Thursday, March 30, 2017

பிரத்யும்னனின் பூர்வ கதை!

வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க! ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வம்சம் ஆகியவற்றைப் படித்து மேலே தொகுத்து அளிக்கலாம் என எண்ணுகிறேன். இத்தனை வருடங்களாக இருந்த ருசிகரமான சம்பவங்களோ, நிகழ்வுகளோ, கற்பனைகளோ இருக்காது. ஏனெனில் அவை எல்லாம் திரு முன்ஷியின் கற்பனை வளத்தில் வந்தவை!  ஆகவே இனிமேல் எழுதப் போவதில் சாரம் இல்லை எனில் அது என் குற்றமே! மன்னிக்கவும்.


இது வரை படித்ததில் பிரத்யும்னனுக்கும் மாயாவதிக்கும் உள்ள தொடர்பை நினைத்து எல்லோருக்கும் ஆச்சரியம், அருவருப்பு, திகைப்பு என்று வரலாம். ஆனால் உண்மையில் மாயாவதி என்னும் பாத்திரம் பாரதம், ஹரிவம்சம் ஆகியவற்றில் வருகிறது. அவற்றின் படி கிருஷ்ணருக்கும் ருக்மிணீக்கும் பிறந்து ஐந்து அல்லது ஆறு நாட்களே ஆன குழந்தையாக இருக்கையிலேயே பிரத்யும்னன் சம்பாரா என்னும் பிசாசுகளின் அதிபதியால் கடத்தப்படுகிறான். சம்பாரா அவனைக் கடலுக்குள் வீசி விடுகிறான். பிரத்யும்னனை ஒரு மீன் விழுங்கி விடுகிறது. ஆனாலும் மீன் வயிற்றுக்குள் குழந்தை உயிருடன் இருக்கிறது. இந்தக் குழந்தையால் தான் தனக்கு மரணம் என்பதை சம்பாரா தெரிந்து கொண்டு குழந்தை இருந்தால் தானே மரணம், அதைக் கடத்திக் கொன்றுவிடுவோம் என்றே கடலில் வீசி எறிந்தான். ஆனால் பிரத்யும்னன் காமதேவன் என அழைக்கப்படும் மன்மதனின் அம்சம் என்று சொல்கின்றனர்.

காமனைப் பரமசிவன் எரித்ததும் அவன் மஹாவிஷ்ணுவுடன் ஐக்கியம் ஆகி விடுவதாக ஐதீகம். பின்னர் கிருஷ்ணாவதாரத்தின் போது காமன் ருக்மிணியின் கர்ப்பத்தில் ஆண் குழந்தையாகத் தோன்றிப் பிறக்கிறான். பார்க்கக் கிருஷ்ணனைப் போலவே இருப்பதால் இவனுக்கும் கிருஷ்ணனைப் போன்ற சக்திகள் கை கூடலாம் என்று எல்லோரும் அஞ்சியதைப் போல் சம்பாராவும் அஞ்சி இருக்கலாம். நினைத்த உருவம் எடுக்கக் கூடிய சம்பாரா குழந்தையைக் கடத்திக் கடலில் வீசியதும் அதை மீன் விழுங்கியதும் மேலே குறிப்பிட்ட மாதிரி நடந்தது.  அந்த மீனை ஒரு மீனவன் பிடித்து சம்பாராவின் சமையலறைக்கே வந்து சேர்கிறது.  மாயாவதி என்னும் சம்பாராவின் மனைவி அந்த மீனை சமையலுக்காக நறுக்குகையில் உள்ளே ஓர் அழகான குழந்தை இருப்பது தெரிய வருகிறது. சில புராணங்களின்படி மாயாவதி சம்பாராவின் தாசி என்றும் சமையலறைப் பொறுப்பில் இருந்தாள் என்றும் தெரியவருகிறது.

சம்பாராவுக்குத் தெரியாமல் அந்தக் குழந்தையை வளர்த்து வருகிறாள். அவளையே தன் தாய் என்று நீனைக்கிறது அந்தக் குழந்தை! ஆனால் மாயாவதி தான் ரதி தேவி என்றும் எரிந்த தன் கணவனை மீண்டும் உயிர்ப்பதாகச் சொன்னதால் கணவன் மீண்டு வரக் காத்திருந்தாள் என்றும் மாயாதேவியிடம் நாரத முனிவர் தோன்றிச் சொல்லுகிறார். மாயாவதிக்குத் தான் யார் என்பதும், குழந்தை தான் தன் கணவன் காமதேவன் என்பதும் தெரிந்ததும் குழந்தையை மிகவும் அன்புடன் வளர்த்து வருகிறாள். நாட்கள் செல்லச் செல்லக் குழந்தையின் அழகு  அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. உண்மையில் இவன் மன்மதனே என்று சொல்லும்படி அழகாகவும் இளமையாகவும் இருந்த பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொள்ள அனைவரும் துடித்தனர்.  மாயாவதிக்கும் இப்போது பிரத்யும்னனிடம் உண்மையைச் சொல்லும் தருணம் வந்து விட்டது என்பது புரிந்தது.

Wednesday, March 15, 2017

வசுதேவர் எங்கே?

பிரத்யும்னனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.   அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அதே சமயம் தான் வஜ்ரநபுக்கு இவ்வளவு அருகே இருந்தும், கிட்டத்தட்ட அவன் பிடியில் இருந்தும் அவன் ஏன் தன்னைக் கொல்ல இவ்வளவு தயங்குகிறான் என்பதைப் பிரத்யும்னனால் புரிந்து கொள்ள முடியவில்லை.  வஜ்ரநப் அவனிடம் மெல்லிய குரலில் பேசினான். “முட்டாள், முட்டாள்! நீ ஏன் இன்னமும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறாய்? விரைவில் என்னைக் கீழே தள்ளு! முட்டாள், முட்டாள்! இன்னமும் என்னைப் பிடித்து உன் வசப்படுத்தாமல் பார்த்துக்கொண்டே நிற்கிறாயே!” என்றான்.

பிரத்யும்னனுக்கு வஜ்ரநபின் நோக்கம் தெளிவாகப் புரிந்தது. வஜ்ரநப் தன்னைக் கொல்வதற்கு வந்த கொலையாளியாக இல்லாமல் தன்னிடம் சிறைப்பட்டவனைப் போல் நடிக்க விரும்புகிறான். தான் தன்னுடைய திறமையாலும், வலிமையாலும் வஜ்ரநபைப் பிடித்தது போல் காட்டிக் கொள்ளச் சொல்கிறான்! பிரத்யும்னன் தயார் ஆவதற்குள்ளாக வஜ்ரநபே தன் ஒரு கையால் பிரத்யும்னனைப் பிடித்த வண்ணமும் இன்னொரு கையால் தன் வாளைக் கீழே தள்ளிய வண்ணமும் நின்றான். பிரத்யும்னனுக்கு இந்த விளையாட்டின் தன்மை முற்றிலும் பிடிபட்டது!  ஆகவே வஜ்ரநபின் வாள் கீழே விழும் முன்னரே அதைத் தன் கைகளால் பிடித்து விட்டான்.  வாள் இல்லை என்ற சாக்கை வைத்து வஜ்ரநப் பிரத்யும்னன் தன்னைத் தள்ளியது போல் பாவனை செய்த வண்ணம் அவனும் கீழே சாய்ந்தான்.  பிரத்யும்னன் அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். அங்கே காவலுக்கும் துணைக்கும் இருந்த அடிமைகள் கூட இதைப்பார்த்து வஜ்ரநபின் துணைக்கு வராமல் அதற்கான முயற்சிகளைக் கூடச் செய்யாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

வஜ்ரநப் பிரத்யும்னனைப் பார்த்துக் கெஞ்சினான். “என்னைக் கொன்று விடாதே, பிரத்யும்னா, கொன்று விடாதே!” என்றான். பிரத்யும்னன் வஜ்ரநப் சொல்வதை மேலும் தெளிவாகப் புரிந்து கொண்டு அவனுக்குத் தன் கைகளாலும் கால்களாலும் இரண்டு உதைகள் கொடுத்துவிட்டுப் பின்னர் அவனை மெல்ல எழுந்திருக்கச் சொன்னான். வஜ்ரநபும் எழுந்து கொண்டு ஒரு கயிறைப் பிரத்யும்னன் கைகளில் கொடுத்தான். அந்தக் கயிறு ஒரு பக்கம் வஜ்ரநபின் இடுப்பைச் சுற்றிக் கட்டி இருந்தது.  அதன் மறுமுனையைப் பிரத்யும்னனிடம் கொடுத்துவிட்டு வஜ்ரநப், “முட்டாள், இந்தக் கயிறை வைத்து என்னை நன்றாக இறுக்கிக் கட்டு!” என்று சொல்லிக் கொடுத்தான்.

