Tuesday, January 25, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

அவன் வந்துவிட்டான்!


தேவகி, வியக்கவைக்கிறது, உன்னுடைய பக்தி. நீ ஒன்றும் பைத்தியம் இல்லை. நீயே தெய்வீகமானவளாகிவிட்டாய். நீ என்ன உணர்கின்றாயோ அதுதான் நாரதர் உணர்ந்த அனைத்திலும் சிறந்த பக்தியின் தத்துவம் என்று எனக்குப் புரிகிறது. நீ சொல்வதைக் கேட்டதும், உன்னையும் பார்த்ததும் எனக்கு ரிஷிகளிலே சிறந்தவரான வேதவியாசருக்கு நாரதமுனிவர் சொன்னவை நினைவில் வருகின்றன. பக்தி என்றால் என்ன என்று தேடிய நாரதருக்கு அந்த ஸ்ரீமந்நாராயணனே காட்டியவை இவை அனைத்தும் என்றும் வேத வியாசர் கூறினார் என்னிடம். அவர் என்னிடம் இதைப் பற்றிக் கூறியதுமே என் நினைவில் நீ தான் வந்தாய்.
அண்ணாரே, எனக்கு அது எல்லாம் தெரியாது; புரியவும் புரியாது. அப்படி ஒன்றை நான் கண்டதோ, கேட்டதோ இல்லை!” என்றாள் தேவகி.

“இதை ஐகாந்திக பக்தி என்பார்கள் தேவகி! பிரேமபக்தியின் வடிவம் இது. இறைவனிடம் கொண்ட அன்பே பிரேமை என்று கூறப்படும். தெய்வீகமான இந்த அன்பின் தத்துவம் பற்றிப் பிரஜாபதி நமக்கு முன் இருந்த பழைய அரசர்களுக்கும், விவஸ்வானுக்கும், மனுவுக்கும் பின்னர் இக்ஷ்வாகுவுக்கும் கூறினார். இப்படித் தான் எனக்கு வேதவியாசர் கூறிவிட்டு இதைப் பற்றிய அந்தச் செய்தியையும் கூறினார்.”

“ஆஹா, நான் அவ்வளவெல்லாம் அறிவாளி அல்லவே; நான் என்னை அப்படி நினைத்துக்கொண்டதும் இல்லை. அண்ணாரே, சற்று விளக்கமாய்ச் சொல்லுங்களேன். வேத வியாசர் என்ன கூறினார் உங்களுக்கு? நாரத முனிவர் வேத வியாசரிடம் என்ன கூறினாராம்?”

“தேவகி, கேள், வேத வியாசர் கூறியவை என்னவென்றால்:

ஒரு சமயம் நாரதமுனிவர் வைகுந்தத்தில் ஸ்ரீமந்நாராயணனைத் தரிசிக்கச் சென்றிருந்தாராம். ஸ்ரீமந்நாராயணன் அப்போது ஏதோ ஜபித்துக்கொண்டிருந்த மாதிரி நாரதருக்குத் தோன்றியதாம். ஆஹா இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் தொழும் ஸ்ரீமந்நாராயணன் யாரை வணங்குகிறான்? நாரதருக்கு ஆச்சரியம்! உடனே ஸ்ரீமந்நாராயணனிடம், “பிரபுவே, இவ்வுலகில் மட்டுமில்லாமல் ஈரேழு பதினாலு லோகங்களிலும் உம்மையே வணங்குகின்றனர். மானுடர்களும் உம்மைத் தான் வணங்குகின்றனர். ஆனால் நீர் யாரை வணங்குகின்றீர்? இவ்வுலகில் நீர் வணங்கும் ஆன்மாவும் உள்ளதா? “ நாரதருக்கு ஆச்சரியம். அனைவரையும் விடத் தாமே ஸ்ரீமந்நாராயணனிடம் பக்தி பூண்டவன் என்ற கர்வமும் உள்ளவர் நாரதர். ஆகவே ஸ்ரீமந்நாராயணன் தம்மைத் தான் வணங்குகிறாரோ என்ற உள்ளார்ந்த பெருமையும் இருந்தது அவருக்கு. ஆனால் ஸ்ரீமந்நாராயணனோ நாரதரிடம், “ நாரதா, உனக்கு என்னிடம் உள்ள பக்தியை நான் நன்கறிவேன். ஆனாலும் நீ இப்போது கேட்ட கேள்விக்கு விடையை என்னால் கூற இயலாது. சொல்லப் போனால் வார்த்தைகளிலே விவரித்துக் கூற இயலாத ஒன்று அது. பூமியின் மையமான மேரு மலைக்குப் போ. அதைச் சுற்றி உள்ள இடங்களுக்கு எல்லாம் செல். ஷ்வேத த்வீபத்துக்குச் செல். அங்கே பிருஹஸ்பதியைப் பார். பின்னர் ஏகதா, த்விதா, த்ரிதா மற்றும் வாசு உபரிச்சாரா ஆகியோரைப் பார். அவர்களிடம் கேள்! இந்த பக்தி என்றால் என்னவென்றும், ஸ்ரீமந்நாராயணனே வணங்கும் நபர் யார் என்றும் கேள்! விடையை நீயே உணர்வாய்!” என்றார்.’

