Sunday, July 10, 2011

தர்மமும், அதர்மமும்! ருக்மிணியின் திகைப்பு

“ஆமாம், ருக்மிணி, எந்த இளம்பெண்ணும் கண்ணனை மணக்கவே விரும்புவாள். அவ்வளவு ஏன்? திரிவக்கரை கூட ஒரு இளம்பெண்ணாகவும் திருமணம் ஆகாதவளாகவும் இருந்தால் கண்ணனையே மணக்க விரும்புவாள். ஆனால் கண்ணன் இப்போது யாரையும் திருமணம் செய்து கொள்வான் என எனக்குத்தோன்றவில்லை. ஒரு வேளை………..” இழுத்தாள் ஷாயிபா.

“என்ன?? ஒரு வேளை??” ருக்மிணியின் ஆவல் மேலிட்டது.

“அவனுடைய வேலை; அதாவது அவன் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறானோ, தர்மத்திற்கு உட்பட்டு அந்த வேலைகளைச் செய்து முடிக்கத் துணையாக, அரணாக, அவனுக்கு உள்ளார்ந்த உதவியும், வலிமையும், கவனிப்பும் தருபவளாக ஒரு பெண் அமைந்தால்…. ஒரு வேளை கண்ணன் தன் திருமணம் பற்றி நினைக்கக் கூடும்.”

“ஆஹா, அவன் செய்ய நினைக்கும் அந்த வேலைகள்; அந்த தர்மம் பற்றி மட்டும் எனக்குத் தெரிய வந்தால்?? ம்ம்ம்ம்…. அன்றொருநாள் நான் எங்கள் அரண்மனையின் மாட்டுக்கொட்டிலுக்குச் சென்றேன். அங்கிருந்த பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும் எனது நண்பர்கள் ஆக்கிக் கொள்ள முயன்றேன்; ஏன்?? கண்ணனுக்காக! ஆனால்…..ஆனால்……. நான் போய் அவற்றில் ஒன்றைத் தொட்டேனோ இல்லையோ; எல்லாம் என்னைக் கோபமாகப் பார்த்தன எனத் தோன்றியது எனக்கு. அதோடு மட்டுமில்லை; பெருத்த ஹூங்காரம் செய்து கொண்டு ஒரு காளை என்னை முட்டக் கூட வந்தது; நல்லவேளையாக நான் ஓட்டமாய் ஓடி வந்துவிட்டேன். இல்லை எனில் என் கதி அதோகதிதான்!” என்றாள் ருக்மிணி.

“உனக்குத் தெரியுமா? பசுக்களோ, காளைகளோ, கன்றுகளோ, குதிரைகளோ அவ்வளவு ஏன்? யானைகள் கூடக்கண்ணன் கைகளில் இருந்து தம் உணவைப்பெற்று உண்பதை மிகவும் விரும்பும். கண்ணனும் ஒரு தாயைப் போன்ற அன்போடும், பாசத்தோடும் அவற்றுக்கு உணவளிப்பான். அதே போல் தான் சாமானிய மனிதர்களும், ஆணோ, பெண்ணோ கண்ணனுக்காகத் தங்கள் உயிரையும் தரத் தயாராக இருக்கின்றனர். அவன் வார்த்தைகளைச் சிரமேல் தாங்கி நடக்கின்றனர்.” ஷாயிபா உள்ளார்ந்த லயிப்புடன் மெதுவான குரலில் கூறினாள்.

“அக்கா, அக்கா, உன்னைப்பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. கண்ணனைப்பற்றி இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாய். எனக்கு எதுவுமே தெரியவில்லை.” என்றாள் ருக்மிணி.

“ருக்மிணி, உண்மையிலேயே நீ கண்ணனைத் திருமணம் செய்து கொள்ள எண்ணுகிறாயா? அப்படி எனில், நீ எங்களைப் போலவே கண்ணனுக்கு அடிமையாக இருக்க வேண்டும்; நான், திரிவக்கரை, உத்தவன், ஷ்வேதகேது, தேவகி அம்மா, குட்டிப் பெண் சுபத்ரா, பட்டியல் நீண்டு கொண்டே போகும் ருக்மிணி. கண்ணன் எங்கள் அனைவருக்கும் மிகவும் அருமையானவன்; பிரியமானவன்; பாசத்துக்கு உரியவன். விண்ணில் தினம் தினம் உதயமாகும் சூரியனைக் கண்டிருக்கிறாய் அல்லவா? அதன் கிரணங்கள் மாளிகைகளாய் இருந்தாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன; வெட்ட வெளியானாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன. இந்த சூரியன் உதயம் ஆகி அனைவருக்கும் எப்படி உயிரோட்டத்தைக் கொடுக்கிறானோ அப்படித் தான் கண்ணனும். இருளிலேயே தவித்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல ஜீவன்களுக்கு ஒளியைக் கொடுக்கும் சூரியனே கண்ணன். “

