Friday, November 5, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

பலராமன் தன்னை மறக்கிறான்.

கரவீரபுரத்தை விட்டுச் செல்லும் அந்த வண்டிகள் சகல வசதிகளும் நிரம்பிய ஒரு சிறு வீடாய்க் காட்சி அளித்தது. சமையலுக்குத் தேவையான உபகரணங்கள், மற்றும் மனிதர்களுக்குத் தேவைப்படும் உடைகள், பழங்கள், பான வகைகள் எனத் தேவையான பொருட்கள் நிரப்பப் பட்டிருந்தன. குடிநீருக்கு எனப் பலவகைப்பட்ட மண்பானைகளில் சேகரிக்கப் பட்டது. ஆங்காங்கே நதிகள், குளங்கள், ஆறுகள் போன்றவற்றில் பிடித்து வந்து சேகரிக்கவும் காலிப் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. திடமான உறுதியான காளைகள் வண்டிகளில் பூட்டப் பட்டிருந்தன. இவற்றைத் தவிர ராணி பத்மாவதி கண்ணனுக்குப் பரிசாய் அளித்திருந்த தங்கமும் குவியலாய் இருந்தவை தக்க பாதுகாப்புடன் ஆயுதமேந்திய வீரர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டன. சில குதிரைகளையும், ஆயுதங்களையும் கூடப் பரிசளித்திருந்தாள் ராணி பத்மாவதி. கிருஷ்ணன், தாமகோஷன், பலராமன், ஷாயிபாவும், அவள் தோழிகளும் அவர்களுக்கெனப் பிரத்தியேகமாய் ஏற்பாடு செய்யப் பட்ட ரதங்களில் ஏறிக்கொண்டனர்.

உத்தவன் சாமான்கள் ஏற்றிச் செல்லும் வண்டிகளின் பாதுகாவலை ஏற்றுக்கொண்டு, எல்லாருக்கும் முன்னால் ஒரு அழகான, கம்பீரமான குதிரையில் ஏறிக்கொண்டிருந்தான். விடை பெறும் நேரம் வந்துவிட்டது. இளம் அரசன் ஆன ஷக்ரதேவன் தனது புதிய குருவான புநர்தத்தனோடும், மற்றும் கரவீரபுரத்தின் முக்கிய அதிகாரிகள், பிரஜைகளோடும் வந்து கண்ணனுக்கும், அவனுடைய பரிவாரங்களுக்கும் விடை கொடுத்தான். அனைவர் கண்களிலும் கண்ணீர் மழை பொழிந்தது. பத்மாவதி தனது துயரத்தை அடக்கிக்கொண்டு சகோதரர்களை ஆசீர்வதித்தாள். புநர்தத்தன் தன் நண்பர்களைக் கட்டித் தழுவி விடை கொடுக்க, இளம் அரசன் கண்ணன் கால்களிலும், மற்றப் பெரியவர்கள் கால்களிலும் விழுந்து எழுந்து ஆசிகள் வாங்கிக்கொண்டான். ஷாயிபாவை ராணி பத்மாவதி ஆசீர்வதிக்க வந்து அவள் தலையில் தன் கையை வைத்ததும், ஷாயிபா தன் முகத்து வெறுப்பாலேயே அவளைச் சுட்டெரித்தாள். எனினும் பத்மாவதி அதைப் பொறுத்துக்கொண்டே அவளையும் முழு மனதோடு ஆசீர்வதித்தாள். ஷாயிபாவுக்கு அனைத்துமே திட்டமிடப் பட்ட ஒரு நாடகமாய்த் தெரிந்தது. தான் விட்டுச் செல்லும் கரவீரபுரத்து நபர்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தன் விருப்பத்துக்கு விரோதமாய்த் தன்னை அழைத்துச்செல்லும் கண்ணனையும், அவன் பரிவாரங்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. வெறுத்தாள்.
அனைவரையும் விட வயதில் மூத்தவன் ஆன தாமகோஷன் கரவீரபுரத்து முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் ஆசிகளைத் தெரிவித்தான். இளம் கருடன் விநதேயனுக்குத் தன் துயரத்தை அடக்க முடியவில்லை. கண்ணனோடு சேர்ந்து செல்லவே ஆசைப்பட்டான். ஆனால் அவன் தந்தையின் உடல்நலம் சீர் கெட்டிருப்பதாய்ச் செய்தி வந்திருந்ததால் அவன் கோமந்தக மலைக்குத் தன் குடியிருப்புக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். மேலும் அவன் தான் அடுத்த வாரிசு, கருட மக்கள் அனைவரும் விநதேயனையே நம்பி இருந்தனர்.

