Friday, March 21, 2014

ஆசாரியர்களில் சிறந்தவர் துரோணரே!

“உங்களிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ளத் தான் நான் வந்திருக்கிறேன், ஆசாரியரே!” கிருஷ்ணன் சற்றும் தாமதிக்காமல் பதில் கூறினான்.  ஆனால் அதை நான் பார்க்கும்போதும், உணரும்போதும் அதன் இருப்பைப் புரிந்து கொள்கிறேன்.  துருபதனிடம் உங்களுக்கு இருந்த வெறுப்பு எவ்வளவு அதிகம் என்பது எனக்குத் தெரியும்.  அப்படி இருந்தும், நீங்கள் அவன் மகனை உங்கள் மாணவனாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.  நீங்கள் ஒரு புனிதமான பிராமணர் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது அல்லவா?  அதோடு மட்டுமா? துரியோதனன் உங்கள் அன்புக்கும், பாசத்துக்கும் உகந்த சீடன் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படி இருந்தும், நீங்கள் அவன் விருப்பத்தையும் மீறிப் புஷ்கரத்தை ஒப்படைக்க இங்கே நேரில் வந்துள்ளீர்கள்.  இவற்றிலிருந்து எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருப்பது எனக்கு நன்கு புலனாகிறது ஆசாரியரே!”

ஆசாரியரின் மனமாகிய சூரியன் சந்தேக மேகத்திலிருந்து வெளி வந்து பிரகாசித்தது.  சற்றும் சந்தேகம் கலக்காமல் ஆசாரியரின் மனதில் கண்ணன் பால் மாசு, மருவற்ற அன்பும்,மரியாதையும் பெருக்கெடுத்து ஓடியது.  கண்ணனின் இந்த வெளிப்படையான பேச்சைத் தன் மனதுக்குள் அவர் மிகவும் பாராட்டினார். ஆனாலும் சிரித்துக் கொண்டே, “வாசுதேவா, உனக்கு யாரை எவ்வாறு முகஸ்துதி செய்ய வேண்டும் என்பது நன்கு புரிந்திருக்கிறது. ஆனால் ஒரு விஷயம், உன்னை  நான் எச்சரிக்கிறேன்.  துருபதன் ஒருநாளும் என் சிநேகிதன் ஆக முடியாது.  அவனை என் சிநேகிதனாக நான் நினைக்க மாட்டேன்.  அது என்னுடைய தர்மம் அல்ல. “ என்றார்.

“ஆனால், ஆசாரியரே, நீங்கள் துரியோதனன் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரெளபதியை வெல்ல அனுமதி கொடுத்துள்ளீர்கள்.  அப்படி நடந்தால் குரு வம்சத்தின் ராணியின் தந்தையை , பாஞ்சாலத்து அரசனை நீங்கள் மதித்துத் தான் ஆக வேண்டும்.  அவனோடு நட்புப் பாராட்டியே ஆக வேண்டும்.”

துரோணருக்குச் சீற்றம் மிகுந்தது. தன் புருவங்களை நெரித்துக் கொண்டே கண்ணனைப் பார்த்தார்.  கண்ணனைத் தவிர்த்து வேறு யாராக இருந்தாலும், எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அவர் இப்படிப் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்.  ஆனால் கண்ணனின் நேர்மையான வெளிப்படையான பேச்சும், அவனுடைய வசீகரமான குரலும், உடல் மொழியும் சேர்ந்து கொண்டு அவன் செய்யும் பிரகடனங்களில் எந்தவிதக் குற்றங்களையும் கண்டு பிடிக்க முடியாமல் செய்தது.  சற்று நேரம் தாமதித்த அவர், பின்னர் பேச ஆரம்பித்தார்.  தன் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டு திட்டமிட்டே பேச ஆரம்பித்தார்.

