Saturday, March 29, 2014

சுயம்வர ஏற்பாடுகளில் காம்பில்யம்!

இந்திரனின் அமராவதி நகருக்கொப்பானதொரு புத்தம்புதிய அழகிய நகரம் கங்கைக்கரையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.  சுயம்வரத்திற்கு வரும் விருந்தினர் தங்கவென அழகான மாளிகைகள் தாற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன.  அதைத் தவிரவும், கூடாரங்கள், உத்தியானவனங்கள் அதனூடே அழகிய பர்ணசாலைகள், குடிசைகள், என்றும் காணப்பட்டன. ஆங்காங்கே பல தேசத்து அரசர்களின் கொடிகளும் கொடிக்கம்பங்களில் ஏற்றப்பட்டுக் காற்றில் சடசடத்துக் கொண்டிருந்தன.  வானவில்லின் வர்ணங்களைப் போன்ற வண்ண, வண்ணக் கொடிகளைப் பார்த்தால் அங்கே ஏதோ இந்திரஜாலம் , மகேந்திர ஜாலம் போல் வர்ண ஜாலங்கள் நிகழ்கின்றனவோ என நினைக்கத் தோன்றியது.


மன்னர்கள் பயணம் செய்து வந்த பல்வேறு வகையான ரதங்கள், அவற்றில் கட்டப்பட்டிருந்த குதிரைகள், இன்னும் சில மன்னர்கள் வந்த யானைகள். அவற்றின் பாகர்கள், மன்னர்களுக்கென விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் வந்த சிறப்பான உணவு வகைகள், அவர்கள் உடுத்தும் பட்டுப் பட்டாடைகளைத் தாங்கிய வண்டிகள் என அந்தப் புதிய நகரமோ கோலாகலத்தில் ஆழ்ந்திருந்தது.   வந்திருந்த ஒரு சிலர் ஆங்காங்கே வீரநடை போட்டுக் கொண்டிருக்க இன்னும் சிலர் கங்கைக்கரையின் மணலில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.  வந்திருந்த பெரும்பாலான அரசர்கள் தங்கள் சொந்த சமையலறையைஅங்கே ஏற்படுத்திக் கொண்டனர்.  இதன் மூலம் தங்களுடன் வந்திருந்த வீரர்கள், வேலையாட்களுக்கு மட்டுமில்லாமல் அக்கம்பக்கத்து ஏழைகள் மற்றும் உண்ண உணவு கிடைக்காத பிராமணர்களுக்கும் உணவிடலாம் என்னும் எண்ணம் தான் காரணம்.