நல்ல நேரம் வந்ததும், முறைப்படியான வழிபாடுகள் நடக்க, வேதமந்திரங்கள் உரக்க ஒலிக்க, நற்சகுனங்கள் கிடைக்கவும், பிரயாணம் ஆரம்பம் ஆனது. ஏற்கெனவே தேர்ந்தெடுத்த தூதுவர்கள் இங்கு நடந்த முக்கியச் செய்திகளைத் தெரிவிக்க அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் தாங்கள் செல்லும் வழியெல்லாம் கண்ணனின் வீரதீரப் பராக்கிரமங்களைக் கதையாகச் சொல்லிக்கொண்டே சென்றனர். ஏற்கெனவே கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கியதும், காலியனைக் காலால் மிதித்தே அடக்கியதையும், திரிவக்ரையின் கோணலை நிமிர்த்தியது, குவலயாபீடத்தை அடக்கியது, கம்சனையும் சாணுரனையும் கொன்றது என அனைத்தையும் கேள்விப் பட்டு அவனைக் கடவுள் என்றே மனமார நம்பிய மக்கள் இப்போது இந்தச் செய்திகளைக் கேட்டதும், இன்னும் பிரமிப்பில் ஆழ்ந்தார்கள். அதிலும் புதிய ஆயுதமான சக்ராயுதம் எதிரிகளை அழித்துவிட்டு மீண்டும் கண்ணன் கைகளுக்கே வந்துவிடுகிறது என்பதைக் கேள்விப்பட்டு, இத்தகைய அதிசயத்தை நிகழ்த்த அந்தப் பரவாசுதேவனால் மட்டுமே முடியும் என்று பேசிக்கொண்டார்கள். நம்மை உய்விக்க ஒரு கடவுள் பிறந்துவிட்டான். அவன் வந்தேவிட்டான். இதோ நம் எதிரே ரத்தமும், சதையுமாக நம்மில் ஒருவனைப் போல் நடமாடிக்கொண்டே நமக்கு உதவிகள் செய்கிறான். ஒவ்வொரு வாயாகப் போன இந்தச் செய்தி, வீடு வீடாக, தெருத்தெருவாக, ஊர் ஊராக, நகரம், நகரமாக, நாடு நாடாகப் போனதோடு காடுகளுக்கும் சென்று அங்குள்ள ஆசிரமங்களையும் போய் அடைந்தது.