“வாசுதேவா, துரியோதனன் இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை.  அவன் இதில் கலந்து கொள்வதன் மூலம் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான்.  என்னுடைய மாணாக்கர்களில் ஒருவன் இப்படி என் எதிரியின் மகளுக்காக நடத்தப்படும் சுயம்வரத்தில் கலந்து கொள்வதை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை.  அவ்வளவு ஏன்? துருபதனே குரு வம்சத்து இளவரசர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்திருக்க மாட்டான்.  ஆனால் என்ன காரணத்துக்காகவோ, துரியோதனன், துருபதனின் மகளை மணப்பதில் தீவிரம் காட்டுகிறான். அவளை மணந்து கொண்டே ஆகவேண்டும் என நினைக்கிறான்.  அவளை எவ்வகையிலேனும் சுயம்வரத்தில் வென்று மணக்க நினைக்கிறான்.  என்ன விலை கொடுத்தானும் இந்த சுயம்வரத்தில் வெல்ல நினைக்கிறான். “ மனம் முழுக்கக் கசப்புடன் பேசினார் துரோணர்.  கிருஷ்ணனின் மன ஓட்டங்களையும், அவன் மன ஆழத்திலிருக்கும் எண்ணங்களையும் தோண்டித் துருவிப் பார்ப்பது போல் தன் கண்களைச் சுருக்கிய வண்ணம் சற்று நேரம் அவனையே உற்றுப் பார்த்த துரோணர், “வாசுதேவா, ஒருவேளை துரியோதனனுக்காக திரெளபதியை சுயம்வரத்தில் வென்று தர வேண்டி உனக்கு வேண்டுகோள் விடுக்கப்படலாம்.  உன்னைக் கேட்டாலும் கேட்பார்கள்.” என்றார்.

இந்தப் பேச்சுக்குக் கண்ணன் நேரிடையாக பதில் சொல்வதைத் தவிர்த்தான். “ஆசாரியரே, நீங்கள் ஏன் திரெளபதியின் சுயம்வரத்திற்கும், அவளைக் குரு வம்சத்தினர் மணப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்?  உங்கள் எதிரி துருபதன் தானே?  அவன் மகள் அல்லவே!  திரெளபதி மற்ற எல்லா ராஜகுமாரிகளையும் போல் சுயம்வரத்தின் மூலம் தன் கணவனைத் தேர்ந்தெடுக்க உரிமை பெற்றிருக்கிறாள்.  அதோடு திருமணம் ஆகிவிட்டால் அவள் தன் கணவனுக்கே தன் சேவைகளைச் செய்து வருவாள், மற்ற எல்லா ராஜகுமாரிகளையும் போல அவளும் நடந்து கொள்வாள் . ஒருக்காலும் தன் தகப்பனுக்காகப் பணிவிடைகள் செய்வதோ, தகப்பனுக்கு உதவிகள் செய்வதோ இருக்காது.  அவள் கணவனுக்கு அடங்கியே நடப்பாள்.”

“ஹா, வாசுதேவா, உனக்கு துருபதனையும் தெரியவில்லை;  அவன் குடும்பத்தினரையும் தெரியவில்லை. அவர்கள் அனைவருக்குமே உள்ளார்ந்த கர்வம் உண்டு;  அதோடு பழி வாங்கும் உணர்ச்சி அவர்கள் ரத்தத்திலேயே இருக்கிறது.  அப்படி ஒரு வேளை அந்த இளவரசி திரெளபதி ஹஸ்தினாபுரத்துக்கு மருமகளாக வந்தாளெனில் குரு வம்சத்தினரிடம் எனக்கு எந்த வேலையும் இல்லை.”திட்டவட்டமாகக் கூறினார் துரோணர்.

“ஓ, ஆசாரியரே, பாஞ்சால இளவரசி குரு வம்சத்தினரின் மாளிகைக்கு வருவதால் உங்கள் நிலைமை ஒன்றும் சீர் கெட்டுப் போய்விடாது.  எவ்வித மாறுதலும் ஏற்படாது.  இது நிச்சயம், ஆசாரியரே, நிச்சயம்.”