அப்போது அங்கே தெரிந்த இருட்டிலிருந்து ஓர் உருவம் வெளிப்பட்டது. ஓர் காட்டுவாசிப் பெண்போல் காட்சி அளித்த அந்த உருவத்தின் கைகளில் ஓர்வாள் தென்பட்டது. பிரபாவதி அதிர்ச்சி அடைந்தாள். காட்டு வாசியைப் போல் காணப்பட்ட ஓர் வயதான பெண்மணி, தலையெல்லாம் அலங்கோலமாய்க் காட்சி தர, தன் கணவன் பிரத்யும்னனைத் தன் கைகளில் எடுத்து அணைத்ததைக் கண்டு திகைத்தாள் அந்தப் பெண்மணி பிரத்யும்னனிடம், “என் கண்ணே! கவலைப்படாதே! இது நான் தான்! சரியான சமயத்துக்கு நான் உன்னிடம் வந்துவிட்டேன்!” என்றாள்.

வஜ்ரநப் அப்போது குறுக்கிட்டு, “கவலைப்படாதே பிரத்யும்னா! எங்கள் மன்னாதி மன்னர் புஷ்கரவர்த்தம் சென்றிருக்கிறார்.  அந்தப் பகுதி முழுவதும் யாதவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்கள் மன்னர் மட்ரிகோவட்டாக் கோட்டையின் பாதுகாப்பை என் பொறுப்பில் விட்டுச் சென்றிருக்கிறார்.  நான் பொறுப்பேற்றதும் செய்ய வேண்டிய முதல் வேலை இது தான்! அது தான் உன்னைப் பிடிப்பது!” என்றவன் சத்தமாகச் சிரித்தான். பின்னர் தொடர்ந்து, “எங்கள் மன்னாதி மன்னர் தொலைதூரத்தில் எட்ட முடியாத தூரத்தில் பத்திரமாக இருக்கட்டு. நீ இங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழியைப் பார்!” என்றான்.

அப்போது பிரத்யும்னனைத் தேடி வந்த மாயாவதியைப் பார்த்த பிரபாவதி, “இந்தப் பெண்மணி யார்?” என்று கேட்டாள். “ஓ! இவள் தான் நான் சொன்ன என் “தாய்”! இவளைக் குறித்து நான் உன்னிடம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேனே!” என்றான்.

அவளைப் பார்த்த பிரபாவதி, “நீ யாராக இருந்தாலும் எங்களை எங்கள் விருப்பம் போல் வாழவிட்டு விட்டுச் சென்றுவிடு!” என்று கூறிய வண்ணம் அழுதாள். அதற்கு மாயாவதி, “முதலில் அழுகையை நிறுத்து பெண்ணே! நீ இங்கே தானே நின்று கொண்டிருக்கிறாய்? உன்னை வேறெங்கும் அனுப்பவில்லையே! நீ என்ன குழந்தையா?” என்று கேட்டவண்ணம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.  பிரபாவதிக்கு அவள் நடத்தையைக் குறித்தும் அவளுடைய பேச்சும் சரிவரப் புரியவில்லை. அதோடு அவளுக்கு இந்த பிரத்யும்னனின் “தாய்” பற்றிய செய்திகளும் சரி, அவளுடைய வழிமுறைகளும் சரி பிடிபடவே இல்லை. அவளுக்கு அதில் அனுபவங்களும் இல்லை. ஆகவே அவள் வாய் விட்டு அழுத வண்ணம், “நான் அவர் மனைவி!” என்று புலம்பினாள்.

“விரைவில் நீ என்னைப் பற்றி நன்கு புரிந்து கொள்வாய்! அது தான் உனக்கு நல்லது!” என்றாள் “தாய்” மாயாவதி! “நான் பல வருடங்களுக்கு மேலாக இவனுக்குத் தாயாக இருந்து வருகிறேன். அப்போது அவனுக்கு இவ்வுலகில் வேறு யாரும் இல்லை. நான் தான் தாய், தந்தை எல்லாமும்!” என்றாள். சற்று நேரம் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தவள், “கவலைப்படாதே, பிரபாவதி! இவன் என்னையும் மணந்து கொண்டிருக்கிறான்!” என்றாள்.

அப்போது வஜ்ரநப் பிரபாவதியைப் பார்த்து, “பிரத்யும்னனைக் கொல்வதற்கென உனக்களிக்கப்பட்ட அரசாணையின் கதி என்ன? நான் மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை எனில் அவன் எப்போதோ இறந்து போயிருக்கக் கூடும். இப்போது என்ன கஷ்டம் எனில் இந்தப் பாலைவன மணல் பிரதேசத்தை விட்டு இவனை எவ்விதம் வெளியே அனுப்புவது என்பது தான்!” என்றான்.  அப்போது பிரபாவதி, “அப்படி அனுப்ப முடிந்தால் என்னையும் சேர்த்து அனுப்பி விடுங்கள்!” என்றாள்.

“நான் இந்த அரசாணையைப் பல சமயங்களில் பயன்படுத்தி இருக்கிறேன்.” என்றவன் பிரத்யும்னன் பக்கம் திரும்பி, “பிரத்யும்னா! உடனே என்னைக் கட்டிப் போடு! இறுக்கமாகவே கட்டு! என் ஆட்களில் சிலர் இந்த மலைக்குன்றின் அடிவாரத்தில் உனக்காகக் காத்திருப்பார்கள். சீக்கிரம் விரைந்து செயல்படு!” என்றான். “உங்கள் மன்னாதி மன்னரின் கட்டளைக்கு என்ன பதில்?” என்று கேட்டான் பிரத்யும்னன்.

“நீ இந்த அரசர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே! அவர் தன்னைத் தானே கவனித்துக் கொள்வார்! எங்கள் பகுதியின் எல்லையைக்காப்பாற்ற வேண்டி நூற்றுக்கணக்கான ஒட்டகங்களுடனும் ஆட்களுடனும் அவர் புஷ்கர வர்த்தம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.” என்றான் வஜ்ரநப்!  அவன் தன்னுடைய உத்திகளைத் தயாராக வைத்திருந்தான். ஓட்டகங்களுடன் ஒட்டகங்களை ஓட்டுபவர்களும் தயாராகக் காத்திருந்தனர். மட்ரிகோவட்டாவை விட்டு பிரத்யும்னனை வெளியேற்றக் காத்திருந்தார்கள்.  பிரபாவதி பிரத்யும்னனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். “என் தாய் பிரவிசியை இங்கேயே விட்டு விட்டுச் செல்ல வேண்டுமா?” என்று கதறினாள்.