கண்ணன் இவை அனைத்தையும் சர்வ சாதாரணமாக நடத்திவிட்டு மதுராவுக்குத் திரும்பும் செய்தியும், அவனுடைய பரிவாரங்கள் வருவதையும் மக்கள் அறிந்துகொண்டனர். கால்நடையாகவும், குதிரைகளின் மீதும், மாட்டு வண்டிகளிலும் அவர்கள் கிளம்பிக் கண்ணன் வரும் பாதையை அறிந்து கொண்டு அங்கே தங்கினார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருளை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணன் வருகைக்குக் காத்திருந்தன.ர் கண்ணன் வந்ததும், ஓடிப் போய் அவனையும், பலராமனையும் தரிசித்தனர். கால்களில் விழுந்தனர். ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஜயம், வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம்! என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். கண்ணன் காலடி மண்ணைப் பிரசாதமாய் எண்ணித் தங்கள் உச்சியில் தரித்துக்கொண்டனர். கண்ணன் மந்தகாசமான வதனமும், சிரிக்கும் கண்களும், அதில் பொங்கி வழியும் அன்பும், கருணையும் தன்னிரு கைகளையும் உயர்த்தி மக்களை அங்கீகரித்த பாவனையும், அவன் அணிந்திருந்த மஞ்சள் நிறப் பீதாம்பரமும், கழுத்தில் அணிந்திருந்த மாலைகளின் சுகந்தமும், தலையில் கீரீடத்தின் மேல் அணிந்திருந்த மயிலிறகும் அவர்களைக் கவர்ந்தன. இவை அனைத்தும், அவர்கள் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்து என்றென்றும் மறக்கமுடியாத நினைவாக ஆகியது. குழந்தைகளுக்கும் கண்ணனைக் கண்டதும், தங்கள் அருமைத் தோழனைப் பார்ப்பது போல் சந்தோஷம், பூக்களையும், பழங்களையும் வாரி இறைத்துக் கண்ணனை வரவேற்றார்கள். ஒரு குழந்தை விடாமல் கண்ணன் அனைவரையும் தன் கைகளால் தட்டிக்கொடுத்தான். இளம்பெண்கள் தங்கள் கடைக்கண்களால் கண்ணனைக் கண்டு மகிழ்ந்தனர். அவன் வீரத்தைக்குறித்துப் பெருமிதம் கொண்டு தங்கள் காதலர்களிடமும், மணாளர்களிடமும், அவர்களும் அத்தகைய வீரனாய் இருக்கத் தாங்கள் விரும்புவதாய்த் தெரிவித்தனர்.

பிரயாணத்தின்போது தாமகோஷன் கண்ணனின் விருப்பங்களையும், அவன் தன் நடவடிக்கைகளை எவ்வாறு ஒழுங்காயும், நேரம் பிசகாமலும் அமைத்துக்கொண்டான் என்பதையும் கண்டு வியந்தான். அதிகாலையில் எழும் கண்ணன் காலையிலேயே தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஆசாரியர்களோடு சேர்ந்து வேதகோஷங்களை அப்யசிப்பதையும், யாகங்களில் பங்கு கொள்வதையும், சற்றும் சுருதி பிசகாமலும், வார்த்தைகள் பிறழாமலும் வேத மந்திரங்களை உச்சரித்த பாங்கும், அதன் பின்னர் அவர்களோடு ஆயுதப் பயிற்சிகளும், உடல் பயிற்சிகளும் மேற்கொண்டதும், காலை உணவிற்குப் பின்னர் க்ஷத்திரிய தர்மத்தை ஒட்டி வேட்டைகளுக்குச் சென்றதும், தன்னை நாடி வரும் மக்களைச் சந்திப்பதும், அவர்கள் குறைகளைக் கேட்டு இனிய வார்த்தைகளால் அவர்கள் மனதைத் தேற்றுவதும், எல்லாவற்றுக்கும் மேல் வாகனங்களைக் கவனிக்கவும், குதிரைகள், யானைகள், மாடுகள் போன்றவற்றைக் கவனிக்கவும் நியமிக்கப் பட்டிருந்த தொழிலாளர்களோடு தானும் ஒருவனாய்ச் சென்று அனைத்தையும் கவனித்துத் தேவைப்படும்போது அவர்களுக்குத் தன் உதவியைச் செய்வதும், குதிரைகளைத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்தி, அவற்றுக்கு உணவளிப்பதுமாகக் கண்ணன் தன் பொழுதை ஒரு கணமும் வீணாக்காமல் கழிப்பதை எண்ணி வியந்தான். ஒரு மாபெரும் சக்கரவர்த்திக்குரிய லக்ஷணங்கள் பொருந்தி இருக்கும் கண்ணனைப் பார்த்து அவன் வியப்பின் எல்லைக்கே சென்றான். மதியம் உணவருந்தும் முன்னரும், ஆசாரியர்களோடு சேர்ந்து வைதீகச் சடங்குகளில் பங்கு பெறுவதும், மதிய உணவின் பின்னர் பலராமனுடனும், தன்னுடனும் அமர்ந்து கொண்டு இனி நடக்கவேண்டியவைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே ருத்ராசாரியாரிடம் தர்ம சாஸ்திரங்களில் உள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவதும், மாலையிலும் திரும்ப ஆசாரியர்களோடு சேர்ந்து மாலை நேரத்து அர்க்யங்களை அளிப்பதும், இரவு உணவின் பின்னர் ஆசாரியர்கள் அனைவரையும் வணங்கிவிட்டே தன் படுக்கைக்குச் செல்வதுமாய் நியமம் கடைப்பிடித்து வருவதைக் கண்டு வியந்தான். கண்ணனின் சகலகலாவல்லமையைக் கண்டு பூரித்துப் போனான் என்று சொன்னாலும் மிகையில்லை. ஒரு அந்நியனைக் கூட அந்நியன் என உணராமல் தன்னில் ஒருவன் என உணர வைக்கும் கண்ணனின் அந்த அந்நியோந்நியமான நடத்தை எவரிடத்திலும் இதுவரை கண்டிராத ஒன்று. தாமகோஷன் தன் மனைவியின் சகோதரனுக்குப் பிறந்திருக்கும் இந்தப் பிள்ளை நிஜமாகவே அபூர்வமானதொரு முத்து என்பதை உணர்ந்தான்.

