Tuesday, June 14, 2016

சித்திராங்கதன் யுவராஜா ஆனான்!

ஆனால் சாமானிய மக்கள் உயர்பதவியில் இருப்போரின் இந்தக் கலக்கங்களையும் அவர்களின் பேச்சுக்களையும் விமரிசனங்களையும் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. அவர்களுக்குத் தேவை அவர்கள் மன்னன் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்பதே. இப்போது மன்னன் உடல் நலம் பெற்று விட்டிருக்கிறதே அவர்களுக்குப் போதும். அவர்கள் நேசிக்கும் மன்னன் பூரண உடல் நலத்தோடு இருக்கிறான்.மற்றபடி நமக்குத் தேவையானது எல்லாம் அந்த இளம் துறவியின் ஆசிகள் மட்டுமே.

இங்கே அரண்மனையில் ஒன்பதாம் நாள் சிகிச்சை முடிவடைந்தது. த்வைபாயனர் கைலாகு கொடுத்துத் தாங்கிக் கொள்ள மன்னன் ஷாந்தனு தன் படுக்கையிலிருந்து மெல்லக் கால்களைக் கீழே பூமியில் பதித்தான். கால்கள் நடுங்கின. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு த்வைபாயனரின் துணையுடன் சில அடிகள் அந்த அறையிலேயே நடந்தான். அன்றைய தினத்துச் சிகிச்சை முடிவடைந்து மறுநாள் பத்தாவது நாள் சிகிச்சையும் முடிந்தது. அன்று தான் ராஜசபை கூட இருந்தது. அங்கே வசித்து வந்த மற்ற ஸ்ரோத்ரியர்கள், குரு வம்சத்துத் தலைவர்கள் மற்ற அரச பதவியிலிருக்கும் வீரர்கள் என அனைவரும் ராஜசபையில் பங்கெடுக்க ஒன்று கூடினார்கள். அனைவர் மனதிலும் பதட்டத்துடன் கூடியதொரு எதிர்பார்ப்பு இருந்தது. மன்னன் ஒரு ஆசனத்தில் அமர்த்தப்பட்டு சேவகர்களால் தூக்கி வரப்பட்டான். அங்கே கூடியிருந்த அனைவரும் மன்னன் காலில் விழுந்து நமஸ்கரிக்க ஓடோடிப் போனார்கள். பின்னர் மன்னன் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர்.

ஆசாரியரும் அரண்மனை புரோகிதருமான விபூதி அவர்களும் மற்றத் தலைவர்களான ஸ்ரோத்ரியர்களும் மன்னனையும் நாட்டையும் வாழ்த்தி ஆசிகளை வழங்கி மந்திர கோஷங்களைச் செய்தார்கள். அதன் பின்னர் அனைவர் கண்களையும் கருத்தையும் கவர்ந்து கொண்டிருந்த யுவராஜா காங்கேயன் இந்த ராஜசபை கூட்டப்பட்டதின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் எடுத்துரைத்தார்.

“மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தி, பரத வம்சத்து அரசர்களிலே சிறந்தவர், என் தந்தை மஹாராஜா ஷாந்தனு அவர்கள் உடல் நலம் தேறி வருகிறார். பிரதிபேஸ்வரர் அருளாலும் மற்றக் கடவுளர் அருளாலும் அவர் பூரண உடல் நலமும் பூரண ஆயுளும் பெறட்டும்!”

“சில வருடங்கள் முன்னர் நான் ஒரு சில சபதங்களை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் மதிப்புக்குரிய தந்தை ஷாந்தனு அவர்கள் மஹாராணி சத்யவதியை மணப்பதற்காக அத்தகைய சபதங்களை ஏற்றேன். அதை நான் முறைப்படி ராஜசபையில் அனைவருக்கும் முன்னால் தெரிவிக்காதபடியால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி நினைத்துக் கனவுகள் காண்கிறாப்போல் ஆகிவிட்டது. பலவிதமான வதந்திகள் பரவுவதற்குக் காரணமாகி விட்டது. இப்போது இந்த ராஜசபை கூட்டப்பட்டதன் காரணமே நான் எடுத்துக்கொண்ட சபதங்களைப் பற்றிக் கூறி உண்மை என்ன என்று அனைவருக்கும் புரிய வைப்பதற்கே அல்லால் வேறில்லை.”

