Tuesday, December 14, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

 பிக்ரு சம்மதித்தான்!

“அதை எல்லாம் விட்டுத் தள்ளு பிக்ரு.  நாம் புண்யாஜனா ராக்ஷசர்களைக் கடலிலும், நிலத்திலும் அடியோடு அழிக்கப் போகிறோம்.  குஷஸ்தலை இப்போது இருப்பதை நிர்மூலம் ஆக்கிவிட்டுப் புதிதாய் நிர்மாணிக்கப்போகிறேன். “ பலராமன் திட்டவட்டமாய்ச் சொன்னான்.  “ஓஓஓ, பலராமா, நீ அவர்களைச் சாதாரணமாய் எண்ணிவிட்டாய் போலும்! அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் அப்பா!” என்றான் பிக்ரு.  “நான் செய்வேன், செய்துமுடிப்பேன்.” கொஞ்சம் கோபத்தோடு சொன்ன பலராமன், மேலும் தொடர்ந்து,”நீ எங்களுடன் சேர்ந்து கொண்டாலும் சரி, இல்லை என்றாலும் பரவாயில்லை, நான் எடுத்த காரியத்தைத் தொடர்ந்து முடிப்பேன்.  ஆனால் நீ சேர்ந்தாயானால் நாங்கள் பிடிக்கும் அனைத்துக்கப்பல்களுக்கும் உன்னையே சொந்தக்காரனாக்குவேன்.  நீ சேரவில்லை எனில் குஷஸ்தலை, புண்யாஜனா ராக்ஷசர்களோடு சேர்ந்த அந்தக் கப்பல்கள் அனைத்தையும் அழித்துவிட்டுக் கடைசியில் உன்னையும் அழிப்பேன்.” சொன்னதைச் செய்துவிடுவானோ என்னும்படி பலராமன் குரலில் தீவிரமான உணர்வு தெரிந்தது.

“ஆஹா, நீ என் எஜமான் அன்றோ?? என்னிடம் இவ்வளவு கோபம் கொள்ளலாமா?? சொன்னால் கேள், அந்தப் புண்யாஜனா ராக்ஷசர்கள் பலம் பொருந்தியவர்கள். அவ்வளவு எளிதில் அவர்களை வெல்ல முடியாது.”

“அதனால் என்ன?? ஜராசந்தனையும் இப்படித்தான் இந்த பூமியிலேயே பலம் பொருந்திய சக்கரவர்த்தி என்றார்கள்.  கடைசியில் நாங்கள் அவனை விரட்டி அடித்தோம்.  இன்னொன்று தெரியுமா உனக்கு?? கடலும் கண்ணனின் சொல்படியே கேட்கும்.  கோமந்தகாவிற்குத் தீ வைக்க முயலும்போது அதை அணைக்கக் கண்ணன் கடலை ஆணையிட்டான்.  கடலும் பணிந்தது. “ பலராமன் கோமந்தகா மலையில் நடந்த நிகழ்வுகளை பிக்ருவிடம் எடுத்துச் சொன்னான்.

“எனக்குத் தெரியாதா பலராமா?  அவன் எங்களோடு கப்பலில் இருந்தவரையிலும் காற்று மாறி வீசியோ, புயல் அடித்தோ நாங்கள் கஷ்டப் படவே இல்லையே? எங்களுக்குச் சாதகமாகவே இருந்தது அன்றோ?”

“நாங்கள் எப்படியும் போகிறோம், பிக்ரு.  ஐந்து சிறு கப்பல்கள் உள்ளன எங்களிடம்.  என்ன எங்களுக்குக் குஷஸ்தலைக்குச் செல்ல நல்லதொரு வழிகாட்டி வேண்டும்.  கடலை நன்கறிந்த ஒருவன் தேவை.  அதுமட்டும் நீயாக இருந்தால்?? நீ வரச் சம்மதித்தால் இன்னும் ஆட்களைத் தயார் செய்து அவர்களை உன் கப்பலில் அழைத்துக்கொண்டு செல்லலாம்.  உன் கப்பல் பெரியது.”