உத்தவனின் மேற்பார்வையில் பிரயாணம் நடந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல அது உஜ்ஜயினியை அடைந்தது. அங்கே குரு சாந்தீபனியின் நடமாடும் பல்கலைக்கழகம் முகாமிட்டிருந்தது. ஆகவே அவரும், மன்னன் ஜயசேனன் தன்னிரு குமாரர்களான விந்தனும், அநுவிந்தனும், தொடரக் கண்ணனையும், பலராமனையும் அவர்கள் பரிவாரங்களையும் வரவேற்றனர். குண்டினாபுரத்திலிருந்து திரும்பிய அநுவிந்தன் கண்ணனின் பெருந்தன்மையான போக்கை நேரே கண்டு அதன் பலனைப் பூரணமாய் அநுபவித்துவிட்டிருந்தபடியால் இப்போது அவன் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. கண்ணனிடம் நன்றி உணர்ச்சியால் அவன் நெஞ்சம் விம்மியது. குரு சாந்தீபனியின் ஆசிரமத்தைக் கண்ட கண்ணனும், பலராமனும், உத்தவனோடும், விந்தன் அநுவிந்தனோடும் தாங்கள் கழித்த குருகுல நாட்களை நினைவு கூர்ந்து அங்கே தங்கி தங்கள் நினைவுகளைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பினர். புநர்தத்தனைக் கண்ணன் மீட்டு வந்த அதிசயக் கதையைப் பற்றிப் பேசிப் பேசிப் பொழுதைக்கழிக்க ஆசைப்பட்டனர். ஆனால் உத்தவன் கரவீரபுரத்தில் கிளம்பும்போது சாந்தீபனியின் ஆசிரமத்தில் தங்கிச் செல்வதை மிகவும் விரும்பியவனாய்த் தெரிந்தான். இப்போது தான் அங்கே தங்கவில்லை என்றும், பிரயாணம் மேற்கொண்டும் தொடர இருப்பதால் தான் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் செல்வதாயும் கூறிவிட்டான். கண்ணனுக்கு இது மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒரு நிமிஷம் கிடைத்தாலும் கண்ணனோடு செலவிட விரும்பும் உத்தவன் இவ்வாறு கூறியது ஆச்சரியமாய் இருந்தாலும், உத்தவனை ஒரு நாளேனும், ஆசிரமத்தில் தங்கித் தங்களோடு பொழுதைக் கழிக்கும்படி வேண்டினான் கண்ணன். ஒருவாறு உத்தவன் ஒத்துக்கொண்டான். குரு சாந்தீபனி தன் சீடர்களுக்கு நேர்ந்த பல்வேறுவிதமான ஆச்சரிய அநுபவங்களைக் கேட்டுப் பெருமிதம் கொண்டார். ஏற்கெனவே கண்ணன் தனக்குக் குரு தக்ஷிணையாகத் தன் மகனையே அளித்ததையும், அதற்கு அவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளாலும் மனம் பூரித்திருந்த சாந்தீபனி வழக்கத்துக்கு மாறாகத் தான் கண்ணனின் திருவடிகளில் விழுந்து வணங்குவதுதான் முறை என உள்ளூர எண்ணினார். இவன் சாதாரண மனிதனல்ல, கடவுளர்க்கெல்லாம் மேலான பரம்பொருள்! இவனே அனைத்து உயிரிலும் நிறைந்திருப்பவன் என்றெல்லாம் தோன்றிற்று அவருக்கு.

