Wednesday, July 13, 2011

கண்ணன் வருவானா? ருக்மிணியின் சந்தேகம்!

"பரவாயில்லை ருக்மிணி, நீ கண்ணனோடு சேர்ந்து அதர்மத்தை ஒழிக்க அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வரலாம்.”

“ஆ, நான் என்ன மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பரசுராமரைப் போன்றவளா? கையில் கோடலியை எடுத்துக்கொண்டு மூர்க்கமும் கெடுதலும் செய்யும் அரசர்களின் தலைகளைச் சீவுவதற்கு?”

“ஓஹோ, ருக்மிணி, உனக்குப் புரியவே இல்லை; நீ அதர்மத்தை எதிர்த்துப் போராட முடியும். உன்னிடம் அதற்குத் தக்க ஆயுதம் இருக்கிறது. நன்கு யோசிப்பாய். யார் தர்மத்தின் மிக மிக மோசமான எதிரி?”

“அதில் சந்தேகமே இல்லை; என்னுடைய அண்ணன் தான்.”

“ருக்மிணி, இந்த அடிக்கும் அதர்மப் புயல் காற்றில் பறக்கும் ஒரு சின்ன வைக்கோல் துண்டு போன்றவன் உன் அண்ணன்; முக்கியமான எதிரி ஜராசந்தன் ஒருவனே. அவன் தான் தர்மத்தைச் சற்றும் மதிக்காமல், தர்மத்திற்கு எதிராக மன்னர்களையும், அரசர்களையும் தன்னிஷ்டத்துக்கு வளைத்துக்கொண்டு, அப்படி வளையாதவர்களைக் கொன்று அவர்களின் ரத்தத்தில் தன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறான். மக்களைக் கொடூரமான முறையில் நடத்தி அவர்களின் வியர்வையில் இவன் உன்னதமான வாழ்க்கையை நடத்தி வருகிறான். பல ராஜ்யங்களையும், பல அரசர்களையும் ஈவிரக்கமின்றி அழிக்கிறான்; கொடுமைக்கும், சட்டத்துக்குப் புறம்பாகவும், தர்மத்திற்கு விரோதமாகவும் செய்கின்றவர்களை அரவணைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறான்; இவை எல்லாவற்றையும் விட தவம் மூலம் தங்களையும் உயர்த்திக்கொண்டு மக்களுக்கும், அரசனுக்கும் நன்மைகளைப் போதிக்கும் தபஸ்விகளையும், ரிஷிகளையும் துன்புறுத்தி வருகிறான்.”

“ஆம், ஆம், நீ சொல்வது சரியே; ஜராசந்தன் எனக்கும் எதிரிதான்.” என்றாள் ருக்மிணி. “அவனைக் கொல்லத் தான் விரும்புகிறேன். எனக்கு முதலில் என்ன தோன்றியது எனில் என்னுடைய சுயம்வரத்தில் நான் அவனை மணமகனாய்த் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர் எங்களின் தனியான சந்திப்பின்போது அவனை என்னுடைய இந்தக் கரங்களால் கொன்று கிழித்துவிட விரும்பினேன். அப்படியும் ஓர் எண்ணம் இருந்தது எனக்கு.” என்றாள் ருக்மிணி.

“ஆஹா, ருக்மிணி, இப்படிப்பட்ட கடுமையும், கொடுமையுமான வேலைகளை எல்லாம் உன்னைப் போன்ற மென்மையான உடலும், உள்ளமும் படைத்த இளவரசிகள் செய்யலாமா? அப்படி நினைக்கலாமா? இப்படி எல்லாம் நினைப்பதை விட்டு விடு இளவரசி ருக்மிணி. நான் சொல்வதைக் கேள். உனக்குக்கண்ணன் தான் கணவனாக வரவேண்டுமென்று நீ விரும்பினாயானால் என்ன நடந்தாலும், எது நேர்ந்தாலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் சிசுபாலனுக்கு மனைவியாக ஒத்துக்கொள்ளாதே. அதில் நீ உறுதியுடன் இரு.”