ஆங்காங்கே பொருட்கள் விற்பவர்கள், காய், கனிகள் விற்பவர்கள், பூக்கள் விற்பவர்கள், அலங்காரப் பொருட்கள் விற்பவர்கள் எனப் பலரும் கூடாரங்களை அமைத்துத் தங்கள் பொருட்களை விற்பனைக்கு விளம்பரமும் செய்தனர்.  கொஞ்சம் தள்ளி ஓர் ஓரமாக மாமிசம் விற்கும் கடைகளும், மீன்கள் விற்கும் கடைகளும் கூடக் காணப்பட்டன.  கூட்டத்தை வசீகரிக்கவும், அங்குள்ள மக்களுக்குப் பொழுதுபோக்கவும், ஆங்காங்கே உள்ளூர் மல்யுத்த வீரர்களும், கழைக்கூத்தாடிகளும் பற்பல வேடிக்கை விநோதங்களைக் காட்டி மகிழ்வித்தனர்.  ஜோசியர்கள் ஆங்காங்கே மன்னர்களின் கூடாரங்களுக்கு வெளியே மன்னர்களின் தரிசனத்துக்குக் காத்து நின்றனர்.  இவர்களைத் தவிரவும் ஒரு சில தபஸ்விகளும், படித்த அந்தணர்களும் நெற்றியில் விபூதிப் பட்டையைப் பூசிக் கொண்டு மன்னர்களுக்கும், இளவரசர்களுக்கும் இன்னும் மற்றப் பொதுமக்களுக்கும் தங்கள் ஆசிகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அதோ, அந்தக் கூடாரத்தின் மேலே சர்ப்பக் கொடி பறக்கிறதே.  இது யாருடைய கூடாரம்?  கூடாரம் அலங்கரிக்கப்பட்டிருந்த முறையையும், வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தால் ஏதோ சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக இருக்கலாமோ?  உள்ளே போய்த் தான் பார்ப்போமே! உள்ளே சென்றால் ஆஹா, அங்கிருந்த ஒரு பாயின் மேல் துரியோதனன் அன்றோ படுத்திருக்கிறான்!  அவன் உடலில் மல்யுத்தக் கச்சை மட்டுமே அணிந்திருந்தான்.  இது என்ன?  யாருடனாவது மல்யுத்தப் போட்டிக்குத் தயாராகிறானோ?  ம்ஹூம், இல்லை. இல்லை.  இதோ இந்த ஆட்கள் அவன் உடலில் ஏதோ எண்ணெயைத் தடவி உடலைப் பிடித்து விடுகின்றனர்.   ஆம், அங்கே துரியோதனன் தனக்கு நெருக்கமான இரு மல்யுத்த வீரர்களைக் கொண்டு தன் உடலில் எண்ணெய் தடவிப் பிடித்துவிடுமாறு ஏற்பாடுகள் செய்திருந்தான்.  அவர்கள் அதைக் கவனமாகச் செய்து கொண்டிருந்தனர். போட்டி குறித்த சரியான தகவல் இன்னமும் தெரியவில்லை.  ஆனால் எதற்கும் முன்னேற்பாடாக ஒருவேளை மல்யுத்தப் போட்டி எனில் தயாராகத் தன் உடல் இருக்க வேண்டியவற்றை துரியோதனன் செய்து கொண்டிருந்தான். கதாயுதப் போட்டி என்றாலும் அவன் தயாரே!  ஒரே நிமிடம் முன் கூட்டிச் சொன்னால் போதும்.  வில் வித்தைப் போட்டி என்றாலும் துரியோதனன் தயாராகவே வந்திருந்தான்.

பார்க்க மிகவும் சாந்தமாகத் தன் உடலைக் காட்டிக் கொண்டு படுத்திருந்த துரியோதனன் மனதிற்குள்ளாக மிகவும் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களுக்குள்ளாக நடைபெறப் போகும் சுயம்வரத்தைக் குறித்து யோசித்துக் கொண்டிருந்தான்.  அவன் சற்றும் பொறுமையின்றி அந்த நாள் எப்போது வரும், எப்போது தான் திரெளபதியை அடைவோம் என நினைத்து நினைத்து உள்ளூரத் துடித்துக் கொண்டிருந்தான்.  அவனுடைய எதிர்காலமே அவன் திரெளபதியை சுயம்வரத்தில் வெல்வதில் தான் அடங்கியுள்ளது என நினைத்தான்.  காம்பில்யத்திலோ குரு வம்சத்து இளவலை சுயம்வரத்தின் போது எதிர்பார்க்கவே இல்லை.  தங்கள் அழைப்பை குரு வம்சத்தினர் ஏற்றுக் கொண்டு யுவராஜாவையே அனுப்பி வைப்பார்கள் என நினைக்கவும் இல்லை. துருபதன் வழக்கம்போலவே அமைதியாக இருந்தான்.  ஆனாலும் துரியோதனனை வரவேற்றதில் எவ்விதக் குறையும் வைக்கவில்லை.  அவன் கலகலப்பாக இல்லை என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.  அவனுடைய முதல் எதிரியான குரு துரோணாசாரியார் தான் இந்தக் குரு வம்சத்து இளவரசர்களின் குரு, வழிகாட்டி என்பதோடு அவர்களின் படைத் தளபதியும் கூட.  ஆகவே அவன் சாதாரணமாக இருப்பதை ஏற்க வேண்டியது தான். அவர்கள் வரும்போது பெரிய அளவில் மக்கள் கூட்டமாய்க் கூடி அவர்கள் அனைவரும் எப்படி இருக்கின்றனர் என்பதைக் கூர்ந்து கவனித்ததைக் கண்டான்.  குரு வம்சத்தினர் இந்த சுயம்வரத்திற்கு வந்திருப்பதே பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்த்த துரியோதனன் தன் பெயரை அவர்கள் அனைவரும் பயத்தோடும், ஆச்சரியத்தோடும் மெல்லக் கூறிக் கிசுகிசுப்பதையும் உணர்ந்தான்.  அவன் வேண்டியதும் அதுவே. அவன் வருகை குறிப்பிடத் தக்க அளவில் பேசப்பட வேண்டும்.  அவன் இருப்பை அனைவரும் உணர வேண்டும்.

