Wednesday, August 11, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

தாமகோஷன் சற்றுத் தள்ளி இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன் மேலே எழும்பி விட்டான். ஒளிக்கிரணங்கள் எங்கும் பரவி இருந்தன. அந்த வெளிச்சத்தில் வாசுதேவனின் இரு புதல்வர்களும் செய்திருந்த அதிசயம் காணக் காண வியப்பு மிகுந்தது. ரத சாரதிகளும் வில்லாளிகளும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டிருந்தனர். காலாட்படை வீரர்கள், குதிரை வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை இழந்து தவித்தனர். குதிரைகள் அனைத்தும் காட்டுக்குள் ஓடி விட்டன. பல வீரர்கள் இந்தத் திடீர்த் தாக்குதலுக்குத் தயாராக இல்லை. அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கி இருந்தனர். கிருஷ்ணனும், பலராமனும் இதுவரை கண்டறியாத ஆயுதங்களைக் கையில் ஏந்திப் போரிட்டனர். ஆயுதங்களின் வேகத்துக்கும் அவற்றின் பலத்துக்கும் எவராலும் எதிர்கொள்ள முடியவில்லை.

தாமகோஷன் இதுவே தக்க சமயம் எனக் கருதினான். இதற்காகவே அவன் காத்துக்கொண்டிருந்தான் என்றும் சொல்லலாம். தன் வீர்ர்களைச் சேர்த்துக்கொண்டு, “வாசுதேவனுக்கு மங்களம்! கிருஷ்ணனுக்கு ஜயம்! பலராமனுக்கு ஜயம்!” என முழங்கியவண்ணம் கண்ணனோடு சேர்ந்து கொண்டான். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த உத்தவனும் இப்போது ஆயுதம் ஏந்திக் கண்ணன் அருகே சென்று போரிட ஆரம்பித்தான். இன்னொரு பக்கத்தில் பலராமன் தன்னுடைய மிகப் பெரிய கலப்பையால் அனைவரையும் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்தான். சம்வர்த்தகா இது தான் பலராமன் தன் அருமைக்கலப்பைக்கு வைத்த பெயர். அந்த சம்வர்த்தகா இப்போது ஜராசந்தனின் ஆட்களை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தது. பார்த்தான் தாரதன்.

மிகவும் முட்கள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு பலராமன் மேல் ஆக்ரோஷத்தோடு பாய்ந்தான். அவனை பலராமனின் கலப்பை இடியெனத் தாக்கியது. மண்டை உடைந்து கீழே விழுந்தான் தாமரன். பலராமன் இப்போது ஜராசந்தனுக்கு நேரடியாக அறைகூவல் விடுத்தான். “எங்கே இருக்கிறாய் ஜராசந்தா? வெளியே வா! என்னோடு நேருக்கு நேர் சண்டையிடுவாய்! அதற்கெனவே நான் வந்துள்ளேன்.” என்று தன் இடிமுழக்க்க் குரலில் கூவினான். க்ஷத்திரியர்கள் இப்படியான அறைகூவலைத் தவிர்க்க முடியாது. அவர்கள் வீரத்துக்கு அது இழுக்கு. ஜராசந்தன் இதை ஏற்றே ஆகவேண்டும். வேறு வழியில்லை. தன்னுடைய வலிமை பொருந்திய கதையை எடுத்துக்கொண்டு ஜராசந்தன் பலராமனோடு போரிட வந்தான்.

அதைப் பார்த்த பலராமனும் தன் கலப்பையைக் கருடன் ஒருவனிடம் கொடுத்துவிட்டுத் தானும் கதையை எடுத்துக் கொண்டான். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களாய்த் தெரியவில்லை. வயதில் சிறுவனாய் இருந்தாலும் பலராமன் ஆகிருதியில் மிகவும் வளர்ந்திருந்தமையால், ஜராசந்தனோடு சம்மாகவே தெரிந்தான். அனைவரும் சுற்றிச் சூழ்ந்து நின்ற வண்ணம் பார்க்க, இருவரும் சண்டைக்கு ஆயத்தம் ஆனார்கள். போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதும் கடினம் எனப் புரிந்தது. ஜராசந்தனைப் போன்ற ஒரு மாபெரும் சக்கரவர்த்தி தோற்றால் அதைவிடப் பெரிய அவமானம் வேறு இல்லை. அவன் இறந்தாலோ ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் சின்னாபின்னமாகும். ஜராசந்தன் பலராமன் எதற்கும் சளைத்தவன் இல்லை என்பதை வெகு சீக்கிரம் புரிந்து கொண்டான்.

