Thursday, June 30, 2011

ஷாயிபாவும், ருக்மிணியும், நேருக்கு நேர்! கண்ணன் வருவான்!

இதை எல்லாம் யோசித்து விட்டு ருக்மிணி திரிவக்கரையோடு தன்னுடைய தொடர்பை நிரந்தரமாக்கிக் கொண்டாள். அதோடு திரிவக்கரையின் மூலம் தேவகி அம்மாவையும் அவளால் தொடர்பு கொள்ள முடிந்தது. அதன் மூலமே ஷ்வேதகேதுவை போஜ வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும்படி தன் தகப்பனையும், தாத்தாவையும் நிர்ப்பந்திக்க முடிந்தது. அவர்களுக்கு இதில் தடையும் ஏதும் இருக்கவில்லை; ஆகவே அவளால் ஷ்வேதகேதுவைச் சந்தித்து மதுராவுக்குச் சென்று கிருஷ்ணனை உடனே கிளம்பி வந்து தன்னை மீட்டுக் கொண்டு செல்லும்படி தூதும் அனுப்ப முடிந்தது. ஆனால் ஷ்வேதகேது திரும்பிவிட்டான். என்றாலும் ருக்மிணிக்கு எந்தவிதமான உறுதியையும் வாய்மொழியாகவோ, லிகிதம் மூலமோ அளிக்கவில்லை. இது ருக்மிணியின் மனதில் கவலையை உண்டாக்கியது. ஒரே ஆறுதல் என்னவென்றால் அவளுக்கு நடக்கப் போகும் போலியான சுயம்வரத்தைக் கண்ணன் ஆதரிக்கவில்லை என்றும், குறிப்பிட்ட சில அரசர்களுக்கு மட்டுமே சுயம்வர அழைப்புச் சென்றிருப்பதையும் எதிர்க்கிறான் என்பதே. ஆனால் இதனாலெல்லாம் கண்ணன் வந்து அவளை அழைத்துச் செல்வான் என எதிர்பார்க்க முடியுமா? புரியவில்லை. ஏனெனில் ஷ்வேதகேது கூறியதை வைத்துப் பார்த்தால் மதுராவில் கண்ணனின் நிலைமையே மிகவும் மோசமாக இருப்பதாய்த் தெரிய வருகிறதே!

ருக்மிணிக்கு இரவு, பகல் தூக்கமில்லாமல் போனது. கரவீரபுரத்தின் இளவரசி ஷாயிபா ஷ்வேதகேதுவோடு வந்து குண்டினாபுரத்தில் சில நாட்கள் தங்கிச் செல்ல உத்தேசித்திருக்கிறாளாமே. இவள் யாராயிருக்கும்?? மதுராவில் கண்ணனின் தாய் தேவகியின் ஆதரவில் இருந்தாளாம். ருக்மிணியின் ஆவல் எல்லை கடந்தது. ஒருநாள் முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு ஷாயிபாவைப் பார்க்கச் சென்றாள். ஒரு பெண்ணான, அதிலும் இளவரசியுமான அவளுக்கே ஷாயிபாவைப் பார்த்ததுமே மயக்கம் வந்தது. அவளால் ஷாயிபாவின் அழகையும் எழிலையும், கம்பீரத்தையும் போற்றாமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் இவள் கண்ணனின் வீட்டில் அவன் தாயின் ஆதரவில் அல்லவோ இருந்திருக்கிறாள்?? இத்தனை அழகான இந்தப் பெண்ணைக் கரவீரபுரத்தில் இருந்து அழைத்து வந்ததும் கண்ணன்; தாயின் பாதுகாப்பில் விட்டதும் அவனே. இவளின் அழகு அவனைக் கவராமலா இருந்திருக்கும்?? ருக்மிணியின் உள்ளத்தில் பொறாமை கொழுந்து விட்டெரிந்தது. கண்ணனின் உள்ளத்தை இவள் கவர்ந்திருப்பாளோ? என்றாலும் ருக்மிணி மிகவும் கஷ்டப்பட்டு தன் உள்ளத்து உணர்வுகளை மறைத்துக்கொண்டு ஷாயிபாவுடன் பேச்சுக் கொடுத்தாள். தன்னுடைய நிலைமை குறித்தும் அவளிடம் கோடி காட்டினாள். ஆனால் ஷாயிபாவோ அவள் நிலையை ஏற்கெனவே அறிந்தவள் போலக் காணப்பட்டாள். அவள் எந்த உதவி கேட்டாலும் அதைத் தன் உயிரைக் கொடுத்தேனும் செய்யத் தயாராய் இருப்பதாயும் தெரிவித்தாள்.

