Sunday, March 24, 2013

கண்ணனின் தீவிர சிந்தனை!


கண்ணன் கண் முன்னே பாஞ்சால நாட்டு அரசன் துருபதனின் குடும்பம் விரிந்தது.  எத்தனை அழகான காட்சி!  இந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பினாலும், பாசத்தினாலும் பிணைந்து இருக்கின்றனர்.  ஆனால் இந்த ஷிகன்டின் மட்டுமே தனித்துத் தெரிகிறானே?  அதோ பாஞ்சால மன்னன் சிம்மாசனத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கையில் அவன் காலடியில் அவன் முழங்காலில் கைகளைப் பதித்த வண்ணம் திரெளபதி.  தகப்பன் அருகே அவனுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல் த்ருஷ்டத்யும்னன் காணப்பட, சத்யஜித்தோ இனம் தெரியா வருத்தம் முகத்தில் துலங்கச் செய்வதறியாது தவிக்கும் தகப்பனை ஆதுரத்துடன் பார்த்தபடியே நிற்கிறான்.  இவர்கள் அனைவரும் பாசம் என்னும் மெல்லிய கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆச்சரியமான குடும்பம்!

ஷிகன்டின் இந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவன்.  எவராலும் அவனை அடக்க இயலவில்லை.  மிகவும் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குலத்தில் பிறந்தாலும் அதோடு ஒட்டவில்லை.  கிருஷ்ணன் இதை நினைத்து ஆச்சரியம் கொண்டாலும் இன்னொரு பக்கம் அவனுக்கு வருத்தமாகவும் இருந்தது.  அவனுடைய இந்த திடீர் மறைவு குடும்பத்தினருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் அதே சமயம் பல பிரச்னைகளுக்கும் பதில் சொல்ல இயலாத நிலையில் இருந்த துருபதனுக்கு ஒரு வகையில் நிம்மதியையும் கொடுத்திருக்குமோ?   கிருஷ்ணன் மனதில் இந்தக் குடும்பத்தின் மீது இரக்கம் சுரந்தது.  அவர்கள் அனைவரின் மனதிலும் வெறுப்பின் விளைவாக விளைந்த கோபமும், பழிவாங்கும் எண்ணமும் நிரம்பி இருந்தது தான்.  ஆனாலும் இத்தகைய பெரிய பாரம்பரியம் கொண்ட அரச குடும்பத்தினரிடம் அரிதாகவே காணப்படும் பெருந்தன்மையும்,  உயர் பண்புகளும் இவர்களிடம் அபரிமிதமாகவே காணக் கிடைக்கிறது.  இதை நினைத்துக் கண்ணனுக்கு  உவகையும், ஆச்சரியமும் ஏக காலத்தில் தோன்றியது.  திரெளபதியுடன் தனக்கு நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தான் கண்ணன்.  அதன் காரணமாகவே இப்போது அவன் முக்கியமான முடிவுகள் எடுத்தாக வேண்டும்.

இங்கே இப்போது இருக்கும் நிலைமை மிக மோசமாகக் காண்கிறது.  எந்த நேரத்திலும் நிலைமை முற்றி அதன் மூலம் கலகம் என்னும் பெருந்தீ உருவாகலாம்.  மனக்கசப்பு என்னும் உணர்வால் துருபதன் மனமும், அவன் பெண், பிள்ளைகள் மனங்களும் நிரம்பி வழிகின்றன.  பெருமையும், அகங்காரமும், கர்வமும், பேராசையும்  கொண்ட துரோணரை இவர்கள் ஒருக்காலும் தங்கள் நண்பராக ஏற்கப் போவதில்லை.

இதே வெறுப்பும், பேராசையும் தான் துரியோதனனையும், அவன் சகோதரர்களையும், நண்பர்களையும் பீடித்திருக்கிறது.  பாண்டவர்கள் மேல் வெறுப்பு, கோபம், பொறாமை. இந்த வெறுப்பும், கோபமும் பாண்டவர்கள் மேல் மட்டுமில்லாமல் பாண்டவர்களுக்கு ஆதரவாக யார் நின்றாலும், கெளரவர்களின் வழியில் குறுக்கே வருவதாகவே நினைத்து இன்னும் கோபம் கொள்கின்றனர்.  துரியோதனன் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்குகிறான்.  அவனே ஒரு பிரச்னை தான்.  தற்சமயம் குருக்ஷேத்திரத்தில் இருந்தாலும் விரைவில் ஹஸ்தினாபுரம் திரும்பிவிடுவான்.  அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவனே யுவராஜா.  ஹூம், இதன் மூலம் சர்வ வல்லமை கொண்ட பதவியில் அமர்ந்துவிடுவான்.  சகுனியின் ஆலோசனையின் பேரில் துரோணரும் ஆதரவு தெரிவிக்கத் தன் யுவராஜப் பதவியை நிச்சயம் செய்ய வேண்டிப் பாஞ்சாலத்தின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான்.

இவர்களுடைய இந்தப்  பிரச்னைகளால் ஆர்யவர்த்தம் முழுதும் நாசமாவதோடு அல்லாமல் ஜராசந்தனுக்கு இன்னமும் வசதியாகப் போய்விடும்.  மகதத்திலிருந்து கிளம்பிக் காசியை ஒரு நொடியில் வீழ்த்திவிட்டுப் பாஞ்சாலத்திற்குள் புகுந்து கொள்ள அவனுக்கு நேரமாகாது.  ம்ஹூம், மஹா பெரிய பிரச்னை.  நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  இதிலிருந்து நான் தப்ப முடியாது;  தப்பவும் கூடாது.  என்ன ஆனாலும், என்ன விலை கொடுத்தாவது இதைத் தடுக்கவேண்டும்.  என் கடமையை நான் ஆற்றியாகவேண்டும்.  இந்தப் பயங்கர நெருக்கடி நிலைமையைக் கொஞ்சம் தள்ளிப் போடப் பார்க்கலாம்.  முழுவதாய்த் தடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.  தள்ளிப் போடவேண்டுமெனில் புதியதொரு சூழ்நிலை உருவாக வேண்டும்.  துருபதனை முன்னிட்டுக் கொண்டே அது நடைபெறவும் வேண்டும்.  எப்படியாவது துருபதன் ஜராசந்தனுடனோ அல்லது மற்றப் பேராசை பிடித்த இளவரசர்கள், அல்லது அரசர்களுடனோ உடன்படிக்கை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டும்.  இதன் மூலம் துருபதனின் வெறுப்பைக் குறைக்க முயல வேண்டும்.  வெல்ல வேண்டும்.  அதற்கேற்ற சக்தி எனக்கு வேண்டும்.   துருபதனின் வாழ்க்கையின் குறிக்கோள் துரோணரை வெல்வது அல்ல எனக் காட்டி அவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தூண்ட வேண்டும்.  கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல குடும்பங்களிலும் இப்படித்தான் தப்பிப் பிறந்தவர்களும் இருக்கிறார்கள்-ஷிகன்டினை போல... கண்ணனின் முடிவை ஆவலுடன் தொடர்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வெறுப்பும், பேராசையும் தான் துரியோதனனையும், அவன் சகோதரர்களையும், நண்பர்களையும் பீடித்திருக்கிறது. பாண்டவர்கள் மேல் வெறுப்பு, கோபம், பொறாமை. இந்த வெறுப்பும், கோபமும் பாண்டவர்கள் மேல் மட்டுமில்லாமல் பாண்டவர்களுக்கு ஆதரவாக யார் நின்றாலும், கெளரவர்களின் வழியில் குறுக்கே வருவதாகவே நினைத்து இன்னும் கோபம் கொள்கின்றனர். துரியோதனன் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்குகிறான். அவனே ஒரு பிரச்னை தான். தற்சமயம் குருக்ஷேத்திரத்தில் இருந்தாலும் விரைவில் ஹஸ்தினாபுரம் திரும்பிவிடுவான். அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவனே யுவராஜா. ஹூம், இதன் மூலம் சர்வ வல்லமை கொண்ட பதவியில் அமர்ந்துவிடுவான். சகுனியின் ஆலோசனையின் பேரில் துரோணரும் ஆதரவு தெரிவிக்கத் தன் யுவராஜப் பதவியை நிச்சயம் செய்ய வேண்டிப் பாஞ்சாலத்தின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான்.//

மிகவும் இக்கட்டான சூழ்நிலை தான்.

// துருபதனின் வாழ்க்கையின் குறிக்கோள் துரோணரை வெல்வது அல்ல எனக் காட்டி அவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தூண்ட வேண்டும். கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.//

மிகவும் சுவாரஸ்யமான கதை.

ஸ்ரீகிருஷ்ணனுக்குத்தான் வெளிச்சம்.

அருமையான கதையினைப் பொறுமையாகச் சொல்லி வருகிறீர்கள்.


பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

//சிம்மாசனத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கையில் அவன் காலடியில் அவன் முழங்காலில் கைகளைப் பதித்த வண்ணம் திரெளபதி//

சாதாரண தகப்பன் மகள் போல அரசன் இளவரசி அமர்ந்திருக்கும் தோற்ற வர்ணனை புதிது.

கண்ணனின் முடிவுக்குக் காத்திருக்கிறேன். சிலசமயம் நாம் ஒத்திப் போட நினைக்கும் பிரச்னைகள் திடீர் சூழ்நிலைகள் உருவாகி உடனடித் தீர்வு காணவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுமே, அது நினைவுக்கு வருகிறது. பிரச்னை உடனடி முடிவுக்கு வருவது ஒருவகையில் நிம்மதி! (இங்கு இன்னும் நீண்ட தூரம் போகவேண்டும் என்பது தெரிகிறது!)

sambasivam6geetha said...

வாங்க டிடி, ஷிகன்டினைக் குறித்து இன்னும் சில நாட்களில் தெரியும். :))

sambasivam6geetha said...

வாங்க வை.கோ. ஐயா, ரசித்துப் படிப்பதற்கு நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், உண்மை, நீண்ட தூரம் தான் போக வேண்டும், நிஜ வாழ்வில் மட்டும் இல்லை, இந்தக் கதையிலும் ஒரு முடிவை எட்ட இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும் தான். :))))

அப்பாதுரை said...

கண்ணன் என்ற புத்திசாலியின் அரசதந்திரங்களை கடவுள் என்ற பாதையிலிருந்து சற்றே விலகி - இந்த அத்தியாயத்தில் கண்ணனின் சிந்தனைகள் இதற்கு உதாரணம் - நீங்கள் கதை சொல்லும் அழகை மெய்மறந்து ரசிக்கிறேன்.