தன்னுடைய முட்டாள்தனத்தாலும், அறிவற்ற, யோசனையற்ற இந்த நடவடிக்கையால் தனக்குக் கிடைக்கப் போகும் அவமானத்தை எண்ணி மனம் வருந்தினான். இந்த இடைச்சிறுவன் மட்டும் என்னைக் கொன்றுவிட்டானால், என் கதை அனைவராலும் பரிகசித்துச் சிரிக்கும்படியான ஒன்றாகிவிடுமே? ஜராசந்தன் இதை எண்ணிய அந்த ஒரு நொடி கொஞ்சம் அலக்ஷியமாகவே இருந்துவிட்டான். அடுத்த நொடி பலராமனின் கதை ஜராசந்தனின் கதையைத் தூக்கி வீசி எறிந்தது. ஜராசந்தன் நிராயுதபாணியாக நிற்க, கண்ணனின் பாஞ்சஜன்யம் முழங்க ஆரம்பித்த்து.


பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வெற்றிச்சங்கம் முழங்கக் கண்ணன் அந்த வட்டத்துக்குள் புகுந்தான். கூடவே தாமகோஷனும், உத்தவனும் வரக் கண்ணன் பலராமன் கைகளைப் பிடித்தான். “அண்ணா, சற்றுப் பொறுங்கள். இன்னும் இவனைக் கொல்ல நேரம் வரவில்லை.” என்றான். ஜராசந்தனின் மண்டையைப் பிளக்க இருந்த பலராமனின் கதை சற்றே தாழ்ந்த து. ஜராசந்தன் மனதில் அவனையும் அறியாமல் பக்தியோடு கலந்த பயம் தோன்றியது. இன்று வரை இந்த உணர்வை அவன் அனுபவித்ததில்லை. அது மட்டுமா? எல்லாரும் கண்ணனைப் பற்றிப் பேசி, வர்ணித்தக் கேட்டிருக்கிறானே தவிர, அவன் இன்று வரை கண்ணனை பார்த்த தில்லை. இப்போதோ, ஆஹா, இது என்ன? இந்த்ச் சிறுவன் இப்படி ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசிக்கிறானே? அவன் நிறமும், அவன் உடலின் மென்மையும், அவன் குரலின் தண்மையும் பார்த்தால் இவனா அப்படிச் சண்டையிட்டான் எனத் தோற்றுகிறதே?

ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் கண்ணனின் இருப்பின் நிச்சயத்தன்மையும், அவன் நிறத்தின் அழகும், கண்களின் வசீகரமும், மாறாத புன்னகையின் கவர்ச்சியும், குரலின் மென்மையும், அப்போதும் அதில் தெரிந்த உறுதியும், கண்டிப்பும் ஜராசந்தனின் மனதுக்குள் சென்று நுழைந்து அங்கே சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டது. அவனையுமறியாமல் அவன் உடல் நடுங்கத் தொடங்கியது. தன்னையுமறியாமல் கைகளைக் கூப்பிவிடுவோமோ என ஜராசந்தன் நினைக்கும் வேளையில் அமுதமெனக் கண்ணன் மீண்டும் பேசினான்.

“அனுவிந்தா, சக்கரவர்த்தியை அவர் ரதம் இருக்குமிடம் அழைத்துச் செல். அவர் உடல் சுகமில்லாமல் இருக்கிறார் பார். “ என்றான் புன்னகை மாறாமல். தன் வாழ்க்கையிலே முதல்முதலாக அவமானத்தை உணர்ந்தான் ஜராசந்தன். ஆஹா, எப்பேர்ப்பட்ட அவமானம்! ஜராசந்தன், மகதச் சக்கரவர்த்தி, ஆர்யவர்த்தம் மட்டுமின்றி பாரதம் முழுதுமே அவன் பெயரைக் கேட்டால் நடுங்குவார்கள். அப்படிப்பட்ட ஒருவன் இன்று இடைச்சிறுவன் ஒருவனால் உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டுத் திரும்பிச் செல்கிறான். என் வாழ்க்கையின் மிக மோசமான நாள் இதுவே! ஜராசந்தன் மனம் பற்றி எரிந்த்து. அவமானத்தீயில் எரிந்து சாம்பலாகிவிடுவான் போல் பதறினான். ஆனால் கூடவே அவன் மனம் அவனை எச்சரித்த்து. இதுவல்ல சமயம்! பேசாமல் இரு! ஜராசந்தன் இப்போதைக்கு மனம் சொல்வதைக் கேட்டு நடப்பதே நன்மை என்ற முடிவுக்கு வந்தான். வேகமாய் அனுவிந்தனின் ரதத்துக்குச் சென்றான். ரதத்தில் ஏறி அமர்ந்தான். போர்க்களத்தில் சுற்றிக் கொண்டிருந்த குதிரைகளில் சில பிடித்து வரப்பட்டு தேரில் பூட்டப் பட்டது. ரதம் வேகமாய்ப் பறந்தது.

