Monday, August 6, 2012

கண்ணனின் வாக்குறுதி!


“ஆம், கிருஷ்ணா, நான் நிச்சயமாக அப்படித் தான் நம்பினேன்.   சில காலம் சென்றபிறகு அவர்களுக்கு ஏற்றதொரு அரசைச் சரியானபடி அமைத்துக் கொடுக்கவும் எண்ணினேன்.  ஆனால்……..ஆனால்…….”  பீஷ்மரால் மேலே பேச முடியவில்லை.  துக்கத்தில் தொண்டை அடைத்தது அவருக்கு.

கிருஷ்ணன் விதுரரை நோக்கித் திரும்பினான். “விதுரரே,  பாண்டவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் முழுமனதோடு நம்புகிறீர்களா?” எனக் கேட்டான்.

“அப்படித் தான் சொல்லப்படுகிறது, வாசுதேவா!”  விதுரர் இரு கரங்களையும் கூப்பியவண்ணம் பவ்யமாகக் கூறினார்.

“என்றால், என்ன பொருள் விதுரரே?  நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?”

“ஐயா,  எல்லாம் அவன் செயல்!  நம் கைகளில் ஒன்றும் இல்லை.”  தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம் மேல் நோக்கி வணங்கிய விதுரர் மீண்டும், “உயிரற்ற உடல்கள் கிடைத்தன.  அந்த உடல்கள் அடையாளம் காணமுடியாவண்ணம் எரிந்து போயிருந்தன.”

“தாத்தா அவர்களே, குரு வம்சத்துக்கு என்ன நிகழப் போகிறது?  துரியோதனன் யுவராஜாவாகி இருப்பதோடு, சகுனி அவனுக்கு ஆலோசகனாகவும் இருக்கிறானே!  இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது?” என்று கண்ணன் வினவினான்.  மேலும் அவன் கூறியது:  “நான் ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே இந்தக் குரு வம்சத்தின்னரின் ஆட்சியில் அடங்கி இருப்பதால் இதைக் குறித்துக் கவலைப்படுகிறேன் தாத்தா.  குரு வம்சம் மட்டுமல்ல, ஆர்யவர்த்தமும் இவர்கள் கரங்களில் பாதுகாப்புடன் இருக்குமா?  அவ்வாறு இவர்கள் செயல்படுவார்களா?”  சட்டெனத் தன் குரலைத் தழைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது போன்ற மெல்லிய குரலில் கண்ணன் தொடர்ந்தான்.  “ ஒரு முறை நாம் அதர்மத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு விட்டோமெனில் பின்னர் நம்மால் அதிலிருந்து தப்பவே முடியாது.  வரக்கூடிய எதிர்காலம் மொத்தமும், இப்போதிலிருந்தே அதற்கான மோசமான விலையைக் கொடுக்க நேரிடும்.”

பீஷ்மர் கண்ணனின் இந்த நுண்ணறிவையும் எதிர்காலத்தைக் கணிக்கும் தன்மையையும் கண்டு வியந்தார்.  இவ்வளவு இளைஞனுக்குள் இவ்வளவு திறமை என்பதோடு எதிர்காலம் குறித்த கவலையும் இருக்கிறதே!  கண்ணன் சொல்வதில் உள்ள உண்மையை உணர்ந்தார்.  எதிர்காலம் பயங்கரமாகவே தெரிந்தது அவருக்கு.  கண்ணனின் வார்த்தைகளிலிருந்து வரக்கூடிய ஆபத்தைப் புரிந்து கொண்ட அவர், இப்போதே அதற்கான அடையாளங்களும், ஏற்பாடுகளும் தொடங்கி விட்டது என்பதையும் உணர்ந்தார்.  பீஷ்மருக்கே உடல் நடுங்கியது. 

“அந்த மஹாதேவன் தான் இந்தக் குரு வம்சத்தைக் காக்க வேண்டும், கண்ணா.  நான் அவனைத் தான் மிகவும் நம்புகிறேன்.  மேலும் குழந்தாய், பொய் வெளியிலேயே வெகுநாள் உலவ முடியாது . உண்மை வெகு நாட்கள் பதுங்கிக் கொண்டிராது.  ஒருநாள் வெளிப்பட்டு தன் முகத்தைக் காட்டிவிடும். ஆனால் ஒரு வேளை அதற்குச் சில காலம் ஆகலாம்.  யார் கண்டது?” பீஷ்மர் கண்ணன் கேட்டதுக்குப்பதில் எதுவும்சொல்ல விரும்பாததால் சட்டெனப் பேச்சை மாற்றினார்.  “என் வாழ்நாளின் எஞ்சி இருக்கும் நாட்களை இந்தக் குரு வம்சத்தை பத்திரமாகப் பாதுகாப்பதில் ஈடுபடப் போகிறேன்.  என் வாழ்க்கையின் லக்ஷியமே அதுதான்.  இவ்வளவு காலமாக இதற்காகவே நான் வாழ்ந்து வருகிறேன்.  என் விருப்பம் போல் வாழ்நாளை முடித்துக்கொள்ளாமல் வாழ்ந்து வருவதே இந்தக் குரு வம்சத்தின் உயர்வுக்காகவே.”

பீஷ்மர் மெளனமாகத் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.  ஒருவேளை தரையில் அவர் தன் வாழ்நாளின் கடினமான பகுதியை மீண்டும் கண்டு கொண்டிருக்கிறாரோ என்னும்படி அவர் முகத்தின் உணர்வுகள் மாறி மாறிச் சென்றன.  கண்ணன், “ஆம் தாத்தா, அந்த மஹாதேவன் நிச்சயம் உங்கள் குரு வம்சத்தைக் காத்து நிற்பார்.   உங்கள் வாழ்க்கையின் லக்ஷியமும் பூர்த்தி அடையும்.” என்ற கண்ணன் மேலே பேசுவதில் பீஷ்மருக்கு ஏற்பட்டிருக்கும் தயக்கத்தைப் புரிந்து கொண்டான்.  ஆகவே “நான் கிளம்புவதற்கு அநுமதி கொடுங்கள் தாத்தா அவர்களே!” என உத்தரவு கேட்டான். 

