Tuesday, March 18, 2014

தந்திரமான துரோணரும், மந்திரக்காரக் கிருஷ்ணனும்!

“வாசுதேவா, உன்னைக் கண்டதால் என் கண்கள் புண்ணியம் செய்தன.  நானும் புண்ணியம் செய்தவனாகிவிட்டேன்!” என்றார் துரோணர்.  ஒரு கணம் தன்னையும், தன் நிலைமையையும் மறந்து கிருஷ்ணனைப் பார்த்த சந்தோஷத்தில் துரோணர் இப்படிக் கூறினாலும் புத்தி நுட்பமும், தந்திரமும் நிறைந்த அவர் சட்டெனத் தன்னைச் சமாளித்துக் கொண்டு தன்னுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வுடன் கூடிய ஆயத்த நிலைக்கு மாறிக் கொண்டுவிட்டார்.  வெற்றி அடைந்ததிலும், துரோணரை அழைத்து வந்ததிலும் மகிழ்ந்து கொண்டிருந்த உத்தவன், கண்ணன் காலடிகளில் வீழ்ந்து தன் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டான்.  அவனைத் தூக்கித் தன்னோடு அணைத்துக் கொண்ட கண்ணன், “உத்தவா, ஒரு அதிசயத்தையே நிகழ்த்திவிட்டாய்!” என அவன் காதுகளுக்கு மட்டுமே கேட்கும்படி கிசுகிசுத்தான்.  “நான் செய்தது எதுவுமில்லை, வாசுதேவா!  உன் பெயர், அது ஒன்று மட்டுமே அதிசயங்களை விளைவிக்க வல்லது.  அதனால் இது நடந்தது.” என்று பணிவோடு பதிலளித்தான் உத்தவன்.

மூன்றாவது ரதத்தில் இருந்து சொகுசாக வாழ்க்கையை இன்றளவும் வாழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஷகுனி கீழே இறங்கினான்.  அவன் இறங்கி வெளியே வருவதே ஏதோ மாபெரும் பந்து ஒன்று உருண்டு வருவது போல் காட்சி தந்தது.  வெளியே வந்த ஷகுனி தன் வழக்கமான வளவளப்புப் பாணியில் கிருஷ்ணனைப்பார்த்து வரவேற்பு மொழிகளைக் கூறினான். விளக்கெண்ணைச் சிரிப்போடு அவன் பேசியது:” மாட்சிமை பொருந்திய யாதவர்களே, என் பணிவான வணக்கம் அனைவருக்கும். துரியோதனன் சார்பாக நான் வந்துள்ளேன்.  அதோடு அவனிடமிருந்து ஒரு செய்தியையும் உங்களுக்கு எடுத்து வந்திருக்கிறேன்.  துரியோதனன் வயதில் மூத்தவன் ஆகையால் உங்கள் அனைவருக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்திருக்கிறான்.” அனைவரையும் பார்த்துத் தன் வசமாக்கும் புன்னகை ஒன்றைப் புரிந்த வண்ணம் ஷகுனி மேலும் தெரிவிப்பான்:” மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து இளவல் தன் படைகளின் மூலம் வென்று அடைந்த ஒன்றை கிருஷ்ண வாசுதேவனின் அதீதமான விவேகத்துக்கும், ஞானத்துக்கும், நல்லெண்ணத்துக்கும் காணிக்கையாகத் திருப்பிக் கொடுப்பதில் சந்தோஷம் அடைகிறான்.” என்று முடித்தான்.

