Wednesday, November 24, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

உத்தவனின் மாற்றமும், கண்ணனின் கலக்கமும்!

ரேவதியையும், அவள் வீரத்தையும் உயர்வாகப் பேசி எவ்வகையிலாவது குக்குட்மின்னின் மனதைச் சமாதானம் செய்ய பலராமன் முயற்சித்தான். ஆனால் ரேவதியும் பலராமன் தன்னைக் குழந்தைபோல் நடத்துவதாய்க் கருதினாள். தோல்வியுற்று ஓடி வந்து தான் அழுவதற்கு பலராமன் கூறும் சமாதானம் என நினைத்தாள். கோபத்தோடு பலராமனைப் பார்த்துக் கத்தினாள். பலராமன் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனமாய் இருந்தான். “போ, வெளியே!” திட்டவட்டமாய்க் கூறினான் குக்குட்மின். சட்டெ ன்று பலராமனுக்கு அவர்கள் மீது இருந்த பரிதாப உணர்ச்சி மறைந்தது. அதுவரையிலும் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவன், இப்போது தூக்கத்திலிருந்து விழித்தவன் போல் சுயநினைவுக்கு வந்தான். “சும்மாக் கத்தாதீர்கள் இருவரும்! அரசே, உங்கள் மகள் நன்கு பயிற்சி அளிக்கப் பட்டிருந்தாலும் அவள் ஒருத்தியால் மட்டுமே குஷஸ்தலையை வென்று மீட்க முடியாது. “ இப்போது குக்குட்மினின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. ஆனால் பலராமன் விடாமல், “கேட்கிறீர்களா இல்லையா? உங்கள் போர்த்தந்திரங்கள் இந்தக் காலத்துக்குச் சற்றும் பொருந்தாதவை. உங்கள் போர்முறையில் சண்டையிட்டு குஷஸ்தலையை வெல்ல முடியாது. “ பலராமன் இப்போது வற்புறுத்திக் கூறினான்.

“போ, வெளியே,” மீண்டும் கத்தினான் குக்குட்மின். ரேவதியோ பலராமனை வெறுப்புடன் பார்த்தாள். கோபத்தில் அவள் உடலே நடுங்கியது. “போகமுடியாது!” அழுத்தம் திருத்தமாய்க் கூறிய பலராமன், “ நான் உங்களுடன் வந்து குஷஸ்தலையை உங்களுக்காக மீட்டுத் தருகிறேன். கத்துவதை நிறுத்துங்கள். நான் வசுதேவனின் மகன். எல்லாம் வல்ல பரம்பொருளின் மீது ஆணையிட்டு, ஆகாசவாணி, பூமாதேவி சாக்ஷியாகக் கூறுகிறேன். நீங்கள் மீண்டும் குஷஸ்தலைக்கு மன்னனாவதை நான் என் கண்களால் காணுவேன்! இது உறுதி! என் சபதம்!” என்றான். செயலிழந்து அவனைப் பார்த்தான் குக்குட்மின். ரேவதியோ புதியதொரு பார்வையுடன் பலராமனைப் பார்த்தாள். “கேளுங்கள், நான் உங்கள் குமாரிக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப் போகிறேன். அதுவும் உண்மையான யுத்தத்தில் எப்படிச் சண்டையிடவேண்டுமோ, அவ்வாறு கடினமான பயிற்சி அளிக்கப் போகிறேன். “தீர்மானமாய்க் கூறிய பலராமன் மேலும் தொடர்ந்தான்.
“அவள் பயிற்சியை எடுத்துக்கொண்டு வரப் போகிறாள். ஆகவே நீர் சண்டையிட வரவேண்டாம். உங்கள் மகளுக்கு நான் பயிற்சி கொடுத்துத் தயாராக்குகிறேன். புண்யாஜன ராக்ஷஸர்களை ஒருத்தர் பாக்கி இல்லாமல் அனைவரையும் குஷஸ்தலையில் இருந்து விரட்டி அடிக்கிறேன். இந்தப்பழைய ராக்ஷஸர்களின் குஷஸ்தலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்டு உங்களுக்குப் புதியதொரு அற்புதமான குஷஸ்தலையை உருவாக்கித் தருகிறேன். தேவலோகத்து அமராபுரிக்குப் போட்டியிடும் வண்ணம் அழகான நகரை உருவாக்கித் தருவேன். மீண்டும் ஒரு முறை என்னை வெளியே போ என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் இருவரையுமே இந்த சிப்ரா நதியில் மூழ்கடித்துவிடுவேன். பின்னர் நான் மட்டும் தனியாக் குஷஸ்தலை செல்லவேண்டும். இப்போது சொல்லுங்கள், நான் போகவேண்டுமா? அல்லது நீர் என்னுடனும், என் சகோதரன் உத்தவனுடனும் வந்து செளராஷ்டிராவின் குஷஸ்தலைக்குச் செல்லலாமா? அதுவும், நாளை மறுநாளே!”
ரேவதி பெரியதொரு ராக்ஷஸன் போல் நின்று கொண்டிருந்த பலராமனைப் பார்த்துவிட்டுத் தன் தந்தை என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டு அவர் பக்கம் திரும்பினாள். எல்லாவற்றையும் கேட்ட குக்குட்மின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், “வசுதேவகுமாரா, அந்தக் கடவுளே உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறார். உன் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். நாம் போகலாம்.” என்று கூறினான். அவன் குரலில் புதியதொரு நம்பிக்கை உதயமாகி இருந்தது தெரிந்தது.
************************************************************************************