“வாசுதேவா, ஹஸ்தினாபுரத்தில் என்னுடைய நிலைமை குறித்தோ, என் அலுவல்கள் குறித்தோ மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டாம்;  அது எனக்குப் பிடிக்காது.  நான் அதை மற்றவர்களிடம் விடவும் மாட்டேன்.  துருபதனின் மகள் திரெளபதி ஹஸ்தினாபுரத்தின் மருமகளாக வந்தால் அந்தக் கணமே நான் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவேன்.  “ துரோணரின் குரலில் ஒரு விரக்தி தொனித்தாலும் கடுமை அதிகமாகத் தெரிந்தது.  கண்ணன் இத்தனை நேரம் பாசத்துடனும், பிரியத்துடனும் பேசிய துரோணரின் குரலில் ஏற்பட்ட மாற்றங்களை உற்றுக் கவனித்தான்.  இப்போது அந்தப் பிரியமோ, பாசமோ அவர் குரலில் தென்படவில்லை என்பதை உணர்ந்து கொஞ்சம் நிதானித்தான்;  யோசித்தான். பின்னர் அவரிடம், “ஆசாரியர்களில் சிறந்தவரே, தாங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அது நிச்சயம் சரியான முடிவாகத் தான் இருக்கும்.” என்றான்.

எந்தவித முகபாவத்தையும் காட்டாமல் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் துரோணர்.  இந்த விஷயத்தை மேற்கொண்டு விவாதித்துப் பேசும் அளவுக்கு அவர் மனம் தயாராக இல்லை.  “போகட்டும், துரியோதனன் தன்னால் ஆன முயற்சிகளைச் செய்து திரெளபதியை வெல்லப் போகிறான். என்ன நடக்கப் போகிறது என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.  ஒருவேளை உன்னுடைய உதவியோடு அவன் திரெளபதியை வெல்லலாம்.”

கண்ணன் சிரித்தான்.  “ஆசாரியரே, நீங்கள் நினைப்பது போல் துருபதனிடமோ, அவன் மக்களிடமோ, முக்கியமாக இளவரசி திரெளபதியிடமோ  எனக்கு அவ்வளவு செல்வாக்கெல்லாம் இல்லை!” என்றான்.”வாசுதேவா, என் மாணாக்கர்களில் ஒருவனுக்குத் தன் மகளை மனைவியாக அளிக்க துருபதனுக்குச் சொல்ல முடியாத ஆக்ஷேபணை இருக்கும் அல்லவா?  அவன் அதை வெளிப்படையாகச்  சொல்ல முடியாத ஒரு இக்கட்டாக நினைக்கலாம் அல்லவா?” துரோணர் கேட்டார்.  “தெரியவில்லை, ஆசாரியரே, துரியோதனன் சுயம்வரத்திற்கு வருவதாக ஒத்துக் கொண்டது அனைவர் மனதிலும் பற்பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும்.  ஒவ்வொருவரும் போடும் கணக்குகள் மாறுபடலாம்.  எது எப்படி மாறும் என்பதை இப்போதே கணிக்க இயலாது. அதை என்னாலும் இப்போது சொல்ல முடியவில்லை!” என்றான் கண்ணன்.

