Tuesday, May 24, 2011

ஷ்வேதகேதுவும், உத்தவனும்! கண்ணன் வருவான், 2ஆம் பாகம்

உத்தவனைப் போன்றவன் கிடைப்பது அரிது. அவன் பேச்சிலும், செயலிலும் மாறுபாடே காண இயலாது. அவனைப் போன்ற தெளிவான சிந்தனை உள்ளவர்கள் அரிதாகவே காணமுடியும். மேலும் தன் நண்பனுக்காகவும், குருவான எனக்காகவும், தன் காதலைத் தியாகம் செய்யக் கூடத் தயாராக இருந்தான். தியாகமும் செய்துவிட்டு அதைக் குறித்து நினையாமல் இருக்கிறான். இல்லை…… இல்லை…… அது தவறு. உத்தவன் ஷாயிபாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் செய்து கொள்ளட்டும். அதன் மூலம் ஷாயிபாவிற்கும் மனம் மகிழ்வு அடையுமெனில் நல்லது தானே! உத்தவன் யார்?? என் இளைய சகோதரனைப் போன்றவன். மேலும் என்னைப் போலவே அவனும் கண்ணனிடம் மாறாத அன்பும், பாசமும் காட்டி வருகிறான். என்னை விடக் கூடுதலாகவே காட்டுகிறான். என் வாழ்க்கையில் எத்தனை தினங்களை நான் இழந்துவிட்டேன்! ஒரு ஆசாரியனாக, நல்லதொரு குருகுலத்தை நிர்மாணம் செய்யவேண்டும் என்றிருந்த என் குறிக்கோளை இந்த ஷாயிபா என்ற ஒரு பெண்ணை அடைய நினைத்ததன் மூலம் சர்வ நாசம் செய்துவிட்டேனே! என் இழந்த வாழ்நாட்களை, இழந்த கெளரவத்தை நான் எவ்வகையில் மீட்க இயலும்?? கடைசியாக நான் செய்தது ஒன்றே ஒன்றுதான். ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கண்ணன் அழிக்க அவனுக்கு உதவி செய்துவிட்டு ஒதுங்கி இருந்தது ஒன்றே நான் செய்த ஒரே நல்ல காரியம். என்றாலும் ஒரு ஆசை இருந்தது. ஜராசந்தனைக் கண்ணன் அழிக்கத் துணை செய்ய வேண்டும், அதுவும் ஷாயிபாவின் உதவியோடு கண்ணனுக்கு உதவவேண்டும் என நினைத்தேன். அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிட்டது. அதனால் என்ன??

நான் ஒரு பிராமணன். எனக்குத் தெரியாத அஸ்திர, சஸ்திர வித்தைகளே இல்லை. வேத, வேதாந்தங்களிலும் எனக்கு நல்ல புலமையும், ஞானமும் இருக்கிறதே. இந்த வறண்ட வாழ்க்கையை இனியாவது மீட்டெடுக்கலாம். என்னுடைய பிராமணத்துவத்தை நான் மீட்டெடுத்தால் தான் தலை நிமிர்ந்து நானும் ஒரு ஆசாரியன் என்று சொல்லிக் கொள்ள முடியும். ம்ம்ம்ம்ம் எவ்வளவு நாட்கள் ஜபங்கள்? தவங்கள் செய்தேன்! அத்தனையையும், அதன் பலாபலன்களையும் ஸ்ரீகாலவனை நான் ஆதரித்ததன் மூலம் இழந்துவிட்டேனே. சேச்சே! நான் ஒரு பிராமணனாகவும் இல்லை; ஒரு க்ஷத்ரியனாகவும் இல்லை; ஷாயிபாவின் கடைக்கண் பார்வைக்காகவும், அவளின் ஒரே ஒரு புன்னகைக்காகவும் அனைத்தையும் தொலைத்து விட்டேன். ஆஹா, இன்னமும் எதுவும் கெட்டுப் போகவில்லை. இனியாவது நான் விழித்துக்கொள்ளவேண்டும். ஒரு பிராமணனான நான் என் தர்மம் என்னவோ அதைக் காக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். கண்ணனோடு சேர்ந்து ஜராசந்தன் அழிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். எனக்கும், கண்ணனுக்கும் குருவான சாந்தீபனியின் முதன்மை சீடனான ஷ்வேதகேது பெண்ணாசையால் தன் தர்மத்தை விட்டு விலகினான் என்ற அவப் பெயரை என் குருவுக்குத் தேடித் தரமாட்டேன். எனக்குரிய தர்மத்தைத் தவிர வேறெதையும் இனி நான் சிந்தித்துக்கூடப் பார்க்க மாட்டேன்.