அந்த இரவில் கிருஷ்ணன் உத்தவனை நினைத்து நினைத்து மிகவும் கவலைப்பட்டான். உத்தவனுக்கு ஏதோ ஆகிவிட்டது. கண்ணன் பிறந்ததில் இருந்து கோகுலத்துக்கு அனுப்பப் பட்ட உத்தவன் கண்ணனோடு சேர்ந்தே வளர்ந்தான். இத்தனை வருடங்களில் உத்தவனை இப்படி ஒரு நிலையில் கண்ணன் பார்த்ததில்லை. தன்னிடம் கூட ஏதோ மறைக்கிறானே?? அதோடு கூட நினைவெல்லாம் எங்கேயோ இருக்கிறது, வித்தியாசமாய் நடந்து கொள்கிறான். எப்போதுமே பேச்சுக் குறைவு தான். என்றாலும் வெளிப்படையாய் உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசும் வழக்கம் கொண்டவன். மென்மையான சுபாவம் படைத்தவன். அதிர்ந்தே பேசமாட்டான். கண்ணன் தாமகோஷனுடனும், பலராமனுடனும் முதல் ரதத்தில் பிரயாணம் செய்து கொண்டு வந்தான். ஷாயிபாவும், அவள் தோழிகளும் அடுத்த ரதத்திலும், ஆசாரியர்கள் மற்ற ரதங்களிலும் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். உத்தவன் இந்தப் பிரயாணத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக்கொண்டிருந்ததால் பெரும்பாலும் குதிரையிலேயே பயணம் செய்து கொண்டிருந்தான். இரவுகளில் வழக்கம்போல் கண்ணன் இருக்கும் இடம் தேடி வந்து படுத்துக்கொள்கிறான் தான். இருவரும் அருகருகே படுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு அன்றைய சம்பவங்களையும், அதைப் பற்றிய அவர்கள் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் இந்தப் பிரயாணம் ஆரம்பித்துச் சிறிது காலத்திலேயே கிருஷ்ணன் உத்தவனிடம் மாற்றத்தை உணர்ந்தான். முதலில் சரியாகத் தெரியவில்லையாயினும், உத்தவனுக்குள் ஏதொ புதியதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ம்ம்ம்ம்ம்?? இந்தக் கடைசி இரு தினங்கள், உத்தவன் வேண்டுமென்றே கிருஷ்ணனின் அருகில் வருவதைத் தவிர்த்து வருகிறான். இன்னும் சொல்லப் போனால் பகல்வேளைகளில் கூடக் கண்ணனின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.

