Thursday, December 30, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

பிக்ருவிற்குக் கப்பல்களைப் பிடித்ததோடு வேலை முடியவில்லை. அங்கே கப்பல் தலைவர்கள் அடிமைகளை அடைத்து வைத்திருந்த இடத்துக்குச் சென்று கதவை உடைத்து அனைத்து அடிமைகளையும் விடுவித்தான். பலராமனும் அவனுடன் சென்ற மற்றவர்கள் நடத்திய திடீர்த் தாக்குதலில் மொத்த நகரமும் நிலைகுலைந்தது. விடுதலை பெற்ற அடிமைகள் சந்தோஷம் தாங்க முடியாமல் பிக்ரு சொன்ன வேலையைச் சிரமேற்கொண்டு செய்ய ஆரம்பித்தனர். தங்கள் கண்களில் படும் நபர்கள் தங்களை எதிர்த்தால் உடனே அவர்களைக் கொன்று கொண்டு முன்னேறிச் சென்றார்கள் பலராமனும் குக்குட்மின் அரசனும். குஷஸ்தலை இத்தகையதொரு தாக்குதலை எதிர்பார்க்காமல் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. மேலும் புண்யாஜனா ராக்ஷசர்கள் கடலில் மட்டுமே வீரம் மிகுந்தவர்கள். தரைவழிச் சண்டை தெரியாததோடு வணிகத்திலே மட்டுமே கவனம் செலுத்தி வந்த தற்போதைய மக்களுக்குச் சண்டையின் அடிப்படையும் புரியவில்லை. எவ்வாறு எதிர்ப்பது எனவும் தெரியவில்லை. யுத்தத்தில் கைதேர்ந்த பல கப்பல்கள் கடலில் தொலைதூரத்துக்குத் தொலைதூரம் சென்றிருந்தன. இங்கே இருந்தவர்களில் தச்சுவேலை செய்யும் தச்சர்கள், மற்ற சிற்பவேலை செய்பவர்கள், பணம் லேவாதேவி செய்பவர்கள், வியாபாரிகள், தரகர்கள் போன்ற தொழிலில் ஈடுபட்டவர்களே ஆகவே பலராமனுக்கும், குக்குட்மினுக்கும் வெகு எளிதாக வெற்றி கிடைத்தது. அவர்களில் பலருக்கும் கையில் கத்தியைப் பிடிக்க்க் கூட்த் தெரியவில்லை.


அதன் பின்னர் அவர்கள் புண்யாஜனா மக்களின் கோயிலுக்குச் சென்று அங்கே மனிதர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தால் வழிபாடுகள் நடத்திக்கொண்டிருந்த பல பூசாரிகளைப் பிடித்துக் கொண்டு கோயிலை இழுத்து மூடினார்கள். மதுக்கடைகள் அனைத்தும் தாக்கப்பட்டன. பலராமனுக்கு மிகவும் சந்தோஷம். அவன் விருப்பத்துக்கு மதுவை மாந்தியதோடு ரேவதிக்கும் உபசாரம் செய்ய, ரேவதி கண்டிப்பாய் மறுத்தாள். உத்தவனிடம் கொடுக்க உத்தவனும் மறுத்து மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளுக்கு உத்தரவுகள் கொடுக்க ஆரம்பித்தான். மாலை ஆவதற்குள்ளாக பலராமனின் ஆட்கள் அனைவரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் மூழ்கினார்கள். குஷஸ்தலையின் தெருக்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் இருந்த்து. மறுநாள் வெற்றி பெற்றவர்களுக்கு அரச விருந்து வைத்துக் கொண்டாட, பிக்ருவும் குக்குராவும் அனைத்துக்கப்பல்களையும் கைப்பற்றிக்கொண்டு, அவற்றையும் துறைமுகத்தையும் சீர் செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர்.