ருக்மிணியைச் சமாதானம் செய்த ஷாயிபா அவள் விருப்பத்திற்கு மாறாக அவளை யாரும் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்றும் தைரியமாக இருக்குமாறும் அவளிடம் கூறினாள். ஆனால் ருக்மிணியோ இங்கே நடக்கும் காரியங்களைப் பார்த்தால் எந்த நிமிஷம் எது நடக்குமோ எனத் தனக்குக் கவலையாக இருப்பதாய்க் கூறினாள். “எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டது. சரியாக ஒரே மாதம் தான். எல்லா அரசர்களும், இளவரசர்களும் வந்துவிடுவார்கள். சுயம்வரத்திற்கான நாளும் குறிக்கப் பட்டு விட்டது. அந்த நல்ல நாளில் என்னைச் சிசுபாலனுக்கு என் அண்ணன் தாரை வார்த்துவிடுவான். என் அண்ணனும், ஜராசந்தனும் செய்யப் போகும் அக்கிரமமானதொரு யாகத்தின் முதல் பலி நான் தான்.” ருக்மிணியின் கண்ணீர் நிற்கவே இல்லை.

“நீ திடமாக மறுக்க வேண்டும் ருக்மிணி!” ஷாயிபா திட்டவட்டமாய்க் கூறினாள். “ஓ, ஓ,ஓ, அது இயலாது ஷாயிபா. நான் அவ்விதம் கூறினேனால் என் அண்ணன் என்னைச் சும்மா விடமாட்டான். கண்ணன் தான் எனக்கு உதவிக்கு வரவேண்டும். என்னை மீட்டுக்கொண்டு செல்ல வேண்டும். அவன் மட்டும் வராமல் இருந்தானெனில் நான் ஆறையோ, குளத்தையோ , அல்லது கிணறுகளையோ தேடிப் போய் விழவேண்டியதுதான். கடைசியில் அதுதான் நடக்கப் போகிறது.” விரக்தியாகப் பேசினாள் ருக்மிணி. ஷாயிபா விஷமச் சிரிப்போடு, “அது சரி, கோவிந்தன் உன் மனதைக் கவர்ந்துவிட்டானா? அது எப்படி நிகழ்ந்தது?” என்று ஆவலுடன் கேட்டாள். “ஆம், ஷாயிபா, நீ அறிய மாட்டாய்! நான் அவனை முதன்முதல் சந்தித்தபோது! ம்ம்ம என்ன நடந்தது தெரியுமா?? ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே நான் முற்றிலும் மாறிவிட்டேன். புதியதொரு பெண்ணாக ஆகிவிட்டேன்.” ருக்மிணியின் குரலில் இனம் தெரியாததொரு உணர்வு. ஆனால் ஷாயிபாவோ அவள் மனதைப் புரிந்து கொள்ளாதவள் போல, “ஆம், ஆம், கண்ணன் எப்போதுமே அப்படித் தான். நம்மை முற்றிலும் புதியவர்களாக மாற்றிவிடுவான்.” என்று உற்சாகமாய்க் கூற அந்தக் குரலின் உற்சாகத்தையும், கண்களில் தெரிந்த இனம் விளங்காத பாசத்தையும், பரிவையும் கண்ட ருக்மிணி வெயிலில் இட்ட மலர் போல வாடினாள். அவள் முகம் சுருங்கியது. என்ன இருந்தாலும் ஷாயிபா அவளை விடப் பெரியவள். என்றாலும் இங்கிதம் இல்லாமல் பேசுகிறாளோ? ஒரு சின்னப் பெண்ணான ருக்மிணியால் இதைத் தாங்க இயலவில்லை. சூரியன் மறைந்ததும் தாமரை கூம்புவது போல் அவள் முகமும் கூம்பியது.

2 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் 74 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ஷாயிபா விடம் ஆறுதல் தேடி ருக்மணி வந்ததை ஷாயிபா புரிந்து கொண்டு பேசி இருக்கலாம் ......

பதிவுக்கு நன்றி கீதாம்மா

இராஜராஜேஸ்வரி said...

ஆம், ஆம், கண்ணன் எப்போதுமே அப்படித் தான். நம்மை முற்றிலும் புதியவர்களாக மாற்றிவிடுவான்.”

அருமையான பகிர்வுகள்..

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..