“எனில், கண்ணனை நான் திருமணம் செய்து கொண்டால் உலகத்தவர்க்கு ஒளியூட்டும் சூரியனைத் திருமணம் செய்து கொள்வது போலவா? அனைவரின் அன்புக்கும் பாத்திரமான ஒருவனை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையா?” ருக்மிணி கேட்டாள்.
“ஆம், நீ அதற்குத் தயாரா? அனைவருக்கும் அவரவர் விருப்பம் போல் கண்ணனின் அன்பு கிடைக்கும். ஆனால் நீ அதற்கு உன்னைப் பக்குவப் படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் கண்ணன் அடுத்து மேற்கொள்ளப் போகும் திட்டத்திற்காக அவனோடு ஒத்துழைக்க நீ தயாரா? “

“ஆஹா, அக்கா, நான் கண்ணனை மணக்க எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறேன்.”

“உன் உயிரையும் தியாகம் செய்வாயா?” ஷாயிபா கேட்டாள்.
“ஆம், ஆம், நான் தயாராய் இருக்கிறேன். ஆனால் கண்ணனின் திட்டம் தான் என்ன?? எவ்வகையில் அவன் தர்மத்தைக் காக்கப் போகிறான்? அவனுடைய தர்மம் தான் என்ன? அதைக் காக்க அவன் போராடுவதும், அந்தப் போராட்டமும் ஏன்?”

“நான் ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன் ருக்மிணி. இந்தக் கொந்தளிக்கும் பூமியில் அதர்மத்தை அடியோடு வேரறுத்து தர்மத்தை நிலைநாட்டவே கண்ணன் பிறந்துள்ளான். அவன் பிறப்பின் காரணமே அதுதான். அவன் இப்போது போராடுவதும் அதற்குத் தான்.”
“என்றால் நான் கண்ணனுக்குச் சற்றும் தகுதியானவளே அல்ல. எனக்கு தர்மமும், தெரியாது; அதர்மமும் தெரியாது. “ சோர்வோடு கூறினாள் ருக்மிணி.

2 comments:

priya.r said...

இந்த அத்தியாயம் 77 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,



//விண்ணில் தினம் தினம் உதயமாகும் சூரியனைக் கண்டிருக்கிறாய் அல்லவா? அதன் கிரணங்கள் மாளிகைகளாய் இருந்தாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன; வெட்ட வெளியானாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன. இந்த சூரியன் உதயம் ஆகி அனைவருக்கும் எப்படி உயிரோட்டத்தைக் கொடுக்கிறானோ அப்படித் தான் கண்ணனும். இருளிலேயே தவித்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல ஜீவன்களுக்கு ஒளியைக் கொடுக்கும் சூரியனே கண்ணன். “//

என்னதொரு விளக்கம் ;படித்து வியந்து கண்ணனை பணிகிறேன் ..

priya.r said...

இந்த அத்தியாயம் 77 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,



//விண்ணில் தினம் தினம் உதயமாகும் சூரியனைக் கண்டிருக்கிறாய் அல்லவா? அதன் கிரணங்கள் மாளிகைகளாய் இருந்தாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன; வெட்ட வெளியானாலும் ஒரே மாதிரித் தான் விழுகின்றன. இந்த சூரியன் உதயம் ஆகி அனைவருக்கும் எப்படி உயிரோட்டத்தைக் கொடுக்கிறானோ அப்படித் தான் கண்ணனும். இருளிலேயே தவித்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற பல ஜீவன்களுக்கு ஒளியைக் கொடுக்கும் சூரியனே கண்ணன். “//

என்னதொரு விளக்கம் ;படித்து வியந்து கண்ணனை பணிகிறேன் ..