ஒருவேளை தூரத்தில் சென்றிருக்கும் புண்யாஜனா கப்பல்கள் திரும்பித் தாக்கினால் என்ன செய்வது? ஆகையால் அதற்கான முன்னேற்பாடுகளை முதலில் செய்தனர். குக்குட்மின் அரசாட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு விசுவாசமாயும், உண்மையாயும் இருந்த அவர் இனத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் இந்த விஷயம் பரவியதும் தங்கள் மறைவிடங்களில் இருந்து தங்கள் குழந்தைகள், மனைவி, மக்களோடு குஷஸ்தலை நோக்கி விரைந்தனர். உத்தவன் குக்குட்மினின் அருகே எப்போதும் இருந்து தக்க ஆலோசனைகள் கூறி வந்தான். பலராமன் மிகவும் மகிழ்வோடு இருந்தான். அவன் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை. ரேவதி எங்கெல்லாம் சென்றாளோ அங்கெல்லாம் அவள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தான். ரேவதிக்கும் இப்போது பலராமன் மேல் தனி மதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆகவே அவனைப் பார்த்து அவ்வப்போது ஒரு புன்னகை, ஒரு தலையாட்டல், கடைக்கண்களால் பார்ப்பது, சிலசமயம் பலராமன் மேல் தான் வைத்திருக்கும் அன்பு புரியும்படியாக அவனை நேருக்கு நேர் பார்ப்பது, பின்னர் சட்டென்று அந்த இடத்தை விட்டுச் செல்லுதல் என்று பலராமன் மேல் தான் கொண்ட காதலைப்பரிபூரணமாய் வெளிப்படுத்திக்கொண்டிருந்தாள்.

மூன்று நாட்கள் வெற்றிவிழா நடந்து முடிந்தபின்னர் பலராமன் தன் ஆட்களைப் பார்த்து விரைவில் கிளம்பத் தயாராகச் சொன்னான். குஷஸ்தலையின் மக்களுக்கு பலராமன் ஒரு மாபெரும் அதிசயமாய்த் தெரிந்தான். அவன் ஆதிசேஷன் எனவும் ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷனின் பூரண அவதாரம் எனவும் அவர்கள்பரிபூரணமாய் நம்பினார்கள். ஆகவே பலராமன் செல்லுமிடமெல்லாம் அவனை வழிபட்டு வாழ்த்தினார்கள். பிரபாச க்ஷேத்திரத்தில் சண்டையிட்ட வீர்ர்கள் காடுகளில் மறைந்திருக்கும் நாகர்களிடம் செல்ல வேண்டிக் கிளம்பினார்கள். நாகர்கள் பரசுராமரைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டாடிவந்தனர். பல்லாண்டுகள் முன்னர் ஷர்யாத குலத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தங்களை விடுவித்த பரசுராமரை அவர்கள் எப்போதுமே மிகவும் மரியாதையுடன் வணக்கத்துடன் வணங்கிவந்தார்கள். அவர் எப்போது வேண்டுமானாலும் தங்கள் முன்னால் தோன்றித் தங்களை வாழ்த்துவார் எனவும் நம்பிவந்தார்கள்.


ஆகவே இப்போது பலராமன் அவருடைய முக்கிய சீடர்களில் ஒருவன் எனத் தெரிந்ததும், அவர்கள் காட்டில் தாங்கள் மறைந்திருந்த இடங்களில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கும் கிரிநகரின் அரசனையோ அந்த நகரின் குடிமக்களையோ பிடிக்காது. ஆகவே இப்போது கிரிநகரைத் தாக்கச் செல்லும் பலராமனுக்குத் துணையாகத் தாங்களும் சென்றார்கள். பலராமன் கிரிநகர் மலையின் அடிவாரத்துக்குச் சென்றதும் அங்கே கூடாரம் அடித்துத் தங்கினான். மலை அடிவாரத்திலோ மேலே கோட்டையின் வெளிப்புறத்திலோ மக்கள் நடமாட்டமே கண்களுக்குத் தெரியவில்லை. அனைவருமே கோட்டைக்குள் பதுங்கி இருந்தார்கள் போலும். அங்கே தாமகோஷனின் வீர்ர்கள் சுற்றிச் சுற்றி வந்தபோது ஒருவன் கண்களில் ஒரு வீரன் மலையிலிருந்து இறங்கி இவர்களை நோக்கி வருவது தெரியவே அவனை இழுத்து வந்து பலராமன் முன்னர் நிறுத்தினான். அவன் பலராமனை நிமிர்ந்து பார்க்கவே தயங்கினான். பயந்து பயந்து நிமிர்ந்தவனை விசாரித்த்தில் அவன் மலைமேலிருந்த கோட்டையிலிருந்து வந்திருப்பது தெரிய வந்தது.


