம்பரியங்களையும், உன் குடும்பச் சம்பிரதாயங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறாயா?  உனக்கும், அவள் மூலம் நீ பெறப் போகும் உன் குழந்தைகளுக்கும் அவள் சிறந்ததொரு தாயாகவும், இல்லத்தரசியாகவும் இருந்து கடமையாற்றுவாள் என எதிர்பார்க்கிறாயா?  ஒரு கணவனாக உன்னையே அவள் சார்ந்தும், உன்னை அவள் நினைத்துக்கொண்டும் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறதா?”

“கண்ணா, தெரியலை, எனக்குப் புரியவில்லை, நான் அவ்வளவு தூரம் தொலைநோக்கோடு சிந்தித்துப் பார்க்கவில்லையே!”

“ம்ஹும், உத்தவா, நான் இதை எதிர்பார்க்கவில்லை உன்னிடம்.  நீ இவ்வளவு சுயநலவாதியாக எப்போது ஆனாய்?  அவளிடம் செலுத்தவென்று என்ன இருக்கிறது உன்னிடம்?? அவளை நீ உன் வாழ்க்கையில் எப்போதோ வந்து போகும் வசந்தத்தின் ஒரு சிறிய துகள் எனத் தான் நினைக்கிறாய்!  மின்மினிப் பூச்சியின் ஒரு கண நேர ஒளியைப் போல் அவள் மேல் நீ செலுத்தும் அன்பும் நிலையானது இல்லை. “

உத்தவன் எதுவுமே பேசவில்லை.

“மீண்டும் யோசித்துப் பார் உத்தவா.  உன் குடும்பத்து விளக்காக, ஒரு தெய்வீகத் தாயாக, நீயும், உன் குழந்தைகளும் மரியாதையோடும், புனிதமாகவும் நினைக்கும் ஒரு இல்லத்தரசியாக உன் குடும்பத்தால் முழுமையாகவும், உண்மையாகவும் நேசிக்கப் படுபவளாய் நீ ஷாயிபாவை எதிர்பார்க்கிறாயா, இல்லையா?”

“அதிலென்ன சந்தேகம் கண்ணா?”

“ஓ, அப்படியெனில், அவளுக்கு வயதாகி, இந்த அழகெல்லாம் போய், உடல் தளர்ந்து போயிருக்கும் காலங்களிலும் இதே அன்பை நீ அவளிடம் காட்டுவாய் அல்லவா? மாற மாட்டாயே?  இப்போது கொழுந்து விட்டு எரியும் இந்த அன்புத் தீயை அணையாமல் பாதுகாத்து உனக்கும் அவளுக்கும் வயதானாலும் இதே ஒளியோடு எரிய விடுவாயா? அல்லது காலத்தின் கோலத்தால் தீ மெல்ல மெல்ல எரிந்து முடியும் நிலைக்குப் போய்விடுமா?”

“அதை நான் எப்படிச் சொல்ல முடியும்  கண்ணா? எனக்கு ஒன்றும் புரியவில்லை!”

“உன்னால் இதைக் கூடத் தெளிவாய்ச் சொல்ல முடியவில்லை என்றால், ஷாயிபாவை நீ எந்தப் பீடத்தில் ஏற்றி வணங்குவாய்? அவளை எவ்வாறு போற்றிப் பாதுகாப்பாய்?  அவள் அன்பின் நெருப்பு உன்னிடம் அணையாமல் இருக்குமா?"