உத்தவா? இது நீ தானா??

அன்று கண்ணன் மிகவும் வற்புறுத்திக் கூறியதன் பேரில் உத்தவன், கண்ணனோடு படுக்க வந்தான். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த நண்பர்கள் பின்னர் தூங்கலாம் என படுத்தார்கள். எப்போதும்போல் பலராமன் படுத்ததுமே உறங்கி விட்டான். கண்ணனுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணன் எப்போதுமே படுத்த அடுத்த நிமிடமே உறங்குபவன் தான். ஆனால் இன்று உத்தவன் திரும்பித் திரும்பிப் புரண்டு படுப்பதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். சற்று நேரம் பொறுத்த கண்ணன் மெல்லத் தன் கைகளை உத்தவன் மேல் வைத்தான். தூக்கிவாரிப்போட்டுக்கொண்டு எழுந்த உத்தவன் அருகே அமர்ந்து தன்னைக் கனிவோடும், கருணையோடும் பார்த்துக் கொண்டிருந்த கண்ணனைக் கண்டதும், என்ன சொல்வதென்று புரியாமல் பார்த்தான். கண்ணன் அவனிடம், “உத்தவா, நான் உன்னுடன் பேசவேண்டும்!” என்றான். உத்தவன் பதிலே பேசவில்லை. வானில் நேரம் கழித்து வந்த சந்திரன் மங்கிய நிலவொளியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. உத்தவன் எதுவுமே பேசாமல் கண்ணனோடு நடந்தான். இருவரும் ஒரு அடர்ந்த மரத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த ஒரு மேடைக்கு வந்து அமர்ந்தார்கள். கண்ணன் உத்தவனையே சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். உத்தவன் சங்கடத்தோடு நெளிந்தான்.


“உத்தவா, இப்போதெல்லாம் நீ மிகவும் மாறிவிட்டாய்!”
“நானா? மாறியா விட்டேன்? அதெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா!”

“உத்தவா, உண்மையைச் சொல், நான் என்ன கேட்கிறேன் என்பது உனக்குப் புரிகிறதல்லவா?? நம்மிருவருக்கும் இடையே ஏதோ தடை இருப்பதை நான் உணர்கிறேனே?? அது உனக்குத் தெரியவில்லையா?? நான் ஒருவேளை உன்னை அவமதித்துவிட்டேனோ?”

உத்தவன் கண்களில் கண்ணீர் ததும்பா, “அவமதிப்பா? கண்ணா, உனக்கு யாரையுமே அவமதிக்கத் தெரியாதே? என்னை நீ எவ்வாறு அவமதிப்புச் செய்வாய்?? மேலும் நீ என்னை என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எனக்குச் சம்மதமே! அப்படி இருக்கையில் உனக்கு என்ன சந்தேகம் கண்ணா?”

4 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா கதை நல்ல சூடு பிடிக்குது. இளவல் லட்சுமணன் மற்றும் ஆதிசேஷனை வேளிய போன்னு சொன்னா கோபம் வராம என்ன செய்வார். என்னடா கதையில இதுவரைக்கும் பலராமனுக்கு கோபம் வரவில்லை என யோசித்தேன். மிக அழகாய் சொல்லியுள்ளீர்கள். அற்புதம். மிக்க நன்றி.

sambasivam6geetha said...

நன்றி பித்தனின் வாக்கு.

பித்தனின் வாக்கு said...

நீங்க இந்த பிளாக்கை ஏன் இண்ட்லி, (சட்ட்னி) மற்றும் தமிழ் மணத்தில் இணைக்க வில்லை

sambasivam6geetha said...

அதெல்லாம் எதுக்குங்க, வரவங்க வந்து படிக்கிறது போதும். :))))))