Wednesday, March 6, 2013

திரெளபதியின் வருத்தமும், ஆக்ரோஷமும்!


“இப்போது என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள், வாசுதேவரே!  என் தந்தையின் வேண்டுகோளை நீர் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” திரெளபதி வாசுதேவ கிருஷ்ணனைக் கொஞ்சம் ஆவல் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டே கேட்டாள்.  எவ்விதமேனும் தன் தந்தையை இந்தப் பிரச்னையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அவள் ஆவல் கிருஷ்ணனுக்குத் தெள்ளத் தெளிவாய்ப்புரிந்தது.  அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.  சிறிது நேரம் இடைவெளி விட்ட திரெளபதி மீண்டும் தொடர்ந்தாள்.  “ வாசுதேவா, என் தந்தையைக் குறித்து நீர் அறிய மாட்டீர்.  அவர் முழுதும் நற்குணங்களும், நற்சிந்தனைகளுமே கொண்டவர்.  எப்போதுமே நேர்மையானதொரு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.  இந்தப் பாஞ்சால நாட்டு மக்களுக்கு அவர் தந்தையைப் போன்றவர்.  குடிமக்களைத் தன் சொந்த மக்களாகவே என் தந்தையும் கருதுகிறார்.   அவர் எப்போதும்  எவருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. “

தன் தந்தையின் மேல் திரெளபதி கொண்டிருக்கும் பாசம் அவள் பேச்சில் நன்கு புரிய வந்தது.  மேலும் அவள் தொடர்ந்தாள்.  “ ஆனால் அவரால் பீமனும் அர்ஜுனனும், அவரைக் கட்டி இழுத்து வந்த அவமானத்தை மறக்க இயலவில்லை.  அப்போதில் இருந்து அவர் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கிறார்;  நாங்களும் மாறிவிட்டோம் வாசுதேவா!   அந்த அவமானம் ஏற்பட்ட நிமிடங்களில் இருந்து அவரால் அந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் கங்கையில் விழுந்து உயிரை விட்டுவிடலாமா எனப் பல நேரங்கள் நினைத்தார்.   ஆனால் தாயற்ற குழந்தைகளான எங்களை, அவரே பாசத்துடனும், அன்புடனும் வளர்த்து வந்திருக்கிறார்.  அவர் பாசத்தைப் பெற்ற நாங்கள் அவருக்குத் திரும்பச் செய்யக் கூடிய கடமை அவர் அடைந்த அவமானத்தை அகற்றுவது தான் இல்லையா?  நாங்கள் அவரைத் தேற்றினோம்.  அவரது அவமானத்தைத் துடைப்பதாக சபதம் இட்டோம்.  அவர் அடைந்த அவமானத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதாய் வாக்குக் கொடுத்தோம்.” திரெளபதி மீண்டும் நிறுத்திவிட்டுச் சற்று மூச்சு வாங்கினாள்.  பின்னர் தொடர்ந்து, “ஆம், நாங்கள் பழிவாங்காமல் விடமாட்டோம்.”  என முடித்தாள்.

திரெளபதியையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.  கோபத்திலும், தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தால் எழுந்த வருத்தத்திலும் பளபளத்த  அவள் கன்னங்களில் சிவப்பும், கண்களில் தோன்றி மறைந்த மின்வெட்டைப் போன்ற ஒளியும்,  பேசும்போதே அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்ட இனிய குரலின் ஓசையும்,  அந்தக் குரலோசை  அந்த அறையின் சுவர்களைக் கூட அவள் பக்கமே நிற்கச் செய்கிறதோ என்னும்படி எதிரொலித்த விந்தையும், திரெளபதி தன் தந்தையிடம் கொண்டிருக்கும் எங்கும் காணமுடியாப் பாசத்தையும் கண்ட கண்ணன் வியந்தான்.  அவள் மன உறுதியைக் கண்டு மனதுக்குள் பாராட்டினான்.  கிடைத்தற்கரிய பெண் இவள் என்பதைப் புரிந்து கொண்டான்.  ஏதேனும் தெய்வ சந்நிதானத்தில் நிற்கிறோமோ என்னும்படியாக அவள் குரலின் ஓசை அவனை ஓர் உன்னதமான மனநிலைக்கு இட்டுச் சென்றது. “மாட்சிமை பொருந்திய இளவரசியாரே, தங்கள் தந்தையின் மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பும், பாசமும் அளப்பரியது.  எங்கும் காண இயலா ஒன்று.” என்று மெல்லக் கூறினான்.