“சரி, வாசுதேவா, நீ உன் அரண்மனைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்.  எங்களைச் சந்தித்து விட்டாய்.  இங்கே சில நாட்கள் கழித்த பின்னர் நீ மீண்டும் துவாரகை தான் செல்லப் போகிறாயா?”

“இல்லை.  காம்பில்யத்துக்கு அரசன் துருபதன் எங்களை  முக்கியமாய் என்னை அழைத்துள்ளான்.  பாஞ்சால தேசத்துக்குச் செல்ல வேண்டும்.”

கண்கள் விரிய கண்ணனைப் பார்த்த பீஷ்மர், “அவன் எங்கள் எதிரியாயிற்றே.   என்ன காரணத்துக்காக நீ அங்கே செல்லப் போகிறாய்?”
“பாஞ்சால அரசன் ராஜ தர்மத்தை மீறாமல் இருக்கிறானா என்பதைப் பார்க்கவே செல்கிறேன்.  எல்லாரும் அப்படித் தான் சொல்கின்றனர்.  அது உண்மைதானா எனப் பார்க்கப் போகிறேன்.”  கிருஷ்ணன் வெளிப்படையாகத் தன் எண்ணத்தைச் சொன்னான். 

“எனக்கு வாக்குக் கொடு கிருஷ்ணா!  குரு வம்சத்தினருக்கு எதிராக  பாஞ்சால நாட்டு மன்னனுடன் உடன்பாடு ஏதும் செய்து கொள்வதில்லை என்று எனக்கு வாக்குக் கொடு!” பீஷ்மர் கேட்டார்.

“அப்படியே தாத்தா! ஆனால் இது துரியோதனனைப் பொறுத்திருக்கிறது.  அவன் நேர்வழியில் சென்றானானால் நானும் அவ்விதமே நடந்து கொள்வேன்.  அவன் அதர்மமாக நடந்தால்…………”  கிருஷ்ணன் தன் பேச்சை முடிக்கவில்லை என்றாலும் பீஷ்மர் புரிந்து கொண்டார்.  கிருஷ்ணன் எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் கூப்பியவண்ணம், “  குரு வம்சத்தினரின் சிறந்த மனிதரான உங்களைச் சந்தித்ததன் மூலம் இன்று நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டேன்.  உங்களோடான இந்தச் சந்திப்பு இறை முன் நின்று பேசியது போன்ற உணர்வையே எனக்குத் தருகிறது. “  உண்மையான பணிவோடும், உண்மையான பக்தியோடும் கண்ணன் இதைக் கூறினான் என்பது அனைவருக்கும் புரிந்தது.  பீஷ்மர் தன்னிரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதிக்க, கிருஷ்ணனும், உத்தவனும், சாத்யகியும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடருங்கள்...நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

ஸ்ரீராம். said...

அருமை. வாக்குக் கேட்கும் பீஷ்மருக்கும் துரியோதனன் எந்த வழியில் செல்லப் போகிறான் என்று தெரிந்திருக்காமல் இருந்திருக்குமா என்ன?

sambasivam6geetha said...

தொடர்ந்து வருவதற்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே, உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், இங்கேயும் வழி தெரிஞ்சுடுத்தா? ஆரம்பமெல்லாம் படிச்சு முடிச்சாச்சா? :))) ரசிப்பதற்கு நன்றி. இதெல்லாம் அலுக்கவே அலுக்காத ஒன்று. :)))

ஸ்ரீராம். said...

//ஆரம்பமெல்லாம் படிச்சு முடிச்சாச்சா? :))) //

உண்மையைச் சொல்லவா பொய் சொல்லவா.....!! :))

எல்லாம் படிக்க முடியா விட்டாலும் நேரம் கிடைக்கும்போது அங்கங்கே அங்கங்கே....!

sambasivam6geetha said...

பொய்யெல்லாம் சொல்ல வேண்டாம். :))) நேரம் கிடைக்கணும் என்பது சரியானது தானே! எனக்கும் அப்படித்தான். பல பதிவுகள் படிக்கப்போக முடியலை; படிச்சாலும் பின்னூட்டம் கொடுக்க முடியலை. :(

அப்பாதுரை said...

பிரமாதம். விட்டதைத் தொட்டாச்சு.

//பொய் ஒரு நாள் வெளியில் வந்து தன் முகத்தைக் காட்டி விடும். உண்மை வெகு நாட்கள் பதுங்கிக் கொண்டிராது.//

இரண்டும் ஒண்ணு தானோ?

sambasivam6geetha said...

வாங்க அப்பாதுரை. Back to Pavilion? :))))))

உங்க சந்தேகம் சரியானதே. பொய் வெளியிலேயே வெகுநாள் உலவ முடியாது என வந்திருக்க வேண்டும். உண்மை வெகு நாட்கள் பதுங்கிக் கொண்டிராது. ஒருநாள் வெளிப்பட்டு தன் முகத்தைக் காட்டிவிடும்னு வந்திருக்கணும். ட்ராஃப்டிலே சரியா இருக்கு. காப்பி, பேஸ்ட் பண்ணறச்சே சரியா வரலை, நானும் கவனிக்கலை. திருத்திடறேன். நன்றி.

பித்தனின் வாக்கு said...

nice

பித்தனின் வாக்கு said...

nice