“அக்கா, அக்கா, அந்த முட்டாள் இளவரசனை நான் திருமணம் செய்துகொள்வேன் என நீ நினைக்கிறாயா? இல்லை; இல்லை; ஒரு போதும் இல்லை. நான் அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை.”

“எல்லாம் சரிதான் ருக்மிணி. ஆனால் உன்னுடைய இந்த முடிவு, ஒரு நல்ல கணவனுக்காக முட்டாளும், மூர்க்கனும் ஆன ஒருவனை வேண்டாம் என ஒதுக்குவது தானே ஒழியக் கண்ணனுக்கு எவ்வகையிலும் இதில் பிரயோசனம் இல்லை. கண்ணன் இதை உன்னிடம் எதிர்ப்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் மாட்டான்.”

“என்ன? அப்படி என்றால் நான் என்னதான் செய்வதாம்?”
“இந்தப் பொய்யான சுயம்வரத்தை வெளிப்படுத்தி அனைவருக்கும் தெரியப் படுத்து.”
“அதனால் கிருஷ்ணன் என்னிடம் வந்துவிடுவானா என்ன?” ருக்மிணியின் சந்தேகம்.

“ஓஹோ, ருக்மிணி, நீ கண்ணனைச் சரியாகப் புரிந்து கொள்ளவே இல்லை; நீ அந்தச் சுயம்வர ஏற்பாடுகளை நிறுத்தாதே. அதில் பங்கு கொள்பவளைப் போல் பாவனைகள் செய்து வா. நான் கண்ணனைச் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். நான் நினைப்பது சரியாக இருந்தால், கண்ணன் உன்னை வென்று அடைவதற்கு என இல்லாமல் தர்மத்தை நிலைநாட்டவேண்டிக் கட்டாயம் வருவான். அதர்ம வழியில் ஒரு பெண்ணை இன்னொருவன் அடையப்போவதைப்பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். சுயம்வரம் என்ற பெயரால் ஒரு அப்பாவிப்பெண்ணின் இல்வாழ்க்கைப் பணயம் வைக்கப் படுவதை விரும்ப மாட்டான் கண்ணன். அதை உடைக்க வேண்டிக் கட்டாயம் கண்ணன் வருவான்.”

“அப்படி என்றால் கண்ணன் என்னை எப்படி மணப்பான்? நீ சொல்வது ஒன்றும் சரியான உத்தியாகவே இல்லை அக்கா.”

“ஒருவேளை அவன் உன்னை மணந்து கொள்ளலாம், கேள் ருக்மிணி, இது ஒரு சூதாட்டம் போலத் தான். நீ மட்டும் உன்னுடைய அனைத்தையும் இழந்தாலும் சரி; கண்ணன் தான் என் கணவன் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்தையும் துறந்து அவனுடன் செல்லத் தயாராக இருக்க வேண்டும். அவனுடன் அவன் வழியில் அவன் வாழ்க்கையைப் பங்கு போட்டுக்கொள்ளத் தயாராக வேண்டும்.”

தலை சுற்றியது ருக்மிணிக்கு. ஆனாலும் கண்ணன் மேல் இருந்த காதல் அவளை இதில் ஈடுபட வைத்தது. “அக்கா, அக்கா, அது எங்கனம் என்று எனக்குச் சொல்லிக் கொடு. ஆஹா, இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது மட்டும் எனக்குப் புரிந்தால்……” ருக்மிணி நீண்ட பெருமூச்சு விட்டாள்.

“தர்மத்திற்கா உன் உயிரையும் கொடுக்கத் தயங்காதே ருக்மிணி! அவ்வளவு தான் நான் சொல்வேன். ஜாக்கிரதையாக நடந்து கொள். கண்ணன் உத்தவனிடம் தர்மத்தை நிலைநாட்டுவது குறித்துப் பேசியதை நான் தற்செயலாய்க் கேட்க நேர்ந்தது. ஆகவே உன் கவனம் எல்லாம் இந்தப் போலி சுயம்வரத்தில் இருக்கட்டும்.” ஷாயிபா அங்கிருந்து தன் இருப்பிடம் சென்றாள். சில நாட்களில் கரவீரபுரத்தை நோக்கிப் பயணமானாள்.