“நான் என் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்றும் ஹஸ்தினாபுரத்தின் அரியணைக்கு உரிமை கோர மாட்டேன் என்றும் சபதம் எடுத்திருக்கிறேன்.”

கூடி இருந்த அனைவரும் மூச்சுக்கூட விடாமல் கவனித்தனர். அனைவர் கண்களுக் காங்கேயனையே பார்த்திருந்தன. அவர் மேலும் தொடர்ந்தார். “மேலும் நான் எடுத்துக்கொண்ட இன்னொரு சபதம் நான் உயிருடன் இருக்கும் வரையில் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் யார் மன்னனாக வீற்றிருந்தாலும் அவர்களுக்காகப் பாடுபடுவேனே அன்றி வேறு எதற்காகவும் அல்ல!”

“குரு வம்சத்துத் தலைவர்களின் மனோநிலை நான் அறிந்தது தான். அவர்கள் விருப்பம் என்னவென்பதையும் அறிந்திருக்கிறேன். அவர்கள் அனைவருக்கும் என் தந்தைக்குப் பின்னர் இந்த ஹஸ்தினாபுரத்து அரியணையில் நான் வீற்றிருக்க வேண்டும் என்பதே! அதை நான் நன்கறிவேன். அவர்கள் அன்புக்கும் ஆசைக்கும் நான் தலைவணங்குகிறேன். உண்மையில் அவர்கள் அன்பு என்னை நெகிழச் செய்து விட்டது. ஆனாலும் நான் அப்படிச் செய்ய முடியாதவனாக இருக்கிறேன்.”

“மதிப்புக்குரிய மாமன்னர், நான் மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில் என் அருமைச் சகோதரன் சித்திராங்கதனை யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்து வைக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கேட்டு யாரும் எதற்காகவும் கலங்க வேண்டாம். நான் இங்கே தான் இருப்பேன். இந்த அரியணையில் அமரும் மன்னனைப் பாதுகாக்கும் முதல் ஆள் நானாகத் தான் இருக்கும்.”

இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவர் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. யாருக்கும் எதுவும் பேச முடியவில்லை. பின்னர் மெல்ல மெல்லத் தங்களைச் சுதாரித்துக் கொண்ட அவர்கள் ஒரு குரலாக, “ஜெய காங்கேயா!” என்று கோஷம் எழுப்பினார்கள். ஆனாலும் அவர்களில் ஒரு சிலருக்கு மனம் சமாதானம் அடையவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவுமே நினைத்தனர். எல்லாம் அந்த மஹாராணி சத்யவதியின் உள் வேலைதான் என்றும் அவள் முன்னால் தாங்கள் சிறியவர்களாக்கப்பட்டுவிட்டதாகவும் நினைத்தனர். ஹஸ்தினாபுரத்தின் அதிகாரம் அனைத்தும் சின்னஞ்சிறு இளைஞன் ஒருவன் கைகளுக்குப் போய்விட்டது. அதன் மூலம் ஹஸ்தினாபுரத்தை அதிகாரம் செய்யப்போவது சத்யவதி தான். இவ்வளவு நாட்கள் யுவராஜாவாக இருந்து வந்த காங்கேயனுக்கு சந்தேகத்துக்கு இடமின்றி இனி இங்கே வேலை ஏதும் இல்லை! இனி அவன் அவ்வளவு தான்!