“பிரபாவதி, நீ ஓர் முட்டாள் பெண்!” என்றாள் மாயாவதி! “அழுவதற்கு இதுவா நேரம்? அதற்கெனத் தனியான நேரம் இருக்கிறது. அதே போல் நம் வேலையைச் செய்வதற்கும் தனியாக நேரம் உள்ளது. மௌனமாகத் துன்பத்தை அனுபவிக்கவும் நேரம் தனியாக இருக்கிறது.  இப்போது இந்த மூன்றும் சேர்ந்து உன் எதிரே வந்து நிற்கவே நீ கிட்டத்தட்டப் பைத்தியமாக ஆகி விட்டாய்! நாம் எப்படிப் பட்ட பேராபத்தில் இருக்கிறோம் என்பதை நீ புரிந்து கொள்ளவில்லை! உங்கள் மன்னாதி எந்நேரமும் திரும்பி வரலாம். நாளையே கூட வந்துவிடலாம்!” என்றாள்.

பிரபாவதியோ செய்வதறியாது அழுது கொண்டே இருந்தாள்.  “இந்த யாதவன் என்னை இக்கட்டில் மாட்டி விட்டான். என் மனைவி ஒன்று விதவையாக இருக்க வேண்டும் அல்லது என் மகள் விதவையாக வேண்டும்! இந்த இரண்டில் ஒன்று நடக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாக்கி விட்டான்!” என்றான் வஜ்ரநப்! அதைக் கேட்டப் பிரத்யும்னன் சிரித்தான். “ஆனால் உங்கள் மன்னரின் ஆணையை நிறைவேற்றுவதில் நீங்கள் தோற்றுப் போய் விட்டீர்கள்!” என்றான்.

அதற்கு வஜ்ரநப், “இப்போது நமக்கு நேரம் மிகக் குறைவு! நம்மை இப்போதைய பேராபத்திலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும்! அதுவும் உதயத்திற்குள்ளாக! இங்கே பேசிப் பொழுதைக் கழித்தோமானால் எதற்கும் நேரம் இருக்காது! நாம் பிடிபடுவோம்! உடனடியாகக் கொல்லப்படுவோம்.” என்றான் வஜ்ரநப்! பின்னர் சற்று நேரம் கழித்து மீண்டும், “என்னால் எங்கள் மன்னரின் கொடூரத்தை எதிர்நோக்க முடியவில்லை! உன்னைக் கொல்லவும் முடியவில்லை! நான் இறக்கவும் விரும்பவில்லை! ஆகவே நீ செல்கையில் என்னையும் உன்னுடன் அழைத்துச் சென்று விடு! நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்றாகச் செல்வோம் அல்லது ஒன்றாக இறந்து படுவோம்!”

பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே குறுக்கிட்டான். “எல்லோருமே ஒரே மாதிரியான கஷ்டத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறோம். உங்கள் மன்னரின் கொடூரத்திலிருந்து நாம் தப்பிப்போம். உயிர்வாழ்வோம். ஆனால் எனக்கு இன்னொரு முக்கியக் கடமை ஒன்று இங்கிருக்கிறது. அது தான் என் தாத்தா வசுதேவர் அவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்று கண்டு பிடிப்பது! அவர் உயிருடன் இருந்தால் அவரைத் திரும்ப துவாரகை அழைத்துச் செல்வது! இது தான் என் முக்கியக் கடமை! நான் இங்கே வந்ததும் அதற்காகவே!” என்றான்.  அதற்கு வஜ்ரநப், “அவர் இங்கே இல்லை! அவர் நிச்சயமாக மன்னரின் இந்தக் கோட்டையில் இருக்க வாய்ப்பே இல்லை. மண்ணால் ஆன சிறைச்சாலைக் கோட்டையில் சிறைக்கைதியாக அவர் இருக்கலாம்!” என்றான்.

Sunday, March 12, 2017

பிரத்யும்னன் எதிர்காலம்!

“உன்னால் முடியாது, பிரபாவதி!” என்றான் பிரத்யும்னன். “எனக்குத் தெரியும்! உன்னால் முடியாதென்று!” என்று மீண்டும் சொன்னவன் அவள் மடியிலிருந்து எழுந்தான். பிரபாவதி ஒரு சிறு குழந்தையைப் போல் தனக்குள் தான் மன்னனின் ஆணையை மீறியதால் தன் கணவன் பிரத்யும்னன் தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவானோ என்று கலங்கினாள்.  அவள் மடியிலிருந்து எழுந்த பிரத்யும்னன் அவளைப் பார்த்தான். அவள் அழுது கொண்டே இருந்தாள். தன்னிரு கரங்களால் கண்களையும் முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு தூங்கினாள். பிரத்யும்னன் அந்த மெல்லிய கத்திய ஒரு கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு கையால் பிரபாவதியை அள்ளி அணைத்தான்.

“பிரபாவதி, எனக்கு நன்றாகத் தெரியும். நீ மிகவும் அன்பு செலுத்தும் ஒருவனுக்குத் தீங்கிழைக்க உன்னால் இயலாது என்பதை நான் நன்கறிவேன்.” என்றான். மனம் கலங்கிய நிலையில் குழப்பமாகக் காட்சி தந்த பிரபாவதி அவனிடம் சொன்னாள். “பிரபுவே, நான் வாழக் கூடாது! உயிருடனே வாழவே கூடாது!” என்று கூறும்போதே அவள் தொண்டை அடைத்துக் கொண்டு விம்மல்கள் பெருகின. “எல்லோருக்கும் என் ஒருத்தியால் தான் எத்தனை துன்பங்கள்!” என்று மேலும் கூறினாள்.

“அழாதே, பிரபாவதி! அப்படி ஒரு வேளை நாம் இறக்க நேர்ந்தால் இருவரும் சேர்ந்தே இறப்போம்.” என்றான் பிரத்யும்னன். பிரபாவதி கடுமையான விரக்தியில் வெறுத்துப் போயிருந்தாள். அதைப் பார்த்த பிரத்யும்னன் சிரித்துக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொடுத்தான். “பிரபாவதி, உங்கள் தானவ குலத்து மன்னாதி மன்னரின் பரம்பரை வழக்கத்தை மீறுவதில் உனக்குள்ள மனோபலத்தையும் தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன்.  இனிமேல் என்ன நடக்குமோ என்று சிந்திப்பதை நிறுத்திக் கொள். அதைக் குறித்துக் கவலைப்படாதே!” பின்னர் தொடர்ந்து கூறினான். “இப்போதிலிருந்து காலைக்குள்ளாக நாம் இதிலிருந்து தப்புவதற்கு ஓர் வழியைக் கண்டு பிடிப்போம்.”

“என்ன செய்ய முடியும் நம்மால்? என்ன செய்யப் போகிறோம்? எந்த வழியும் கண்களில் படவில்லையே!” என்ற பிரபாவதி துயரம் தாங்காமல் அழுதாள். “நடு இரவு ஆகிறதல்லவா இப்போது! ஏதேனும் ஒரு வழி, தீர்வு கிடைக்கும்.  நடு இரவைக் குறிக்கும் பேரிகை சப்தம் எழுப்பும்போது இங்கிருந்து கிளம்பத் தயாராக இரு!” என்றான் பிரத்யும்னன். அவனை ஏளனமாகப் பார்த்த பிரபாவதி, “உங்கள் “தாய்” உங்களை எந்த நிலையிலும் கைவிட மாட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள்!” என்றாள் கிண்டலாக. இந்தக் கஷ்டமான நேரத்தில் கூட அவளால் ஏளனம் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை.