“என்னால் முடியாது.” பிக்ரு மறுத்தான்.

“ஆஹா, நீ வெறும் சுக்கான் பிடித்துக்கொண்டு பாஞ்சஜனாவிற்கு அடிமையாய் இருந்த நாட்களை மறந்துவிட்டாயா?  கண்ணன் இல்லை எனில் உன் கதி?? நீ மட்டும் எங்களோடு வந்தாயெனில் புண்யாஜனாக் கப்பல்கள் அனைத்தும் உனக்கே உனக்கு. “

பிக்ருவின் கண்கள் ஆசையில் மின்னின.  அவன் பேரன் ஆன குக்குராவும், கப்பலின் தச்சனும் தற்போது அவர்கள் கூட்டாளியும் ஆன ராதுவும் ஆவலால் உந்தப்பட்டார்கள்.  இவ்வளவு நேரம் பொறுமையாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த உத்தவன் இப்போது பிக்ருவிடம், “கிருஷ்ணின் செய்தியை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்.”  என்றான். 

“என்ன அது?” என்றான் பிக்ரு.

“கண்ணன் என்னிடம் சொன்னது:”என் தகப்பனுக்கு இணையானவனும், என் அருமைச் சிற்றப்பனும்,  அருமை நண்பனுமான பிக்ருவிடம் சொல்லு. என் சகோதார்கள் ஆன குக்குராவுக்கும், ராதுவுக்கும் கூறு.  மேலும் கப்பலின் அனைத்து நண்பர்களுக்கும், முக்கியமாய் ஹூக்குவிற்கும், ஹூல்லுவிற்கும் சொல்லு.  நான் கூறினேன் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்.  இது அதர்மத்திற்கும், தர்மத்திற்கும் இடையிலான போர்.  தர்ம்ம் நிலைபெற வேண்டுமானால் புண்யாஜனா ராக்ஷசர்களால் அபகரிக்கப்பட்ட குஷஸ்தலை மீண்டும் அதன் உண்மையான உரிமையாளருக்கே வரவேண்டும்.  இதற்குப் புண்யாஜனா ராக்ஷசர்களை அழிக்க நேர்ந்தாலும் சரியே.  நானே நேரில் வந்து இந்த யுத்தத்தை நடத்தி இருப்பேன்.  ஆனால் பிக்ரு சித்தப்பா இருப்பது நானே அங்கு நேரில் இருப்பதற்குச் சமம்.”  இது தான் கண்ணன் கூறியது." என்றான் உத்தவன்.

பிக்ரு கண்ணீர் பொங்க மெளனமாக அமர்ந்து சற்று நேரம் சிந்தித்தான்.

“தாத்தா, கண்ணனின் அருமைச் சகோதரனை இப்படி நட்டாற்றில் விடலாமா?  இவருக்கு நாம் துரோகம் செய்தால் கண்ணனுக்கே செய்த மாதிரியாகுமே?  நம்மை நம்பியே கண்ணன் நேரில் வராமல் நம்மிடம் உதவி வேண்டி இவர்களை அனுப்பி உள்ளார்.” குக்குராவிற்குப் பெருமையாகவும் இருந்தது.  “நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புண்யாஜனா ராக்ஷசர்களை ஒழிப்போம்.  நம் கடவுளான கண்ணன் ஆணையை நிறைவேற்றுவோம்.”  என்றான்.