அக்ரூரர் இதைக் கூறும்போதே தேவகி இடைமறித்து, “நாரதமுனி ஷ்வேத த்வீபம் சென்றாரா?” என்று வினவினாள். அக்ரூரர், “ சென்றார் தேவகி! முதலில் பிருஹஸ்பதியைப் பார்த்திருக்கிறார். அவருக்கு பக்தியின் அர்த்தமோ, அனைத்துக்கும் மேம்பட்ட ஸ்ரீமந்நாராயணனின் மகத்துவமோ தெரியவோ, புரியவோ இல்லை. அவர் வேதங்களைப் பின்பற்றுவதிலும், யாகங்களில் பலி கொடுத்து தேவதைகளைத் திருப்திப் படுத்துவதிலுமே மூழ்கி அதிலேயே தாம் உன்னதம் அடையலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தார். பின்னர் ஏகதா, த்விதா, த்ரிதா அனைவரிடமும் சென்றார் நாரதர். அவர்களும் பரமாத்மாவின் தத்துவத்தை அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கும் பரமாத்மா என்றால் என்னவென்று புரியவில்லை. அதற்காக தவங்கள், ஜபங்கள் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர் நாரதர் வாசு உபரிசராவிடம் சென்றார். அவரோ பக்தியே உருவமாக இருந்தார். ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு எவரையும் அவரால் உணரமுடியவில்லை. சொல்லப் போனால் அவரே ஸ்ரீமந்நாராயணனாகக் கரைந்து விட்டிருந்தார். “

“ஆஹா, எப்படி அண்ணாரே, எப்படி? அது எப்படி?” தேவகியின் ஆவல் மிகுந்தது.
“உன்னைப் போலத் தான் தேவகி! நீ எவ்வாறு பாலகிருஷ்ணனிடமே உன் மனத்தை ஈடுபடுத்தி, அவனுக்கு உன்னையே ஆஹுதியாகக் கொடுத்தாயோ அவ்வாறு தான். தன் தெய்வீகப் ப்ரேமையின் மூலமாக வாசு உபரிச்சரா தன்னையே ஸ்ரீமந்நாராயணனுக்குக் கொடுத்துவிட்டார். சொல்லப் போனால் அவர் தன் வாழ்க்கையையே இறைவனுக்காக, ஸ்ரீமந்நாராயணனுக்காக அர்ப்பணித்துவிட்டார். அனைத்துக்கடவுளருக்கும், அனைத்து மனிதர்களுக்காகவும், அனைத்து தேவர்களுக்காகவும், அனைத்து அசுரர்களுக்காகவும், இவ்வுலகின் அனைத்து ஜீவராசிகளுக்காகவும் அவற்றின் நன்மைக்காகவும், தீமைக்காகவுமே தம்மை அர்ப்பணித்திருக்கிறார். தன்னைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கவே இல்லை. ஸ்ரீமந்நாராயணன் தானே அவருக்கு நேரில் தரிசனம் தந்து அவரில் தன்னை நிரப்பிவிட்டான். அவரே ஸ்ரீமந்நாராயண சொரூபமாகிவிட்டார்.”

“பின்னர்?? பின்னர் நாரதர் என்ன செய்தார் அண்ணாரே?”

“தெய்வீகமான பக்தி/பிரேமை கலந்த பக்தி என்பது என்னவென்று அவரால் அப்போது தான் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த அதிசய, அபூர்வ, பிரேமையில் தன்னையும் கரைத்துக்கொண்ட நாரதர் முழுதும் அதில் மூழ்கியவராய் ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்தார். ஸ்ரீமந்நாராயணனும் அன்பு மீதூறி அவருக்குத் தன் தெய்வீக விஸ்வரூப வடிவைக் காட்டி அருளினார். அவ்வளவுதான். இந்தச் செய்தியை வேதவியாசர் என்னிடம் கூறியபோது உன்னுடைய அன்பும், பக்தியும் தான் என் நினைவில் வந்தது தேவகி!” என்று முடித்தார் அக்ரூரர்.

தேவகியோ பணிவுடனும், விநயத்துடனும், “என் மூத்த அண்ணாரே, நீர் என்னிடம் மிகவும் அன்பு வைத்திருக்கிறீர். அதோடு என்னிடம் மிகக் கருணையும் காட்டுகிறீர். நீர் இப்போது என்னிடம் கூறியவற்றை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன். நான் அவ்வளவு படித்த ஞானியோ, புத்திசாலியோ அல்லவே!” என்றாள்.

“ஓஓ, தேவகி, நீயா படிக்காதவள்? அல்ல, அல்ல! எத்தனையோ படித்த அறிஞர்களையும் தத்துவ விசாரங்கள் செய்யும் ஞாநிகளையும் விடவும் நீ மிகவும் உயர்ந்த உன்னதமானவள். பாலகிருஷ்ணனிடம் நீ வைத்திருக்கும் இந்த அன்பு, பிரேமை கலந்த பக்தியானது மிக மிக உயர்ந்த ஒன்று. தெய்வீகம் நிறைந்த இந்தப் பிரேம பக்தியே ஐகாந்திக பக்தி என்று அனைத்தும் கற்றறிந்த முனிவர்களாலும், ரிஷிகளாலும் சொல்லப் படுகிறது. ஆனால் நீயோ படிக்காதவள் என்று சொல்லிக்கொண்டே எப்படிப் பட்டதொரு அன்பை வெளிப்படுத்துகிறாய்? இந்த ஐகாந்திக பக்தி வேறு எதையும் எதிர்பார்க்காத பிரதிபலனே கருதாத பக்தியாகும். இந்த மாதிரியான பக்தி செலுத்துபவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காததோடு, வேறு பரிசுகளோ இன்னும் சொல்லப் போனால் சொர்க்கம் செல்லவேண்டும் என்றோ வைகுந்த வாசம் வேண்டும் என்றோ நினைக்கவே மாட்டார்கள். எதையும் திரும்பக் கேட்காத இந்த அன்பு பரிபூரணமானது. ஏனெனில் இந்த அன்பில் அவர்களுக்குள்ளே அவனே பூரணமாக நிறைந்திருக்கிறான். அவனுள்ளே அவர்களே நிறைந்துள்ளார்கள். அவனிலேயே, அவனாக, அவனுக்காகவே வாழ்கின்றனர். உன்னுடைய அன்பு அப்படிப் பட்ட நாராயணீய பக்தி ஆகும் தேவகி!’ உள்ளமும், உடலும் மட்டுமில்லாமல் அக்ரூரரின் சொல்லும், பார்வையும், செயலுமே இந்த பக்தியில் உருகிக் குழைந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது.

தேவகியோ புன்னகை மாறாமால், “அண்ணாரே, இன்று உமக்கு நல்ல வார்த்தைகளாகச் சொல்லும்படி நேரிட்டிருக்கிறது அல்லவா? அதுவும் என்னிடம் என்னைப் பற்றிய நல்வார்த்தைகளைக் கூறி என்னைச் சந்தோஷப் படுத்துகிறீர்கள். பால கிருஷ்ணனிடம் என்னுடைய பக்தியை அல்லது பிரேமையை, நாராயணீய பக்தி என்ற உயர்ந்த சொற்களால் சொல்லிப் பாராட்டுகிறீர்கள். அது உண்மை எனில் என்னுடைய கிருஷ்ணன், அவனே ஸ்ரீமந்நாராயணன் ஆகிவிடுவான். “ ஒரு குழந்தையின் குதூகலம் தெரிந்தது தேவகியின் குரலில்.