“எனக்குத் தெரியும்! ஒரு மனிதன் என்ன செய்வான் என்பதைப் பற்றி! உடனே இங்கே மனித வேட்டை ஆரம்பிக்கும். நாம் தப்பி விட்டோம் என்பதை மன்னர் மன்னர் அறிந்து கொண்டாரெனில் சும்மா விட மாட்டார். இந்தக் கோட்டையையே அலசித் தேடுவார்!” என்றாள் பிரபாவதி! அப்போது பிரத்யும்னன்   “என் தந்தையிடம் நான் வைத்திருக்கிறதைப் போன்ற நம்பிக்கையை வை!. அவர் நம்முடைய உதவிக்கு வரவேண்டும் என்றும் நம்மை இங்கிருந்து தப்ப வைக்க வேண்டும் என்றும் நான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

“உங்கள் தந்தை! நம்முடைய உதவிக்கு வருவாரா? நம்மைத் தப்புவிப்பாரா? நடக்கவே முடியாதது! அவர் எங்கேயோ தூரத்தில் அல்லவா இருக்கிறார்! பிரபுவே, அவர் எவ்விதம் துவாரகையிலிருந்து வர முடியும்? மேலும் துவாரகை இப்போது இருக்கும் ஒழுங்கற்ற நிலையில் அவரால் அங்கிருந்து கிளம்பவே முடியாதே! நம்முடைய உதவிக்கும் நம்மைத் தப்புவிக்கவும் அவரால் எப்படி வர முடியும்?”

“பிரபாவதி! அவரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டு நாம் நேரத்தைக் கடத்த வேண்டாம்!” என்றான் பிரத்யும்னன். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!” என்றாள் பிரபாவதி!

“பிரபாவதி, கஷ்டத்தில் இருக்கும் மக்கள் தங்கள் உதவிக்காக என் தந்தையை நினைத்துப் பிரார்த்திப்பது இது முதல் முறை அல்ல! பல முறைகள் நடந்துள்ளன. அவரும் அவர்கள் உதவிக்குச் சென்றிருக்கிறார். ஆனால் ஒன்று! நமக்கு அவரிடம் அவர் சக்தியிடம் அளவிடமுடியாத அளவுக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போது தான் அவர் வருவார்! நமக்கும் உதவி கிடைக்கும்!”

“என்னிடம் அவ்வளவு நம்பிக்கை எல்லாம் அவரிடம் இல்லை!” என்றாள் பிரபாவதி! “ ஒரு வேளை என் நம்பிக்கை பிசகினால், என்ன் பிரபு, நீங்கள் இறந்து விடுவீர்கள். அப்புறம் இங்கிருந்து தப்புவதற்கு எந்த வழியும் இல்லாமல் போய் விடும்! அப்படியே உங்கள் தந்தை வந்தாலும் அவர் எனக்கு ஏன் உதவி செய்யப்போகிறார்! அவர் மகனான உங்களுக்குத் தான் உதவி செய்வார்!” என்றாள் பிரபாவதி!  அளவிடமுடியாத துயரத்தில் ஆழ்ந்த பிரபாவதி வாய் விட்டு அழுதாள். கண்களில் கண்ணீருடன் வேறு வழி தெரியாமல், அவள் பிரத்யும்னன் அவன் தந்தைக்குச் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டாள்.  அப்போது திடீரென அங்கே வஜ்ரநப் வந்தான். அவன் கைகளில் பெரிய வாள் ஒன்று இருந்தது. “பிரபாவதி, நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!  உன்னுடன் பிரத்யும்னன் இருந்தால் அவனையும் அவன் எங்கே இருக்கிறானோ அங்கேயே இருக்கச் சொல்! அவனுடைய நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.” பிரத்யும்னன் செய்வதறியாமல் திகைத்தான்.  வஜ்ரநபிடம் இருக்கும் பெரிய வாளைப் போன்ற ஆயுதங்கள் ஏதும் பிரத்யும்னனிடம் இல்லை. ஒரே ஒரு சின்னக் கத்தி தான் இருந்தது. அதை வைத்து வஜ்ரநபிடம் இருக்கும் ஆயுதத்தை அவனால் எதிர்த்துப் போராட முடியாது. அதோடு இரண்டு வலிமை வாய்ந்த  அடிமைகள் அவன் மேல் பாயத் தயாரான கோலத்தில் அங்கே வஜ்ரநபுக்கு அருகே நின்று கொண்டிருந்தனர்.

Thursday, March 9, 2017

பிரபாவதியின் புலம்பல்! பிரத்யும்னன் கிண்டல்!

அவளுக்கு எவ்விதமான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து அவளிடம் கேட்டு அவளை மனதளவில் துன்புறுத்த அவன் விரும்பவில்லை.  அவ்வப்போது அவள் சில பிரார்த்தனைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் குல தெய்வமான உமாதேவியைத் தான் அவள் பிரார்த்திக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டான்.  மிகவும் அதீதமான உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கி அவள் அதில் திண்டாடித் திணறிக் கொண்டிருப்பதையும் பிரத்யும்னன் தெரிந்து கொண்டிருந்தான். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன. அவள் ஏதோ ஓர் முடிவை விரைந்து எடுக்கப் பிரயத்தனப் பட்டு முடிவையும் எடுத்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டான்.

பிரபாவதி அவனைப் பார்த்தாள். தன் கைகளை அவன் மேல் வைத்தவள் என்ன நினைத்தாளோ அப்படியே அவனை இழுத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்ன செய்வேன் நான்? என்ன செய்வேன் நான்?” இதுவே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவளுடைய ஒவ்வொரு நாடித் துடிப்பிலும் இதுவே  அவளுக்குக் கேட்டது.  சிந்தித்துச் சிந்தித்து அவளுக்குத் தன் முன்னே இருக்கும் ஒரே வழி பிரத்யும்னனைத் தியாகம் செய்வது தான் என்றே தோன்றியது. அதன் மூலமே அரசனின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பிக்கலாம். அவள் மேல் அவன் தன் கடுமையைக் காட்ட மாட்டான். அவள் குடும்பமும் தப்பிக்கும்.  உடனடியாக அவள் தன் மனதைத் தேற்றிக் கொண்டாள்.  பிரத்யும்னனுக்கு அவளுடைய முடிவு என்னவாக இருக்கும் என்பது புரிந்து விட்டது. ஆனாலும் ஓர் பச்சைக் குழந்தையைப் போல அவன் தன்னை அவளுடைய அணைப்பில் ஈடுபடுத்திக் கொண்டு அவளைத் தேற்றினான்.

அவளும் ஓர் நிராதரவான நிலையில் தான் தன்னை அணைத்துக்கொண்டு தொங்குகிறாள் என்பதையும் கண்டான்.  அவள் எந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காலம் கடத்துகிறாள் என்பது புரியாமல் அவனும் காத்திருந்தான். அவள் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். அவள் முகத்தையே பார்த்தான்.  அவள் என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்பதை அறியக் காத்திருந்தான்.  அப்போது அவனுக்குத் திடீரென ஓர் நினைவு வந்தது. வஜ்ரநப் அவனிடம் பேசுகையில் சொன்னதை அவன் இப்போது நினைவு கூர்ந்தான்.  வஜ்ரநபி சொன்னது என்னவெனில் அவர்கள் தானவ குலத்துப் பெண்கள் தாங்கள் அருமையாகக் காதலிக்கும் ஆண்களை மன்னனின் கட்டளையின் பேரில் கொல்லத் தயங்க மாட்டார்கள் என்பது தான்! அவர்கள் இருவரும் பேசிக்கொள்கையில் வஜ்ரநப் இதைச் சொல்லி இருந்தான்.  அதிலும் இம்மாதிரி மடியில் தலை வைத்துப் படுக்கும் கணவனையோ/ காதலனையோ அந்தச் சந்தர்ப்பத்தில் தான் கொல்வார்கள் என்றும் சொல்லி இருந்தான்!

இப்போது பிரத்யும்னனுக்கு எல்லாமும் புரிந்து விட்டது. அவள் அவனைக் கத்தியால் குத்திக்கொல்லத் திட்டமிட்டிருக்க வேண்டும். அதற்காகத் தன்னை அவள் தயார் செய்து கொண்டிருக்கிறாள். அவன் இப்போது எவருடைய உதவியும் இல்லாமல் தனிமையில் அவள் மடியில் படுத்துக் கொண்டிருக்கிறான்.  அவன் தன் நிலையை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். அவள் மனதின் எண்ணவோட்டம் எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொண்டான்.  அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள்.  தன் தலையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டாள். அந்த ஆயுதத்தின் மூலமே அவள் தனக்கிடப்பட்டிருக்கும் அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.