ராதுவும் அதற்குச் சம்மதித்தான்.  பிக்ரு மனதுக்குள் போராட்டம். பின்னர் பிக்ரு  பலராமன் பக்கம் திரும்பி, “ என் கடவுளே, உன் வேண்டுகோள் எங்களுக்கு ஆணைகளாகும்.  நானும் என் நண்பர்களும் எங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது உங்களுக்கு உதவுகிறோம்.  எங்கள் உயிரே உங்களுக்கும், கண்ணனுக்கும் உடைமையானது.  இந்தக் கப்பல் என்றுமே கண்ணனுடைய கப்பல்.  என்னுடையது என நான் நினைத்தவனே அல்ல.”  என்றான்.  என்றாலும் அவன் மனதுக்குள் புண்யாஜனா ராக்ஷசர்களை எதிர்ப்பது முட்டாள் தனம் என்றே பட்டது.  ஆனாலும் கண்ணன் கேட்டுவிட்டான்.  அவனுக்கு நாம் உடைமை.  நம் உயிர் அவனுடையது.  மேலும் நம் பேரனும் மாலுமிகளும் நம்மைக் கோழை என்று எண்ணிவிடுவார்கள். கண்ணனுக்கு உதவ மனம் இல்லை என நினைப்பார்கள்.  கொஞ்சம் கொஞ்சம் நம்பிக்கையும் எட்டிப் பார்த்தது அவன் மனதில்.  ஓர் ஓரத்தில் நம்பிக்கைக் கீற்றும் தெரிந்தது.  ஏனெனில் கண்ணன் இதைச் சொல்லி அனுப்பி இருக்கிறான் என்றால் அதில் ஓரளவு பொருள் இருக்கும்.  குஷஸ்தலையில் புண்யாஜனா ராக்ஷஸர்களின் போர்க்கப்பல் இருந்தால் என்ன செய்வது என்று கவலையும் வந்த்து பிக்ருவுக்கு. 

உத்தவன் அதற்கும் சமாதானம் சொன்னான்.  பலராமன் நம்முடன் இருக்கிறானே?? அவனால் முடியாதது என்ன?? அவன் ஆதிசேஷனுக்குச் சமமானவன் அன்றோ? என்றான்.  பலராமனுக்கு மகிழ்ச்சி பொங்கியது, “ஆம், ஆம், என் தந்தையே என்னிடம் கூறி இருக்கிறார்.  நான் ஆதிசேஷன் என்று.  நான் பிறக்கும்போது அப்படித் தான் இருந்தேனாம்.  நான் நிச்சயமாய்ச் சொல்கிறேன். அந்தப் புண்யாஜனா ராக்ஷசர்களை நான் அடியோடு ஒழிப்பேன்.” அவனுக்குத் தன்னை ஆதிசேஷன் என்று கூறியதில் மிகவும் சந்தோஷமாய் இருந்த்து.  அதற்கு ஆக்ஷேபணையும் தெரிவிக்கவில்லை. 


சில நாட்களில் தேவையான ஆயுதங்கள், உணவுப்பொருட்கள், குடிநீர் போன்றவைகளை நிரப்பிக்கொண்டு பிக்ருவின் கப்பலோடு சேர்ந்து மற்றச் சிறிய ஐந்து கப்பல்களும் பிரயாணத்துக்குத் தயாராயின.   பிரபாச க்ஷேத்திரத்தின் அரசன் அனைத்துக்கப்பல்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து நல்லதொரு நாளில் அவர்களுக்கு விடை கொடுத்தான்.  பலராமன் மிகவும் சந்தோஷத்துடன் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு அருகில் இருந்த ரேவதியைப் பார்த்துச் சிரித்தான்.  அத்தனை நாட்கள் கவலையுடனும், அவநம்பிக்கையுடனும் இருந்த ரேவதியும் அன்று மனம் மாறி பலராமனைப் பார்த்துச் சிரித்தாள்.  பலராமனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில் உத்தவனை அப்படியே தலைக்குமேல் தூக்கித் தட்டாமாலை சுற்றினான்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

மலைக்கு யாத்திரை போய் விட்டதால், பதிவுகளைப் படிக்க வில்லை. இப்போது மூன்று பதிவுகளையும் படித்து விட்டேன். மிக அருமை.

priya.r said...

பதிவுக்கு நன்றி கீதாம்மா ., கதை நன்றாக போகிறது .,கடல் வழியாக கப்பல் மார்க்கமாக போவது இப்போது தான் கேள்வி படுகிறேன் கீதாம்மா !