“ஆஹா, நீ இருந்தும் கூடவா!” துரோணர் பொருள் பொதிந்த சிரிப்பொன்றை உதிர்த்தார்.  “ஆசாரியரே, எனக்குச் சரியென்று மனதில் படுவதைத் தான் நான் செய்வேன்;  செய்கிறேன்.  ஆனால் இது சரியா, தவறா என நிர்ணயிப்பது அந்த மஹாதேவன் ஒருவனுக்குத் தான் தெரியுமே அன்றி நமக்கெல்லாம் தெரியாது. எல்லாவற்றையும் அவன் தான் நிர்ணயிப்பான்.” இதைச் சொன்ன கிருஷ்ணன் கொஞ்சம் மெளனத்தில் ஆழ்ந்தான்.  பின்னர் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல, “சக்கரவர்த்தி பரதனின் குலத்தில் வந்த குரு வம்சத்தினரின் குடும்பம் ஒருக்காலும் தர்மத்திலிருந்து பிறழ்ந்து செல்லாது.  அதுவும் அந்தக் குலத்துக்கு ஆசாரியராக நீர் இருக்கையில் தர்மத்தின் பாதையிலேயே செல்லும்.  நீரன்றோ அவர்களின் படைகளை வழிநடத்துகிறீர்கள்.  பிராமணோத்தமரான உமக்குத் தெரியாததா!” என்று சொன்னான்.  துரோணரின் மனதில் மகிழ்ச்சி பொங்கியதை அவர் முகத்திலிருந்து ஊகிக்க முடிந்தது.  இவ்வளவு பிரமாதமான, அற்புதமான புகழுரையைக் கேட்டு அவர் முகம் புன்னகையில் மலர்ந்தது.  அதைத் தன்னுள்ளேயே தக்க வைத்துக்கொள்ள அவர் விரும்பினார்.  உண்மை, உண்மை.  துரோணர் ஒரு பிரசித்தி பெற்ற ஆயுதப் பயிற்சிகள் பெற்ற குருவாக இருப்பதால் எல்லாரையும் அடக்கி ஆள முடிகிறது.  அரச குலத்தவரையும் கூட!  யுவராஜா துரியோதனனையும்! இது குருவம்சத்தினரிடம் தான் செல்வாக்குடன் இருப்பதால் அன்றோ நடக்கிறது. வெளிப்படையாக துரோணர், “நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.” என்று பதில் கூறினார்.   அவர் மனதுக்குள்ளே தன்னை விடச் சிறந்த ஆசாரியர் இருக்க முடியாது என்னும் எண்ணம் மேலோங்கினாலும், அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் தான் விநயமாகப் பேசுவதாய்க் காட்டிக் கொண்டார்.  உண்மையில் துரோணாசாரியார் சிறந்தவர்களுக்கெல்லாம் சிறந்தவர் அன்றோ! இது தான் அவர் மனதில் நினைத்துக் கொண்டது.  அவர் முகம் மேலும் புன்னகையில் விரிந்தது.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னதான் இருந்தாலும் ஆணவம் இருக்கக் கூடாதே... ம்... ???

கதம்ப உணர்வுகள் said...

துரோணாச்சாரி கண்ணன் இருவருக்குமான உரையாடல்கள் மிக அருமை...

துரியோதனன் ஏற்கனவே பானுமதியை மணந்திருந்தும் திரௌபதியை சுயம்வரத்தில் வெல்ல முயற்சிப்பது ஏன்?

துருபதன் துரோணாச்சாரியார் இருவரும் நண்பர்களாக இருந்து பகைவர்களாகிவிட்டனர்.. அந்த நிலையில் துரியோதனன் துரோணரின் மாணாக்கன்.. அவன் திரௌபதியை திருமணம் செய்ய சுயம்வரத்தில் கலந்துக்கொள்வதை துரோணர் தடுக்க நினைப்பது ஏன்?

கண்ணனிடம் ஆலோசனைக்காகவோ அல்லது சாதிக்கவோ உதவிக்கேட்டு வரலாம் என்ற சந்தேகம் துரோணருக்கு ஏன் வந்தது?

எல்லாம் அறிந்த கண்ணன் கண்டிப்பாக தர்மம் பிறழமாட்டான் என்ற நம்பிக்கை துரோணருக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது?

அன்பு நன்றிகள்பா கீதா பகிர்வுக்கு..

sambasivam6geetha said...

வாங்க டிடி நன்றி.

sambasivam6geetha said...

மஞ்சு, உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். :)

ஸ்ரீராம். said...

என்ன நடக்கும் என்பது தெரிந்தே இருந்தாலும் நடக்காமல் போய்விட்டால் என்ற சந்தேகமும் துரோணருக்கு இருக்கும் என்று கொள்ளலாமா...