அவனிடம் பலராமன் கூறினான்:”உன் மன்னனிடம் போய்ச் சொல்வாயாக! மதுராவில் இருந்து யாதவர்களிலேயே தலைசிறந்த வசுதேவனின் குமாரனும், கண்ணனின் மூத்த சகோதரனும், சக்கரவர்த்தியான ஜராசந்தனையே தோற்கடித்து ஓடவைத்தவனும், அவ்வளவு ஏன், அந்த ஆதிசேஷனே வந்திருப்பதாய்ப் போய்ச் சொல். உன் மன்னனை எங்களுக்குக் கப்பம் செலுத்தச் சொல். உன் அரசன் யாதவகுலத்தின் மது என்ற பிரிவைச் சேர்ந்தவன் தானே? அவன் எங்கள் ஆளுகைக்குள்ளே தான் வருகிறான். எனக்கு வேகமாய் ஓடக்கூடிய 50 குதிரைகளுடன் கூடிய ரதங்களும், அவற்றை ஓட்டக்கூடிய அதிரதிகளும் தேவை. அதைத் தவிர 50 வேகமாய் ஓடக்கூடிய குதிரைகளும் ஒரு மனிதனின் எடைக்கு ஏற்ற அளவு பொன்னும் வேண்டும். நாளை மாலைக்குள் அனைத்தும் வந்து சேரவேண்டும்; இல்லை எனில் நான் கோட்டையைத் தரைமட்டமாக்கிவிடுவேன்; கோட்டையில் எவரும் உயிர் பிழைக்கமாட்டார்கள். என்னை எதிர்க்க முயலவேண்டாம்!’ என்றான்.


ப்ரியா கேட்டுக்கொண்டபடி குஷஸ்தலை இருந்திருக்கக் கூடும் என நினைக்கும் இடங்களின் படங்களைப் போட்டிருக்கிறேன். சிலர் இப்போதைய கோவா எனவும் வேறு சிலர் தியூ, தாமன் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் மேற்குக் கடலோரமே இருந்திருக்கிறது.

4 comments:

எல் கே said...

எனகென்னவோ இவ்வளவு கீழே வரும் என்று தோன்றவில்லை. குஜராத் கரையோரம்தான் வரவேண்டும்

priya.r said...

பதிவுக்கும் வரைபடத்துக்கும் நன்றி கீதாம்மா

நீங்க சுட்டி காட்டி இருப்பது குஜராத்தின் வரைபடம் தானே கீதாம்மா !

priya.r said...

மீண்டும் ஓரிரு முறை படித்தேன் கீதாம்மா ;
இந்த பதிவு கொஞ்சம் யோசிக்க வைக்கிறது ;இதி காச காலங்களில்
நடை பெரும் இந்த நிகழ்வுகளை பற்றி தான் ;அந்த காலங்களில் கப்பல்கள் இருந்து இருக்குமா;
அப்படி இருந்து இருந்தால் எப்படி வடிவு அமைத்து இருப்பார்கள் ;
பலராமன் ரேவதி சம்பந்த பட்ட நிகழ்சிகள் ...........என்று எண்ண ஓட்டங்கள் !

இராஜராஜேஸ்வரி said...

பலராமனின் விவரனை சிற்ப்பு.