கிருஷ்ணன் முகத்தில் மிகப் பெரிய புன்முறுவல் விரிந்தது.  “குரு வம்சத்து இளவல் துரியோதனனின் பெருந்தன்மை குறித்து நான் அறியாதது அல்ல! அவர் நலமாகத் தானே இருக்கிறார்?” என்று வினவினான் கிருஷ்ணன். இதற்குள்ளாகத் தன் விருந்தோம்பலுக்கான ஆயத்தங்களை துரோணர் ஆரம்பித்துவிட்டார்.  அவர் படைகளை நடத்திச் செல்வதிலும், அவற்றைச் செலுத்தி வெற்றி பெறுவதிலும் இப்படி ஈடு இணையற்று இருந்தாரோ அதே போல் விருந்தோம்பலிலும் தனக்கு நிகரில்லை என்று சொல்லும்படியான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.  கிருஷ்ணனும், மற்ற முக்கியமான வீரர்களுக்கும் கூடாரங்கள் அடித்துத் தரப்பட்டன.  மற்ற அதிரதர்கள் அவரவர் ரதங்களை அங்கிருந்த மரங்களோடு சேர்த்துக் கட்டிவிட்டு, குதிரைகளையும் மரங்களில் பிணைத்து ஓய்வெடுக்க விட்டுத் தாங்களும் ரதங்களுக்கு அருகேயே தங்கினார்கள்.  கிருஷ்ணனோடு கூட வந்திருந்த மற்ற யாதவத் தலைவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்.  அவர்கள் இங்கே ஒரு மாபெரும் யுத்தத்தை எதிர்நோக்கி வந்திருந்தனர்.  கத்தி முனையிலேயே புஷ்கரம் கைகளுக்கு வந்து சேரும் என நினைத்திருந்தனர்.  ஆனால் இப்போது உத்தவன் செய்துவிட்டு வந்திருக்கும் காரியத்தினால் அவர்கள் மேன்மேலும் ஆச்சரியம் அடைந்தனர்.  வலிமை மிக்க யாதவர்களோடு பொருத வேண்டாம் என்றே துரோணர் இந்த யுத்தத்தைத் தவிர்த்திருக்கிறார் என்றும் நினைத்தனர். அதில் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

கண்ணனின் கூடாரத்தில் துரோணர் கண்ணனோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  அவனுடைய வசீகரமான குரலும், பேசும்போது ஏற்பட்ட அவன் உடல் மொழியாலும் கவரப்பட்டிருந்த துரோணர் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும்,  அவர் உள்மனதில் இரு வேறு தனிப்பட்ட எண்ணங்கள் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருந்தன.   இவ்வளவு இளம் வயதிலேயே இத்தனை வலிமை மிக்கவனாக, அனைவரையும் தன் பேச்சுக்குச் செவி சாய்ப்பவர்களாக ஆக்கி வைப்பவன் ஆன இந்த வாசுதேவ கிருஷ்ணனின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் எப்படிப் பெறுவது என்பது அதில் ஒன்று. அனைவரிடமும் தனித்தனியாகச் சிறப்புக் கவனிப்பை அவன் கொடுப்பதும், பெறுவதும் இது வரை அவர் கண்டிராத ஒன்று.  இப்படி அனைவரையும் வசீகரிக்கும் ஒருவனை வெல்ல வேண்டுமே! இன்னொன்று தாங்கள் பேசிக் கொண்டிருக்கையில் தன்னையும் அறியாமல் பேச்சு வேறு திசையில் திரும்பித் தன்னுடைய சொந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டுப் பேச்சுக்குத் தலையீடாக ஆகிவிடக் கூடாதே என்று கொஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு தான் பேசினார்.  கிருஷ்ணனின் மயக்கும் உருவமும், அவனுடைய விசித்திர விநோதமான திறமைகளும் அவரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லுமோ என்ற கவலையும் அவருக்கு ஏற்பட்டது.

தன்னால் இயன்ற அளவுக்குக் கிருஷ்ணனைப் பார்த்து வசீகரமாகச் சிரித்தார் துரோணர்.  “வாசுதேவா, நீ தன்னந்தனியாக இந்தப் புஷ்கரத்தை நோக்கி எவ்விதப் பெரிய படைகளும் இல்லாமல் குரு வம்சத்தினரை எதிர்கொள்ள வந்தது எப்படி?  நாங்கள் போரில்லாமல் அமைதியாகப் புஷ்கரத்தை உன்னிடம் ஒப்படைப்போம் என நீ எதிர்பார்த்திருந்தாயா?” என்று சந்தேகம் பொங்கக் கேட்டார்.

“அது என்னுடைய ரகசியம் ஆசாரியரே!  ஆனால் நீங்கள் விரும்பினால் நான் உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.” என்றான் கிருஷ்ணன் சிரித்த வண்ணம்.  “அது சரி, கிருஷ்ணா, நாங்கள் உன்னுடன் போருக்கு ஆயத்தமாக இருந்திருந்தால்??? என்ன செய்திருக்க முடியும் உன்னால்?” துரோணர் விடாமல் கேட்டார்.