அக்ரூரரின் மனம் இன்னமும் நெகிழ்ந்த்து. அவர் கண்கள் ஏதோ பழைய காட்சியைக் காண்பது போல் எங்கோ தொலைதூரத்துக்குச் சென்றது. அதே கனவு காணும் குரலில் அவர், “யாருக்குத் தெரியும் தேவகி? அவனே அறிவான் இதை! முதல் முதல் அவனை நான் மதுராவுக்கு அழைத்துவரச் சென்றபோது ஒர் நிமிடம் நானும் அவனை ஸ்ரீமந்நாராயணன், அந்த வாசுதேவனே இவன் தான் என்பதை உணர்ந்தேன். கண்களால் கண்டேன்.”

“இருக்கட்டும் அண்ணாரே, ஆனாலும் இதை நாம் நம்மிருவரிடம் மட்டுமே வைத்துக்கொள்வோம். மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அவர்களுக்குப் புரியாது. மேலும் இது வெளியே பரவினால் கிருஷ்ணனுக்கு இன்னமும் எதிரிகள் அதிகம் ஆவார்கள்.” கொஞ்சம் கவலையோடு சொன்னாள் தேவகி.

“ஓ, நான் நன்கறிவேன் தேவகி, இது நம்மிருவருக்கும் இடையே மட்டுமே!” என்று அக்ரூரர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே வசுதேவர் வழக்கத்துக்கு மாறான படபடப்போடும், அவசரத்தோடும் விரைவாக வந்து கொண்டிருந்தார். வரும்போதே அவர் சத்தமாய், “அவன் வந்துவிட்டான்! அவன் வந்துவிட்டான்!’ என்று அறிவித்துக்கொண்டு வந்தார். சாதாரணமாக மிகவும் அமைதியாக இருக்கும் வசுதேவரின் படபடப்பையும் அவசரத்தையும் பார்த்து தேவகியும், அக்ரூரரும் வியந்தனர். “யார் வந்துவிட்டார்கள்?” என்று தேவகி கேட்டாள். கேட்கும்போதே அவள் உள் மனம் யார் வந்திருப்பார்கள் என்பதைச் சொல்லிவிட்டது. அதன் தாக்கத்தில் எப்போதும் வெளிறிக் காணப்படும் அவள் முகம் சற்றே நிறம் கண்டது.

“கிருஷ்ணன்! வேறு யார்? அவன் தான் வருகிறான். தாமகோஷனும் அவனுடன் இருக்கிறானாம். அவன் ஜராசந்தனை ஓட ஓட விரட்டி அடித்து விட்டான். என் கிருஷ்ணன்! அவனை மட்டுமில்லாமல் இன்னும் பல வெற்றிகளையும் கண்டு ஜராசந்தனின் படையையும் விரட்டி அடித்துவிட்டு வருகின்றான். “ வசுதேவரின் குரலில் அளவு கடந்த உற்சாகம். பல மாதங்கள் கழித்துத் தன் மகனைப் பார்க்கப் போகும் சந்தோஷம். என்றாலும் உடலும், மனமும் நடுங்கியது. “அவர்கள் வந்துவிட்டார்கள்” என்று கூறினார் பரபரப்பான குரலில்.

கண்களில் ஆந்ந்த பாஷ்பம் பொழிய, “அவன் என் நாதன், என் பிரபு, என் கடவுள்!” என்றாள் தேவகி!அக்ரூரரோ, தன் கண்களை மூடியவண்ணம் கீழே பார்த்துக்கொண்டு மெல்ல முணுமுணுத்தார்:

அவனே நாதன், அவனே ஸ்ரீமந்நாராயணன், அவனே வாசுதேவன்!

4 comments:

எல் கே said...

சகலமும் அவனே

sambasivam6geetha said...

வாங்க எல்கே, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். :))))

priya.r said...

//நீ என்ன உணர்கின்றாயோ அதுதான் நாரதர் உணர்ந்த அனைத்திலும் சிறந்த பக்தியின் தத்துவம் என்று எனக்குப் புரிகிறது// எனக்கு புரியும் படி சொல்லுங்க கீதாம்மா

இந்த 40 அத்தியாயத்தை படிக்கும் போது இறைவனை பற்றி நினைக்க வில்லையே என்ற குற்ற உணர்வு கூட வருகிறது .,எல்லோரும் கண்ணன் மேல் எவ்வளோ பற்றும் பாசமும் கொண்டு இருக்க நானோ வெட்டியாக காலத்தை வீண் செய்கிறேனோ என்ற ஆதங்கமும் தான் ................................

இராஜராஜேஸ்வரி said...

அவனே நாதன், அவனே ஸ்ரீமந்நாராயணன், அவனே வாசுதேவன்!
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!!