அங்கு வந்த மன்னர்களின் படைகளிலும், கூட வந்த மனிதர்களிலும் துரியோதனனோடு வந்தவர்களே அதிகமாக இருந்தனர்.  அவனுடன் அவன் சகோதரர்கள் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுபேர் வந்திருந்தார்கள்.  அதோடு கூட காந்தார இளவரசன் ஆன அவன் மாமன் ஷகுனியும் தன் படைகளோடு வந்திருந்தான்.  அவன் நெருங்கிய நண்பனும் அங்க தேசத்து மன்னனுமான கர்ணன் தன் அழகான ரதத்தில் சூரியனைப் போல் தன் முகமும் கண்களும் ஜொலிக்கவந்தான்.  அவன் முகத்தையும், அதில் தெரிந்த ஒளியையும் கண்ட மக்கள் வியந்தனர். அவன் அழகும், கம்பீரமும் பார்க்கவே அவன் மாபெரும் வீரன் எனத் தெரிந்தது.  பெரிய மனிதர்களுக்கே உரிய பெருந்தன்மையான நடத்தையால் அனைவரையும் கவர்ந்தான்.  ஆகவே இவன் தேரோட்டியின் மகனா என அனைவரும் வியந்து ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தனர்.


இவ்வளவு பேர் போதாதா என்னும்படிக்கு துரோணரின் மகன் அஸ்வத்தாமா தன் எடுத்துக் கட்டிய கூந்தலோடு, தோளில் வில்லும், அம்பும் தாங்கி ஒரு பிராமணனுக்குரிய கோலத்தோடு வந்தான்.  துருபதனின் முக்கிய எதிரியான துரோணரின் மகன் அவன்  என அனைவருக்கும் தெரிந்ததும் முதலில் திடுக்கிட்டனர்.  ஆனால் அஸ்வத்தாமா எதையும் லக்ஷியம் செய்யாமல் இருந்தான்.  தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாத மக்கள் ஒரு பிராமண ஆசாரியர் போர்ப்படைத் தலைவர் ஆக இருப்பதையும் அந்த  பிராமண ஆசாரியரின் ஒரே மகனும் இப்படியே இருக்கிறான் என்பதையும்  கண்டு வியந்து மற்றவரிடம் அதைக் குறித்துப் பேசிக் கொண்டனர்.  ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஸ்வத்தாமாவைப் பார்த்துச் சென்றனர்.  ஆனால் அஸ்வத்தாமாவின் கர்வமும், அகங்காரமும் கொண்ட போக்கு அவர்களை வெறுக்கச் செய்தது. இவனை யார் இங்கே கூப்பிட்டார்கள் என்னும் பொருள் தொனிக்கும் வண்ணம் அவர்கள் பேசிக் கொண்டதை அஸ்வத்தாமா ஒருவேளை கவனித்திருக்கலாம். ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை.


1 comment:

ஸ்ரீராம். said...

வர்ணனைகள் பிரமாதம். மாமிசம், மீன் விற்கும் கடைகள் தனியாக இருந்தன என்று வந்தாலும் அந்தக் காலகட்டத்தில் பிராமணர்கள் மாமிசம் புசிப்பவர்களாகத்தானே இருந்தார்கள்?