பலராமன் தன் கலகலப்பான பேச்சுக்களால் அனைவரையும் மகிழ்வித்தான் என்றாலும், அவன் மனம் மகிழும்படியான குறிப்பிட்ட பானம் அவனுக்கு இங்கேயெல்லாம் கிடைக்காமல் போனது மாபெரும் குறைதான். மேலும் இது குருகுலம். குருவின் ஆசிரமம். இங்கே எங்கே நமக்கு உற்சாகம் அளிக்கும் அந்தப் பானம் கிடைக்கும்? அப்போது அங்கே இரு பெண்கள் வந்தனர். அனைவருக்கும் குடிக்கக் குளிர்ந்த நீர் அளித்தார்கள். ஒரு பெண் நளினமாயும், அழகாயும், மெல்லிய உடலோடும் இருந்தாள். இன்னொரு பெண்ணோ ஆஜாநுபாகுவாய் உயரமும், பருமனுமாய், அதே சமயம் ஈடு இணையில்லா அழகோடும், பெண்மை பொங்கித் ததும்பக் காட்சி அளித்தாள். அவள் பெரிய கண்களில் குறும்பு கொப்பளித்தன. தன்னுடைய வீரப் பிரதாபங்களைப் பற்றி நகைச்சுவை ததும்பப் பேசிக்கொண்டிருந்த பலராமன் அந்தப் பெண்ணைக் கண்டதும் பேச்சை இழந்தான். தன்னை மறந்து அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் இனங்காணாததொரு உணர்வு, அதோடு ஆச்சரியமும் கலந்து இருந்தது. ஓரக் கண்களால் இதைக் கண்ட சாந்தீபனி சிரித்தார்.

“பலராமா, இந்த மெல்லிய தேகத்தை உடைய பெண் வசந்திகா, ஸ்வேதகேதுவின் சகோதரி. இன்னொரு பெண் என்னுடைய மாணாக்கர்களிலேயே சிறந்த பயிற்சி உடைய பெண் ஆவாள். இவளுக்குத் தெரியாத ஆயுதப் பயிற்சியே இல்லை எனலாம். மேலும் எல்லாப் போட்டிகளிலும் என்னுடைய சிறந்த ஆண் மாணவர்களை இவள் ஒருத்தியே வெற்றி கொண்டிருக்கிறாள். இவள் குதிரைச் சவாரி செய்யும்போது பார்! இவளை விடச் சிறப்பாக எந்த அரசனாலும் குதிரையை நடத்த முடியாது!” என்றார். பலராமன் வாய் திறந்து எதுவும் பேசாவிட்டாலும் அவன் பார்வை அந்தப் பெண்ணின் மீதே பதிந்திருந்தது. வைத்த கண்களை எடுக்கவில்லை அவன். அவள் அங்கிருந்து மறையும்வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அதைக் கண்ட கண்ணன், பலராமனுக்கு உதவும் நோக்கத்தோடு,”ஆசாரியரே, அந்தப் பெண் யார்?? ஏன் ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டான்.