பிரத்யும்னன் அவள் மடியில் தன் கைகளைப் பரவ விட்டான். அவள் தன் கண்களை மூடிக் கொள்கிறாளோ என்று அவன் நினைத்தான். அவள் மீண்டும் மீண்டும் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள். தனக்குத் தானே அவள் பேசிக் கொள்வதை அவன் கேட்டான். “இல்லை, இல்லை, என்னால் இதைச் செய்ய இயலாது!.......ம்ஹூம், இல்லை, இல்லை, நான் கட்டாயம் செய்ய வேண்டும்! ஆம் கட்டாயமாய்!.......”இவ்வாறு அவள் தனக்குள்ளாகப் புலம்பிக் கொண்டிருந்தாள். அவள் தனக்கிடப்பட்டிருக்கும் ஆணையை நிறைவேற்றப் போகிறாள் என்னும் எதிர்பார்ப்பில் பிரத்யும்னன் தன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான் சிரித்தான். கத்தியைப் பிடித்திருந்த அவள் கையைத் தானும் பிடித்துக் கொண்டான்.  அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிரத்யும்னன் அவள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினான். பிரபாவதி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பயத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கினாள். கத்தி அவளையும் அறியாமல் கீழே விழ, “என்னால் முடியாது! என்னால் முடியாது!” என்று புலம்பினாள் பிரபாவதி!

Sunday, March 5, 2017

பிரபாவதி தவிப்பு! பிரத்யும்னன் சிரிப்பு!

அவள் தாயிடம் இதைக் குறித்தெல்லாம் அவளால் எதுவும் கேட்க முடியாது!  அவள் தாய் இளம்பெண்ணாக இருக்கையில் இதைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கலாம். அதனால் அவள் தாய்க்குத் தெரிந்திருக்கலாம். அவள் தந்தை வஜ்ரநபைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவள் யாரையேனும் இம்முறையில் கொல்ல நேரிட்டிருக்கலாமோ! தெரியவில்லை. அவள் தந்தையும், தாயும் அடிக்கடி பொருள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறிக்கொள்வதை அவள் கண்டிருக்கிறாள். அதன் உட்பொருள் இதுவாக இருக்கலாமோ! அவள் தந்தை எதையும் ஒளித்து மறைத்துப் பேசுபவர் அல்ல! வெளிப்படையானவர். அவர் ஏன் இதைக் குறித்து மறைக்க வேண்டும்? ரகசியமாக வைத்திருக்க வேண்டும்?

இந்த தர்மசங்கடமான ஆணையிலிருந்து அவள் எப்படி வெளியே வரப் போகிறாள்? அவள் கணவனையும் எப்படி வெளியே கொண்டு வருவாள்? இதிலிருந்து தப்புவது எப்படி? அவள் தன் கணவனைக் கொல்லாமல் விட்டு விட்டாலும், இது தெரிந்து மன்னன் உடனே அவனைக் கொன்றுவிடுவான்.  கொல்வதைத் தள்ளிப் போடு என மன்னனிடம் போய்க் கேட்கவும் முடியாது!  அவளுக்கு இருப்பது இரு வழிகள் தான்! மன்னன் சொல்படி கேட்டுக் கணவனைக் கொல்ல வேண்டும். அல்லது அதைக் கேட்காமல் இருந்தால் மன்னனின் கொடூரத்தை மறுநாள் தைரியமாக எதிர்நோக்க வேண்டும்.  இரண்டிலுமே நஷ்டம் அவளுக்குத் தான்! அவளுக்குத் தப்பிக்க வேறு வழியில்லை!

அங்கே அவர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தப்பாமல் அல்லது பிரத்யும்னனை அவள் தப்புவிக்காமல் பார்த்துக்கொள்ளவும் தான் அந்த அடிமைகள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.  அப்படி அவர்கள் இருவரும் தப்பி ஓடினால், அவர்கள் யாருடைய ஆலோசனைகளைக் கேட்டு மேலே செல்வது? அவள் தாய் இதை எல்லாம் அவளுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லவில்லை. அவளை இதிலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தாள். ஏனெனில் அவள் தாயும் தன் மகளும், மாப்பிள்ளையும் மன்னனால் கொல்லப்படுவதை விரும்பி இருக்கமாட்டாள். தன் மகளும் விரும்ப மாட்டாள் என்றே அவளுக்கும் தெரிந்திருக்கும்.  பிரபாவதி செய்வதறியாது தவித்தாள்.

பிரத்யும்னன் அவளை அணைத்துக் கொண்டான். அவளும் அந்த அணைப்பை ஏற்றுத் தான் இப்போது உலகிலேயே மிகவும் சந்தோஷம் நிறைந்த பெண்ணாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள். ஆனாலும் அவள் மனம் நிறைவடையவில்லை. அவளுக்கு எந்த சந்தோஷத்தையும் அந்த நினைப்பால் கொண்டு வர முடியவில்லை. அவள் மன்னனின் ஆணையை மீறினாள் என்பதை அவள் தாய் அறிந்தால் ஒருக்கால் அவளை மன்னிக்க மாட்டாள். ஆனால் அவளுக்குத் துணிவு வரவில்லையே! அவள் கணவன் அப்படி என்ன கொடுமைக்காரனா என்ன? அப்படி எல்லாம் இல்லை.

மன்னனின் ஆணை குறித்து அவன் அறிந்திருப்பானோ? இருக்கும். ஏதோ ஆபத்து காத்திருக்கிறது என்ற வரையில் தெரிந்திருக்கலாம். அதிலும் மன்னன் அவளைத் தன் தனி அறைக்கு அழைத்துச் சென்று பேசியதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் புரிந்திருக்கலாம்.  இது என்னவாக இருக்கும் என்று யோசித்திருப்பான். பிரத்யும்னன் அவளை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவளை அணைத்துக் கொண்டு மகிழ்ந்தான். அவன் கண்களில் அவள் மேல் அவன் கொண்டிருக்கும் அக்கறையும் கனிவும் தென்பட்டன. ஒரு தாய் தன் அருமை மகளை எவ்வாறு நடத்துவாளோ அவ்வளவு அருமையாகப் பிரத்யும்னன் அவளை அன்புடன் நடத்தினான்.  மன்னன் அவளைத் தனியே அழைத்துப் பேசிய போது அவளுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லி இருக்க வேண்டும். அவளுக்குச் சிறிதும் பிடிக்காத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்க வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க ஒண்ணாத துயரத்திற்கு அவள் ஆளாகி இருப்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான்.

பிரபாவதி தன்னால் இயன்ற வரை மன்னன் சொல்லிக் கொடுத்த மாதிரியில் பிரத்யும்னனிடம் நடந்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை. பின்னர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள். இன்று ஒரு நாள் மட்டும், ஒரே நாள் மட்டும் அவளால் சந்தோஷமாக இருக்க முடியும். இன்றைய நாள் அவள் சந்தோஷத்தின் கடைசி நாள். நாளை முதல் எல்லையற்ற துக்கத்தை அவள் காணப் போகிறாள்.  அவள் மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை எனில் அது அவள் கணவனை எவ்வகையிலாவது காப்பாற்றுமா? அப்படி ஏதும் நடக்காது. ஏனெனில் அவள் கொல்லவில்லை எனில் உடனே மறுநாளே மன்னன் அவனைக் கொன்று விடுவான்.  அவள் மன்னனின் ஆணையைச் சிரமேற்கொண்டால் அதனால் அவளுக்கு ஏதும் நன்மை கிட்டுமா? அதுவும் எங்கே கிடைக்கப் போகிறது! நிச்சயமாய்க் கிடைக்காது!