ருக்மிணி தன்னை மறந்து, தன் நிலையை மறந்து தான் ஒரு இளவரசி என்பதையும் மறந்து முழுதும் கண்ணன் நினைவிலேயே மூழ்கிப்போய் இருந்தாள். ஷாயிபாவுடன் ஏற்பட்ட சந்திப்பு அவள் மனப்பாரத்தை அதிகப்படுத்தி அவளைக் கிட்டத்தட்ட நடமாடும் சிலை போல் ஆக்கிவிட்டது. தன்னைப் பற்றி அவள் மிகவும் உயர்வாகவே நினைத்து வந்தாள். தன் தாத்தாவோ, தன் தகப்பனோ, தன் அண்ணாவோ தன்னிஷ்டத்துக்கு மாறாக நடக்க மாட்டார்கள் எனவும், தான் இஷ்டப்பட்டவனை மணக்க முடியும் எனவும் நினைத்தாள். அதோடு தன்னை மணக்க இவ்வுலகில் பிறந்த அரசகுமாரர்கள், சக்கரவர்த்திகள் என அனைவரும் தயாராக இருந்ததாகவும், தன் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு தன்னை மணக்க வரிசையில் வருவார்கள் எனவும் நினைத்திருந்தாள். ஆனால் பதினாறு வயது வரையிலும் அரண்மனை வாசமே கண்டிராத ஒரு மாடுகளை மேய்க்கும் இடைச் சிறுவன் இவ்வாறு அவளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் தர்மத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பது அவள் உள்ளத்தில் ஓர் மரண அடியாக விழுந்தது.

என்னவெல்லாம் நினைத்தாள்? அவள் ஒரு சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியின் ஒரே மகள்; இளவரசி, கிருஷ்ணனோ யாதவகுலத் தலைவர்களில் ஒருவனான வசுதேவனின் எட்டாவது மகன். அவனுக்கு மூத்தவன் ஒருவன் இருக்கிறான். இவ்வளவு நாட்கள் கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் மாடுகளை மேய்த்தவன், இன்று கம்சனைக் கொன்றதாலும், அதன் பின்னர் நடந்த சில சாகச நிகழ்ச்சிகளாலும் பெயர் பெற்றிருக்கிறான். நாம் நம் விருப்பத்தைச் சொன்ன மாத்திரத்தில் அவன் ஓடோடி வந்து என் கரம் பற்றுவான்; நீ கிடைத்தது என் பாக்கியம்; நான் கொடுத்து வைத்தவன்; உன்னைப்போன்ற ஓர் இளவரசியால் காதலிக்கப் பட நான் அதிர்ஷ்டம் செய்தவன். என்றெல்லாம் கூறுவான் என்றோ எதிர்பார்த்தேன். திருமணத்திற்கு அவசரப் படுத்துவான் என நினைத்திருந்தேன். ஆனால் நடந்தது என்ன? நான் என்னை முழுமையாக அந்தக் கோபாலன் ஆன மாட்டிடையன் கண்ணனின் கால்களில் ஒப்படைத்துக்கொண்டாலும் அவன் அந்தக் கால்களால் என்னை உதைத்துத் தள்ளிவிட்டானே! என்னுடைய இந்த அரச வாழ்க்கையில் இது வரை நான் சந்தித்திராத அவமானம் இது. என்னை அவமானப் படுத்திவிட்டானே அந்தக் கண்ணன். ருக்மிணியின் மனதில் ஒரு கணம் தான் தன் உயர்ந்த நிலையை மறந்து அதற்கும் கீழே இறங்கி வந்து ஓரு மாட்டிடையனைக் காதலித்தது தவறு என்று தோன்றியது.

என்ன செய்யப் போகிறாள்?

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

என்ன செய்யப் போகிறாள் ?

அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம்..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

priya.r said...

இந்த அத்தியாயம் 78 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ருக்மணியின் மனம் படும் பாடு கண்ணன் அறிவான் தானே !

கண்ணன் வருகைக்காக ருக்மணியுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்க்கிறோம்