இங்கே காங்கேயன் தொடர்ந்து கொண்டிருந்தார். “நான் உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவெனில் மன்னனின் இந்த முடிவுக்கு நீங்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும். அவர் விருப்பம் இறைவனின் விருப்பம் ஆகும். நான் தான் அடுத்த மன்னன் ஆகவேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டு என்னை தர்மசங்கடப் படுத்தாதீர்கள். நான் என்னுடைய சபதங்களிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. அதில் உறுதியாக இருக்கிறேன். எனக்குக் கொடுத்த அதே மதிப்பையும் விசுவாசத்தையும் சற்றும் குறைவின்றி சித்திராங்கதனுக்கும் கொடுக்க வேண்டும். உங்கள் எவரிடமிருந்தும் அதிருப்திக் குரல் ஏதும் வருவதை நான் விரும்பவில்லை. நான் எப்போதும் ஹஸ்தினாபுரத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்வேன் என்றும் ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரும் மன்னன் யாராக இருந்தாலும் அவருக்கு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருப்பேன் என்று என் தந்தைக்கு நான் வாக்குக் கொடுத்துள்ளேன். என் உயிருள்ளவரை நான் அப்படியே இருந்து வருவேன். இறைவனின் விருப்பம், கட்டளை ஆகியவற்றின் படி அமைந்திருக்கும் இந்த ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும் செல்வாக்கும் சிறிதும் மங்காமல் நான் உயிருள்ளவரை சீருடனும் சிறப்புடனும் பாதுகாத்து வருவேன்.”

அதன் பின்னர் ஆசாரிய விபூதி சடங்குகளைச் செய்ய எழுந்தார். சித்திராங்கதன் முறைப்படி யுவராஜாவாக அறிவிக்கப்பட்டு அக்னி சாட்சியாக அங்கீகரிக்கப்பட்டான். தன் படுக்கையில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த மஹாராஜா ஷாந்தனு படுக்கையிலிருந்தபடியே மகனை ஆசீர்வதித்தான். தன் கைகளாலேயே யுவராஜாவுக்கு உரிய கிரீடத்தைச் சித்திராங்கதனுக்குச் சூட்டினான்.  தன் முகத்தில் ஓர் அரைப்புன்னகையுடன் கண்களை இமைக்காமல் அமைதியாகப் பார்த்த வண்ணம் த்வைபாயனர் அமர்ந்திருந்தார். தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டார். “சூரிய பகவானே, ஒளிக்கடவுளே, என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு உனக்கு மிகவும் நன்றி. இப்போது இனிமேல் ஹஸ்தினாபுரத்தின் அதிகாரம் ஸ்திரப்பட்டு விடும். இதன் மூலம் தர்ம சாம்ராஜ்யம் தழைக்க வழி வகுக்கும். என் அன்னையும் மனம் மகிழ்ச்சியுறுவாள்.”

நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஏவலாட்கள் தூக்கிவரப் படுக்கையில் கிடத்தப்பட்ட மன்னன், காங்கேயன், சித்திராங்கதன், விசித்திர வீரியன் புடைசூழத் தன் அறைக்குச் சென்றான். கூடி இருந்த மக்கள் அனைவரும் மன்னன் சென்றதும் ஓடோடியும் வந்து த்வைபாயனரின் கால்களில் விழுந்து ஆசிகளை வேண்டினார்கள். சிலர் அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். வயது முதிர்ந்த ஸ்ரோத்ரியர்களில் சிலர் த்வைபாயனருக்கு ஆசிகளை வழங்கினார்கள். கொஞ்சம் சிரமத்தோடு மந்திரி குனிகர் வழி ஏற்படுத்திக் கொடுக்க த்வைபாயனர் தன் தங்குமிடமான பிரதிபேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்காக அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேறினார். கூடி இருந்த கூட்டம் அவரைத் தொடர்ந்தது. மஹாராணி சத்யவதி தன் மகன் த்வைபாயனரை அரண்மனை விருந்து உண்டு போகவென அழைத்தாள். ஆனால் அதை மிக்க மரியாதையுடன் த்வைபாயனர் ஏற்க மறுத்துவிட்டார். அவர் சொன்னார். “கோயில் வளாகத்தில் சின்னஞ்சிறு குழந்தைகள் நான் கொடுக்கப் போகும் உணவுக்காகக் காத்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றிவிட்டு இங்கே நான் உணவு உண்ண மாட்டேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.