அவள் மனதின் உணர்ச்சிப் பிரவாகம் மேலெழுந்து மனம் விம்மியது. அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் அவள் தங்கள் குலதெய்வமான உமாதேவியைப் பிரார்த்தித்தாள்.  தன்னையும், தன் அருமைக்கணவனையும் இந்தப் பேராபத்திலிருந்து அவள் காப்பாற்றுவாளா? அவள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் மன்னன் அவள் தந்தையையும் கொன்று விடுவானே! அதன் மூலம் மன்னனுக்கு என்ன உதவியோ, நன்மையோ கிட்டும் என்பது அவளுக்குப் புரியவே இல்லை! அவள் தந்தையை அவன் ஏன் மன்னிக்கவே மாட்டான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் தந்தையும், மன்னனும் அவளிடம் பேசியதிலிருந்தும் நடந்து கொண்டதிலிருந்தும் இருவருமே ஒருவரை ஒருவர் எதிரிகளாக நினைக்கிறார்கள் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தாள். ஆனால் இன்றிரவே மன்னனின் ஆணையை அவள் ஏற்று நடத்தவேண்டும் என்பது அவளால் முடியாது. தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாள்.

பிரத்யும்னன் மிகவும் கெட்டிக்காரன்! அவள் மனப்போக்கை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. சிரித்தான்! முதலில் சிறு புன்னகையாக இருந்தது பின்னர் சிரிப்பாக மலர்ந்தது! அவளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் செய்தான். அவ்வப்போது அவளுக்கு ஆறுதல் கூறி அவளைத் தேற்றுவது தவிரத் தனக்கு வேறு வேலையே அந்த உலகில் இல்லை என்பது போல் நடந்து கொண்டான்.  அவள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டங்களால் அவளுக்கு ஏற்படும் சிரமங்களை அவன் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான். அடுத்து அவள் செய்யப் போவதற்காகக் காத்திருந்தான்.

Thursday, March 2, 2017

பிரபாவதிக்கு இடப்பட்ட ஆணை!

பிரபாவதியும் பிரத்யும்னனும் அவர்களுக்கெனத் தனியாக அலங்கரிக்கப்பட்டிருந்த அழகான குடிசைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது பிரபாவதி கிட்டத்தட்ட மூர்ச்சித்து விழும் நிலைக்கு வந்திருந்தாள். அவள் மனதில் சந்தோஷமும் இல்லை, அமைதியும் இல்லை. கண்கள் நிறையக் கண்ணீருடனும் கொந்தளிக்கும் மனதுடனும் அங்கே அமர்ந்திருந்தாள்.  பிரத்யும்னனுக்கு அவள் நிலைமை புரிந்தாலும் காரணம் புரியவில்லை. மெல்ல மிருதுவாகத் தன் கைகளை அவள் தோள்களில் வைத்தான்.  இப்போது அவள் தன் மனைவியாகி விட்டாள். ஆகவே அவளை இறுக அணைக்கலாமே! அப்படியே அணைத்துக் கொண்டான். அவளும் தன்னைத் தேற்றுவாரில்லாமல் இந்த ஆறுதலான அணைப்பை மிகவும் விரும்பினாள்.

ஒரு மனைவியாகத் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைவின்றிச் செய்தாள்.  அவனுடன் முழுமையாக ஒத்துழைத்தாள். அதன் பின்னர் இருவரும் நிதானமாக அமர்ந்துகொண்டு அப்போது அவர்கள் இருவரும் எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகள் நிறைந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

பிரத்யும்னன் பிரபாவதியிடம் கேட்டான், “என்ன விஷயம் பிரபாவதி? உங்கள் மன்னாதி மன்னரைச் சந்தித்து விட்டு வந்ததும் நீ மிகவும் அதீதமான துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறாயே!”

“நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன்!” என்றாள் பிரபாவதி.

“நாம் மோசமானதொரு சோகமான சூழ்நிலையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்!” என்றான் பிரத்யும்னன்.  பிரபாவதி தன் கணவனையே இமைக்காமல் சற்று நேரம் பார்த்தாள். அவள் கண்களில் நம்பிக்கையும் அவன் மேல் அவள் வைத்திருக்கும் அளவற்ற பாசமும் தெரிந்தன. அவனைப் பார்த்து, “இப்போது நாம் திருமணம் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக ஆகி விட்டோம். இனி இந்த உலகை நாம் இருவருமாகச் சேர்ந்து எதிர்த்துப் போராடலாம்!” என்றாள்.

பிரத்யும்னன் சொன்னான். “இந்த நிமிஷத்திலிருந்து நாம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் நேரத்தைக் கவனிக்க வேண்டும். உங்கள் மன்னாதி மன்னரால் அளிக்கப்பட்ட அந்த நேரத்துக்குள்ளாக நாம் நமக்குத் தேவையானதைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்னையே உங்கள் மன்னரால் எழுப்பப்பட்டிருக்கும் இந்த மோசமான சூழ்நிலையை ஆபத்தான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் இருக்கிறது!”

சற்று நேரம் நிறுத்திவிட்டு யோசித்த பிரத்யும்னன் மீண்டும் பேசினான். “ இந்த பயங்கரமான சூழலில் இருந்து நாம் தப்பிப்பது கடினம். தப்ப முடியாது. உன்னிடம் தைரியம் இன்னும் அதிகம் வேண்டும் பிரபாவதி! தைரியமாக இரு! அதோடு உனக்கு நன்றாகத் தெரியும். உன் தந்தை உங்கள் மன்னர் மன்னரால் போடப்பட்ட இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதோடு நமது இந்தக் கல்யாணமே என்னை அழிப்பதற்கும் என்னோடு சேர்ந்து உன்னையும் அழிப்பதற்கான ஆயுதம் என்பதை நீ அறிய மாட்டாயா?”

“எவ்வளவு மோசமான நிலை நமக்கு! ஒரு வேளை நான் என் தந்தையை வேண்டிக் கேட்டுக் கொள்ளலாமோ! யாதவர்களுடன் போரிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கலாமோ!  இப்போது அப்படிக் கேட்கலாமா? அப்போது அவர் என்ன சொல்வார்?”

“இது என்ன சிறுபிள்ளைத் தனமான விளையாட்டா பிரபாவதி? இப்போதைய முக்கியப் பிரச்னையே அவர் என்னை ஏன் இத்தனை அதிகப்பாராட்டுக்களுடன் வரவேற்க வேண்டும்? நம்முடைய இந்தக் கல்யாணத்தை அவர் ஏன் இத்தனை சிறப்பாக நடத்த வேண்டும்? நான் ஏன் இங்கேயே தங்க வேண்டும்? பிரபாவதி, அத்தனையையும் மறந்துவிடுவோம். இப்போது இன்றைய இரவை மட்டும் கவனிப்போம். நீ ஏற்கெனவே சொன்னாய் அல்லவா இந்த இரவு இடிகளையும், மின்னல்களையும் கொண்டு வரப் போகிறது என்றாய் அல்லவா? ஒரு வேளை அது உண்மையாகலாம். ஆனால் நீ ஒன்றை மறக்காதே! நம் வசம் கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மிகக் குறைவு!”
மன்னனின் ஆணையைப் பெற்றதிலிருந்தே பிரபாவதி தன் வசத்தில் இல்லை.  சற்று நேரத்துக்கு ஒரு முறை தனக்கு அளிக்கப்பட்டிருந்த அந்த மெல்லிய கருவியை அவள் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அவள் தன் தலையில் அதை மறைத்து வைத்திருந்தாள். மற்ற தானவப் பெண்களைப் போல அவள் இப்போதும் என்ன நடந்தாலும் தானவ குலத்தின் மரியாதையைக் காப்பாற்றி ஆகவேண்டும். அந்தக் கருவியைச் சரியான நேரத்தில் உபயோகிக்க வேண்டும். அது என்னவாக இருந்தாலும் சரி! ஏற்கெனவே அங்கே பலவிதமான வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன. ஒரு சில குறிப்பிட்ட தானவ குலப் பெண்களுக்கு மன்னனின் ஆணை பிறப்பிக்கப்பட்டதும் அதை அந்தப் பெண்கள் நிறைவேற்றியதும், ஆனால் அவை எத்தகைய ஆணைகள் என்பது எவரும் அறியாதது என்பதும் அவள் பலமுறை கேள்விப் பட்டிருந்தாள். இப்போது இவளுக்கே அது வந்து விட்டது.

இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதின் உண்மையான காரணம் அவள் அறிய மாட்டாள். ஆனால் ஆணை நிறைவேறியாக வேண்டும்! அவளுக்குத் தன் தாயிடம் இதைக் குறித்துக் கேட்கப் பிடிக்கவும் இல்லை. தைரியமும் இல்லை. அவள் தாயிடம் இதைக் குறித்துப் பேச முடியாது! ஆனால் இது ஓர் பேரழிவைத் தான் கொண்டு வரப் போகிறது என்பதை மட்டும் நன்கறிவாள்.  இதை அவள் நிறைவேற்றினால் அவள் சொந்த வாழ்க்கை முற்றிலும் பாழ்பட்டுப் போகும். அவள் வீடு, அவள் கணவன்! அவள் மிகவும் மதித்துப் போற்றி வரும் அன்பு செலுத்தும் அவள் கணவன்! அவன் இல்லாமல் போவான்!

இதை அவளால் முழு மனதுடன் நிறைவேற்ற முடியுமா? அவள் செய்வாளா? அவளிடம் அதற்கான தைரியமும் மன உறுதியும் இருக்கிறதா? ஆனால் அவளால் அதை நிறைவேற்ற முடியாவிட்டால்! அவள் மன்னனின் ஆணைக்குக் கீழ்ப்படியவில்லை எனில்! அடுத்து நடப்பதை அவளால் நினைத்தும் பார்க்க முடியாது! அடுத்த நாளே அவள் தந்தை அவள் மொத்தக் குடும்பம் அனைவரும் மன்னர் மன்னரால் கொல்லப்படுவார்கள். எது பரவாயில்லை? அவள் ஒருத்தியின் வாழ்வா? அனைவரின் சாவா? தன் கணவனை மீண்டும் ஏறெடுத்துப் பார்த்தாள் பிரபாவதி.  அவள் அவ்வாறு பார்க்கும்போதெல்லாம் அவள் தொண்டை அடைத்துக் கொண்டு உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கிவிடுகிறாள். எத்தனை அழகான இளைஞன்? எவ்வளவு புத்திசாலி!

Saturday, February 25, 2017

ஷால்வனின் சிரிப்பு!

பிரத்யும்னனை அருகில் அழைத்த ஷால்வன் அவனுடைய குத்துவாளைப் பிடுங்கிக் கொண்டான். அந்த வாளால் தன் தோள்பட்டையில் ஒரு கீறலைப் போட்டு ரத்தத்தை வரவழைத்தான். பிரத்யும்னனின் கையிலும் அதே போல் கீறல் போட்டு ரத்தத்தை வரவழைத்தான். பின்னர் இரண்டு பேரின் ரத்தமும் ஒன்றோடு ஒன்று கலக்கும்படியாகக் கைகளைச் சேர்த்து வைத்தான்.  இருவரின் ரத்தமும் ஒன்று கலந்தது. அப்போது அங்கிருந்த உயர் பதவி வகிக்கும் ராணுவ வீரர்களிடமிருந்தும், அதிகாரிகள், அமைச்சர்களிடமிருந்தும் சந்தோஷக் கூச்சல் எழுந்தது.  அந்தச் சப்தம் வெளியே பரவவும் அங்கே வெளியே கூடி இருந்த கூட்டமும் ஆரவாரித்தது.  அந்த சப்தம் ஓய்ந்ததும் பிரத்யும்னன் இதழ்களில் இகழ்ச்சியுடன் கூடிய சிரிப்பு மலர்ந்தது.  திருமண விழா முடிவுக்கு வந்தது.  மறுபடியும் அந்த தானவ வீரர்கள் அனைவரும் ஊர்வலமாகச் செல்லத் தயாராக நின்று கொண்டனர்.

பின்னர் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கும் சமயத்தில் வஜ்ரநபின் வேண்டுகோளுக்கும் அவனுடைய வழிகாட்டுதலுக்கும் ஏற்ப பிரத்யும்னன் ஷால்வன் எதிரே சென்று மண்டியிட்டு அமர்ந்து தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறான். அப்போது    ஷால்வன் சொன்னான். “வஜ்ரநப்! பிரத்யும்னன் தைரியமும் வீரமும் நிரம்பியதொரு மாவீரன்.  ஆனால் அவனுக்கு நம்முடைய கலாசாரமோ, பழக்கங்களோ தெரியாது. எனினும் அவன் நமக்கு உதவுவான் என்றே நினைக்கிறேன். “ என்றவன் பிரத்யும்னனுக்காகத் திரும்பிக் கொண்டு, “பிரத்யும்னா,  இப்போது நீ உடனே எங்கள் குலதெய்வமும் எவராலும் வெல்ல முடியாதவளுமான உமா தேவியை அவள் கோயிலில் சென்று பார்த்து உன்னுடைய வணக்கங்களையும், பக்தியையும் காட்டி விட்டு வா! “ என்று அனுப்பி வைத்தான்.

அங்குள்ள உயர் பதவி வகித்த அதிகாரிகளின் மனைவிமார்களும் அங்கே கூடித் தங்கள் பல்லக்குகளில் ஏறிக் கொண்டார்கள்.  அவர்கள் அனைவரும் மணமகள் வருவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி மலையடிவாரத்தில் காத்திருந்தார்கள். இம்முறை அந்தப் பல்லக்கைப் பிரவிசி, பிரபாவதியின் தாய் தலைமை வகித்து எடுத்து வந்தாள். மற்றப் பெண்மணிகள் அவளைக் கால்நடையில் தொடர்ந்து வந்திருந்தனர்.  அவர்கள் நெருங்க நெருங்கப் பெண்களின் பாடல்கள், ஆடல்கள் சப்தம் கேட்டன.  எல்லோரும் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.  அந்தக் கோயிலில் ஒன்பது புனிதமான கற்கள் காணப்பட்டன.  அந்த ஒன்பது கற்களுக்கும் நடுவில் சிவனின் திருவுருவம் காணப்பட்டது. அவரைப் பிரஜாபதியின் ரூபத்தில் அவர்கள் வணங்கி வந்தார்கள்.  அவரே சிருஷ்டிகர்த்தாவாகவும் தெய்விக நங்கை ஆன உமாதேவியின் கணவராகவும் வணங்கப்பட்டார்.

அங்கே வழிபாடுகள் நடந்தன. வழிபாடுகள் முடிந்ததும், மீண்டும் அனைவரும் மன்னனின் கோட்டையை நோக்கிச் சென்றார்கள். அங்கே அரசன் சார்பாக மாபெரும் விருந்து அனைவருக்கும் அளிக்கப்பட்டது.  பிரத்யும்னன் சீற்றம் அடைந்திருந்தான். அவனுக்குள்ளே ஓர் மாபெரும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கோட்டையில்  கடந்த பத்து நாட்களாக அவன் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து நினைத்து அவன் வெட்கம் அடைந்தான். அவன் தந்தைக்கு அவன் அளித்த வாக்குறுதியை அவன் முற்றிலும் மறந்து விட்டான். அதை நிறைவேற்றத் தவறிவிட்டான். ஓர் மாபெரும் வெற்றியை அவன் பெறத் தவறி விட்டான். ஒரு சிறிய வெற்றி கூட அவனால் பெற முடியவில்லை. இப்படி ஓர் இழிவான வாழ்க்கையை வாழ்ந்ததற்காக அவன் தன்னையே முற்றிலும் தன் இனத்திலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் அவனுடைய திட்டங்களின் படி எல்லாம் நடப்பதற்காக அவன் இதைச் செய்தே தீர வேண்டும். ஓர் விசுவாசப் பிரமாணத்தை ஷால்வ மன்னனுக்கு அளிக்க வேண்டும்.  யாதவர்களின் முக்கியமான எதிரியிடம் அவன் இந்த விசுவாசப் பிரமாணத்தைக் கொடுத்தே ஆக வேண்டும். அதற்காகவே அவன் வஜ்ரநபின் மகளை மணக்க நேர்ந்தது. ம்ம்ம், இந்த வஜ்ரநப் தான் துவாரகையை மீண்டும் ஆக்கிரமித்து அவன் தந்தையையும் மற்ற உறவினர்களையும் அடியோடு அழிக்கப் போகிறான்.  அவன் என்ன செய்ய வேண்டும்?

