Wednesday, April 4, 2012

பீமன் விவரிக்கிறான்!

“உத்தவா, தாத்தாவைக் குறை சொல்லாதே! அவர் என்ன செய்வார் பாவம்! இந்த மாபெரும் சாம்ராஜ்யச் சுமையைத் தன்னந்தனியாகத் தோள்களில் சுமந்து கொண்டு வந்திருக்கிறார். அவருடைய நீண்ட நெடிய வாழ்க்கையில் அவர் கண்ட சுகம் தான் என்ன?? வாலிபப் பருவத்திலேயே தன் தந்தையார் ஷாந்தனுவுக்காக, அவருடைய இல்வாழ்க்கைக்காக மாபெரும் சபதம் ஒன்றைச் செய்தார். அப்போதே தன் தந்தையாரிடம் தாம் உயிருடன் இருக்கும்வரையில் இந்தக் குருவம்சத்தினரின் மேன்மையைக் குறித்து மட்டுமே நினைப்பது, அதற்காகாவே பாடுபடுவது, தர்மத்தின் வழியில் அரசாட்சி நடைபெறுகிறதா எனக் கண்காணிப்பது என்ற பொறுப்புக்களையும் தாம் ஏற்றுக்கொண்டு இன்று வரை அதைச் செவ்வனே நிறைவேற்றியும் வருகிறார். இந்த நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர் செய்திருக்கும் தியாகம் அளப்பரியது. வேறு எவரும் செய்யக் கூடியதல்ல. இப்போது என் பெரியப்பா குமாரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வராமல், அடங்காமல் இருப்பதைக் கண்டு அவர் மனம் நொந்து போயிருக்கிறார் என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களாலேயே ஓரளவுக்கு சாந்தி அவருக்குக் கிடைத்து வருகிறது. இந்த நாட்டிற்காக அவர் படும் கஷ்டங்கள் அனைத்தும் எங்களால் தீர்த்து வைக்கப்படும் எனவும் நம்புகிறார்.”

“இன்னொரு விஷயம் அறிவாயா நீ? இதே தான் பகவான் வேதவியாசரும் நினைக்கிறார். சென்ற முறை இங்கே அவர் வந்திருந்த சமயம், எங்களை அழைத்து என்ன கூறினார் தெரியுமா, “குழந்தைகளே, அரச தர்மத்திலிருந்தும், க்ஷத்திரிய தர்மத்திலிருந்தும் சிறிதும் பிறழாமல் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் இந்த ஹஸ்தினாபுரத்தின் அரியணை ஏறுகையில் தர்மத்தின் பாதையில் செல்வதைக் குறிக்கோளாய்க் கொள்ளுங்கள்.” என்று கூறினார். “ அர்ஜுனன் நீண்டதொரு பிரசங்கம் செய்த களைப்பில் காணப்பட்டான்.

“பின் ஏன் அவர்களால் துரியோதனாதியரைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை?” உத்தவனுக்குப் புரியவே இல்லை. அர்ஜுனன் சிரித்துக் கொண்டான். “நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போர் இது. இதில் எப்போது சரியான சமயம் வருகிறதோ அப்போதே நீதி ஜெயிக்கும். அதுவரை காத்திருக்க வேண்டியது தான். இப்போதைக்கு துரியோதனாதியர் தங்களுக்கென ஓர் அணி அமைத்துக் கொண்டிருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்.” சட்டெனத் தன் குரலைத் தழைத்துக் கொண்ட அர்ஜுனன் சுற்றுமுற்றும் பார்த்து அங்கே யாரும் இல்லை என்பதையும் வேறு யாரும் கதவருகிலேயோ, சாளரத்தருகிலேயோ நின்று ஒட்டுக் கேட்கவில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு ரகசியம் பேசும் குரலில் உத்தவனிடம் கூறினான்:”ஆசாரியர் துரோணர் கூட இப்போது எங்களை ஆதரிக்கவில்லை என்று செய்தி காதில் விழுகிறது.” அர்ஜுனன் பேசிக் கொண்டிருக்கையிலேயே தடதடவெனக் காலடிச் சப்தங்கள் கேட்டன. இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். பீமனின் உற்சாகக் குரலும், உற்சாகம் ததும்பும் முகமும் தென்பட்டன.

பீமனே உள்ளே நுழைந்தான். பாண்டவர்களில் இரண்டாவது ஆன பீமன் அர்ஜுனனை விடவும் நல்ல உயரமாகவும், அவன் கழுத்தே ஒரு தூண் போல நின்று கொண்டு அவனிரு தோள்களும் அந்தக் கழுத்தைத் தாங்குவது போலவும் தோன்றியது உத்தவனுக்கு. சாதாரண மனிதனை விடவும் உயரமும், பருமனும் அதிகம் கொண்டிருந்த அவன் உத்தவனை வரவேற்கும் தோரணையில் பார்த்துவிட்டு, “அர்ஜுனா, நான் எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன்.” என்று அறிவித்தான். மீண்டும் தன்னுடைய விசாலமான முகமே மேலும் விசாலம் ஆகும்படியான புன்னகை ஒன்றைச் செய்து கொண்டு உத்தவனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆசிகளை வழங்கினான். “நடு அண்ணா, என்ன ஏற்பாடுகள்? எதைச் செய்துவிட்டீர்?” அர்ஜுனன் புரியாமல் கேட்டான். அவர்களுக்கு எதிரே இருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தான் பீமன். “துரியோதனனும், அவன் சகோதரர்களும், அவர்களின் தாய்க்கு சகோதரரும், காந்தார இளவரசரும் ஆன சகுனி மாமாவுடன் சேர்ந்து கொண்டு ஒரு மோசமான திட்டம் போட்டு நம்மைக் கவிழ்க்க அல்லது அடியோடு அழிக்க இருந்தனர். அஸ்வத்தாமாவும் இந்தப் போட்டா போட்டியில் தீவிரமான உணர்வுகளோடு கலந்து கொண்டிருக்கிறான். வரும் இரவுகளில் ஓர் இரவு நம் அனைவரையும், அவர்கள் கொன்றுவிடத் திட்டம் போட்டிருக்கின்றனர். “ பீமன் சொல்லி முடிக்கையில் ஏதோ வேடிக்கை விளையாட்டைப் பற்றிப் பேசுவது போன்ற தொனியில் கூறினான். கூறிவிட்டு இடி இடியெனச் சிரிக்கவும் செய்தான்.

“நீர் இதை எவ்வாறு அறிந்தீர்?” அர்ஜுனன் கேட்க, பீமன், “சஹாதேவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஒருவேளை சித்தப்பா விதுரர் கூறி இருக்கலாம். அவன் என்னிடம் கூறினான். அவர்கள் நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடுகளின் மூலமே அவர்களைக் கவிழ்க்க ஏற்பாடுகள் செய்கிறேன்.” ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கூறிய பீமன், “அர்ஜுனா, உன் வில், அம்புகளைத் தயார் செய்து கொள். இவ்வளவு நேரம் பாடுபட்டு அவற்றை நீ தீட்டிக் கூர் செய்து வைத்தது வீணாகலாமா?? இந்த மாளிகையைச் சுற்றிலும் நான் பலத்த காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். அவர்கள் நம்மைத் தாக்கவேண்டியது தான். நாம் அவர்களை உடனே முடித்துவிடலாம். என்ன அர்ஜுனா, நான் சொல்வது சரிதானே?” பீமன் குதூகலம் பொங்கக் கேட்டான்.

No comments: