Sunday, March 15, 2015

பலியாவின் திட்டம்!

ரேகா சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  அருகில் கேட்கும் தூரத்தில் எவரும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு அப்போதும் மெல்லிய ரகசியம் பேசும் குரலில்,”பிரபுவே, ஒரு உயர்குடிப் பெண்மணி தங்களைத் தனியே சந்திக்க விரும்புகிறாள். அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.” என்றாள். அதைக் கேட்ட பீமன் போலியான சிரத்தையைக் காட்டினான். விரக்தியுடன் தன் கைகளை விரிப்பது போல் செய்து கொண்டே, “கடவுளே, மஹாதேவா, ஏன் இந்தப் பெண்கள் என்னை இப்படித் துரத்துகின்றனர் என்றே புரியவில்லையே! எனக்கு நிம்மதியே கிடையாதா?” என்று பொய்யான கவலையுடன் கூறினான். பின்னர் ரேகாவைப் பார்த்துத் தன்னுடைய ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்துவது போல் காட்டிக் கொண்டு, அதே சமயம் தெய்வீக வழிகாட்டுதலின்படி நடப்பவன் போல் தன்னைக் காட்டிக் கொண்டான். அதே போலிப் பணிவோடு ரேகாவிடம், “ரேகா, அந்த உயர்குடிப் பெண்மணி ஏன் என்னைச் சந்திக்க விரும்புகிறாள்?” என்று கேட்டான்.

“பிரபுவே, எனக்குத் தெரியவில்ல;  நான் இந்த அளவு மட்டுமே தெரிந்து கொண்டேன்.  அந்தப் பெண்மணி என்னிடம் கூறியதாவது: “ரேகா, நீ உடனே போய் வ்ருகோதர அரசனைப் பார். நான் அவனைச் சந்திக்க விரும்புவதாகக் கூறு. நான் சாவா வாழ்வா என்னும் ஒரு முக்கியமான விஷயத்தின் பேரில் முடிவெடுக்க வேண்டி அவரைப் பார்க்க விரும்புகிறேன்.” என்று சொன்னார்.  எனக்குத் தெரிந்தது இவ்வளவு தான் பிரபுவே!” என்றாள் ரேகா.

பீமனுக்குப் புரிந்து விட்டது.  அவன் முகமே மகிழ்ச்சியில் மலர்ந்து கிடந்தது.  இந்த ஆர்யவர்த்தம் முழுமைக்கும் தேடினாலும் அவனை “வ்ருகோதர அரசன்” என்று அழைப்பவர் ஜாலந்திராவைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது.  அவள் ஒருத்திதான் அவனை வ்ருகோதரன் என அழைப்பாள். ஆஹா, அந்தத் தாமரைப் பூப் போன்ற பாதங்களை உடைய அந்த இளவரசி என்னைச் சந்திக்க விரும்புவதன் காரணம் என்னவாக இருக்கும்? ஆனால் எதற்கும் இந்தச் செய்தியைச் சொல்லி அனுப்பி இருப்பது அவள் தானா என்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

“என்ன? வ்ருகோதரனா?  யார்? அந்த ராக்ஷச அரசனா? அந்த உயர்குடிப் பெண்மணியும் ஒரு ராக்ஷசியா?” என்று வேண்டுமென்றே பீமன் கேட்டான்.

“இல்லை, இல்லை,” அவசரம் அவசரமாக மறுத்தாள் ரேகா.  “அந்த உயர்குடிப் பெண் ஆர்யத்தைச் சேர்ந்தவள் தான்.  ஒரு ராஜகுமாரி! இளம்பெண்; அழகி!” என்றாள். “ஓஹோ, அப்படியா? அப்படி எனில் அவள் திருமணம் ஆனவளா? திருமணம் ஆனவள் எனில் அவள் கணவன் முன்னிலையில் தான் அவளைச் சந்திக்க முடியும்.” அப்போதுள்ள நடைமுறையைச் சொல்வது போல் பாவனை காட்டினான் பீமன். “ரேகா, எங்கள் குருவான வேத வியாசர் திருமணம் ஆன பெண்களைத் தனிமையில் சந்திக்கக் கூடாது என எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.  ஆகவே நான் அவளைத் தனிமையில் சந்திக்க இயலாது. அப்படிப்பட்ட சந்திப்புகள் ஆபத்து நிறைந்தவை.”
இதைக் கேட்ட பலியா சிரித்தான். பின்னர் பீமனிடம், கள்ளத்தனமான ஒரு சிரிப்புடன், “ஆபத்து யாருக்கு சின்ன எஜமானே?  அந்தப் பெண்ணுக்கா? இல்லை அந்த ஆணுக்கா?” என்று விஷமம் தொனிக்கக் கேட்டான். “ஆஹா, இது பதிலளிக்க முடியாத கஷ்டமான ஒரு கேள்வி பலியா!  ஆனால் இந்நிகழ்வில் நான் சம்பந்தப்பட்டவரையிலும் ஆபத்து எனக்குத் தான் நேரும். ஒவ்வொரு நிமிடமும் என்னைக் கவரவும் வசீகரிக்கவும் ஏற்பாடுகள் நடப்பதாக நான் பயப்படுகிறேன்.” இதைச் சொன்ன பீமன் மிகப் பெருங்குரலில் சிரித்தான். பின்னர் ரேகாவைப் பார்த்து, “ரேகா, சரியாகச் சொல், அந்தப்பெண்மணி திருமணம் ஆனவளா?” என்று கேட்டான்.

“இல்லை, பிரபுவே, இல்லை.  அந்தப் பெண்மணி திருமணம் ஆகாதவளே!” என்றாள் ரேகா. பீமன் கேட்கும் தொனியில் அவளுக்கும் இப்போது சிரிப்பு வந்தது. ஆனால் பீமனோ, “ஓஹோ, அப்படியா விஷயம்! இது இன்னும் ஆபத்தான ஒன்றாகுமே! சரி, ரேகா, நீ போய் அந்தப் பெண்ணிடம் ஒவ்வொரு நாளும் ஒரு இளம்பெண்ணைத் தான் காலை உணவாக வ்ருகோதர அரசன் சாப்பிடுவான் என்று சொல்லிவிடு!” என்று சற்றும் சிரிக்காமல் சொன்னான். அவன் மனதில் அப்போது துருபதன் மாளிகையில் ஜாலந்திராவுடன் தான் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வந்து சென்றன.  அந்த நினைவில் அவன் முகமும் கண்களும் விகசித்தன. இதைப் பார்த்த பலியாவும், ரேகாவும் அடக்க முடியாமல் சிரித்தனர்.

“நீங்கள் அவளை எங்கே, எப்போது சந்திக்கிறீர்கள், பிரபுவே? அந்தப் பெண்மணி உங்களை உடனடியாக அவசரமாகச் சந்திக்க விரும்புகிறாள்.”

“ஹா, நான் இளம்பெண்களை அதுவும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களைத் தனிமையில் ரகசியமாகச் சந்திப்பதில்லை. அது என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து விடும். கொஞ்ச நஞ்சம் இருக்கும் புகழும் மங்கி விடும்.”

“இல்லை பிரபுவே, அந்தப் பெண்மணி நீங்கள் அவளைச் சந்திப்பீர்கள்; கட்டாயம் சந்திப்பீர்கள். என்று உறுதியாக நம்புகிறாள். வ்ருகோதர அரசர் எப்போதுமே துயரிலும் கஷ்டத்திலும் இருப்பவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டவராம்.”

“ஓ, அது தெரியும் எனக்கு. நான் எப்போதுமே அப்படித்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் இம்மாதிரி உதவிகளைச் செய்துவிட்டுப் பின்னர் நான் தான் கஷ்டத்தில் மாட்டிக் கொண்டு விடுகிறேன்.” என்று சொன்ன பீமன் பின்னர் தன் மனதை மாற்றிக் கொண்டவன் போல, “சரி, சரி, இந்த விஷயத்தில் ஒரு விலக்கு அளித்தாகவேண்டும். அந்தப் பெண்மணியை நடு இரவைக் குறிக்கும் முரசுகள் ஒலிக்கும் நேரம் இங்கே பலியாவின் வீட்டுக்கு வந்து விடச் சொல்லு. ம்ம்ம்ம்ம்? உன்னுடைய அந்த உயர்குடிப் பெண்ணுக்கு இப்படித் தன்னந்தனியாக நட்ட நடு இரவில் இங்கே தனியாக வருவதற்கு உண்டான தைரியம் இருக்கிறதா?  வருவாளா அவள்?”

“கட்டாயம் வருவாள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்றாள் ரேகா. “அவளுடன் துணைக்கு நானும் வருவேன்.” என்று முடித்தாள். அப்போது பலியா அவளைப் பார்த்து, “நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன். ராணி மாதா சத்யவதி படுக்கச் சென்ற பின்னர் சிறிது நேரத்திற்கெல்லாம் மாலா இங்கே திரும்பி வருவாள்.  அப்போது நடு இரவுக்குச் சற்று முன்னர் இருக்கும்.மாலாவிடம் நான் உனக்காகவும், அந்த உயர்குடிப் பெண்ணுக்காகவும் காத்திருக்கச் சொல்கிறேன். காத்திருந்து உங்களை அழைத்து வரச் சொல்கிறேன்.ராணி மாதாவின் மாளிகைக்குப் பின்புறம் உள்ள தோட்டத்துக் கதவருகே நீங்கள் காத்திருங்கள். உங்களை வழிநடத்தி அழைத்து வர சோமேஷ்வரும் அங்கே தயாராகக் காத்திருப்பான்.: என்றான் பலியா.

1 comment:

ஸ்ரீராம். said...

நள்ளிரவுச் சந்திப்பு! ம்...