கிருஷ்ணா, குழந்தாய், அவள் பெயர் ரேவதி. அவள் வாழ்க்கையே துயரம் மிகுந்த ஒன்று. குஷஸ்தலை பற்றிக் கேள்விப் பட்டிருப்பாய் அல்லவா? பிரபாச தீர்த்தத்தின் அருகே இருக்கும் நாடு. ஒரு துறைமுகம் அது. வியாபாரிகளுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் கேந்திரஸ்தானம். பல வருடங்கள் முன்னால் புண்யாஜனா ராக்ஷஸர்கள் குஷஸ்தலைக்கு வந்தபோது அதன் மீது கடும் தாக்குதல் நடத்தினார்கள். குடிமக்களைத் தங்கள் வாளால் வெட்டிக்கொன்றார்கள். குஷஸ்தலையின் அரசன் ரேவதாகுகுட்மின் என்பவன் எப்படியோ அங்கிருந்து தப்பினான். அவனுடைய முப்பது சகோதரர்களும், ஏழு குமாரர்களும் அந்தச் சண்டையில் கொல்லப் பட்டார்கள். மேலும் அவனுடைய மனைவிமார்களின் மானம் பறிக்கப் பட்டு அவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ராக்ஷஸர்கள் அந்தப் பெண்களை அநுபவித்தனர். அந்தப் பெண்கள் ஒன்று தற்கொலை செய்துகொண்டனர் அல்லது ராக்ஷஸர்களால் கொல்லப் பட்டனர். தன்னுடைய பச்சிளம் பெண்குழந்தை ஒன்றோடு அவன் தன் நம்பிக்கைக்கு உரிய சில ஊழியர்களோடு தப்பினான், மலைகளில், மலைக்காடுகளில் சென்று மறைந்து கொண்டான்.”

பலராமனும் உன்னிப்பாய் இதைக் கேட்டுவந்தான். அந்த இளம் அழகான ராக்ஷசியை அவனால் மறக்க முடியவில்லை. சாந்தீபனி தொடர்ந்தார்:”ஆனால் குக்குட்மின் ஒரு கடுமையான தீர்மானத்துக்கு வந்தான். அவன் தன்னுடைய குலதெய்வமான பிரமனின் முன்னால் குஷஸ்தலையை எவ்விதமேனும் திரும்பக் கைப்பற்றுவதாய்ச் சபதம் செய்தான். அதன் பின்னர் ஒவ்வொரு இடமாய்ச்சுற்றினான். எங்கேயும் நிரந்தரமாய்த் தங்க முடியாமல் தனக்கு உதவி செய்கிறவர்கள் எவரேனும் கண்ணில் படுகின்றனரா எனப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் எவரும் முன்வரவில்லை. அவனுடைய உறவினர் அனைவரும் கொல்லப் பட்டனர். அவனுடன் வந்த சில ஊழியர்களுக்கு வயது ஆகிக்கொண்டிருந்தது. அவனுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. ஆர்யவர்த்தத்தின் தொன்மையான குடியான ஷர்யாதா என்னும் குடும்பத்தைச் சேர்ந்த குக்குட்மின்னுக்கு அவன் குலத்தில் எந்த உறவினர்களும் உதவிக்கு இல்லை. “

என்றாலும் அவன் தன் நோக்கத்திலிருந்து மாறவில்லை. தன் லக்ஷியத்தை எவ்விதமேனும் நிறைவேற்றிக் கொண்டு தன் நாட்டைத் திரும்பப் பெற நினைத்த அவனுக்கு ஒரே பற்றுக்கோல் அவனுடைய பச்சிளம் குழந்தையான அந்தப் பெண்குழந்தை ஒன்றே. அந்தக் குழந்தைக்கு ரேவதி எனப் பெயர் சூட்டினான். அவளைச் சிறு வயது முதலே மிகவும் தைரியசாலியாகவும், பலசாலியாகவும் எதற்கும் அஞ்சாதவளாயும் வளர்த்து வந்தான். இவள் மூலமே தன் லக்ஷியம் நிறைவேறும் என மனப்பூர்வமாய் எண்ணினான். கடுமையான பயிற்சிகளைக் கொடுத்து அவள் உடலை வலிமையாக்கினான். ஒரு ஆண்மகன் கூட அவ்வளவு கடுமையான பயிற்சிகளைத் தாங்கி இருப்பானா என்பதே சந்தேகம் தான். அதன் பின்னர் ஷூர்பரகா சென்று ஆசாரியர் பரசுராமரிடம் சென்று தன் மகளை ஒரு மகன் போல் எண்ணிக்கொண்டு அவளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்குமாறு வேண்டினான். பரசுராமரால் பயிற்சி அளிக்கப் பட்ட அவளைக் கண்டு மகிழ்ந்த பரசுராமர், தற்கால நவீன ஆயுதங்களில் பயிலவேண்டுமெனில் சாந்தீபனியின் ஆசிரமத்திற்குப் போகவேண்டும் என்று சொல்லி அவளை இங்கே என்னிடம் அனுப்பி வைத்தார். தன் தந்தையோடு இங்கே வந்த ரேவதி இங்கே உள்ள அனைத்துப் பயிற்சிகளையும் முடித்துவிட்டாள். குக்குட்மின்னின் ஒரே நம்பிக்கை நக்ஷத்திரம் அவள்.” என்று முடித்தார் சாந்தீபனி.