இளம் கருடன் வினதேயன் சந்தோஷத்தில் ,”க்ரீச்ச்ச்ச்ச்”சிட்டுக் கத்திக் கொண்டு ஆடிப் பாடினான்.

8 comments:

priya.r said...

நல்ல பதிவு கீதாம்மா .,
கண்ணனின் கருணையே கருணை !என்ன ஒரு பெரும் தன்மை ;நிதான போக்கு
மனது கண்ணனிடம் ஒன்றி விட்டது
குரு ஸ்தானத்தில் இருந்து கண்ணனை காட்டியதற்கு மிகவும் நன்றி கீதாம்மா

பித்தனின் வாக்கு said...

nalla solliyirukkinga.. mikka nanri.

sambasivam6geetha said...

ப்ரியா, சிரமத்தைப் பார்க்காமல் வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றிம்மா.

sambasivam6geetha said...

நன்றி, பித்தனின் வாக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

priya.r said...

மீண்டும் எனது நன்றி அம்மா .,
எனக்கு ஒரு சிரமமும் இல்லை ! நீங்கள் எவ்வளவு சிரமப்பட்டு கண்ணன் கதைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்து நாங்கள் படித்து இன்புற நற்பணி ஆற்றி கொண்டு இருக்குறீர்கள் .இதனை நாள் உங்கள் பதிவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் போயிற்றே என்ற சின்ன குறை மட்டும் தான் அம்மா.
1 )அப்புறம் இந்த ப்ளாக் பற்றி எனது தோழிகளிடம் சொல்லலாமா?!
2 ) எந்த ப்ளாக் இல் ஆரம்பித்த கண்ணன் கதைகளை மூடும் படி ஆகி விட்டது என்று சொன்னால்
நானும் எனது தோழிகளும் கூகுள் லில் பேசி அதை மீட்டு தர முயற்சி செய்கிறோம் கீதாம்மா
பணிவன்புடன்
பிரியாரவி

sambasivam6geetha said...

ப்ரியா, மிக்க நன்றி. ப்ளாகை மீட்டு விட்டேன். நண்பர் ஒருவரின் தமிழ் நாட்காட்டி கிட்டத் தட்ட நாலு வருடங்களாக என் வலைப்பதிவில் லிங்க் கொடுத்திருந்தார். திடீரென அவர் நாட்காட்டித் தளத்தில் பிரச்னை வந்து அது லிங்க் இருந்ததால் என் வலைப்பக்கத்தையும் பாதித்தது. அவரிடம் உடனே சொல்லியும் இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. என்றாலும் அந்த ப்ளாகில் நடு நடுவில் வேறு விஷயங்களும் எழுத வேண்டி இருக்கேன்னு தான் உடனேயே இங்கே மாற்றினேன். மற்றபடி கூகிள் பிரச்னை வரும்போதெல்லாம் எச்சரிக்கை கொடுத்துவிடுகிறது. உதவிக்கு வருவது பற்றி ரொம்பவும் சந்தோஷம். நன்றிம்மா.

sambasivam6geetha said...

உங்கள் தோழிகளுக்குத் தாராளமாய்ச் சொல்லலாம். அதனால் ஒன்றும் இல்லை. நன்றிம்மா.

priya.r said...

குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றும் இல்லை கண்ணா
குறையொன்றும் இல்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
எல்லாம் கண்ணனின் லீலைகள் தான் கீதாம்மா !
நேற்று தான் ஆஸ்திரேலியா வில் இருக்கும் எனது தோழி மற்றும் வழிகாட்டி ஜானுவிடம்
பேசி வருத்தப்பட்டு கொண்டேன் .கவலை பட வேண்டாம் பிரியா
நான் பேசி சரி செய்து தர பார்கிறேன் என்று கூறினார் ; விவரம் கொடுக்க சொன்னதால் உங்களிடம் கேட்டேன்
நல்ல வேலையாக பிரச்சனை தீர்த்தது நினைத்து ரொம்ப மகிழ்ச்சி
நேரம் கிடைக்கும் போது ஜானுவின் திரைகடல் படித்து பாருங்கள் கீதாம்மா
குறை ஒன்றும் இல்லை என்ற ஆன்மிக தொடரை எழுத ஆரம்பித்து
கிருஷ்ண மந்திரத்தின் மகிமைகளை பட்டியலிட்டு அனைவரையும்
ஹரே ராம ஹரே கிருஷ்ண ராம ராம ஹரே ஹரே
ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே
என்ற மந்திரத்தை உச்சரித்து வாழ்வில் மேன்மை அடைய சொல்லி வேண்டுகிறார்.

தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் ;கண்ணன் கதைக்கு எனது வாழ்த்துக்கள்.