Tuesday, January 15, 2013

நிராசையில் துருபதன்!


“ஜராசந்தனின் வேண்டுகோளா?”  கண்ணன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான். 

“ஆம்” என்ற துருபதன் தொடர்ந்து,” அவனுடைய பேரன் மேஹசந்திக்கு திரெளபதியை மணமுடித்துத் தரும்படி கேட்டிருக்கிறான்.  அவன் மட்டும் என் பக்கம் நின்றான் எனில் குரு வம்சத்தினரை ஒரு கை பார்த்துவிடுவேன். அவர்களின் பலம் எனக்குத் துச்சம்!” என்றான் துருபதன்.

“மாட்சிமை பொருந்திய மன்னரே!  ஜராசந்தனோடு ஒரு உறவு ஏற்படுத்திக் கொள்வதும், அவனுடைய துணையை நாடுவதும் எதில் கொண்டு விடும் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்களா?  சேதி நாட்டு மன்னன் தாமகோஷனுக்கும், விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கும் நேர்ந்தது தெரியுமா உங்களுக்கு?  ஜராசந்தனோடு உறவு ஏற்படுத்திக் கொள்வது நம்மை நாமே மரித்துக் கொள்வதற்குச் சமம்.  அவன் அதர்மத்தின் வழியிலேயே செல்கிறான்.”

“ஆஹா, வாசுதேவா, பீஷ்மர் மேலுலகம் சென்ற பின்னர் துரியோதனன் மாறுபட்டு வித்தியாசமாக நடந்து கொள்வான் என எதிர்பார்க்கிறாயா?” பின் ஏதோ நினைத்துக் கொண்டவனாகத் திடீரென சந்திப்பு முடிவடைந்தது என்பதைக் குறிக்கும் விதமாகக் கண்ணனிடம், “சரி, கண்ணா, நீ செல்லலாம்;  நான் நீ கூறியவற்றை நினைவில் வைத்துக் கொள்கிறேன்.  என்னால் இயன்றதைச் செய்கிறேன்.  என்னுடைய பிரதிக்ஞைக்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என நீ நம்பலாம்.”  என்று முடித்தான்.

ஆனால் கண்ணன் தயங்கினான்:  பின்னர் துருபதனைப் பார்த்து, “மன்னரே, ஜராசந்தனின் பேரனை மணந்து கொண்டு கிருஷ்ணா சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவாள் என நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேட்டான்.
“எனக்குத் தெரியவில்லை கண்ணா!  ஏன், நீயே திரெளபதியிடம் நேரில் சந்தித்துக் கேட்டுவிடேன்.  எனக்கு ஒன்றும் ஆக்ஷேபணை இல்லை.  அவளும் நீ என்னுடைய கோரிக்கையை ஏற்பதில் தான் என் சபதம் நிறைவேறும் என பரிபூர்ணமாய் நம்புகிறாள்.”  என்றான் துருபதன்.

கண்ணன் ஆச்சரிய வசப்பட்டதோடு அல்லாமல் துருபதன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டு உணர்ச்சி வசப்பட்டான். அவன் கண்களில் நீர் கோத்தது.  “மாட்சிமை பொருந்திய மன்னரே, நீர் என் மேல் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையில் நான் நெகிழ்ந்து போனேன்.  உங்களுக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன்.  எவ்வகையிலும் உதவவும் நினைக்கிறேன்.  ஆனால் நான் இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதே என என் உள் மனம் சொல்கிறது.  ஆனால் உங்கள் மனம் மிகவும் கசந்து போய் இருக்கிறதோ என எண்ணுகிறேன்.  தயவு செய்து நான் வெளிப்படையாய்க் கேட்பதற்கு மன்னிக்கவும் மன்னரே. அதனால் தான் ஒரு கொடூரனின் பேரனுக்கு உங்கள் அருமை மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் அளவுக்கு நீங்கள் துணிந்துவிட்டீர்களோ என நினைக்கிறேன்.”

“இல்லை கண்ணா, இல்லை.  எங்களுக்கு அன்பும் இல்லை, வெறுப்பும் இல்லை.  எல்லாமே போய்விட்டது.  இப்போது எங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரே ஒரு லக்ஷியம் தான்.  அது தான் துரோணரை எவ்விதத்திலாவது பழி வாங்குவது.  எனக்கும் என் நாட்டு மக்களுக்கும் அவர் செய்த துரோகத்தை எங்களால் மறக்க இயலவில்லை.   தகுதியில்லா ஒன்றுக்கு ஆசைப்பட்டு துரோணர் செய்த துரோகத்திற்குப் பழிவாங்கவேண்டும் என்றே நாங்கள் உயிர் வாழ்கிறோம்.  அதைத் தவிர எங்களுக்கு வேறு நினைப்பு இல்லை. இரவிலும், பகலிலும், தூங்குகையிலும் விழித்திருக்கையிலும் அது ஒன்றே எங்கள் கனவு, எங்கள் விருப்பம், வாழ்க்கையின் குறிக்கோள்.  இதை அடைவதற்காக எங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் நாங்கள் தியாகம் செய்யும் அளவுக்குப் பக்குவம் அடைந்திருக்கிறோம்.”