“ஆசாரியரே, புஷ்கரத்தைக் கைப்பற்றச் சிறந்த வழி துரியோதனனைத் தனியாக எதிர்கொள்வது ஒன்றே ஆகும்.  இதை நான் நன்கு அறிவேன்.  இந்தச் சின்னச் சின்ன விஷயத்துக்காகக் குரு வம்சப் படைகளும், யாதவப் படைகளும் நேருக்கு நேர் நின்று பொருதுவது விரும்பத்தக்கது அன்று.  அது நன்மையையும் விளைவிக்காது.”

துரோணர்  கிருஷ்ணன் இவ்வளவு நுண்ணறிவோடு யோசித்து முடிவெடுத்திருப்பதை நினைத்து உள்ளூர வியந்தார். “துரியோதனன் போர் செய்வதை விட்டுவிட்டு உன்னுடன் மட்டும் போட்டிக்கு வருவான் என நீ ஏன் நினைத்தாய் கிருஷ்ணா?”

கிருஷ்ணன் புன்னகை புரிந்த வண்ணம், “ஆசாரியரே, அவன் உங்கள் மாணவன்.  இந்தச் சின்ன விஷயத்துக்காக அவன் போர் விதிகளுக்குப் புறம்பாக எல்லாம் நடக்க மாட்டான்.  ஒரு அதிரதி இன்னொருவனோடு தன்னந்தனியாகவே போரிட்டாகவேண்டும் என்பதை அவன் நன்கறிவான், அல்லவா?”

“அப்படி எனில் அவனை வென்றுவிடுவோம் என நீ நினைத்தாயோ?”

“ஆசாரியர்களில் சிறந்தவரே, நான் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை;  அதே சமயம் இந்தப் போட்டிக்குப் பயப்படவும் இல்லை.  தயாராகவே வந்தேன். என்னுடைய கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.  நான் செய்கிற காரியங்களின் விளைவுகள் நன்மையோ, கெடுதலோ என்பதைக் குறித்தெல்லாம் நான் நினைத்துக் கொண்டு அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், நான் ஒரு கணம் கூட உயிரோடு இருக்க முடியாது. என் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே என் ஒரே குறிக்கோள். “

“இப்படி எல்லாம் கண்மூடித்தனமாக ஒருவர் கடமையை நிறைவேற்றலாமா?  நீ அதை ஏன் நினைத்துப்பார்க்கவே இல்லை வாசுதேவா?”

“நம்பிக்கை ஆசாரியரே, நம்பிக்கை.  அது மிக முக்கியமானது.  நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் கடமைகளைக் கண்மூடித்தனமாகச் செய்ய மாட்டார்கள். எனக்கு உங்களிடமும், பாட்டனார் பீஷ்மரிடமும் நம்பிக்கை இருக்கிறது; இருந்தது.  அதனால் தான் நான் ஹஸ்தினாபுரத்துக்கு உத்தவனை அனுப்பி வைத்தேன்.  என் நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதைப் பாருங்கள் ஆசாரியரே!”  துரோணரின் மனதில் சிறிதளவு சந்தேகம் இருந்தால் கூட அவற்றையும் அகற்றும் நோக்கில் வெளிப்படையாகக் கிருஷ்ணன் பேசினான்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// என்னுடைய கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்... // அதானே அனைவருக்கும் வேண்டும்...

ஸ்ரீராம். said...

//உன் பெயர், அது ஒன்று மட்டுமே அதிசயங்களை விளைவிக்க வல்லது. அதனால் இது நடந்தது.” என்று பணிவோடு பதிலளித்தான் உத்தவன்.//

அது!

// துரியோதனன் வயதில் மூத்தவன் ஆகையால் உங்கள் அனைவரும் தன் ஆசிகளைத் தெரிவித்திருக்கிறான்.//

"அனைவருக்கும்"

கண்ணனின் பாஸிட்டிவ் திங்கிங்!

sambasivam6geetha said...

ஶ்ரீராம், வி.எ. ஊத்திண்டீங்க போல. திருத்தியாச்சு.

நன்றி டிடி.

sambasivam6geetha said...

யாருமே பின்னூட்டம் போடாட்டிக் கூட எழுதுவேன் என்றாலும், தொடர்ந்து நீங்கள் இருவரும் வருவது சந்தோஷமாகவே இருக்கிறது. :))) நன்றி, நன்றி.