கண்ணன் கண்கள் மெல்ல மெல்ல ஏதோ கனவில் ஆழ்ந்தவை போல் காணப்பட்டன.  கண்ணன் எங்கோ பார்த்துக்கொண்டு, ஆழ்ந்ததொரு நினைவில் மெதுவாய்ப் பேசினான்.  “உத்தவா, நீயும், அண்ணா பலராமனும் ராதையை நான் விருந்தாவனத்தில் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டேன் எனக் குறை கூறி வந்திருக்கிறீர்கள்.  அதற்காக என்னைக் கடிந்து கொண்டும் இருக்கிறீர்கள்.  ஆனால் உத்தவா, நான் அவள் அன்பை என் நெஞ்சத்தில் எரியும் நெருப்பாக, என்றென்றும் அணையாப் புனித வேள்வித் தீயாகப் பாதுகாக்கவே விரும்பினேன்.  நான் விருந்தாவனத்திலேயே இருந்து ஒரு மாட்டிடையனாகவே இருப்பேன் என எண்ணியே ராதையிடன் என் மனதைப் பறி கொடுத்தேன்.  அவளும் என்னை மனப்பூர்வமாக விரும்பினாள்.  ஆனால் அப்போது நான் அறிந்திருக்கவில்லை, நான் வசுதேவனின் குமாரன் என்றோ, என்றோ ஓர்நாள் மதுராவுக்கு நான் செல்லவேண்டும் என்பதோ எனக்குத் தெரியாது.  ஆனால் தெரிய வந்ததும், ராதையை விருந்தாவனத்தில் இருந்து மதுராவுக்கு அழைத்துக்கொண்டு வருவது பொருத்தமான ஒன்றாய் எனக்குப் படவில்லை.  அது ராதைக்கு நான் செய்யும் துரோகம் என்று தோன்றியது எனக்கு.  வசந்த காலத்தில் பூக்கும் மிக அபூர்வமான பூவைப் போன்ற ராதை, நகரத்தின் கடுமையான நாகரீகங்களில் நெருப்பிலிட்ட மலரைப் போல் வாடிவிடுவாள்.  இந்தக் கடுமையான, கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை அவளுக்குப் பழக்கம் இல்லை.  மேலும் எனக்கு என் தகப்பனுக்கு நான் செய்யவேண்டிய கடமைகள் இருக்கின்றன.   என் வழி ஒரு கடினமான பாதையாக மாறிவிட்டது.  இந்தப் பாதையிலிருந்து நான் விலக முடியாது.  விலகவும் கூடாது.  அவற்றைத் தட்ட முடியாது.  எல்லாவற்றுக்கும் மேல் மதுராவுக்கு  வந்ததுமே நான் வாசுதேவ கிருஷ்ணனாக ஆகியும் விட்டேன்.”  கண்ணன் குரலில் ஒரு கசப்புணர்வு தென்பட்டதோ?”  ஆனால் நான் ராதையைப் பொறுத்த மட்டில் “கானா”.  இந்த வாசுதேவ கிருஷ்ணனிடம் அவள் அவளுடைய கானாவைக் காண முடியாது.  ஓ, இவ்வுலகத்திற்கு நான் செய்யவேண்டிய கடமைகள் நிறையவே உள்ளன.   அவற்றையும் என் பிறப்பின் காரணத்தையும் விட்டுவிட்டு நானும் அவள் மனதுக்குப் பிடித்த, அவ்வளவு ஏன் அவளின் மூச்சுக்காற்றாகவே இருந்த  ஓர் இடைச்சிறுவனாய் அவளிடம் போய் நிற்க முடியாது.  இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்துவிட்டே நான் ராதையைப் பிரிந்தேன்.  ஆனால் உத்தவா, உனக்குப் புரியுமா இல்லையா தெரியாது.  அவள் அன்பு என்னை ஒரு கவசம் போலக் காத்து வருகிறது.   அதே போல் என் அன்பையும் அவளுக்கெனப் பாதுகாத்து அவளிடம் அளித்துவிட்டேன் .  அது அவளைக் காக்கும்.  நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும் எங்கள் உள்ளத்து அன்பெனும் நெருப்பு அணையாமல் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது.  எங்கள் அன்பின் அணையாத அந்த நெருப்பின் வெம்மை தான் எனக்குச் சக்தியையும், பலத்தையும் அளிக்கிறது. ”  கண்ணன் குரலில் இனம் தெரியாத ஆழமான சோகம்.

2 comments:

எல் கே said...

இந்தப் பகுதி ரொம்ப அருமை. குறிப்பா உத்தவனிடம் அவர் உரையாட ஆரம்பித்ததில் இருந்து அட்டகாசம். இன்று நெறையப் பேர் படிக்க வேண்டிய ஒன்று

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க, ஆனாலும் எனக்கு என்னமே கண்ணன் இராதையை விட்டு விட்டார்ன்னு தோனுது, இந்த ஜீவாத்துமா, பரமாத்துமா கதை எல்லாம் ஒரு சாக்குன்னு நினைக்கின்றேன். பாவம் இராதை, ஆனாலும் பாருங்க, எல்லாரும் இராதா கல்யாணம் என்றுதான் சொல்கின்றார்கள், யாரும் ருக்குமனி கல்யாணம் செய்வது இல்லை. இதுவே இராதைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கிகாராம் என்றுதான் சொல்ல வேண்டும்.