“மன்னரே, அதற்காக, அழகியும், இளமையானவளும், புத்திசாலியும் தன் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் உறுதியும் கொண்ட ஒரு இளவரசியை, கொடூரனும், காமாந்தகாரனும், அனைவரையும் அடிமையாக்கி வாழ்பவனும் ஆன ஜராசந்தனின் பேரனுக்குத் திருமணம் செய்து கொடுத்து அவள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குவது சரியல்ல.  இது எவ்வகையிலும் கிருஷ்ணாவுக்கு மகிழ்ச்சியைத் தராது.  அந்த எண்ணமே என்னுள் நடுக்கத்தைத் தோற்றுவிக்கிறது.”

“கண்ணா, என் மகளை நான் நன்கறிவேன்.  அவள் எப்போதும் என் எண்ணப்படியே நடப்பாள்.  எனக்கு ஏதேனும் ஒன்று எனில் அதற்குப் பரிகாரம் தேட முற்படுவாள்.  எங்கள் எண்ணம் ஈடேறாமல் நாங்கள் மரிக்க நேர்ந்தால் அவளும் எங்களுடன் சேர்ந்து தன்னைத் தானே எரித்துக் கொள்வாள்.  உடலாலும், மனத்தாலும் அவள் என் எண்ணத்தை ஈடேற்றுவது தவிர வேறெதையும் நினைப்பதில்லை.  அதோடு கூடத் திருமணம் என்று ஆனபின்னர் மேஹசந்தியும் மனம் மாறலாம் அல்லவா?  மேலும் திரெளபதியால் ஒரு நல்ல மனைவியாக இருக்க இயலும்.  ஒரு நல்ல மனைவி தன் கணவனை மாற்ற முடியுமே!  இப்போதே என்ன கூற முடியும்?”

“இவை எல்லாம் என்று முடியும்?” கண்ணன் மனம் மிகவும் நொந்து போனது அந்த வார்த்தைகளில் தெரிந்தது.

“துரோணர் அழிய வேண்டும்;அல்லது நாங்கள் அழிய வேண்டும்.  அதுவரை இது இப்படித்தான் கண்ணா!” திட்டவட்டமாய்த் தெரிவித்த துருபதன், “உனக்கு திரெளபதி இந்தத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாளா என்பதில் சந்தேகம் இருக்கிறது அல்லவா?  நீ ஏன் அவளை நேரில் சந்தித்துப் பேசக் கூடாது?  ஒருவேளை அதன் பின்னர் உன் வழியை, உன் முடிவை நீ தீர்மானிக்கலாமோ என நினைக்கிறேன்.  அவள் மிகவும் மன உறுதி படைத்த ஒரு பெண்மணி.  தைரியமான பெண்.  ஆஹா, அவளும் ஒரு மகனாக இருந்திருக்கக் கூடாதா என நினைக்கிறேன்.”  பெருமூச்சு விட்டான் துருபதன்.
5 comments:

ஸ்ரீராம். said...

திரௌபதி கண்ணனை மணக்கத் தயாராக இருந்தால் என்றெல்லாம் நான் படித்ததில்லை. இப்போதுதான் இவற்றைப் படிக்கிறேன்.

அப்பாதுரை said...

simply beautiful.
பழிவாங்க வேண்டும் என்று நினைப்பது 'வெறுப்பு' இல்லையோ?

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், இது கண்ணனைக் குறித்த நம் அதீதமானதொரு கற்பனையாக இருந்தாலும், இப்படியும் நடந்திருக்கக் கூடும் என்றதொரு கோணத்தையும் காட்டுகிறது.

sambasivam6geetha said...

வாங்க அப்பாதுரை, அரசியலில் வெறுப்பும், பழிவாங்கலும் சர்வசகஜம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இல்லையா? :))))

அப்பாதுரை said...

துருபதனுக்குள் இருக்கும் துவேஷம் புரிகிறது. அவனுடைய நாட்டு மக்களுக்கு துரோணர் தீங்கிழைத்ததாகச் சொல்கிறானே? அரசியலா, இல்லை அதற்கு ஏதாவது பின்புலம் உண்டா?