முதலில் உத்தவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு அதற்கேற்பச் செயலாற்றவேண்டும். உத்தவனை அழைத்துக்கொண்டு ஷ்வேதகேது யமுனைக்கரையின் ஒரு பக்கம் இருந்த காட்டின் ஒரு மூலைக்கு வந்தான். உத்தவனுக்கு எதுவும் புரியவில்லை. ஷ்வேதகேது உத்தவனைப் பார்த்து, “உத்தவா, உன்னால் எனக்கு ஓர் உதவி தேவையாக இருக்கிறது.” என்றான்.

“உதவி! ஷ்வேதகேது அவர்களே! நீரும் எனக்கு ஒரு குருவே ஆவீர் அன்றோ! கட்டளை இடுங்கள்; காத்திருக்கிறேன். எப்போதும் உம்முடைய சேவையில் நான் தன்யனாகிறேன்.” என்றான். அவனுக்கு ஷ்வேதகேதுவின் இந்த நடவடிக்கைகள் கொஞ்சம் ஆச்சரியமாய் இருந்தது. “உத்தவா, நீ பழையபடி மாற வேண்டும்; கரவீரபுரத்திற்கு வரும் முன்னர் எவ்வாறு துடிப்புடனும், சுறுசுறுப்புடனும், வாழ்க்கையின் அதீத பற்றோடும் இருந்தாயோ அவ்வாறு இருத்தல் வேண்டும்.” ஷ்வேதகேது இறைஞ்சினான்.

“ஓஓ, எனக்கு என்ன ஆகிவிட்டது? நண்பரே! உம்முடைய வேண்டுகோள் ஆச்சரியமளிக்கிறதே!” உத்தவன் தன் பற்களைக் கடித்துக்கொண்டான். என்ன முயன்றாலும் அவனுடைய உணர்வுகளைச் சாமர்த்தியமாக மறைக்க முடியவில்லை அவனுக்கு.

“உத்தவா!” ஷ்வேதகேதுவின் குரல் மென்மையாக ஒலித்தது. “இதோ, பார், நமக்குள் எந்தவிதமான ஒளிவு, மறைவும் வேண்டாம். கொஞ்ச காலமாக நீ கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கொள்கிறாய். அதற்குக் காரணம்…….காரணம்…..”ஷ்வேதகேது தயக்கத்துடன் கூறினான். “ஷாயிபா!”

“ஷாயிபா” எதிரொலித்தான் உத்தவன். அவன் குரலில் ஆச்சரியம் மிகுந்திருந்தது.
“ஓ, எனக்கு ஒன்றுமே தெரியாதென நினைத்தாயா உத்தவா?? நீ ஷாயிபாவை மணக்க விரும்பினாய் அல்லவா?? ஷாயிபாவும் விரும்பி இருப்பாள்; எனக்கு நன்றாய்த் தெரியும். உன் போன்ற ஓர் இளைஞனை எந்த இளம்பெண் மறுப்பாள்? ஆனால் நீ ஓர் ஆரியனாக இருப்பதால் உன் குலதர்மத்திலிருந்து பிறழாமல் இருக்கும்பொருட்டு, இன்னொருவருக்கு நிச்சயிக்கப் பட்ட பெண்ணை மணக்க வேண்டாம் என விலகிவிட்டாய் அல்லவா? ஷாயிபாவுக்கும் அதே தான் காரணம்! ஏற்கெனவே எனக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் அல்லவா? அதனால் அவளும் வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை என நினைக்கிறேன்.”

“ஆனால் யார் சொன்னது இதை எல்லாம் உங்களுக்கு?? இம்மாதிரியான எண்ணங்களைக் குறித்து எவர் உம்மிடம் பேசினார்கள்?” இந்த விஷயமாக உத்தவனின் நெஞ்சில் ஏற்கெனவே இருந்த மாபெரும் காயம் ஆறாமல் மேலே பொருக்குத் தட்டி இருந்தது. இப்போது ஷ்வேதகேதுவின் இந்தப் பேச்சுக்களால் அந்தக் காயம் குத்திக்கிளறிவிடப் பட்டு அதிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

2 comments:

priya.r said...

அத்தியாயம் 69 படிச்சாச்சு., பதிவுக்கு நன்றி கீதாம்மா

உத்தவன் & ஷ்வேதகேது உரையாடல் சுவாரஸ்யமாக உள்ளது .....

sambasivam6geetha said...

ம்ம்ம்ம் நன்றிம்மா.