முதலில் திரெளபதிக்குக் கண்ணன் இதை ஏளனம் செய்யும் விதத்தில் கூறுகிறானோ என்ற சந்தேகம் ஏற்படவே அவனைக் கூர்ந்து பார்த்தாள்.  அவன் முகத்தின் மூலம் அப்படி ஒரு எண்ணம் அவனிடம் இல்லை என்பதையும், அவன் உளமாரவே இதைக் கூறுகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள்.  தன்னுடைய ஆழமான தந்தை அன்பைக் கண்டு அவன் வியந்து பாராட்டுகிறான் என்பதும் அவளுக்குப் புரிந்தது.  “எங்கள் தந்தையாரே எங்களுக்கு உயிர் கொடுத்தவர்.  ஆகவே அவருடைய நன்மைக்கு நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ளோம். “ என்றாள் திரெளபதி. 

மெல்ல யோசனையுடன் கேட்டான் கண்ணன். “இளவரசி, நான் உங்களுக்கு உதவ முடியவில்லை எனில், நீங்கள் ஜராசந்தனின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்களா?”

இதற்கு திருஷ்டத்யும்னன் பதில் கூறினான்: “இந்த விஷயம் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம்.  நீ சம்மதிக்கவில்லை எனில் நாங்கள் ஜராசந்தனின் பேரன் ஆன மேஹசந்தியை எங்கள் மாப்பிள்ளையாக்கிக் கொள்வோம்.  பின்னர் ஜராசந்தனின் படைகளோடு எங்கள் படைகளும் சேர்ந்து குரு வம்சத்தினரை எதிர்க்க ஆயத்தமாகும்.  இரு ராஜ்யங்களின் படைகளுக்கு முன்னர் அவர்களால் நிற்க இயலாது!” என்றான்.
“பின்னர் ஆர்யவத்தமே தீப்பிடித்து எரியும்!”  கிருஷ்ணன் மெல்ல ஒரு இளநகையுடன் கூறினான்.

“ஹூம், இப்போது, இனி என்ன தீப்பிடிப்பது வாசுதேவரே!  ஆர்யவர்த்தம் எப்போதோ சாம்பலாகிவிட்டதே.  எப்போது என் தந்தையைப் போன்ற நேர்மையும், குடிமக்களுக்கு நன்மையும் செய்யும் ஓர் அரசன், அதர்மமான வழியில் சிறைப்பிடிக்கப் பட்டு ஒரு பிராமணன் காலில் விழுந்து தன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புக் கேட்கும்படி வற்புறுத்தப் பட்டானோ, அன்றே ஆர்யவர்த்தம் சாம்பலாகிவிட்டது வாசுதேவரே!” திரெளபதி பல்லைக் கடித்துக் கொண்டு ஆக்ரோஷமாய்க் கூறினாள்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமாக கோபம் வருகிறது...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை சுவாரஸ்யமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

அப்பாதுரை said...

பழி வாங்கும் எண்ணம் மனிதரை எப்படியெல்லாம் நினைக்க வைக்கிறது! எதிரியின் எதிரி உன்னுடைய நண்பன் - தந்திரம் எத்தனை யுகங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது!

sambasivam6geetha said...

வாங்க டிடி, இந்தக் கோபத்தை மட்டும் அடக்கத் தெரிந்தால்! :))))))

sambasivam6geetha said...

அட?? வை.கோ. சார்??? நீங்கள் இங்கே தேடிக் கொண்டு வந்தது எப்படி? எப்படியானாலும் முதல் வருகைக்கு நன்றி. :))))

sambasivam6geetha said...

அப்பாதுரை, மனித குலம் தோன்றத் தொடங்கிய நாளில் இருந்து கடைப்பிடிக்கப் பட்டிருக்கலாம். :)))))

ஸ்ரீராம். said...

கோபம்/ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். இங்கு நிறுத்தி நிதானமாக திட்டமிடுகிறார்கள். இத்தனை கோபத்துக்குப் பிறகு திரௌபதி எப்படி மனைவியாக கடமையாற்ற முடிந்தது..!