அவன் தன் மனதிற்குள்ளே ஓர் ஆராய்ச்சி செய்தான். அப்போது அவனுக்குப் புலப்பட்டது என்னவென்றால் அவன் விரைவில் இறக்கப் போகிறான். ஆனால் க்ஷத்திரிய தர்மத்தைக் காப்பவனாக ஓர் மாபெரும் வீரனாக இல்லை.  ஆனால் ஒரு கோழையாக அவன் குலத்தையும், அவன் தந்தையையும் ஏமாற்றியவனாகவே இறக்கப் போகிறான்.  அதோடு அவன் “தாய்”க்கும் அவன் உண்மையானவன் இல்லை என்பதைக் காட்டப் போகிறான். அவளுடைய நன்மைக்காகவே அவன் இந்த மாபெரும் ஆபத்தைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் இந்த இழிந்த நிலைமையிலிருந்தும் மோசமான வாழ்க்கையிலில்ருந்தும் அவன் தப்பவே முடியாது. அது அவனுக்குத் தெரிந்து போய்விட்டது.  இந்த மோசமான வாழ்க்கையில் ஷால்வனால் அவ்வப்போது அளிக்கப்படும் சிறிது காலத்திற்கே ஆன சுதந்திரத்தைத் தான் அவனால் அனுபவிக்க இயலும்.  அவன் ஓர் தானவ குலப் பெண்ணான பிரபாவதியை மணக்க நேரிட்டு விட்டது. இதில் எந்தவிதமான புத்திசாலித்தனமான உணர்வுகளையும் அவனால் காண முடியவில்லை.

ஆனால் பிரபாவதி தைரியம் நிரம்பியவளாகவும் அவனுக்கு ஈடு கொடுப்பவளாகவும் காணப்பட்டாள். ஷால்வனால் அவனைச் சுற்றிப் போடப்படும் எந்த வேலியையும் உடைத்து எறிந்து விட்டு அவனுடன் வரத்தயாராக இருக்கிறாள். ஷால்வன் தன்னுடைய உத்திகளை மாற்றிக் கொண்டது குறித்துப் பிரத்யும்னன் திரும்பத் திரும்ப யோசித்தான். துவாரகையின் மீதும் யாதவர்கள் மீதும் படையெடுப்பை ஏன் நிறுத்தினான்? அந்த நோக்கத்தை ஏன் கைவிட்டான்?  அது தான் பிரத்யும்னனுக்குப் புரியவில்லை.

பிரபாவதியை அவன் மணக்க மறுத்தால் அவள் மனம் உடைந்து போவாள். மேலும் ஷால்வன் பிரத்யும்னனை உயிருடன் விட்டு வைக்க மாட்டான்.  வஜ்ரநபின் தலைமைத் தளபதிப் பதவிக்கும் ஆபத்து நேரிடும். அவன் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.  அவன் மட்டும் ஓடிப் போனால் அவனைக் கொல்ல நேரலாம்.  அப்படி இல்லாமல் அவன் தற்கொலை செய்து கொண்டால்? அதிலும் ஓர் ஆபத்து இருக்கிறது! வஜ்ரநபுக்கும் அவன் குடும்பத்துக்கும் இது வாழ்நாள் முழுவதும் ஓர் குற்ற உணர்ச்சியை உண்டாக்கும் என்பதோடு அவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும்.  பிரத்யும்னன் மனம் மீண்டும் மீண்டும் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தது. தெய்விகத் தாயான உமையின் கோயிலில் வழிபாடுகள் முடிந்ததும், மணமக்கள் வஜ்ரநபிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கே தன் படைத் தளபதிகள் புடைசூழ  ஷால்வன் அமர்ந்திருந்தான். இருபக்கமும் சேடிகள் நின்ற வண்ணம் மயிலிறகால் விசிறிக் கொண்டிருந்தனர்.

பிரத்யும்னனைப் பார்த்து ஷால்வன் கேட்டான். “வாசுதேவக் கிருஷ்ணனின் மகனே! நீ மிகவும் புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்திருக்கிறாய். உன்னுடைய பொல்லாத தகப்பனை அறவே வெறுத்து ஒதுக்கிவிட்டு புத்திசாலித்தனமாக வஜ்ரநபின் மகளைத் திருமணம் செய்து கொண்டாய்.  இப்போது நீ என்ன செய்யப் போகிறாய்?”

“நீங்கள் எனக்கு அளிக்கப் போகும் கடுகளவு சுதந்திரத்தையும் பயன்படுத்திக் கொண்டு வஜ்ரநபின் மகளோடு சந்தோஷமாக வாழப் போகிறேன்.” என்றான் பிரத்யும்னன்.

“வஜ்ரநப், வீரனே! உன்னுடைய மருமகனை நன்கு கவனித்துக் கொள்! கிருஷ்ணனும் அவனைச் சேர்ந்த யாதவர்களும் போரில் நம்மால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் நுழைந்து ஆக்கிரமிப்புச் செய்யப் போவதாகக் கேள்விப் பட்டேன். “ என்றவன் சற்றே நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தான். “நாம் எல்லைக்குச் செல்வதற்கு அதிக பட்சமாகப் பத்து நாட்கள் ஆகலாம். அதற்கு மேல் ஆகாது! இதற்கு நடுவில் வஜ்ரநப், நீ, பிரத்யும்னனுக்கு நம் வாழ்க்கை முறையைப் பற்றியும் நாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்தும் சரியான பாடம் கற்பித்து விடு!”

பின்னர் ஷால்வன் தன் கை ஜாடையால் அங்கே குழுமியிருந்த மற்றவர்களை எல்லாம் வெளியேறச் சொன்னான். பின்னர் பிரபாவதியிடம் திரும்பி, “பிரபாவதி, நீ மட்டும் என்னுடன் வா! எனக்கு உன்னிடம் பேச வேண்டும்!” என்றான்.

பிரபாவதி காற்றில் அலைக்கழிக்கப்பட்ட சின்னஞ்சிறு இலை போல நடுங்கினாள். ஷால்வனுக்கு எதிரே நின்று கொண்டு பேசுவதற்கு அவளால் இயலவில்லை. மௌனமாக நின்று கொண்டிருந்தாள். பின்னர் நினைவு வந்தவளாகக் கீழே குனிந்து தரையைத் தொட்டு ஷால்வனை வணங்கினாள்.

அவளைப் பார்த்த ஷால்வன், “நீ ஓர் உண்மையான தானவப் பெண்! பிரத்யும்னனுக்கு விசுவாசமாக இரு! தானவப் பெண்களுடைய பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வா!” என்றான். பிரபாவதிக்கு அவன் என்ன சொல்கிறான் என்பது நன்கு புரிந்து விட்டது. அவளால் வாய் திறக்கவே முடியவில்லை. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. மௌனமாகவே நின்றாள். அந்த அறை முழுவதும் ஓர் இறுக்கமான சூழ்நிலையே நிலவியது.  அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷால்வன் முகத்தில் திடீரென ஓர் மாறுதல் உண்டாயிற்று. அவன் சிரித்தான். சிரித்தான். சிரித்துக் கொண்டே இருந்தான்.