“அவளால் குஷஸ்தலையை மீட்க முடியவில்லை எனில்?? என்ன நடக்கும்??” பலராமன் கேட்டான்.

“அப்படி நடந்தால் தந்தை, மகள் இருவருமே அக்னிப் பிரவேசம் செய்துவிடுவதாய் உறுதி பூண்டிருக்கின்றனர்.” சாந்தீபனி தெரிவித்தார்.

“கடவுளே, என் கடவுளே, என்ன தந்தை அவர்?? மிகவும் பயங்கரமான ஆசாமியாய் இருப்பார் போலிருக்கே? அவர் வேண்டுமானால் அக்னிப் பிரவேசம் செய்யட்டுமே! கூடவே மகளையும் எதற்குப் பிராணத் தியாகம் செய்யச் சொல்கிறார்?” பலராமனால் அவனை அடக்கமுடியவில்லை. சாந்தீபனியோ சிரித்துக்கொண்டே, “அவள் மிகவும் நல்ல குழந்தை. கீழ்ப்படிதலுள்ள குழந்தை. தன் தந்தையின் நோக்கத்தைப் பூரணமாய் நிறைவேற்றுவதொன்றையே தன் கடமையாகக் கொண்டிருக்கும் அபூர்வக் கதாநாயகி. குஷஸ்தலையை வென்று மீட்க முடியவில்லை எனில் இறந்து போவேன் எனச் சபதம் செய்திருக்கிறாள். ஆனால் இவர்கள் இருவராலும் மட்டுமே அது நடக்குமா என்பதே என் கவலை, சந்தேகம் எல்லாமே! இவர்களுக்குத் துணையாக யார் இருப்பார்கள்?”
கண்ணன் உடனே அரசன் குக்குட்மின்னைப் பார்த்துத் தங்கள் வந்தனங்களைத் தெரிவிக்கவேண்டுமென்று விரும்பினான். சாந்தீபனியும் அவர்களை அழைத்துச் செல்வதாயும், குக்குட்மின் சிப்ரா மலைக்குகையில் வசிப்பதாயும் கூறினார். கூடவே, குக்குட்மின் தன் அருமைப் பெண்ணைத் தவிர வேறு எவரும் தன்னைச் சந்திப்பதை விரும்பமாட்டார் என்றும் எச்சரிக்கை செய்தார்.

6 comments:

எல் கே said...

இது எல்லாம் நான் படிச்சது இல்லை. தொடர்ந்து எழுதுங்க

priya.r said...

தீபாவளியன்று ஒரு நல்ல பதிவு !
ரொம்ப சுவாரஸ்யமாக ஆன்மிக தொடர் சென்று கொண்டு இருக்கிறது
பக்தி பரவசத்தோடு நாங்களும் வாசித்து கொண்டு இருக்கிறோம் டீச்சர்

priya.r said...

அடுத்த பதிவுக்காக வெய்டிங் டீச்சர்

priya.r said...

Aduthu kannan eppo varuvaan(r)!

பித்தனின் வாக்கு said...

nan thodarnhthu padithu varukinren. comments podavillai. ungal pathivu vara vittal varuththam tharum. mikuntha siramththikku idaiyil kannanin kathai eluthum ungalluku en namaskarangal

sambasivam6geetha said...

வாங்க எல்கே, நன்றி.

ப்ரியா, அடுத்தபதிவை நாளைக்கு எப்படியானும் போடணும்!

பித்தனின் வாக்கு, ரொம்ப சரியாச் சொல்லி இருக்கீங்க! :( என்ன செய்யறது?? நேரம் அப்படி!